நஞ்சு அமிர்தம் ஆனது

Print Friendly, PDF & Email
நஞ்சு அமிர்தம் ஆனது

பகவன் நாமம் நஞ்சைக் கூட அமிர்தம் ஆக்கும் வல்லமை பெற்றது. பக்த மீரா எப்பொழுதும் இடைவிடாது கிருஷ்ணரின் நாமத்தையே தியானித்துக் கொண்டிருந்தாள்.

மீராவின் நிலையையும், அவளது வாழ்க்கை முறையையும் கண்ட, அவளது கணவன் மற்றும் ராஜாவாகிய மஹாராணா, கிருஷ்ணன் மீதான அவளது பித்தைப் போக்க எல்லா வழிகளிளும் முயன்றார். அவளிடம் எவ்வித மாற்றமும் இல்லை. கிருஷ்ணரின் நாமத்தை அரசர்கள் மத்தியிலும், தெருக்களில் உள்ள துறவிகள் மத்தியிலும் அல்லது சாதாரண மக்களிடையேயும் கூட‌ மீரா பாடிக்கொண்டே செல்வாள். இதையெல்லாம் மகாராணா பார்த்தார். அவன் நினைத்தான், ‘நான் ஒரு அரசன். என் மனைவி சாமானியர்கள், துறவிகள் மற்றும் பிற ராஜ்ஜியங்களின் மன்னர்கள் மத்தியில் எந்த விதமான தயக்கமும் இன்றி கிருஷ்ணரின் பெயரைப் பாடிக்கொண்டு, தம்புரா (இசைக் கருவி) வாசித்துக் கொண்டு, ஒரு பிச்சைக்காரன் போல் செல்கிறாளே” என்று நினைத்தான். அவன் இதனை அவமானமாகக் கருதினான். மீரா அவனிடம் பலமுறை எடுத்துச் சொன்னாள், “இறைவன் நாமத்தைப் பாடுவது அவமானம் அல்ல. அவருடைய மகிமையைப் பாடுவது என்னுடைய பாக்கியம் ஆகும். கடவுளின் பெயரைப் பாடாமல் இருப்பது தான் அவமானம். மற்றவர்களின் எதிர்வினைக்கு நீங்கள் கவனம் செலுத்தினால், உங்களைப் பற்றிய உங்கள் விழிப்புணர்வை இழக்க நேரிடும். நீங்கள் கடவுளின் பெயரை அன்புடனும், ஆர்வத்துடனும், தைரியத்துடனும் உங்கள் கடமையாகவும் எடுத்துக் கொண்டு ஜபிக்க வேண்டும்”என்று கூறினாள். மீரா தன் பாதையில் உறுதியாக இருந்தாள், தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை.

மஹாராணா அவளுக்கு பல வழிகளில் விளக்க முயன்றான். அவன் அவளிடம், “மீரா, நீ இப்படி பஜனை பாடிக்கொண்டே போனால், உலகம் உன்னை ஒரு பைத்தியக்காரப் பெண்ணாகப் பார்க்கும். உன்னைச் சுற்றியுள்ள மக்கள் புறம் பேச ஆரம்பிப்பார்கள்.” அதற்கு மீரா, “மஹாராணா, காகங்கள் கரைப்பதால் குயில்கள் பாடுவதை நிறுத்தாது. நம்மைச் சுற்றி இருப்பவர்கள் காக்கைகளைப் போன்றவர்கள். கடவுளின் பெயரைப் பாடுவது குயிலின் பாடலுக்கு ஒப்பானது. நட்சத்திரங்களைப் பார்த்து நாய்கள் குரைப்பதால் அவை பூமியில் விழாது. ஏன் கடவுளின் நாமத்தை‌ மனத்தில் வைத்திருக்கும் ஒருவர், கீழ்த்தரமான செயலில் ஈடுபடும் ஒருவரிடம் சரணடைய வேண்டும்?” என்று கூறினாள்.

மீரா அவனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மகாராணா கோபமடைந்தான். அரசன் ரஜோ குணம் நிறைந்தவன். ஒரு பக்தன் சத்வ குணம் கொண்டவன். இவற்றுக்கு இடையே இணக்கம் இருக்க முடியாது.நீரும் நெருப்பும் ஒன்றாக இருக்க முடியாது. மீராவின் குணம் அமிர்த பேரீச்சம்பழம் போல இனிமையாக இருந்தது, அதேசமயம் மகாராணா புளியின் தன்மையைக் கொண்டிருந்தான். பேரீச்சம்பழத்தை ருசித்தவுடன் புளியைச் சுவைக்கத் தோன்றாது. அதே போல புளியின் சுவையை விரும்புபவனுக்கு பேரீச்சையின் சுவை பிடிக்காது. அஜீரணம் உள்ளவனுக்கு பசி எடுப்பதில்லை. நல்ல பசி உள்ளவனுக்கு அஜீரணம் எதுவும் தெரியாது. கடவுளை விரும்பாதவன் அஜீரணத்தால் அவதிப்பட்டவனைப் போன்றவன். கடவுளை விரும்பி, அவருக்காக எந்த அளவு வலியையும் பொறுத்துக் கொள்பவன் தீராத பசி உடையவன் போல் இருப்பான். இரண்டுக்கும் இடையே எந்தப் பொருத்தமும் இருக்க முடியாது. மீராவும் மகாராணாவும் அப்படித்தான்.

