63 Nayanmars
திருஞானசம்பந்தர்
தமிழகம் கண்ட நான்கு முக்கிய நாயன்மார்களில் ஒருவரான ஞானசம்பந்தர், சீர்காழி என்னும் ஊரில் சிவபாத ஹ்ருதயருக்கும் பகவதியாருக்கும் மகனாகப் பிறந்தார். ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு பாலயோகியாக இருந்தார். அவர்தம் ஆறாவது வயதிலேயே இறைவன் மேல் துதி பாடி, தம் இறைமையை வெளிக்காட்ட ஆரம்பித்தார். இருப்பினும் நிறைய பதிகங்கள் பதிவு செய்யப்படவில்லை.
சம்பந்தர் மூன்று வயது குழந்தையாக இருந்தபொழுது, தந்தையார் குழந்தையை அருகில் உள்ள சிவன் கோயிலுக்கு அழைத்துச் சென்றார். குழந்தையைக் கரையில் உட்கார்த்தி விட்டு கோயில் குளத்தில் குளிக்கச் சென்றார். வெகு நேரமானதால், குழந்தை பசியால் அழத் துவங்கியது. அழுகுரல் கேட்ட ஜகன்மாதா பார்வதிதேவி சிவபெருமானுடன் காட்சியளித்துக் குழந்தைக்குப் பால் ஊட்டினாள். ஸ்நானம் முடித்து, கரைக்கு வந்த தந்தை, குழந்தை கையிலிருந்த தங்கக் கிண்ணத்தையும், வாயில் ஒழுகிய பாலையும் கண்டு திடுக்கிட்டார். “குழந்தாய் உனக்குப் பால் கொடுத்தவர் எவரோ?” என்று கேட்டார் குழந்தை விண்ணைப் பார்த்து விரலைத் தூக்கிக் காட்டி “தோடுடைய செவியன்” என்ற முதல் தேவாரத்தைப் பாடியது அந்த மூன்று வயது குழந்தை.
அதன் பின்னர், தொடர்ந்து பல திருத்தலங்களுக்குச் சென்று பல பதிகங்கள் பாடினார். அவரைத் தொடர்ந்து பக்தர்கள் திரளாகச் சென்றனர். சம்பந்தர் பல சிவ ஸ்தலங்களுக்கு யாத்திரை செய்தார். ஒருமுறை, வழியில் திருநீலகண்ட யாழ்ப்பாணர் என்னும் யாழ் வாசிக்கும் சிவ பக்தரைக் கண்டார். அவருடைய யாழிசை சம்பந்தரை மிகவும் கவர்ந்தது. யாழ்ப்பாணரும் சம்பந்தருடன் இருக்க விரும்பினார். சிவபெருமான் மேல் சம்பந்தர் பாடிய அழகிய பதிகங்களுக்கு யாழ் வாசிக்க வேண்டுமென்ற யாழ்ப்பாணருடைய கனவும் மெய்ப்பட்டது.
இருவரும் சேர்ந்து சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சென்றனர். தில்லை வாழ் அந்தணர்கள், கோயிலின் தெற்கு நுழைவாயிலில், இந்த தெய்வக் குழந்தைக்காக வேத கோஷத்துடன் காத்திருந்தனர். சம்பந்தர், தில்லை நடராஜரின் அழகிலும், சிவகாமித் தாயாரின் அழகிலும் மனம் மயங்கினார். தில்லை வாழ் அந்தணர்களை சிவகணங்களாக பாவித்து, அவர்களை நமஸ்கரித்தார்.
சம்பந்தர் பாடிய தேவாரப் பதிகங்களில் மகிழ்ந்து, சிவபெருமான் பல கோயில்களில், பல லீலைகள் நடத்திக் காட்டியிருக்கிறார். 16000ற்கும் மேற்பட்ட பதிகங்கள் பாடியதாக கூறப்படுகிறது. ஆனால் 383 பதிகங்கள் மட்டுமே நமக்குக் கிடைத்திருக்கின்றன.
இவ்வாறு பல சிவாலயங்களை தரிசித்து விட்டு தன் பதினாறாவது வயதில் சம்பந்தர் சீர்காழி வந்தடைந்தார். தந்தையார் மகனுக்குத் திருமணம் செய்விக்க விரும்பினார். “சிவபூஜை செய்வதே என் பிறவிப்பயன்” என்று வாதிட்டார். ஆனால் சிவபாத ஹ்ருதயரோ, திருநல்லூரைச் சேர்ந்த நம்பாண்டார் மகளை சம்பந்தருக்கு நிச்சயித்தார். சம்பந்தரும், தந்தையாரின் விருப்பத்திற்கிணங்கி, திருமணத்திற்கு சம்மதித்தார்.
திருமணம் திருநல்லூரில் நடைபெறுவதாக நிச்சயிக்கப்பட்டது. சம்பந்தர், திருநல்லூர் கோயிலுக்குச் சென்று இறைவனின் ஆசி பெற்று, அருகில் உள்ள ஒரு மடத்திற்கு விஜயம் செய்தார். பெண் வீட்டார் திரளாக வந்து அவரை வரவேற்றனர். திருமண ஆடை அணிந்து, முத்துப் பல்லக்கில் அமர்ந்து, மக்கள், “வாழ்க சம்பந்தர்” என்று கோஷமிட பவனி வந்தார்.
அந்தத் திருமண கோஷ்டி மண விழா மண்டபத்தையடைந்தது. சம்பந்தர் மனைவியின் கரத்தைப் பற்றிய வண்ணம் புனித வேள்வித்தீயை வலம் வந்தார். அப்போது அவரது உள்ளத்தில் வேதனை தோன்றியது. ‘நாம் விரும்பாத இந்த இல்லற வாழ்க்கை நமக்கு வந்து சேர்ந்ததே! இனி இவளோடும் சிவபெருமான் திருவடியை அடைவேன்’ என்று எண்ணினார். உடனே இதர சிவ பக்தர்கள் புடைசூழ கோயிலுள் புகுந்து இறைவனை வணங்கி, “எம்பெருமானே, என்னை நிம் திருவடியில் சேர்த்துக் கொள்ள வேண்டும்” என்ற உணர்வுடன் பதிகம் பாடினார். இறைவனும் அவரை வாழ்த்தி, ” ஓ சம்பந்தரே நீர், உமது மனைவி மற்றும் உமது மண விழாவுக்கு வந்தவர்கள் அனைவரும் இதோ தோன்றும் ஜோதியில் புகுந்து எம்மை அடைவீராக” என்றார். உடனே ஒரு பிரகாசமான ஒளி இறைவனிடமிருந்து தோன்றியது. அதில் திருவாயிலும் இருந்தது. அதனுள் எல்லோரும் புகுந்தனர். கடைசியாக சம்பந்தரும் தம் மனைவியின் கரத்தைப் பற்றி வலம் வந்து அந்த ஜோதியில் புகுந்தார்.
இவ்வாறு தமிழ் மாதமாகிய வைகாசி மாதத்தில் விசாக நட்சத்திரத்தில் திரு நல்லூர் என்னும் இடத்தில் சம்பந்தர் முக்தியடைந்தார்.
ஆதாரம் (References) :
shaivam.org
நாயன்மார் கதை (முதல் மற்றும் இரண்டாம் பாகம்), கி. வா. ஜகந்நாதன், மூன்றாம் பதிப்பு, அல்லயன்ஸ் பதிப்பகம்.