கதை : எதுவும் பயனற்றதல்ல

பண்டைய காலங்களில் சிறுவர்கள் கல்வி கற்பதற்காக குரு குலம் சென்று அங்கு குருவுடன் பல ஆண்டுகள் வாழ்ந்து வருவது வழக்கம். ஒரு சமயம் இரண்டு மாணவர்கள் படிப்பு முடிந்து வீட்டுக்கு திரும்பும் தருவாயில் இருந்தார்கள். அவர்கள் குருவிடம் சென்று, “குருதேவா, நாங்கள் குருதட்சிணையாக என்ன பரிசு வழங்க வேண்டும்?” என்று கேட்டார்கள்.

மாணவர்களின் அன்பினாலும் நன்றியுணர்வினாலும் குரு மனம் மகிழ்ந்தார் அவர் கூறினார், “அன்பு குழந்தைகளே நீங்கள் நமது குருகுலத்திற்குப் பின்னால் இருக்கும் காட்டிற்குச் சென்று, யாருக்கும் பயன்படாத சிறிது உலர்ந்த சருகுகளை எடுத்து வாருங்கள்” என்றார். http://demo3.esales.in:8081/ கீழ்ப்படிதலுள்ள அம்மாணவர்களும், குருவின் சொற்படி, காட்டிற்குப் புறப்பட்டனர்.

ஒரு மரத்தினடியில் காய்ந்த சருகுகளின் குவியலைப் பார்த்தனர். அதிலிருந்து சில இலைகளை எடுத்தபோது ஒரு முதிய விவசாயி ஒடிவந்து சொல்லலுற்றார், “தயவு செய்து அந்தத் தழைகளைத் திரும்ப போட்டு விடுங்கள். அதை நான் சேகரித்து வைத்திருக்கிறேன். அதனை என்னுடைய நிலத்துக்குக் கொண்டு செல்லப்போகிறேன். அதனை எரிக்கும்போது அதன் சாம்பல் சிறந்த உரமாக மாறி தானியம் மிகுந்த செழுமையான பயிர்விளையும்.”

அந்த மாணவர்கள் அந்த குவியலை விட்டுக் கிளம்பினர் பிறகு அவர்கள் மூன்று பெண்கள் காய்ந்த சருகுகளை சேகரித்துத் தங்கள் கூடையில் போட்டுக்கொள்வதைக் கண்டனர். “இந்த இலைகளை வைத்து நீங்கள் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டனர் அந்த மாணவர்கள். “அன்பு சகோதரர்களே, இதனை எரியவிட்டு வெந்நீர் வைத்து நான் குளிப்பதற்கும் துணிகள் துவைக்கவும் பயன்படுத்துவேன்” என்றாள் முதல் பெண்மணி. இரண்டாமவர் கூறினார், “இந்த இலைகளை ஒன்றோடு ஒன்று தைத்து தையல் இலையாக சாப்பாட்டுக்குப் பயன்படுத்துவோம் என்றாள். மூன்றாவது பெண்மணி கூறினாள், “என் கணவர் மருத்துவம் பார்ப்பவர். அவர் இந்தத் தழைகளை வைத்து மூலிகை மருந்து தயாரிக்கிறார்.”

அந்த மாணவர்கள் மேலும் சற்று தூரம் காட்டுக்குள்ளே சென்றனர். அவர்கள் ஒரு உயர்ந்த மரத்தினடியில் சில உலர்ந்த சருகுகளைக் கண்டனர். இரண்டு பேரும் பார்த்துக் கொண்டிருந்த போதே ஒரு பெரிய பறவை செங்குத்தாக கீழிறங்கி ஒரு இலையை எடுத்துக்கொண்டு பறந்து சென்றது. அந்த பறவையை கவனித்தபோது அது அருகிலுள்ள ஒரு மரத்தில் இலைகளாலும் புற்களாலும் தான் கட்டும் கூட்டிற்கு எடுத்துச் செல்வதைக் கண்டனர். ஒரு பறவைக்கு பயன்படும் இந்த இலைகளை எடுக்க அவர்கள் விரும்பவில்லை.

அருகாமையில் ஒரு குளத்தையும் அதில் தண்ணீரில் ஒரு இலை மிதப்பதையும் கண்டனர். ஒரு பெரிய இலை யாருக்கும் பயன்படாமல் கிடக்கிறது என்றான் இருவரில் ஒருவன். மாணவர்கள் குளத்தின் அருகே சென்று அந்த இலையைக் கையில் எடுத்தனர். அதிசயிக்கத்தக்க வகையில் அதன் மீது இரண்டு பெரிய கட்டெறும்புகள் நகர்ந்து கொண்டிருப்பதைக் கண்டனர். “இந்த காய்ந்த இலைதான், எங்களுக்கு உயிர்காக்கும் படகாக இருக்கிறது. தயவு செய்து எங்களை தூக்கி எறிந்து விடாதீர்கள்.” என்று அவை சொல்வது போல் இருந்தது.

மாணவர்கள் இருவரும் குருகுலத்திற்குத் திரும்பினர். வருத்தமான குரலில் அவர்கள் குருவிடம் கூறினர், “குருதேவா, ஒவ்வொரு காய்ந்த சருகும் கூட பல்வேறு விதத்தில் பயன்படுகிறது. என்று தெரிந்துகொண்டோம். தயவு செய்து நீங்கள் கேட்ட குருதட்சிணையைக் கொண்டு வராததற்காக எங்களை மன்னியுங்கள்.”

“அன்பான குழந்தைகளே!” குரு பதிலிறுத்தார், “நீங்கள் இன்று பெற்ற அறிவே எனது குரு தட்சிணையாகும். ஒரு காய்ந்த சருகே மனிதனுக்கும், பறவைக்கும், பூச்சிகளுக்கும் பெரிய உபயோகமாக உள்ளதென்றால், ஒரு மனிதனுடைய உடம்பு ஒரு நல்ல உபயோகத்துக்கு பயன்படுத்தப்பட்டதென்றால் எவ்வளவு விலை மதிப்பற்றதாக இருக்கும்? ஆகவே, உங்கள் உடம்பை நன்கு பராமரித்து உங்கள் வாழ்க்கையையும், மற்றவரது வாழ்க்கையையும் சந்தோஷமாக வைத்திருங்கள். நலிந்தோர்க்கும், நோயாளிகளுக்கும், வயதானவர்களுக்கும் எளியவர்க்கும், ஏழைகளுக்கும் உதவி செய்யக் கிடைக்கும் எந்தவொரு வாய்ப்பையும் நழுவவிடாதீர்கள். இன்று நீங்கள் கற்ற பாடத்தை ஒருபோதும் மறவாதீர்கள்.