கதை
நினைத்ததை நிறைவேற்றும் மரம்

ஒரு முறை, ஒரு பயணி, ஒரு பாலைவனப் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்தார். சுட்டெரிக்கும் வெயிலில் வெகுதூரம் நடந்து சென்ற அவருக்குக் குடிக்கத் தண்ணீர் கூடக் கிடைக்கவில்லை. நா வரண்டு , சோர்வடைந்த அவர் ஓய்வெடுக்க நிழலான ஒரு இடம் தேடினார். அவருக்கும் முன்னால் ஒரு 15 அடி தூரத்தில் ஒரு அழகான மரம் பெரிய கிளைகளுடன் நிழல் கொடுத்துக் கொண்டிருந்தது. இதைக் கண்ட அந்தப் பயணி , புத்துணர்வுடன் ஓடிச் சென்று அந்த மரத்தடியை அடைந்தார். நிம்மதியாக மர நிழலில் அமர்ந்தார். சிறிது நேரம் ஓய்வெடுத்த பின்னர், “ஒரு கோப்பைத் தண்ணீர் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் “என்று நினைத்தார்.அவர் அமர்ந்திருப்பது நினைத்ததை நிறைவேற்றும் கற்பக விருட்சத்தின் நிழல்தான் என்பது அவருக்குத் தெரியாது. அவர் விருப்பப்படியே, அவர் முன் சுத்தமான குடிநீர் ஒரு கோப்பையில் தோன்றியது. அதன் தோற்றம் அவருக்கு மிகவும் ஆச்சரியத்தை அளித்தது .வேகமாக் குடித்து விட்டார். தாகம் தீர்ந்த உடன் உண்ண உணவு கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தார். அவர் நினைத்த மாத்திரத்தில் , அவர் பசி தீர்க்க ஒரு தட்டு நிறைய உணவு வந்தது. உண்ட பின் அவருக்குத் தூக்கம் வந்தது. ஒரு கட்டிலும் மெத்தையும் கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தார் .கட்டிலும் மெத்தையும் தோன்றியது. சவுகரியமாகப் படுத்துக் கொண்டார். பாலைவனத்தில் நெடுந்தூரம் நடந்ததால் மிகவும் அசதியுற்ற அவர் எவரேனும் வந்து காலங்களைப் பிடித்து விட்டால் நன்றாக இருக்குமே என்று நினைத்தார் .உடனே ஒரு இளைஞன் அவர் கட்டில் அருகில் வந்து நின்று கொண்டு அவர் கால்களைப் பிடிக்கத் துவங்கினான். அவனுடைய எல்லா ஆசைகளும் நிறைவேருகிறதே. இவையெல்லாம் நிஜமா இல்லையா என்று யோசித்துக் கொண்டிருந்தான்.

அவனுக்கு திடீரென்று ஒரு எண்ணம் உதித்தது. இப்பொழுது ஒரு புலி வந்து என்னைத் தின்று விட்டால் என்ன ஆகும் என்று நினைத்தான். பாவம் அந்த மனிதர் தாம் ஒரு கற்பக விருட்சத்தின் கீழ் வந்திருக்கிறோம் என்பதை அறியாமல் எதிர்மறை சிந்தனையை ஓடவிட்டான். நிஜமாகவே ஒரு புலி வந்து அவனைக் கொன்றுவிட்டது.

கடவுள் நம்முடைய சிறுசிறு ஆசைகளைக் கூடப் பூர்த்தி செய்கிறார்

இதை அறியாமல் நாம் தவறான விஷயங்களை விரும்பினால் அவை நிறைவேறிவிடுகிறது. முடிவில் நம்முடைய தவறான எண்ணங்களும் விருப்பங்களுமே நாம் அழியக் காரணமாகி விடுகின்றது.