63 Nayanmars
அப்பூதியடிகள் நாயனார்
கும்பகோணத்திலிருந்து, திருவையாறு செல்லும் வழியில் அமைந்துள்ள திங்களூரில் அவதரித்த அப்பூதியடிகள், மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று எண்ணி வாழ்ந்து வந்தவர். நால்வரில் ஒருவரான திருநாவுக்கரசுப் பெருமானின் பண்பையும், தொண்டையும் பற்றி அறிந்து அவர் மேல் மாறாத அன்பு கொண்டார். தம் குழந்தைகளுக்கு மூத்த திருநாவுக்கரசு, நடுத் திருநாவுக்கரசு, இளைய திருநாவுக்கரசு என்று பெயர் வைத்தார். பசுக்களுக்கும், பிற பொருட்களுக்கும் கூட அவர் பெயரையே சூட்டி மகிழ்ந்தார்.
அப்பூதியடிகள் ஒரு செல்வந்தர். ஆதலால் மடம், தண்ணீர் பந்தல், குளம், சாலை, சோலை போன்றவற்றை நிறுவினார். இவை எல்லாவற்றுக்கும் திருநாவுக்கரசு மடம், திருநாவுக்கரசு தண்ணீர் பந்தல், திருநாவுக்கரசு குளம் என்றெல்லாம் அடியாரின் பெயரைச் சூட்டி, குரு பக்தியோடு தர்மம் செய்து வந்தார். இதனால், தான் மட்டும் அவர் நாமத்தைச் சொல்லி இன்புறாமல் அனைவரையும் சொல்ல வைத்தார்.
ஒரு முறை, திருநாவுக்கரசர் திருப்பழனத்தில் இறைவனை தரிசித்துவிட்டு, வேறு தலங்களுக்குச் செல்லும் நோக்கத்துடன் புறப்பட்டார். வழியில் திங்களூரை அடைந்து, அங்கிருந்த தண்ணீர் பந்தலில் நீர் அருந்தி விட்டு எங்கும் தன் பெயர் இருப்பதைக் கண்டு வியப்புற்று, அங்கிருந்தவர்களிடம் விசாரித்தார். அப்பொழுது, அப்பூதி அடிகளார் பற்றித் தெரிந்து, பின் அவரது வீட்டிற்குச் சென்றார். அடிகளார் ஒருவர் தம் வீட்டிற்கு வருகை தந்திருப்பதை எண்ணி மகிழ்ந்த அப்பூதி அடிகள், அவர் திருவடி பணிந்து வரவேற்று, அவ்வடியார் வந்த நோக்கம் அறிய விரும்பினார்.
நாவுக்கரசர் அதற்கு, தாம் அப்பூதியடிகளின் தண்ணீர் பந்தலில் தாகம் தீர்த்ததாகவும், மேலும் அவர் செய்யும் பல தர்மங்களைப் பற்றி அறிந்து, அவரை நேரில் காண வந்ததாகவும் கூறினார். ஆனால் அவைகளுக்கெல்லாம் வேறு ஒருவரின் பெயர் வைத்திருப்பதன் காரணம் என்ன என்றும், அப்பெயர் யாருடையது என்றும் வினவினார். அதைக்கேட்ட அப்பூதி அடிகள் “திருநாவுக்கரசு பெருமானை அறியாத சிவனடியாரும் உண்டோ? நீர் யார்?” என்று கோபத்துடன் கேட்க, நாவுக்கரசரும் “அந்தச் சிறியேன் நான் தான்” என்றுப் பணிவாகக் கூறினார்.
அதைக்கேட்டு மெய் மறந்த அப்பூதி அடிகளார், அடியாரின் திருப்பதம் வணங்கி அவருக்கு உணவு பரிமாற ஆயத்தமானார். அவர் தம் மூத்த மகனை வாழை இலை பறிக்க அனுப்பினார். அங்கு சிறுவனைப் பாம்பு கடித்துவிட, விஷம் தலைக்கு ஏறும் முன் ஓடோடி வந்து இலையைத் தன் தாயாரிடம் கொடுத்து, பின் உயிர் நீத்தான். திகைப்புற்ற பெற்றோர்கள், மகனைப் பாயால் மூடி வைத்துவிட்டு, நாவுக்கரசருக்கு உணவு பரிமாற ஆயத்தமாயினர்.
விருந்துண்ண அமர்ந்த நாவுக்கரசர் “எங்கே மூத்த மகன்?” என்று கேட்க அப்பூதியடிகள் “அவன் இங்கு உதவான்” என்று கூற, நாவுக்கரசருக்கு நெருடல் உண்டாயிற்று. அவர் “என்னவாயிற்று?” என்று கேட்க, அதற்கு மேலும் உண்மையை மறைக்க முடியாமல், அப்பூதி அடிகளார் நடந்ததைக் கூறினார். பதறி எழுந்த நாவுக்கரசர் அச்சிறுவனின் சடலத்தை இறைவன் சந்நிதியில் கிடத்தச் சொல்லி, இறைவனை நினைந்து “ஒன்று கொலாம்” என்ற திருப்பதிகத்தைப் பாடினார். அச்சிறுவனோ, தூக்கத்தில் இருந்து எழுவது போல் எழுந்து ஐயன் திருவடி பணிந்தான். திருநாவுக்கரசர் அவனுக்குத் திருநீறு அளித்து அருளினார். தம் குருநாதர் அமுதுண்ணக் காலம் தாழ்ந்ததே என்று அப்பூதி அடிகள் வருந்த, உடனே அமுதுண்டார் நாவுக்கரசர். பின் சிறிது காலம் அவர்களுடன் தங்கி, தன் பயணத்தை மீண்டும் தொடர்ந்தார்.
அப்பூதி அடிகளார், கைமாறு கருதாத தன் தொண்டினை தமது குருவாகிய திருநாவுக்கரசருக்கு சமர்ப்பணம் செய்து, அவரது மகிமையை அனைவரும் அறியும் வண்ணம், அவர் பெயரிலேயே பல காலம் செய்து, பின் சிவனடி அடைந்தார்.
ஆதாரம் (References) :
shaivam.org
நாயன்மார் கதை (முதல் மற்றும் இரண்டாம் பாகம்), கி. வா. ஜகந்நாதன், மூன்றாம் பதிப்பு, அல்லயன்ஸ் பதிப்பகம்.