கதை
திருப்தி அடையாத எலி

அது ஒரு சுட்டெரிக்கும் கோடை பகல்பொழுது. பில்லி என்று ஒரு எலி இருந்தது. அதற்கு மிகவும் சூடாக இருந்தது. அது சுட்டெரிக்கும் சூரியனைப் பார்த்து “ஆஹா நான் வலிமை மிக்க சூரியனாக இருந்தால் எப்படி இருக்கும்” என்று நினைத்தது. சொர்க்கத்தின் கடவுள், “அப்படியே ஆகட்டும்” என்றதும் பில்லி சூரியனாக மாறியது. பல நாட்கள் பிரகாசமாக சுட்டெரித்துக்கொண்டிருந்தது, ஒரு இடி மின்னலுடன் கூடிய கரு மேகம் சூரியனை மறைக்கும் வரை!! சூரியனாக இருக்கும் பில்லி எலிக்கு எதையும் காண முடியவில்லை. மேகம் தான் சூரியனை விட வலிமை மிக்கது, நான் மேகமாக இருந்திருக்கலாம்” என்று நினைத்தது. உடனே கரு மேகமாக மாறி பிற மேகங்களுடன் வானில் மிதந்தது. ஒரு நாள் ஒரு மலையில் மோதி அதற்கு மேல் அசைய முடியாமல் நின்றது. இப்போது மலை தான் மிகவும் வலிமை மிக்கது என்று நினைத்து மலையாக இருந்திருக்கலாமே என்று நினைத்தது. அடுத்த நொடியே உயர்ந்து வலிமையான மலையாக மாறி பெருமிதத்துடன் நின்றது. திடீரென்று மலையாக நின்ற பில்லியின் காலில் ஏதோ நமைச்சல் ஏற்பட்டது. கீழே குனிந்து பார்த்தால் ஒரு எலி அதனடியில் ஒரு துளை போட்டுக் கொண்டிருந்தது. “அடடா!! இந்த எலியால் மலையைத் தோண்டி ஒரு துளை போட முடிகிறதே! இந்த எலி கண்டிப்பாக மிக வலிமை மிக்கதாக இருக்கும். என்னை திரும்பவும் எலியாகவே மாற்றிவிடு, கடவுளே;!!” என்று வேண்டிக் கொண்டது. சூரியன் சுட்டெரித்தது, கருமேகங்கள் கடந்து சென்றன, மலைகள் உயர்ந்து நின்றது. ஆனால் பில்லியன் யாரையும் குறை கூறவில்லை. அதன் சிறிய துளையினுள் மகிழ்ச்சியாக வாழ்ந்தது.