உன்னுடைய பெற்றோர்கள், ஆசிரியர்கள், வயதில் பெரியவர்கள் மற்றும் நண்பர்கள் உனக்கு நிறைய உதவிகள் செய்கின்றனர் . சில சமயங்களில் உன்னை திருப்திப்படுத்தவும் உனக்கும் மகிழ்ச்சியளிப்பதற்காகவுமே செயல்கள் செய்கின்றனர். உன் வசதிக்காக அவர்கள் நிறைய இன்னல்களை சந்திக்கின்றனர். நமக்கு உதவி செய்யும் அனைவருக்கும் நாம் நன்றி கூற வேண்டும். நமக்கு நன்றியுணர்வு இருத்தல் அவசியம். நன்றி கூறுவதன் மூலம் தான் நம் நன்றி உணர்வை வெளிப்படுத்தமுடியும். பிறர் செய்யும் உதவிக்கோ அல்லது செலுத்தும் அன்பிற்கோ நன்றி பாராட்டாதவர் நன்றி கெட்டவர்கள் என அழைக்கப்படுவர்.

கதை : அனைத்திற்கும் நன்றி சொல்

ஒரு முறை, வீணா என்று ஒரு பெண் தன் தோழி நேகாவின் பிறந்த நாளிற்காக தனது சிறு சேமிப்பில் இருந்த பணத்தைக் கொண்டு ஒரு பேனா வாங்க எண்ணினாள். அவள் ஒரு அழகான ஊதா நிறம் உள்ள பவுன்டெயின் பேனாவை மிகவும் கஷ்டப்பட்டுத் தேடிக் கண்டு பிடித்தாள்.

அந்தப் பேனாவின் முனை மிகவும் மென்மையாக எழுதக் கூடியதாகும். அந்தப் பேனாவில் நேகாவின் பெயரைக் கூட பொறிக்கச் செய்து வாங்கினாள். அதற்கு அவளுக்கு இரண்டு மணி நேரம் செலவானது. பின்பு அந்தப் பேனாவை சுற்றிக் கொடுக்க ஒரு அழகான மஞ்சள் நிற பரிசு பேப்பரை வாங்கி அதை அழகாகச் சுற்றினாள். பின்பு ஒரு பிறந்தநாள் வாழ்த்து அட்டை வாங்கி அதில் பிறந்தநாள் வாழ்த்து எழுதினாள். வீணா,அந்தப் பரிசு நேகாவிற்கு மிகவும் பிடிக்கும் என்ற நம்பிக்கையோடு கிளம்பினாள். நேகாவிடம் பிறந்த நாள் பரிசு கொடுத்தாள். வீணாவின் பரிசை திறந்து பார்த்து நேகா “என்னிடம் இது மாதிரி இரண்டு பேனாக்கள் இருக்கின்றன” என்று கூறி அதை விட்டுவிட்டு வீணாவை இழுத்துக்கொண்டு தோட்டத்திற்கு விளையாட ஓடினாள். மேலும் நேகா, வீணாவிடம் நன்றி கூடக் கூறாமலும், அவளிடம் அன்பாக ஓரிரு வார்த்தைகளும் பேசாதது வீணாவிற்கு மிகுந்த துயரத்தையும் ஏமாற்றத்தையும் அளித்தது.