பெற்றோர்களுக்கு சாயி அளிக்கும் ஆலோசனைகள்! ஸ்ரீசத்ய சாயி பெற்றோர்மை

குடும்பம் – இனிய குடும்பம்

ஒவ்வொரு குடும்பமும் நடமாடும் கோயில். கடவுளின் இல்லமான குடும்பத்தில் அன்னையே பூசாரி. அங்கு அடக்கம் என்ற ஊதுவத்தி, வீட்டில் மணத்தை பரப்பட்டும். அந்த இல்லத்தில் மரியாதை என்ற விளக்கை, அன்பு என்ற எண்ணெயை விட்டு நம்பிக்கை என்ற திரியை ஏற்ற வேண்டும்.

அன்பும் புரிதலும் இருந்தால் குடும்பமே சுவர்க்கமாகும். ஆனால் குடும்பத்தினருக்கு இடையே அவநம்பிக்கையும், விரோதமும், பகையும் இருந்தால் குடும்பம் நரகமாகி விடும். உலகமுழுவதிலும் வீடு, குடும்பம் என்பது ஒரு முக்கியமான சமூக அமைப்பாகும். குடும்பம் நன்கு இருந்தால் இந்த உலகம் முழுவதும் சிறப்பாகத் திகழும். இறைவன் பெயர் ஒலிக்காத இல்லம் ஒரு குகையாகுமே தவிர அது வீடு கிடையாது. திருப்தி மற்றும் சாந்தி நிரம்பியுள்ள வீட்டில் உள்ள அங்கத்தினர்கள் எல்லோரும் சந்தோஷமாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பார்கள். வீட்டில் உள்ள மூத்தவர்களுக்கு தங்கள் சந்ததியினரை இந்த வகையில் வளர்க்க வேண்டிய பொறுப்பும் உள்ளது.

எந்த இல்லத்தில் கணவனும் மனைவியும் புனிதமான அன்பினால் பிணைக்கப்பட்டு இருக்கிறார்களோ, தினமும் ஆன்மிக வளர்ச்சிக்காகப் புனித நூல்களைப் படித்துக் கொண்டு இருக்கிறார்களோ, இறைவனின் நாமத்தையும் பாடிக்கொண்டு அவர் புகழை எண்ணிக் கொண்டிருக்கிறார்களோ, அந்த இல்லம், இறைவன் வசிக்கும் இல்லமாகும். பாலவிகாஸ் குழந்தைகள் வளரும் வீடு, சுத்தமாகவும், வெறுப்பு பொறாமை, பேராசை, பகைமை, கபடம், ஆகியவற்றின் தாக்கம் இல்லாத நல்ல அதிர்வுகள் நிரம்பி இருக்க வேண்டும். குழந்தைகள் உண்ணும் உணவு முழுமையானதாகவும் தூய்மையானதாகவும் இருக்க வேண்டும். இரண்டு வயது முதல் ஐந்து வயது வரை குழந்தைகள் பெரியோர்கள் செய்வதைப் போலவே நடந்துகொள்ள விரும்பும். ஆகவே பெற்றோர்கள் மிகவும் ஜாக்கிரதையாக நடந்து, தங்கள் குழந்தைகளுக்கு நல்ல முன்னுதாரணமாகத் திகழவேண்டும்.

குழந்தையின் ஆளுமை மலர குடும்பம் மிகவும் தேவை. இல்லம் இல்லாத, உதவியற்ற குழந்தையினால் எவ்வாறு வளரவும் பேசவும் முன்னேறவும் முடியும்? இல்லம் தான், நன்னடத்தை பயிலும் இடமாக இருக்கும். பெண்களைப் போற்றும் இடம் இல்லமே ஆகும். அப்படிப்பட்ட இல்லம், வளமும் அமைதியும் உள்ள சுவர்க்கமேயாகும்.

குழந்தை பிறப்பதற்கு முன்பே பெற்றோர்மை துவங்குகிறது ?

முந்தைய காலத்தில் கலாச்சாரப்பழக்க வழக்கங்களை நாம் நம் வீட்டில் கடைப் பிடிக்கும் போது கர்ப்பமுற்ற பெண்கள் புனிதமான கதைகளைக் கேட்டு, தங்கள் மனம், ஹ்ருதயம் ஆகியவற்றை தூய்மையான தெய்வீக எண்ணங்களால் நிரப்பி, வயிற்றுக்குள் இருக்கும் கருவிற்கு தூய்மையான நல்லதிர்வுகளை ஏற்படுத்துவார்கள். ஆனால், இன்றைய பெண்மணிகள் கருவுற்றிருக்கும்போது ஒரு நாளைக்கு மூன்று திரைப் படங்களைக் காண விரும்புவதால் தற்காலத்தில் பிறக்கும் குழந்தைகள் ஆபாசமான மனோபாவங்களைக் கொண்ட குழந்தைகளாகப் பிறக்கின்றன. இந்த பேருண்மையை பண்டைய ரிஷிகள் அறிவார்கள். அந்த காலத்தில் தெய்வீகச் சூழலில் பிறந்த குழந்தைகள் வீர தீர பராக்ரமங்களுடன் உதார குணங்களையும் கொண்டு இருந்தார்கள்.

பெற்றோர்கள் – சொந்தக்காரர்களா அல்லது பாதுகாவலர்களா?

குழந்தைகள் உங்கள் மூலமாக வந்தவை; உங்களுக்கு அல்ல. தன் முதலாளியின் தோட்டத்தில் வளரும் மரங்களை தோட்டக்காரன் பாதுகாப்பது போல், இறைவனால் நியமிக்கப்பட்ட பெற்றோர்கள், தங்கள் வீட்டில் இறைவன் பிறக்க வைத்த சிறு உயிர்களை வளர்க்கிறோம் என்று எண்ண வேண்டும்.

பெற்றோர்கள் உயிருடன் வாழும் தெய்வங்கள்

முதன்முதலாக நீங்கள் உங்கள் பெற்றோரிடம் நன்றி உணர்வைக் காட்டுங்கள். உதிரம், உணவு, புத்தி, பணம் ஆகியவை உங்கள் பெற்றோர்கள் உங்களுக்குத் தரும் பரிசாகும். இந்தப் பரிசுகளை நீங்கள் இறைவனிடமிருந்து நேராகப் பெறுவதில்லை. இறைவன் சம்பந்தப்பட்ட அனுபவங்கள் மறைமுகமானது. பெற்றோர்களை மட்டுமே நேரில் காணவும் அவர்களின் அன்பையும் அனுபவிக்க முடியும். ஆகவே உன் பெற்றோர்களை இறைவனாக உணருங்கள். நீங்கள் பெற்றோர்களிடம் அன்பு மற்றும் மரியாதையைச் செலுத்தினால், இறைவன் மகிழ்ந்து உங்கள் முன்னே தோன்றுவார்.கடவுளை வழிபடுவது எவ்வாறு என்று சீதை ஒருமுறை கற்றுக்கொடுக்கும் போது, இராமர் இடைமறித்து, “உலகில் அன்னை தந்தையரை விடப் பெரியவர்கள் யார் உள்ளனர்? நமது தேவைகளையும் கஷ்டங்களையும் அவர்கள் அறிவார்கள். நம் உணர்வுகளை நன்கு புரிந்து கொள்வார்கள். நம் ஆசைகளைப் பூர்த்தி செய்ய அவர்களால் முடியும். நம் நல்வாழ்வுக்கு உதவும் நபர்களை அறிந்த பின், தெரியாதவர்களை ஏன் பின்தொடர வேண்டும்?” என்று கேட்டார். எப்போதும் எல்லாக்காலங்களிலும் உங்கள் பெற்றோர்கள் உங்களைக் காப்பாற்றுகிறார்கள். நீங்கள் அவர்களை வணங்க வேண்டும். அன்னையை பூமிக்கும், தந்தையை விதைக்கும், ஒப்பிடலாம். விதையை பூமியில் விதைத்தால் தான் செடி முளைக்கும். உங்கள் பிறப்பிற்கும் வளர்ச்சிக்கும் காரணமான உங்கள் தாயையும் தந்தையும் நீங்கள் புறக்கணிக்கக் கூடாது.