மீராவின் நடத்தையை மாற்றுவது சாத்தியமில்லை என‌‌ மகாராணா உணர்ந்தான். மீரா உயிருடன் இருக்கும் வரை அவன் அவமானங்களை அனுபவித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று நினைத்து மீராவின் வாழ்க்கையை முடிக்க ராஜா முடிவு செய்தான். மீராவுக்கு விஷம் கலந்த பாலை கொடுக்குமாறு உத்தரவு இட்டான். அந்த‌ விஷம் ஒரு துளி கூட ஒரு மனிதனைக் கொல்லும் அளவிற்குக் கடுமையாக இருந்தது. விஷம் கலந்து பால், வேலைக்காரன் மூலம் மீராவுக்கு அனுப்பப்பட்டது. உணவை சாப்பிடுவதற்கு முன்பு கடவுளுக்கு அர்ப்பணிப்பது மீராவின் வழக்கம். அதில் விஷம் இருப்பதை அறியாத மீரா, தனக்குக் கொடுத்த பாலை கிருஷ்ணருக்கு அர்ப்பணித்துவிட்டுக் குடித்தாள். விஷம் கலந்த பாலை கிருஷ்ணருக்கு சமர்பித்த போது கிருஷ்ணரின் சிலை நீல நிறமாக மாறியது. பாலில் உள்ள விஷம் நீங்கி வெள்ளை நிறத்தில் மாறியது. அதைத் தான் மீரா அருந்தினாள்.

அந்த நேரத்தில் மஹாராணா உள்ளே வந்து, “இனி நீ இங்கே இருக்க முடியாது. நான் ராஜா, நீ‌‌ என்னை இழிவுபடுத்துகிறாய். இந்த அரண்மனையை நான் கட்டினேன். நான் கட்டிய அரண்மனையில் நீ தங்க முடியாது” என்றார். ஆனால் மீரா கிருஷ்ணர் சிலைக்கு ஏற்பட்ட மாற்றத்தைப் பார்த்து சோகமடைந்தாள். ஆழ்ந்த சிந்தனையில் இருந்தாள்.

“கங்கை மற்றும் யமுனை நதிகள் சந்திக்கும் இடமான பிரயாகைக்கு செல் மனமே” என்று துவங்கிப் பாட ஆரம்பித்தாள். அவள் புவியியல் இடத்தை குறிப்பிடவில்லை. இரண்டு புருவங்களுக்கு நடுவே இரண்டு நதிகளும் தன்னில் இணையும் இடத்தை அவள் குறிப்பிட்டாள். ‘இடா’ என்ற நரம்பு கங்கையாகும். ‘பிங்கலா’ என்ற நரம்பு யமுனையாகும். இந்த இரண்டிற்கும் நடுவே உள்ள நரம்பு ‘சுஷும்னா’. அதுவே பிரயாகை‌‌ ஆகும். அவள் தன் இரு‌ புருவங்களுக்கு இடையே தன் மனதை நிலை நிறுத்தினாள். அவள் மனம் அந்த இடத்தில் உறுதியாக இருந்தது, அந்த நொடியே அவள் கிருஷ்ணரிடம் சரணடைந்தாள். மிகுந்த நம்பிக்கையினாலும், கடவுளின் நாமத்தை உச்சரித்ததினாலும் மட்டுமே மீரா அத்தகைய தூய நிலையை அடைந்தாள்.

[விளக்கப்படங்கள்: பி.ஜி.சாய் பிரதீம், ஸ்ரீ சத்ய சாய் பாலவிகாஸ் மாணவர்.]
[ஆதாரம்: இறைவனின் பெயரைப் பாடுங்கள் சொற்பொழிவு 17, என் அன்பான மாணவர்களே – தொகுப்பு 4; “சாத்விக உணவை மட்டும் உண்ணுங்கள்”, சொற்பொழிவு 02, என் அன்பான மாணவர்களே, தொகுப்பு 02]

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: