கதை
ஆப்பிள் மரம்

முன்னொரு காலத்தில் ஒரு பெரிய ஆப்பிள் மரம் இருந்தது. தினமும் ஒரு சிறிய சிறுவன் அங்கு வந்து, அந்த மரத்துடன் சுற்றி சுற்றி விளையாடுவான். மரத்தின்மேல் ஏறிப் பழங்களைப் பறித்து சாப்பிட்டு, அதன் நிழலில் சிறிது நேரம் உறங்குவான். அவனுக்கு அந்த மரத்தை மிகவும் பிடிக்குமாம், அந்த மரத்துக்கும் அவனுடன் விளையாட மிகவும் பிடிக்குமாம்.

சிறிது காலம் கடந்தது. இப்பொழுது அவன் வளர்ந்து விட்டான். அந்த மரத்துடனும் விளையாடுவதில்லை.

ஒரு நாள் மிகவும் கவலையான முகத்துடன் அந்த மரத்தைக் காண வந்தான். “வா என்னுடன் வந்து விளையாடு” என்றது மரம். தான் வளர்ந்து விட்டதாகவும், இனிமேல் மரத்தைச் சுற்றி எல்லாம் விளையாட மாட்டேன் என்றும் கூறினான். தனக்கு பொம்மைகள் வாங்க பணம் வேண்டும் என்றான். தன்னிடம் பணம் இல்லை என்று கவலையாகக் கூறிய மரம், தன் பழங்களைப் பறித்து விற்று பணமாக்கிக் கொள்ளலாம் என்று கூறியது. அச்சிறுவன் மிக உற்சாகமாக எல்லாப் பழங்களையும் பறித்துக் கொண்டு மகிழ்ச்சியாக அந்த இடத்தை விட்டுச் சென்றான். அதன் பிறகு திரும்பி வரவே இல்லை. மரம் மிகவும் கவலையாக இருந்தது.

ஒரு நாள் அந்தச் சிறுவன் நன்கு வளர்ந்து ஒரு ஆண்மகனாக வந் தான். அவனைக் கண்டு மரம் மிகவும் உற்சாகமாக அதனுடன் விளையாட அழைத்தது. http://demo3.esales.in:8081/ ஆனால் அவனோ, “நான் என் குடும்பத்திற்காக வேலை செய்ய வேண்டும். விளையாடுவதற்கு எல்லாம் நேரம் இல்லை. நான் என் குடும்பத்துடன் தங்க ஒரு வீடு வேண்டும். உன்னால் உதவி செய்ய முடியுமா?”, என்று கேட்டான். “என்னிடம் வீடு எதுவும் இல்லை, ஆனால் என் கிளைகளை வெட்டி நீ வீடு கட்டிக் கொள்ளலாம்”, என்றது அம்மரம். அவன் எல்லாக் கிளைகளையும் வெட்டிக் கொண்டு சந்தோஷமாகச் சென்றான். மரமும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

ஆனால் அவன் நெடுநாட்களாக திரும்பி வரவே இல்லை. மரம் தனிமையில் வருத்தத்துடன் இருந்தது.

ஒரு கோடைக் கால பகல் பொழுதில் அவனைக் கண்டு மரம் மகிழ்ச்சி அடைந்து, விளையாட அழைத்தது. தனக்கு வயதாகிக் கொண்டிருப்பதாகவும் தனக்கு கடலில் பயணம் செய்து ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் கூறினான். “உன்னால் எனக்கு ஒரு படகு தரமுடியுமா?” என்றான். “என்னுடைய உடற்பகுதியை வெட்டிப் படகு செய்து கொள். அதில் நீ எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் பயணம் செய்து மகிழ்ச்சியாக இரு” என்றது. உடனே அவனும் அதன் உடற் பகுதியை வெட்டி படகு செய்து நெடு தூரம் பயணித்தான். நீண்ட நாட்களாகியும் திரும்பவே இல்லை.

பல வருடங்களுக்குப் பிறகு வந்தான். ஆனால் இனிமேல் அவனுக்குத் தர தன்னிடம் ஒன்றுமே இல்லை என்று கவலையாக மரம் கூறியது. ஆப்பிள் பழங்கள் இல்லை என்றதும் அவன் பரவாயில்லை எனக்கு கடிக்க பற்களே இல்லை என்றான். நீ ஏற என் கிளைகளும் உடற் பகுதியும் இல்லை என்றதும், அவன் தனக்கு வயதாகி விட்டதால் ஏற முடியாது என்றான். மடிந்துகொண்டிருக்கும் வேர்களைத் தவிரத் தன்னிடம் ஒன்றுமில்லை என்று கண்ணீருடன் கூறியது அம்மரம். “எனக்கு ஓய்வு எடுக்க ஓர் இடத்தைத் தவிர வேறு எதுவும் வேண்டாம். இத்தனை வருடங்களாக ஓடி ஓடி நான் மிகவும் சோர்வாக இருக்கிறேன்” என்று பதிலுரைத்தான். “நல்லது இந்த முதிய மரத்தின் வேர், நீ ஓய்வெடுக்க சிறந்த இடம். வந்து என் மேல் அமர்ந்து ஓய்வெடு” என்றது. அவன் அமர்ந்ததும் ஆனந்த கண்ணீருடன் சிரித்தது, அம்மரம்.

இது அனைவரின் கதை. மரம் நம் பெற்றோரை ஒத்தது. நாம் சிறுவயதில் அம்மா அப்பாவுடன் விளையாட விரும்புவோம். நாம் வளர்ந்த உடன் அவர்களை விட்டுச் செல்கிறோம். நமக்கு ஏதாவது தேவை இருந்தால் அல்லது ஏதாவது பிரச்சனை வந்தால் மட்டுமே அவர்களிடம் செல்கிறோம். ஆனால் பெற்றோர்கள் எப்போதும் நமக்கு உறுதுணையாக இருந்து எல்லாவற்றையும் கொடுத்து நம்மை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்கிறார்கள். இந்த கதையில் வரும் சிறுவன் ஆப்பிள் மரத்துடன் கொடூரமாக நடந்து கொண்டதாக நினைப்பீர்கள். ஆனால் நாம் அனைவரும் நம் பெற்றோரிடம் அவ்வாறுதான் நடந்து கொள்கிறோம். நமக்கு செய்வதற்காகத்தான் அவர்கள் இருக்கிறார்கள் என்று எண்ணிக்கொண்டு நாம் அவர்களின் செயல்களை பாராட்டுவதில்லை. அதை நாம் மிக தாமதமாகவே புரிந்து கொள்கிறோம்.

நீதி
  • பெற்றோரை அன்புடன் கவனித்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் அவர்களின் மதிப்பு நமக்குத் தெரியும். நாம் பெற்றோராகும் போதுதான் நம் பெற்றோரின் அன்பு நமக்குப் புரியும்.