அன்னையின் புகழ்

அன்னையே இறைவன் அனுப்பிய செவிலித் தாய். அன்னையின் கடமை இறைவனின் அருள் பெற்றுத்தருதலே. இறைவனின் அருளே அன்னைக்கு இறைவன் வழங்கும் மாதாந்திர சம்பளம். பள்ளிக்குச் செல்லும் லட்சக்கணக்கான குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கு அன்னையே முதல் ஆசிரியை. அவளின் முன் உதாரணம், அவளின் புத்திமதி, எச்சரிக்கை ஆகியவை மனிதனுக்கு நெடுங்காலம் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தன் கல்வித்தகுதி, பதவி என்னவாக இருப்பினும், பெண்களுக்கு தன் முதல் கடமை குடும்பத்தைக்காப்பதே என்று புரிந்துகொள்ளவேண்டும். அடுத்த தலைமுறைக்கு பெண்களே அன்னையர் ஆவார்கள். அவர்களே அந்த தலைமுறையிலுள்ள முதல் ஐந்து வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஆசிரியைகள். தேக மாதாக்கள், மற்ற நான்கு மாதாக்களின் பெருமைகளைச் சொல்லித் தரவேண்டும். ஆகவே அவர்களின் பொறுப்பு மிகவும் முக்கியம் வாய்ந்தது. அன்னை குடும்பத்தில் ஆன்மீக உயர் லட்சியங்களைக் காக்கும் அன்னையாக இருந்து குழந்தைகளுக்கு குருவாக இருக்கவேண்டும்.

ஒவ்வொரு குழந்தையிடம் மறைந்திருக்கும் இறை உணர்வை வளர்த்து வெளிக்கொண்டுவரச் செய்யும் முயற்சியை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவேண்டும். ஒவ்வொரு மனிதனுக்கும் அன்னையின் மடியே பள்ளிக்கூடமாகும். அர்ப்பணிப்பு குணமுடைய அன்னையர்களால் மட்டுமே, எதிர்காலத்திற்குப் பாடுபடுபவர்களை நாட்டிற்குத் தர முடியும். நல்ல அன்னை நாட்டின் சொத்து. வாழ்க்கையில் அன்னை தான் முக்கிய முடிவுகளுக்கு காரணமா கிறாள். அன்னை தான் குழந்தையின் எதிர்காலத்தை உருவாக்குகிறாள். மனித வாழ்க்கையில் அன்னை முக்கியத்துவம் பெறுகிறாள். கெட்ட மகன் உண்டு. கெட்ட தாய் என்பது கிடையாது. அன்னையின் தூய எண்ணங்களால் குழந்தைகள் நல்லவர் களாகவும் புத்திசாலியாகவும் இருந்து, மிக உயர்ந்த பதவிகளை வகித்து, பேரும் புகழும் பெறுகிறார்கள். அன்னை குழந்தையைத் தன் கைகளில் ஏந்தி, உணவை ஊட்டி, உணவை உண்ணும் முறைகளையும் கற்றுத் தருகிறாள். அந்த அன்னையே அர்த்தம் பொதிந்த ஒலியை எழுப்பிப் பேச வைக்கிறாள். ஆகவே தான் அன்னையே முக்கியமான முதல் ஆசிரியை. இந்த அமைதியான உலகத்தை நிறுவ, பெண் வர்க்கமே அஸ்திவாரமாகும். பெண்கள் உண்மையாகவும், தைரியமாகவும், கனிவாகவும், இரக்கமாகவும், நற்குணங்கள் உள்ளவர்களாகவும், பக்தியாகவும், இருந்தால் உலகில் சமாதானத்தின் சகாப்தம் உருவாகும். குழந்தையிடம் அன்னை காட்டும் அன்பைக் காட்டிலும் இனிமையானது உலகில் எதுவுமே இல்லை. அன்புக்கு உருவம் இல்லை என்று சொல்லப்படுகிறது. அனால் அன்புக்கு உருவம் உண்டு. குழந்தையைப் பாராட்டி, சீராட்டி வளர்க்கும் அன்னையே அன்பின் உருவமாகும்.

தலைவர்களுக்குப் பின்னே

கௌசல்யாவின் அரவணைப்பிலே ராமனின் தெய்வீகம் மலர்ந்தது. மிகத்தூய்மையான நற்குணங்களையுடைய சீதையின் அன்பான வளர்ப்பிலே லவனும் குசனும் வல்லமையும் புகழும் ஒன்று சேரப்பெற்றார்கள். ஜீஜாபாயியின் வளர்ப்பினால் சிவாஜி மிகச்சிறந்த போர் வீரனானார். புத்லிபாயியின் நல்ல வளர்ப்பிலே காந்தி மகாத்மாவானார். உன் அன்னை உன்னை அரவணைத்து பராமரிப்பது போல உலகில் வேறு யாராவது உன்னை கவனித்துக் கொள்வார்களா? அம்மா என்ற சொல்லே மனிதன் கற்றுக்கொள்ளும் முதல் வார்த்தையாக உள்ளது. அம்மா என்ற சொல்லின் முதல் எழுத்தான ‘அ’ என்பதே அகரவரிசையில் முதல் எழுத்தாக அமைந்துள்ளது.

இரண்டு உதாரகுணங்களையுடைய அன்னைமார்களின் மூன்று விருப்பங்கள்

ஈஸ்வரசந்திர வித்யா ஸாகர் ஒரு தூய மனம் கொண்டவர். அவர் ஒரு எழ்மைக்குடும்பத்தில் பிறந்தவர். அவர் தன் வயதான அன்னையுடன் வாழ்ந்து வந்தார். அவரது அன்னை மிகவும் பழைய கிழிந்த புடவைகளை அணிவதைக்கண்டு மிகவும் வருத்தப்படுவார். படிப்பை முடித்தவுடன் ஒரு வேலைக்குச் சென்று சம்பாதிக்க ஆரம்பித்தார். ஒருநாள் அவர் தன் அன்னையின் அருகில் அமர்ந்து அவரிடம், “அன்னையே! உங்களுக்கென்று ஏதேனும் ஆசை இருந்தால் சொல்லுங்கள். நான் சம்பாதிக்க ஆரம்பித்து விட்டேன். அவற்றை என்னால் நிறைவேற்ற இயலும்” என்றார். அவரது அன்னை, “மகனே! எனக்கென்று எந்த ஆசையும் கிடையாது. நீ நல்ல உதார குணமுள்ளவனாக இருந்தாலே போதும்” என்றார். சிறிது காலத்திற்குப் பிறகு அவருக்கு வேறு ஒரு நல்ல வேலை கிடைத்தது. ஆயிரக்கணக்கில் சம்பாதிக்க ஆரம்பித்தார். மறுபடியும் தன் அன்னயைப்பார்த்து “உங்களுக்கு ஏதேனும் ஆசைகள் உள்ளனவா?” என்று கேட்டார். அவரது அன்னை, “எனக்கு மூன்று ஆசைகள் உள்ளன; அவைகளை எல்லாம் நான் அடையாமல் நான் நிம்மதியாக இருக்க முடியாது. நம் கிராமம் சிறியது; இங்குள்ள குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல் நேரத்தை விரயமாக்கிக் கொண்டு இருக்கின்றனர், ஆகவே நீ சம்பாதித்த பணத்தில் ஒரு பள்ளிக்கூடம் கட்டு.” என்றாள். தன் அன்னை சொன்னபடி அவர் ஒரு பள்ளிக்கூடம் கட்டினார். தன் அன்னையினுடைய இரண்டாவது விருப்பத்தைத் தெரிவிக்கச்சொன்னார். அவர் அன்னை “நம் கிராம மக்கள் மருத்துவ வசதிகள் இல்லாமல் அவதியுறுகின்றனர். அவர்களுக்கு ஜுரம் வந்தால் அவர்களை கவனிக்க யாரும் இங்கு இல்லை. அதனால் நீ ஒரு மருத்துவமனை கட்ட வேண்டும்” என்று கூறினார். வித்யாசாகரும் ஒரு மருத்துவமனை கட்டினார். சிறிது காலம் கழித்து அவர் அன்னையின் மூன்றாம் விருப்பத்தைக் கூறுமாறு கேட்டார். அவரது அன்னை, “இங்கு உள்ள கிராம மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டினால் கஷ்டப்படுகிறார்கள். அவர்கள் மாசுற்ற நீரை அருந்துவதால் அவர்களுக்கு பல வியாதிகள் வருகின்றன” என்றார். உடனே வித்யாசாகர் அங்கு சில கிணறுகளைத் தோண்டச் சொல்லி கிராம மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கினார். ஈஸ்வர சந்திர வித்யா ஸாகர் தன் வருமானம் அனைத்தையும் தன் அன்னையின் விருப்பங்களைப் பூர்த்தி செய்வதற்காகவே செலவழித்தார்.

ஈஸ்வரம்மாவுக்கும் இதே போன்ற விருப்பங்கள் இருந்தன. ஒருமுறை அவள் சுவாமியிடம், “சுவாமி! நமது புட்டபர்த்தி சிறிய கிராமமாக உள்ளது, இங்கு பள்ளி இல்லாததால் குழந்தைகள் நெடுந்தூரம் நடந்து போய் அருகாமையிலுள்ள கிராமங்களிலுள்ள பள்ளிகளில் படிக்க வேண்டியிருக்கிறது. நீ கருணைக்கடல் அல்லவா?அன்பு கூர்ந்து இந்த கிராமத்தில் ஒரு பள்ளி கட்டுவாயாக”என்றாள். நான் எங்கு கட்டுவது?” என்று கேட்டேன். ஈச்வரம்மா தன்னிடமுள்ள ஒரு சிறிய நிலத்தைத் தந்து அங்கு கட்டும்படி கூறினாள். அது சிறிய பள்ளியாக இருந்தாலும், அதன் திறப்பு விழா மிக விமரிசையாக நடைபெற்றது. பல பக்தர்கள் வந்து சிறப்பித்தனர். திறப்புவிழா சிறப்பான முறையில் நடந்ததை எண்ணி மகிழ்ந்த ஈஸ்வரம்மா தனக்கு மற்றொரு விருப்பம் உள்ளதாகக் கூறினாள். அவள் அங்கேயே ஒரு மருத்துவமனை கட்ட விரும்பினாள். அவள், “சுவாமி! உங்களுக்கு கஷ்டம் கொடுக்க நான் விரும்பவில்லை. நீங்கள் கஷ்டப்பட்டால் இந்த உலகமே கஷ்டப்படும். நீங்கள் மகிழ்ந்தால் இவ்வுலகமே மகிழ்ச்சியுடன் இருக்கும். அவள் விருப்பபடி நான் ஒரு ஆஸ்பத்திரி கட்டினேன். அந்த காலத்தில் பெயர் புகழுடன் வாழ்ந்த பெஜவாடா கோபால் ரெட்டி திறப்புவிழாவுக்கு அழைக்கப்பட்டார். வெகு சிறப்பாக நடைபெற்ற திறப்பு விழாவைக்காண அருகாமையில் உள்ள கிராமங்களிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பெருந்திரளாக வந்திருந்தனர். ஈஸ்வரம்மா இவ்வளவு நேர்த்தியுடன் இந்த விழா நடைபெறும் என்று கற்பனை கூட பண்ணவில்லை. அடுத்தநாள் அவள் என்னிடம் வந்து, “நான் இறந்தாலும் பரவாயில்லை. நீங்கள் கிராமத்து மக்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்துள்ளீர்கள். அவர்கள் துயரைத்துடைத்தீர்கள்” என்றாள். நான் உடனே, “உங்களுக்கு ஏதேனும் விருப்பம் இன்னும் இருந்தால் சொல்லலாம்.” என்றேன். அவள் தயக்கத்துடன் தனக்கு மற்றமொரு வருப்பம் உள்ளது என்றாள். “சித்ராவதி நதியில் மழைக்காலத்தில் வெள்ளம் பெருகி ஓடுகிறது. ஆனால் வெயில் காலத்தில் அது வற்றிவிடுகிறது. மக்களுக்கு குடிநீர் கிடைப்பதே அரிதாகிறது. அதனால் இங்கு கிணறுகள் வெட்ட வேண்டும்” என்றாள். நான் கூறினேன் “நான் இங்கு மட்டும் கிணறுகள் வெட்டி என் வேலையை நிறுத்தப் போவதில்லை; ராயலசீமைப்பகுதி முழுவதற்கும் குடி நீர் கிடைக்க வழிவகைகள் செய்யப்போகிறேன்” என்றேன். ஈஸ்வரம்மா, “எனக்கு ராயலசீமா பற்றித் தெரியாது. நம் கிராமத்திற்கு தண்ணீர் தந்தால் நான் திருப்தி அடைவேன்” என்றாள்.

தந்தையின் தலையாயக்கடமை

தறி கெட்டுச்செல்லும் குழந்தைகளை அனுமதிக்கும் தந்தை உண்மையான தந்தையல்ல. பிரஹலாதன் கூறினார், “குழந்தையே! கடவுளை அடைந்துவிடு. இறைவனிடம் அழைத்துச் செல்பவரே உண்மையான குரு. தன் குழந்தையைப்பேணிக் காத்து அக்குழந்தையின் ஆளுமையை வளர்க்கும் தந்தையின் ஹிருதயம் இனிமையானது. குழந்தைகளை நல்வழிப்படுத்தி உன்னதமான குறிக்கோள்களைக் கற்றுத்தரும் தந்தையர்கள் அரிதாக உள்ளனர். ஆனால் சில தந்தையர்கள் உயர் இலட்சியங்களைப் பற்றி பேசுவார்களே தவிர தங்கள் குழந்தைகளை வீட்டில் திருத்தமாட்டார்கள். அவர்கள் செய்யும் பிரசங்கங்களை யார் கேட்பார்கள்? பேசுவது சுலபம். கடைபிடிப்பது கடினம். தந்தை என்பவர் காக்கும் விஷ்ணு போன்றவர்.

மாதா, பிதா, பிறகே குரு

அன்னைதான் உனக்கு புனிதமான கொள்கைகளான அன்பு, கருணை, சகிப்புத்தன்மை, பொறுமை, தியாகம் ஆகிவற்றைக் கற்றுத் தருகிறாள். அன்னை, தந்தையை அறிமுகப் படுத்துகிறாள். தந்தை, உன்னை குருவிடம் அழைத்துச் செல்கிறார். குரு உனக்கு இறைவனை அடைய வழிகாட்டுகிறார். அதனால் தான் மாதா , பிதா , குரு தெய்வம் ஆகியவர்களில் தாய் முதலிடம் பெறுகிறாள். குழந்தைப் பருவம் என்பது மிகவும் முக்கியமானதால் சரியாக குழந்தை வளர்ப்பதில் தாய், தந்தை ஆகிய இருவரும் சமபங்கு வகிக்கிறார்கள். பெற்றோர் திடமான நேர்மையான அஸ்திவாரத்தை அமைக்க வேண்டும். முதல் ஐந்து வயது வரை குழந்தை அன்னையிடம் வளரவேண்டும். ஐந்து வயது ஆன பின் தந்தை மகனை வளர்க்க வேண்டும். தந்தை தான் மகனுக்கு அறிவுரை சொல்லுவதை விட, நடந்து காட்டி மகனை ஊக்குவிக்க வேண்டும்.

பெற்றோர்களும் ஆசிரியர்களும் இணைந்து செயல்பட வேண்டும்

ஆசிரியர் பள்ளியில் சொல்லிக்கொடுப்பதை, வீட்டில் அன்னையும் தந்தையும் சேர்ந்து நிறைவு செய்கிறார்கள். பெற்றோர்கள், குழந்தைகள் பள்ளியில் கற்கும் பாடங்களைப் பற்றித் தெரிந்து வைத்திருக்க வேண்டும். தாங்கள் மதிக்கும் ஆசிரியர்களிடமிருந்து கற்பவையும் பெற்றோர்கள் தரும் போதனைகளும் மற்றும் நடத்தையும் ஒன்றுக்கொன்று எதிர்மறையாக இருத்தல் கூடாது. குழந்தைகளுக்கு வாழும் நல்ல முறைகள், எளிமை, அடக்கம் கட்டுப்பாடு ஆகியவைகளைக் கடைப்பிடிக்க வழி காட்டவேண்டும். பாலவிகாஸ் வகுப்புகளிலுள்ள புத்திசாலியான, உற்சாகமான, ஒத்துழைக்கும் குழந்தைகளை உதாரணங்களாகக் காட்டி எல்லாப் பெற்றோர் களையும் தங்கள் குழந்தைகளை பாலவிகாஸ் வகுப்புகளுக்கு அனுப்பவும் அன்புடன் தூண்ட வேண்டும். குழந்தைகளுக்குக் கற்றுத்தருதலுடன் ஆசிரியர் திருப்தி அடையக் கூடாது. அவர்கள் பெற்றோர்களைச் சந்தித்து குழந்தைகள் வீட்டில் எவ்வாறு நடந்து கொள்கின்றனர் என்பதையும் கேட்டறிய வேண்டும். ஆசிரியர் அறிவைப் புகட்டுவார். ஆனால், நல்லொழுக்கம், கடுமையான புலன் கட்டுப்பாடு, நன்னடத்தை ஆகியவற்றை கவனித்து நிர்வகிப்பது பெற்றோர்களே. அப்போது குழந்தைகள் பவித்ரமான புனித ஆன்மாக்களாக, தெய்வீகமான புனிதர்களாக ஆவார்கள்.

பெற்றோர்களை முன்மாதிரியாகக் கொள்ளும் குழந்தைகள்

குழந்தைகளுக்கு சுயநலமற்ற அன்பு உள்ளது. அவர்கள் கள்ளம் கபடமற்ற பார்வையாளர்கள். தங்கள் பள்ளியிலிருந்து கற்பதற்கு முன்பே, வீட்டில் உள்ள பெரியவர்களின் செயல்பாடுகளிலிருந்து அவர்கள் நிறையக் கற்கின்றனர். ஆகவே பெற்றோர்கள் தங்களுக்குள்ளும், குழந்தைகள் முன்பும் மிக ஜாக்கிரதையாக நடந்து கொள்ளவேண்டும். குழந்தைகள் மற்றவர் நடப்பதைப் பார்த்து காப்பியடிக்கக் கற்றுக்கொள்வதற்கு முன் தாய் தந்தையர் சமூகத்தில் நடந்து கொள்ளும் முறை தான் முதல் முன்னுதாரணமாக இருப்பதைக் காண்கிறார்கள்.

நல்லகுணங்களை வளர்த்து உள்ளத்தூய்மையைப் பெருக்கு

துரதிருஷ்டவசமாக, இன்று பெற்றோர்களின் நடத்தையில் தூய்மை இல்லை. சிறந்த பண்புகள் இல்லை; கட்டுப்பாடான வாழ்க்கை இல்லை; கெட்ட செயல்களும் தீய பழக்கங்களும் உலகம் முழுவதும் வளர்ந்து கொண்டே போகின்றன. படுக்கையிலிருந்து எழும் போதே பெற்றோர்கள் ஒருவருக்கொருவர் தூஷித்துக் கொள்கின்றனர். அவர்கள் குழந்தைகளும் அவர்களுக்குள் தாக்கிக் கொள்கின்றனர். கலி யுகத்தின் கெட்ட பலன்களால், பெற்றோர்கள் ஒருவர்கொருவர் சண்டையிடுகின்றனர். தந்தையர்கள் ஹிரண்யகசிபுவைப் போல் நடக்கின்றனர். அத்தகைய பெற்றோர்களால் பாரத நாட்டில் அதர்மமும் தீய செயல்களும் பரவி வருவதைப் பார்க்கிறோம்.

பெற்றோர்களே! உங்களைத் திருத்திக்கொள்ளுங்கள்

பெற்றோர்களே, குழந்தைகளுக்கு வழிகாட்டத் திறமை படைத்தவர்களாக இருக்கத் தவறுகிறார்கள். அவர்கள் கண்மூடித்தனமாக அன்பு காட்டுவதால், கண்டிக்கத்தக்க குழந்தைகளின் நடவடிக்கைகளைத் திருத்தும் வழி தெரியவில்லை. புகை பிடித்தல், சீட்டாட்டம், சூதாட்டம், மது அருந்திவிட்டு வீட்டில் சண்டை ஆகியவற்றில் ஈடுபடுகிறார்கள். அவர்கள், குழந்தைகள் முன்னால் பொய் பேசி, இகழ்ந்து, தூஷித்து, தற்பெருமை பேசி, அவதூறுகளைப் பரப்புகின்றனர். இவ்வாறிருக்கையில் அத்தகைய பெற்றோர்கள் எவ்வாறு குழந்தைகளுக்கு நல்வழி காட்ட முடியும்? பெற்றோர்கள் எதிரியாகவும் தடங்கல்களாகவும் இருப்பதைக் காட்டிலும், தங்கள் நடத்தைகளைத் திருத்தி, மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கும் முன்னுதாரணமாக இருப்பதற்கு நீங்கள் அறிவுறுத்த வேண்டும். வெறுப்பு தற்பெருமை தூஷணை முதலானவைகளிலிருந்து விடுபட்ட சூழ்நிலை வீட்டிலிருக்கவேண்டும். கடவுளை அஸ்திவாரமாக வைத்து உறவுகளை அமைத்து, பிரேமை என்ற சக்கரம் வீட்டில் உலா வர வேண்டும்.

பெற்றோர்களே ஜாக்கிரதை

இங்கு கூடியிருக்கும் மூத்த பெற்றோர்கள் நிறைய இருப்பதால் அவர்களுக்கு சில அறிவுரைகள் வழங்க விரும்புகிறேன். குழந்தைகளுக்கு கெட்ட முன்னுதாரணமாகத் திகழாதீர்கள். நீங்கள் உண்மையாகவும், கோபமூட்டினாலும் அமைதியாகவும், மற்றவர்களுடன் பேசிப் பழகும் போது மிகுந்த அன்புடனும் இருந்தால் உங்கள் குழந்தைகள் சத்யம் தர்மம், சாந்தி, பிரேமை ஆகியவற்றைக் கடைப்பிடித்து வளரும். நீங்கள் வீட்டிலிருந்துகொண்டே உங்களைத் தொலைபேசியில் யாராவது அழைத்தால், உங்கள் மகனை விட்டு நீங்கள் இல்லை என்று சொல்லச்சொன்னால் அவன் மனதில் அசத்தியம் என்ற விஷத்தை விதைக்கிறீர்கள், அது பெரிய மரமாக ஆகிவிடும். சிறிய தப்பு எப்படி பெரிய ஆபத்தில் முடியும் என்பதை ஒரு கதை மூலம் விளக்குகிறேன். ஒரு அன்னை தன் குழந்தையைத் தோளில் சுமந்தபடி சந்தைக்குச் சென்றாள். அந்த வழியில் ஒரு பழம் விற்பவள் பழக்கூடையைத் தலையில் சுமந்து அவளருகில் சென்று கொண்டிருந்தாள். அப்போது தோளில் இருந்த குழந்தை கூடையில் உள்ள பழத்தை எடுத்து சாப்பிட ஆரம்பித்தது. இது தெரிந்த அக்குழந்தையின் அன்னை, அவனுடைய சாமர்த்தியத்தை மெச்சினாள். இதனால் அக்குழந்தை சிறிய அளவில் திருடுவது, ஜேப்படி கொள்ளை ஆகியவைகளைச் செய்து அவன் வளர்ந்த பின்னர் ஒரு வீட்டில் பூட்டை உடைத்துத் திருடினான். இவ்வாறு திருட முயன்றபோது ஒரு முறை கொலையும் செய்தான். அவனுக்கு தூக்கு தண்டனையும் வழங்கப்பட்டது. தூக்கிலிடு முன்பு அவன் தன் அன்னையைப் பார்க்க விரும்பினான். அவன் அன்னை அவன் முன்னால் நின்று அழுது கதறினாள். தன் மகனின் விதியை எண்ணி அவள் விசும்பினாள். அவன் தன் அன்னையை தன் அருகில் அழைத்து அவள் கழுத்தை நெறித்துக் கொலை செய்ய முயன்றான். அருகிலிருந்த காவலாளிகள் அவளை அவனிடமிருந்து விடுவித்தனர். அந்த மகன், “என் அன்னை அந்த தண்டனைக்குத் தகுந்தவள் தான். நான் இரண்டு வயதுக் குழந்தையாக இருந்தபோது, வாழைப்பழம் திருடினேன். அதற்கு அப்போது என்னைப் பாராட்டுவதற்கு பதிலாகக் கண்டித்து இருந்தால், நான் கெட்ட வழியில் போய் இருந்திருக்க மாட்டேன்.

குழந்தைகளிடம் பொதிந்துள்ள திறன்களை அறிக

சிறுகுழந்தைகளின் இதயங்களில் தெய்வ பக்தியும் உயரிய லட்சியங்களில் பற்றும் பொதிந்து இருக்கின்றன. இவைகளை வளர்க்க முடியும். அவர்களுக்கு ஒன்றும் தெரியாது எனவும், உங்கள் விருப்பம் போல் அவர்களை வழிப்படுத்தலாம் என்று எண்ணாதீர்கள். அவ்வாறு நினைப்பதும் தவறு. அவர்களிடம் மறைந்துள்ள திறமைகளையும் சக்திகளையும் புரிந்துகொண்டு அவற்றை குழந்தைகள் தானே பரிந்துரைக்கவும் அல்லது தெரிவிக்கவும் வகையில் நாம் சில வழிகளைக் கையாள வேண்டும். குழந்தைகள் இறைத்தன்மையைப் பெறவும் உயர்ந்த குறிக்கோளை அடையவும் உதவுங்கள். குழந்தைகளைத் தாழ்வாகவும், அவர்கள் முன்னேற சக்தியற்றவர்கள் எனவும் கருதாதீர்கள்.

குழந்தையின் நன்னடத்தையில் கவனம் வை

பெற்றோர்கள், தங்கள் குழந்தைகள் செல்வச்செழிப்போடு இருக்க விரும்புகிறார்களே அன்றி தார்மீகரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் சுகமாக இருக்க வேண்டும் என்று எண்ணுவதில்லை. பெற்றோர்கள் குழந்தை பிறந்ததும் அவனை நன்கு படிக்க வைத்து, அயல்நாட்டிற்கு அனுப்பி எப்படியாவது நன்கு பணம் சம்பாதிக்க உற்சாகப் படுத்துகிறார்கள். இதைத்தான் அவர்கள் குழந்தைகளுக்குக் கற்று கொடுக்கிறார்கள். பிச்சை எடுப்பது முதல், திருட்டு வரை இன்றைய மக்கள் பல விதங்களில் சம்பாதிக்கிறார்கள். நன்னடத்தை தான் மிகவும் முக்கியம். பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நன்னடத்தையைக் கற்றுத்தருவதில்லை. தவறிப்போகும் குழந்தைகளைக் கட்டுப் படுத்துவதும் இல்லை. குழந்தைகளின் தவறுகளை மன்னித்து கெட்டசெயல்களை அனுமதித்துப் பழக்கங்களாக்க அடிக்கடி தூண்டிவிடுகிறார்கள்.

குழந்தைகளைத் திருத்து; உற்சாகப்படுத்து

இளம் வயதிலேயே சிறுவர்களை சரியான பாதையில் செல்ல பெற்றோர்கள் தயார் செய்ய வேண்டும். அவர்களைத் திருத்தத் தயங்கக் கூடாது. தவறான பாதையில் சென்றால் கண்டிக்கவும் செய்ய வேண்டும். அவர்கள் நேரான பாதையில் நடக்க வைக்க வேண்டி அதற்குண்டானவற்றைச் செய்வது தான், அவர்கள் குழந்தைகளிடம் அன்பு காட்டும் சிறந்த வழியாகும். பெற்றோர்களின் கண்டிப்பே, குழந்தைகளை நல்வழிப் படுத்தும். குழந்தைகள் பொறுப்பற்ற முறையில் இருப்பதும் ஒழுங்கின்மை, கலவரம் ஆகியவற்றை ஏற்படுத்துவதற்கும் பெற்றோர்களும் ஆசிரியர்களும் அவர்களுக்கு ஒழுங்கைக் கற்றுகொடுக்காததே காரணமாகும். குழந்தைக்கு உண்மையைக் கற்றுக்கொடுக்க தந்தை திட்டவோ, கண்டிக்கவோ, அடிக்கவோ செய்யலாம். அன்னை, குழந்தையின் கன்னத்தைக் கிள்ளி, பாலை அருந்த வைக்கலாம். குழந்தைகள், பெற்றோர்கள் செய்தது எல்லாம் அன்பின் நிமித்தமே என்று அவற்றை மறக்கக் கூடாது. நல்லவற்றைச் செய்து கெடுதியான பலன்கள் கிட்டாது. கெட்ட செயல்கள் நல்ல பலன்களைத் தராது. வேப்பங்கொட்டை விதைகள் மாம்பழங்களைத் தராது. மாங்கொட்டைவிதையானது வேப்பம்பழங்களைத் தராது. நன்னடத்தையற்ற செயல்கள் அல்லது குற்றம் புரிந்த குழந்தைகளைக் கண்டிக்கும் போது எரிந்து விழுந்து பயமுறுத்தாதீர்கள். அதற்கு பதிலாக, “மற்ற குழந்தை உன்னிடம் இவ்வாறு நடந்தாலோ அல்லது உன் பொருளை நீ அறியாதவாறு எடுத்துச் சென்றாலோ அல்லது உன்னைத் துன்புறுத்தினாலோ நீ வருத்தப் பட மாட்டாயா? மற்றவர்கள் உன்னைத் துன்புறுத்தக்கூடாது என்று நீ நினைத்தால், நீயும் மற்றவர்களுக்குக் கெடுதி செய்யக் கூடாது.” இவ்வாறு சொன்னால் குழந்தைகள் எளிதில் புரிந்து கொண்டு தான் செய்த செயலுக்கு வருந்துவார்கள். இனி கெட்ட செயலைச் செய்யவோ அல்லது கெட்ட சொற்களைப் பேசவோ கூடாது என்று தீர்மானிப்பார்கள். பாசத்தோடு சொல்லும் புத்திமதிகளை ஏற்பார்கள்.

குழந்தைக்கு மிக உயர்ந்த பரிசு

குழந்தைகளுக்கு செல்வங்களைக் குவித்து வைக்கப் பாடுபடும் பெற்றோர்கள், அவர்களுக்கு மேம்பாட்டு குணங்களைச் சொல்லித் தருவதில்லை. மேம்பாட்டு குணங்கள் மூலம் செல்வம் ஒரு பொருட்டல்ல என்றும் அந்த செல்வத்தை உண்மையான முன்னேற்றத்திற்கு எவ்வாறு செலவிடலாம் என்றும் அறிய முடியும். துருவனை எடுத்துக்கொள்ளுங்கள். அவன் தன் தவம் மூலமாகத்தான் இறையருள் பெற்று தன் தந்தையிடம் வேண்டியதைப் பெறமுடியும் என்று அவன் மாற்றாந்தாய் கூறினாள். ஆகவே ஐந்து வயதுள்ள சின்னஞ்சிறுவன் காட்டிற்குச் சென்று வரலாறு காணாதவாறு கடுமையான தவங்களை மேற்கொண்டான். தவத்தின் பயனாக, அவன் விருப்பம் தூய்மையாகி முடிவாக அவன், “நான் அரச ஆதரவையோ சிம்மாசனத் தையோ பொருட்படுத்தவில்லை. நான் இறைவனின் சாம்ராஜ்யத்தை அடைவேன். நான் இறைவனின் மடியில் அமருவேன்” என்றான். அவன் மனிதர்களுக்கு அரசனாக இருப்பதைத் தவிர்த்து இறைவனின் குழந்தையாகவும் இறைவனுடனும் இருப்பதால் தோன்றும் ஆனந்தக்களிப்பை விரும்பினான்.இக்காலக் குழந்தை, செல்வத்தையும் செல்வத்தினால் வாங்கமுடிகிற பொருட்களையும் வழிபடுகிறது. அது பேரன்பையும் தயையையும் ரசிப்பதை விடுத்து கொடூரமானவைகளையும் வஞ்சகத்தையும் ரசிக்கிறது. ஆகவே வீடு பள்ளி, மற்றும் சமுதாயம் ஆகிய மூன்றும் விழிப்புடன் இருந்து இந்த உயர்ந்த நாட்டின் எதிர்காலத்திற்காக இச்சவாலை ஏற்கவேண்டும். இந்தக் குழந்தைகள் ஏரிபோன்ற உலகியல் வாழ்வில், நீரில் இருந்தாலும் நீருடன் ஒட்டாத தாமரை போன்று இருக்கக் கற்றுத்தரவேண்டும். உலகில் இருந்தாலும், அதில் மூழ்காது, அதில் ஒட்டாது இருக்கவேண்டும். இளம் வயதில் வாழ்வில் வெற்றியடைய வைக்கும் இந்த ரகசியத்தை பெற்றோர்கள் சொல்லித்தருவதில்லை.

சிறு வயதிலேயே நல்லவற்றைப் பழக்கு

எப்போதெல்லாம் குழந்தைகள் தெரிந்தோ தெரியாமலோ வழி தவறிப் போகிறார்களோ அப்போதெல்லாம் பெற்றோர்கள் அவர்கள் செய்யும் தவறுகளைத் திருத்தி நேர்மையான பாதைக்கு இட்டுச்செல்ல வேண்டும். குழந்தைகளின் நல்ல செயல்களை பாராட்டியும் கெட்ட செயல்களைக் கண்டிப்பதன் மூலம் அவர்கள் நேரான பாதையில் செல்லத் தீர்மானிப்பார்கள். தற்காலத்தில் பெற்றோர்கள் பேராபத்தைத் தரும் கட்டுப்பாடற்ற சுதந்திரத்தை வழங்குகிறார்கள். சிறு வயதில் குழந்தைகளைக் கட்டுப் படுத்தவில்லை என்றால் அவர்களை நெறிப்படுத்தவே முடியாது.

மகாத்மாவின் அன்னை

காந்தி தன் அன்னையிடம் கற்ற பாடங்களே, சாதாரணமாக இருந்த காந்தியை உலகம் போற்றும் உத்தமராக்கியது.

அவரது அன்னை குயில் கூவின பின் தான் உணவருந்த வேண்டும் என்று விரதம் இருந்தார். ஒருநாள் காந்தி சிறுவனாக இருக்கும் போது, அவரது அன்னை குயிலின் குரல் நீண்ட நேரமாகியும் கேட்காது காத்திருப்பதைக் கண்டார். அவர் உடனே வீட்டை விட்டு வெளியே வந்து குயில் போல தானே குரலெழுப்பினார். பின்பு அன்னையிடம் குயில் பாடியது என்றும் அவரை உணவருந்துமாறு கேட்டுக் கொண்டார்.

அவரன்னை தன் மகன் செய்யும் சேஷ்டையை அறிந்து அவரது கன்னத்தில் பளார் என்று அறைந்தார். “தீயவனே! உன்னைப் போன்ற மகனைப் பெற்றெடுக்க நான் என்ன பாவம் செய்தேன்” என்றார். அந்த நொடியிலிருந்து காந்தி “இனி ஒரு பொய் கூடச் சொல்லமாட்டேன்” என்று தீர்மானம் செய்தார்.

அன்பும் கண்டிப்பும்

பெற்றோர்கள் அன்போடும் கண்டிப்பாகவும் இருக்கவேண்டும். குழந்தைகளிடம் அன்பாக இருப்பது தவறல்ல. அனால் அவர்கள் எவ்வாறு அன்பு செய்ய வேண்டும் என்பதைக் கற்கவேண்டும். உணவு கொடுப்பது, பள்ளிக்கு அனுப்புதல், உலகாயத விஷயங்களைப் பற்றிய அறிவு தருதல் ஆகியவைகளோடு அவர்கள் கடமை முடிந்துவிடுவதில்லை. குழந்தைகளுக்குச் சரியான மனித மேம்பாடுகளைச் சொல்லித்தரவேண்டும். அவர்கள் செல்வம் சேர்ப்பதே வாழ்கையின் குறிக்கோள் என்று வைத்துக்கொள்ளக் கூடாது. அன்போடு சொல்லிக் கொடுக்கும் போது கண்டிப்பும் இருக்க வேண்டும். குழந்தைகள் தங்கள் மனம் ஆசைகள் மற்றும் புலன்கள் ஆகியவற்றைத் திருத்த குழந்தைகளின் உடல், மனம் மற்றும் ஆன்மீக ஆற்றல்கள் வளரும்போது கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டும். புலன்கள், மனம், எண்ணங்கள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தி அவைகளை இறைவனை நோக்கித் திருப்ப வேண்டிய சக்திகளை அவர்கள் வளர்க்கவேண்டியது மிகவும் முக்கியம். ஆகவே குழந்தைகளுக்கு ஞானத்தின் குறிக்கோள் முக்தி என்று வழிகாட்டுங்கள்.

கண்டிப்பு – செயல்படுத்தும் முறை

புடலங்காய் நேராக நீண்டு வளர, ஆரம்ப நிலையில் அதன் நுனியில் கல்லைக் கட்டித் தொங்க விடுவார்கள். அதுபோல குழந்தைப்பருவத்தில் மாணவர்களுக்கு கட்டுப்பாடு, பக்தி ஆகிய கற்களைக் கட்ட வேண்டும். உயர்ந்த பந்தல்களில் புடலங்காய் வளருவதைப் பார்த்திருப்பீர்கள். ஆரம்ப நிலையில் புடலங்காயில் சிறு கற்களைத் தொங்க விடுவார்கள் அது பெரிதாக நீண்டு வளர வளரப் பெரிய கனமான கற்களை உபயோகிப்பார்கள். அது போன்று, வயதுக்குத் தக்கவாறு கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டும். வயது அதிகமாக அதிகமாக கட்டுப்பாடுகளை சற்றுத் தீவிரப்படுத்தினால் குழந்தை நேர்மையாகவும் மாற்றமில்லாது மன உறுதியுடன் வளருவான். கல் மிக கனமாக இருத்தல் வேண்டாம். எல்லா நிலையிலும் எல்லாரிடமும் மிகக் கடுமையான இருத்தல் கூடாது. வயதுக்குத் தக்கவாறு நன்கு யோசித்து கட்டுப் பாடுகளை வரையறை செய்க.

குழந்தைகளைக் கண்டிப்புடன் நடத்துக

குழந்தைகள் அதிகாலையில் எழுந்திருக்கும் பழக்கத்தை வளர்க்க வேண்டும். சேவல் கூவுமுன் அவர்கள் எழுந்திருக்க வேண்டும். சுலோகங்களைச் சொல்ல வேண்டும். குளித்துவிட்டு காலை உணவை உண்டுவிட்டு, வீட்டுப் பாடத்தை செய்து முடித்துவிட்டு பள்ளிக்குச் செல்லவேண்டும். அவர்கள் படிப்பில் தேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு ஆரோக்கியமான நல்ல பழக்கங்களைப் பழக்கப்படுத்த வேண்டும். துரதிருஷ்டவசமாக தற்காலத்தில் பெற்றோர்களே காலை ஒன்பது மணிக்கு முன் எழுந்திருப்பதில்லை. ஆபாசமான சினிமாப் படங்களைப் பார்த்து விட்டும், கிளப்புகளில் நேரத்தை வீணாக்கி விட்டும் மிகவும் தாமதமாக இரவில் வீடு திரும்புகின்றனர். சில பெற்றோர்கள் இதை நாகரீகமாகக் கருதிப் பெருமையாக எண்ணுகின்றனர். பெற்றோர்கள் தங்கள் வாழ்க்கையில் இளமைப் பருவம் விலைமதிப்பற்றது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஆகவே நேரத்தை தவறாகச் செலவழிப்பதோ அல்லது வீணடிக்கவோ கூடாது. மாணவர்கள் மாலை 6 மணியிலிருந்து இரவு 10 மணி வரை தொலைக்காட்சியைப் பார்ப்பதால் பள்ளியிலும் கல்லூரியிலும் கற்ற அனைத்தையும் மறந்து விடுகின்றனர். உணவிலும் விளையாட்டிலும் கட்டுப்பாடு தேவை என்று நான் வலியுறுத்துகிறேன். குழந்தைகளின் உணவுப் பழக்கங்களை ஒழுங்கு படுத்த வேண்டும். உணவே ஒருவருடைய ஆரோக்கியம், புத்தி, உணர்வுகள், உத்வேகம் ஆகியவற்றை நிர்ணயிக்கின்றன. உணவு உண்ணும் நேரம், அளவு மற்றும் அதன் தன்மை, எவ்வளவு முறை உண்ணுவது, என்பதையெல்லாம் வரையறை செய்க. குழந்தைகள் நற்குணங்கள் நிறைந்தவரோடும் கடவுள் மீது பய பக்தி உள்ளவர்களோடும் சேர்ந்து விளையாட வேண்டும்.

விளையாட்டு, அறத்தை வளர்த்து அவர்களை மேன்மையுறச் செய்ய வேண்டும். பல பெற்றோர்கள் குழந்தைகளுக்கு உணவிட்டு சீராட்டுகின்றனர். சுதந்திரம் என்ற பெயரில் அவர்களின் நண்பர்களிடம் அவர்கள் இஷ்டம்போல் கேளிக்கைகளுக்கு அனுமதிக்கின்றனர். பிஞ்சு மனங்களில் என்ன தாக்கங்கள் ஏற்படும் என்று அறியாமல் அவர்கள், குழந்தைகளை சினிமாவுக்கு அழைத்துச் செல்லுகின்றனர். தன் நண்பர்களின் குழந்தைகளை மகிழ்விக்கின்றனர். ஆனால் அவர்களின் பழக்கங்கள் பின்புலம் ஆகியவற்றை விசாரித்தறிவதில்லை. குழந்தைகள் தண்டனையினால் வரும் வேதனைகளைக் கண்டு களிக்கக் கூடாது; அல்லது உடல் வலியோ மனத்துன்பமோ அனுபவிக்க விடக்கூடாது. ஒன்றும் தராமல் எதையும் பிறரிடமிருந்து பெறக் கூடாது என்று கற்றுக் கொடுங்கள். அவர்கள் வேண்டுவதை கடின உழைப்பு மூலமாகப் பெறட்டும். இந்தியப் பாரம்பரியம் இந்திய வாழ்வு முறை ஆகியவை வேகமாக தூக்கி எறியப்பட்டு, அநாகரீகமான உடை, பேச்சு, வெளித்தோற்றம் ஆகியவை தான் இன்று காணப்படுகிறது. குழந்தைகள் அவை அநாகரீகமானது இழிவானது என்றும் அறிந்து, இவற்றை வெறுத்து ஒதுக்கக் கற்றுத்தர வேண்டும். ஆபாசமான படங்கள், அசிங்கமான சினிமாப்பட விளம்பர சுவரொட்டிகள், விரும்பத்தகாத உடைகள், வெட்கமற்ற நடத்தை, தோற்றம் ஆகியவற்றை எவ்வாறு நீங்கள் பொறுத்துக்கொள்ளலாம்? இவைகளை அடியோடு ஒழித்திட நீங்கள் உங்களால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவை அனைத்தையும் செய்யுங்கள். இந்திய அன்னையின் முகத்தில் ஏற்பட்டுள்ள இந்த களங்கத்தைப் போக்கக் குழந்தைகளுக்குப் பயிற்சி அளியுங்கள். பத்தாவது படிக்கும் மாணவர்கள் கூட மது, போதை மருந்து ஆகியவற்றிற்கு அடிமையாகிறார்கள். பெற்றோர்கள் அவர்களைத் தடுப்பதில்லை.

பணத்தை வீணாக்காதே

பணத்திற்குத் தரவேண்டிய முக்கியத்துவத்தைத் தரவேண்டும். அதை மிகச் சிறந்த முறையில் உபயோகப்படுத்தவேண்டும். உனக்குக்கொடுக்கப்பட்ட எந்த பொருளையும் நீ சிறப்பாகக் கையாளாமல் விட்டால் அது எதற்காக உள்ளது என்பதைப் புரிந்துகொள்ள முடியாது. பணத்தை வீணாக்காமலிருக்க புத்தி, சக்தியை உபயோகப்படுத்த வேண்டும்.

பெற்றோர்கள் குழந்தைகள் கேட்கும் பணத்தை எல்லாம் கொடுக்கின்றனர்; அவர்கள் விரும்பிய ஆடைகளைத் தருகின்றனர்; பல இடங்களுக்குப் போவதற்கு கார், மோட்டார்சைக்கிள் ஆகியவைகளைப் பரிசாகத்தருகின்றனர். எல்லா ஆசைகளையும் அனுபவிக்க அனுமதி தருகின்றனர். குழந்தைகள் பரஸ்பரம் புரிந்துகொண்டு சகோதரத்துவத்துடனும் சிநேகத்துடனும், வளரவேண்டும்.

பணக்காரப் பெற்றோர்கள் தங்கள் தற்பெருமைக்காகவும் வீண் ஆடம்பத்திற்காகவும் ஊதாரித்தனமாகச் செலவழிப்பார்கள். குழந்தைகளுக்கு அவர்கள் தேவையைவிட அதிகமாகப் பணம் கொடுத்துச் செல்லம் கொடுக்கிறார்கள். ஏழைப் பெற்றோர்களின் குழந்தைகளுக்கு தாழ்வு மனப்பான்மையினால் பணக்கார சகமாணவர்கள் மீது பொறாமை ஏற்படுகிறது.

குழந்தைகள் பணத்தை சரியான முறையில் செலவழித்துச் சிக்கனமாக இருக்கக் கற்றுக்கொள்ளவேண்டும். அவர்கள் எவ்வாறு கவனமாக வீணாக்காமல் பணத்தைச் செலவிடுவது என்று கற்றுக்கொண்டால் அவர்களின் எதிர்காலம் ஒளிமயமாகும்.

வீட்டு நியதிகள்

ஒவ்வொரு இல்லத்திலும் காலையிலும் மாலையிலும் இறைவனின் நாமங்களை உச்சரிக்கவும் ஆன்மீகப் புத்தகங்களைப் படிக்கவும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கவேண்டும். குழந்தைகள் நாமசங்கீர்த்தனத்தில் கலந்து கொள்ள வேண்டும். உண்மையில் உங்கள் எல்லா நேரத்தையும் இறைவனுக்கே சமர்ப்பிக்க வேண்டும். முதல் படியாக சில நிமிஷங்களை, இறைபுகழ் பாடவோ, இறைவனுடைய புகழின் ஆழத்தை உணரவோ, செலவழிக்கவேண்டும். மெதுவாக இந்த பழக்கத்தின் இனிமை உங்களை மகிழ்வித்தால், நீங்கள் மேலும் நேரத்தை அதிகப்படுத்தலாம். சிலர் வீடுகளில் பெற்றோர்கள், குழந்தைகள் முன்பு சண்டையிட்டுக்கொள்கிறார்கள். இது ஆரோக்கியமானதல்ல. பெற்றோர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருப்பின் அவற்றைக் குழந்தைகள் இல்லாத நேரத்தில் தீர்த்துக்கொள்ளவேண்டும் . குடும்பப் பிரச்சினைகள் இருந்தால், குழந்தைகளால் நன்கு கவனித்துப் படிக்க இயலாது. ஆதலால் பெற்றோர்கள் எந்தப் பிரச்சினைகளைப் பற்றியும் குழந்தைகள் முன்னால் பேசக்கூடாது. குடும்பத் தலைவனுக்கு, குழந்தைகள் மனைவியுடன் வாழும் வாழ்க்கை, ஆன்மீக வாழ்க்கைக்குப் பயிற்சிபெறும் களமாகும். நீங்கள் உங்கள் பார்வையை சரி செய்யவும், பார்க்கும் சக்தியைப் பெருக்கவும், கண்ணாடி அணிகிறீர்கள். நீங்கள் எதிர்கொள்ளும் விஷயங்கள், உங்கள் பற்றின்மையை வளர்க்கவும், சுய தியாகம் செய்வதற்கும் கிடைக்கும் வாய்ப்புகளாகக் கருதுங்கள். இவ்வாறு செய்யாவிட்டால் நீங்கள் தவறான கண்ணாடியை அணிந்து பார்வையைக் கெடுத்துக்கொள்ளும் முட்டாள்களாவீர்கள். தோல்விகள் உங்கள் பாதையை அடைக்கும் பாறைகளல்ல; உங்களை வெற்றிப்பாதைக்கு இட்டுச்செல்லும் படிகளாகும்.

சில சீரிய முறைகள்

“நம்மை வழிநடத்திக் காக்கும் கடவுள் உள்ளார் என்று நம்பு” என்று பெற்றோர்கள் குழந்தைகளுக்கு அறிவுறுத்தவேண்டும். இளம் சிறார்களுக்கு வழிபாட்டின் மதிப்பு, அடக்கம் அன்புடன் செய்யும் சேவை ஆகியவற்றை மனதில் பதிய வைக்க இல்லங்களே முதல் பள்ளிக்கூடங்களாகத் திகழவேண்டும். பெற்றோர்கள் எல்லா மதங்களில் உள்ள பொதுவான உண்மைகளை நம்பிக்கையுடன் தங்கள் மனங்களில் படியவைக்கவேண்டும். தங்கள் வீட்டிலுள்ள பூஜை அறையில் மற்றவர்கள் அறியும்படியாக இறைவன் முன் நின்று கொண்டு அமைதியாக தியானித்து, மற்றவர் செய்யும் தவறுகளை மன்னித்து, வலியினாலும் துக்கத்தினாலும் வருந்துபவர்களுக்காக இரக்கப்பட்டு இறைவனிடம் வேண்ட வேண்டும். குழந்தைகள் காணும்படி தங்களைக் காக்க, தங்களிடம் உள்ளே உள்ள ஆன்ம பலம் தைரியம் ஆகியவை இல்லாதது போலவும் இறைவனைச் சார்ந்து இல்லாதது போலவும் பெற்றோர்கள் கவலைப்படுபவர்களாகவோ, உபயோகமற்றவர்களாவோ, திருப்தியற்றவர்களாகவோ, வருந்துபவர்களாகவோ இருக்கக் கூடாது. ஒவ்வொரு அன்னையும் குழந்தையோடு சேர்ந்து, மறைந்திருக்கும் தெய்வீக உணர்வு வளர்ந்து உருவாக்க முயற்சிக்க வேண்டும். ஒவ்வொரு குடும்பத் தலைவனும் நீதி நேர்மை ஆகியவற்றை நிலை நாட்ட, தன்னுடைய செயல்களில் அவைகளைக் கடைப்பிடிக்கவேண்டும்.

உங்கள் வேலையை, சமையல்காரி, வேலைக்காரி, ஆயாக்கள் ஆகியோரைச் செய்ய வைக்காதீர்கள். அவர்களை உங்கள் குழந்தைகளையும் கணவரையும் கவனிக்கச் சொல்லாதீர்கள். வேலையாட்களிடம் நீங்கள் செய்யவேண்டியவற்றை ஒப்படைத்து விட்டு நீங்கள் தியானம் செய்யப் போனால் நீங்கள் ஆன்மீகப்பயனை அடைய முடியாது. வீட்டு வேலை அனைத்தையும் இறைவனுக்கு வழிபாடாகக் கருதுக. சம்பளம் பெரும் பணியாளர்களிடம் விலை மதிப்பற்ற வீட்டு வேலைகளைக் கொடுத்துவிட்டு பல மணித்துளிகள் செய்யும் தியானத்தைக் காட்டிலும் அவ்வேலைகளை நீங்களே செய்தால் அவை உங்களுக்கு மிகுந்த பலன்களைத் தரும். முதல் ஐந்து வயது வரை குழதைகள் அன்னையோடு வளரவேண்டும். பல குழந்தைகளுக்கு அன்னையின் அன்பு என்றால் என்னவென்றே தெரியாது. இந்தகால கட்டத்தில் அன்னை, தன் பொறுப்புகளை மற்றவர்களிடம் கொடுத்துவிட்டு, குழந்தைகள் விரும்பி விளையாடும் பொம்மை “மம்மி”யாக இருக்கலாகாது. தற்காலத்தில் பணக்காரர்களின் குழந்தைகளுக்கும் படித்தவர்களின் குழந்தைகளுக்கும் இக்குறை உள்ளது. அக்குழதைகளுக்கு அன்னையின் அரவணைப்பு, அன்பு ஆகிய இரண்டும் கிடைப்பதில்லை. இக்குழந்தைகள் வேலைக்காரிகள் மற்றும் ஆயாக்களின் கவனிப்பில் வளருவதால், அவர்கள் பேசும் சொற்கள், பழக்கங்கள், கருத்துகள் ஆகியவைகளைக் கற்றுக்கொள்கிறார்கள். இது விரும்பத் தக்கதல்ல. குழந்தைகளுக்கு, அன்னையும் தந்தையும் எப்போதாவது வரும் அன்னியர் போலிருப்பார்கள். அன்னை, தன் சொந்தக் குழந்தைக்கு இயற்கையாகவே ஆசிரியராக இருப்பதை விட்டு விட்டு ஒரு பள்ளிக்குச் சென்று அங்கே ஆசிரியராகப் பணியாற்றுகிறாள்! இது ஒரு சோகமான நிகழ்வு.

கூடியவரை மிகக் குறைவாக வேலைக்காரிகளிடம் உதவி பெற்று, சமையலை அன்னையே செய்யவேண்டும். குழந்தைகள் உண்ணும் உணவு அன்புக்கரங்களால் செய்யாது முக மலர்ச்சியுடன் பரிமாறப்படவில்லை என்றால் அதன் சுவை குன்றும். அதன் அதிர்வுகளும் தீயதாகும். ஆகவே குழந்தை வளர்ப்பை அன்னையே ஏற்க வேண்டும். தாதிகளிடம் தரலாகாது. தாதிகள் நேர்மையானவர்கள்; கடின உழைப்பாளிகள். எனக்கு, அவர்களைப் பற்றி தவறான கருத்தொன்றுமில்லை. தாதிகளால் வளர்க்கப்படும் குழந்தைகளுக்கு முக்கியமாக அன்பு என்ற உரம் கிடைப்பதில்லை. ஆரோக்கியம் தரும் ஊட்டச்சத்தான அன்பு அவர்கள் பெறுவதில்லை. பெற்றோர்கள் குழந்தையின் முன்னால் ஒருவருக்கொருவர் சண்டையிடக்கூடாது. பெற்றோர்கள் வாய்ச்சண்டை போட்டால் குழந்தைகள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்கின்றனர்.

குழந்தைகள் சொல்லைக் கேட்டு மற்றவர்களிடம் குறை காணாதீர்கள்; குழந்தையின் முன்னால் வெறுப்பும் அல்லது பொறாமைப் படுதலும் கூடாது.

தந்தையின் கடமைகள்

ஒரு குடும்பத்தலைவன் சத்தியம் நியாயம் போன்ற உயர்ந்த கொள்கைகளைக் கடைப்பிடித்து தன் செயல்களால் மற்றவர்களை ஊக்குவிக்க வேண்டும். மனித சமுதாயத்தின் மேன்மையை உணர்ந்து அந்த உயரிய நிலைக்குத் தக்கவாறு அவன் வாழவேண்டும். வீட்டுத் தலைவன் அவனுக்குண்டான சம்பிரதாயங்களைக் கடைப்பிடித்து அவனுக்கென்று ஏற்பட்ட வழிபாடு முறைகளைப் பின் பற்ற வேண்டும். வீட்டிலுள்ள எல்லா நபர்களின் நடத்தைகளையும் கண்காணிக்க வேண்டும். எல்லா நேரத்திலும் புத்தி சமநிலைப்படுவதற்கான வழிமுறைகளையும் மனச் சாந்தியை அடையும் வழிகளையும் வீட்டிலுள்ள ஆண், பெண் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்.

உனக்கு அளித்த சொத்து, மற்றும் செல்வம் அனைத்தும் இறைவனுடையதே. உனக்களித்த குடும்பமும் இறைவனுடையது. அவர்களிடம் அன்பு செலுத்தவும், அவர்களைப் பேணவும், அவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கவும் குடும்பத்தை உனக்களித்திருக்கிறார் இறைவன். இந்த பந்தத்தை இறைவனுக்கு ஒரு வழிபாடாக உயர்த்தி, பின்பு அதை ஆன்மீக முன்னேற்றத்திற்கு ஒரு கருவியாகப் பயன் படுத்திக் கொள்.

வேலைசெய்யும் அன்னையர்

நான் பெண்கள் கல்வி பெறக்கூடாது என்ற கருத்தை உடையவனில்லை. அவர்களுக்குக் கல்வி வேண்டும். நீங்கள் வேலைகளையும் ஏற்கலாம். ஆனால் அன்னைக்குண்டான கடமைகளயும் பொறுப்புகளையும் ஏற்று அதன் படி நடக்க வேண்டும்.

பெண்கள் வேலைக்குச் சென்று விட்டால் வீடுகளை கவனிப்பது யார்? கணவனும் மனைவியும் வேலைக்குப்போனால் குழந்தைகளை யார் கவனிப்பார்கள்? பணம் சம்பாதித்தால் சில பிரச்சினைகள் தீரும். ஆனால் அது வீட்டு பிரச்சினைகளை தீர்க்குமா? உண்மையில் வேலை செய்யும் பெண்கள் அதிகமான சந்தோஷத்தை அனுபவிப்பதில்லை

ஆன்மீகத்தை ஊக்குவிக்க வேண்டும்

தர்ம வழியில் செல்லுவதால் தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் என்னவாகுமோ என்று பல அன்னையர்கள் கவலையுறுகிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற மாட்டார்கள் என பயப்படுகிறார்கள். தங்கள் குழந்தைகள் இறைவனிடம் பக்தியுடன் இருந்தால் அவர்கள் மிகவும் மகிழவேண்டும். “என் மகன் நல்ல மனிதனாக இருப்பான். அவன் நல்ல பெயரை வாங்குவான்” என்று எண்ணி அவர்கள் மகிழ வேண்டும். பெற்றோர்கள் தன் குழந்தைகள் தங்களுடன் சீட்டாட்டம், மது அருந்துதல், சூதாட்டம், ஆகியவற்றில் கலந்து கொள்வதில் பெருமை அடைவார்கள். சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் ஆன்மீகப் புத்தகங்களைப் படித்தாலோ, கோயில் சடங்குகளில் கலந்து கொண்டாலோ, படைப்பின் அற்புதங்களை நினைத்து அதிசயித்து அமைதியாக அமர்ந்து தியானித்தாலோ கோபம் கொள்ளுவார்கள். தன் வாரிசுகளின் நலம் விரும்பிகளாக தங்களை அவர்கள் எவ்வாறு சொல்லிக்கொள்ள முடியும்? அவர்கள் உண்மையில் குழந்தைகளின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கும் விரோதிகளே. வாழ்க்கைக் குழப்பங்களிலிருந்து பத்திரமாக வெளிவருவதற்குத் தேவையான கேடயத்தை குழந்தைகளுக்குத் தருவதில்லை. குழந்தைகள் ஆன்மீகத்தில் முன்னேறவும், அது பற்றிப் படிக்கவும் விரும்பும் போது, பெற்றோர்கள் அவர்களை ஊக்குவிக்கவேண்டும்.

குழந்தைகளின் நன்னடத்தை – நல்ல பெற்றோர்மையின் வெளிப்பாடு

“என் மகன் நான் சொன்னால் கேட்கமாட்டான்“ என்று சொன்னால் அது அந்த அன்னைக்கு அவமானம். ஆரம்பத்திலிருந்து ஒழங்காக வளர்த்திருந்தால், அவன் இவ்வாறு நடக்க மாட்டான். குழந்தைகளின் நடத்தை கெட்டுப்போவதற்கு 90 சதவீதம் பெற்றோர்களே காரணம். குழந்தைகளுக்கு அசட்டுச் செல்லம் தந்து கட்டுப்பாடற்ற சுதந்திரம் தருகின்றனர். குழந்தைகளுக்குத் தந்தையாக இருப்பது பெரிதல்ல. குழந்தை பிறந்தவுடன் எந்த தந்தையும் மகிழ்வாக இருக்க முடியாது. குழந்தையின் உயரிய நற்பண்புகளை மக்கள் புகழும்போது தான், தந்தை அத்தகைய மகன் பிறந்ததை எண்ணி மகிழ முடியும்.

உங்களுக்கு உதவும் செய்திகள்

நீ மரியாதையைப் பெற எதைச் சொல்கிறாயோ அதை நீ செய்யவேண்டும். முதலில் நீ இருந்து காட்டு. இரண்டாவதாக நடந்துகாட்டு; பின்பு மற்றவர்களுக்குச் சொல் ; நீ இருந்து காட்டாமல், நடந்து காட்டாமல் மற்றவர்களிடம் சொல்லிப் பயனில்லை. பெற்றோர்மை என்பது தன்னிறைவுக்கு ஒரு படியாகும்.