சபரி மோக்ஷம்
சபரி மோக்ஷம்
இராமரும் லட்சுமணனும் தெற்கு நோக்கி நகர்ந்தனர். சிறிது தூரத்திலேயே அவர்கள் ஒரு வயதான, கடவுள் பக்தியுள்ள சபரி என்ற ஒரு மூதாட்டியை சந்தித்தனர். அவள் இராமரின் வருகைக்காகக் காத்திருந்தாள். அவளின் குரு மதங்க மகரிஷி, உயிர் நீக்கும் முன் அவளிடம் கூறியதற்கேற்ப அவள் இராமரிடம் ”ஓ இராமா! ஓ கடவுளே! என் குருவின் ஆசை பூர்த்தியாகி விட்டது. எங்கள் குடில் வெகு அருகிலேயே உள்ளது. நீங்கள் வந்து அதைப் புனிதப்படுத்த வேண்டும்” என்று வேண்டி இராமரின் பாதங்களில் விழுந்தாள். அவள் வேண்டுதலுக்கேற்ப இராமர் குடிலுக்குள் நுழைந்தவுடன், அவள் புத்துணர்ச்சி பெற்று இராமருக்குத் தருவதற்காக அருகிலுள்ள நதிக்கரையிலிருந்து குளிர்ந்த நீரும் பழங்களும் எடுத்து வரச் சென்றாள். அவள் இராமருக்குக்கென்று பழங்களைக் கடித்து ருசி பார்த்த பின் நல்ல சுவையுள்ள பழங்களை மட்டுமே எடுத்துவைத்திருந்தாள். அவற்றை இராமருக்கு சமர்ப்பித்தாள். அவளின் அன்பு, கடவுள் நம்பிக்கை, மற்றும் அர்ப்பணிப்பில் இராமர் மிகவும் நெகிழ்ந்து ”அன்னையே! கடவுள் நம்பிக்கை மட்டுமே எனக்கு வேண்டும், மற்றவை அனைத்தும் அதிலேயே அடங்கி உள்ளது. அன்பினில் தோய்ந்த கடவுள் நம்பிக்கையே எனக்கு ஏற்புடையது” என்று கூறி அவளை ஆசீர்வதித்தார். இப்படியாக சபரி இராமரால் மோக்ஷம் அடைந்தாள்.
குருமார்கள் குழந்தைகளுக்கு சொல்லவேண்டியது: உண்மையான அன்புடன் கடவுளை வழிபடுவதாலும், இசைவுடன் அனைத்து செயல்களை செய்வதாலும் உனது இதயம் என்ற வீட்டிலேயே கடவுளின் தரிசனம் கிடைக்கும்.
கற்றுக்கொள்ள வேண்டிய நீதி : தூய்மையும் அன்பும் நிறைந்த இதயத்திலிருந்து பிரார்த்தனை வெளிப்பட வேண்டும். அன்பின்றி கடமையாற்றுவது வருந்தத்தக்கது. அன்புடன் கடமையாற்றுவது விரும்பத்தக்கது. கடமை இன்றி அன்பு காட்டுவது தெய்வீகமானது.
இங்கு குருமார்கள் சபரியின் கதையைக் கூறலாம்.ஸ்ரீ ராமரிடம் அவள் கொண்டிருந்த இணையற்ற பக்தியைப் பற்றி விளக்கிக் கூறலாம்.17.04.1994 அன்று ஸ்வாமி கொடைக்கானலில் சபரியின் மோக்ஷம் குறித்து அருளிய உரை கீழே கொடுக்கப் பட்டுள்ளது. (ஆதாரம்- சாயி அருளமுதம்-1994 – அத்யாயம் – 7)
ஸ்ரீராமர் ஆஜானுபாகு என்று அழைக்கப்பட்டார் . சபரி மாதங்க ஆச்ரமத்தில் இருந்தாள் . ஸ்ரீராமர் காட்டுக்கு வந்து கொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டாள் .சபரி மிகவும் குள்ளம். வயது முதிர்ந்ததால் உடல் வளைந்து இருந்தது. மாதங்க ஆசிரமத்திற்கு எதிரில் மரங்களும் செடிகளும் வளைந்து இருந்தன.அவை இராமரைக் குத்தி சிராய்க்கும் என்று சபரி நினைத்தாள். இராமன் இடைஞ்சலில்லாமல் நேராக நடக்கவேண்டும் என்பதற்காக மரத்தின் கிளைகளை வெட்ட ஆரம்பித்தாள்.பிறகு அவள் ஒரு பாறை மேல் உட்கார்ந்தபோது,அதன் மேற்புறம் மேடு பள்ளமாக இருப்பதை உணர்ந்தாள். இந்த சொரசொரப்பான பாறையில் ஸ்ரீராமன் உட்கார்ந்தால்,அது அவருக்குத் துன்பமாக இருக்கும் என்று எண்ணி, இன்னொரு கல்லை எடுத்து மேற்புறத்தை அழுந்த தேய்த்து சமமாக வழுவழுப்புள்ளதாக ஆக்கினாள். இவளது பூர்வ கதை விசித்ரமானது அக்காலத்தில் தாழ்ந்த குலப்பெண்கள் ஆசிரமத்தில் அனுமதிக்கப்படவில்லை.ஆகவே முனிவர்களுக்கு சேவை செய்யும் பேறு தனக்குக் கிடைக்காது என்று வருந்தினாள். முனிவர்களும் சீடர்களும், ஆற்றுக்கு நீராடச்சென்ற வேளையில் ஆசிரமம், அதன் சுற்றுப்புறம் முழுவதையும் பெருக்கி, சுத்தம் செய்து,அவர்கள் வரும் வேளையில் பக்கத்திலுள்ள புதர்களில் ஒளிந்து கொள்வாள். அவள் ஆசிரமத்துக்கு வருவதற்கும் ஒரு காரணம் இருந்தது. அவளுக்கு பதினொரு வயதானபோது,அவள் பெற்றோரால் அவளுக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.இரவு பதினொரு மணிக்கு முகூர்த்தம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.பதினொரு வயதேயானதால் அவள் பந்தலில் கீழேயே உறங்கினாள். குஸ்தார் என்று பெயருள்ள ஒரு வயதான மனிதனே மணமகன். அக்காலத்தில், திருமணத்திற்கு முன் ஆட்டை கிராம தேவதைகளுக்கு பலியிடுவது வழக்கம். ஆடு பலிபீடத்துக்கு இழுத்துசெல்லப்பட்டது. சிறு பெண்ணான சபரி அதைக்கண்டாள். திருமணம் மங்களகரமாக நிறைவேற,இந்த பலி அவசியம் என்று கூறப்பட்டது.தனது திருமணத்திற்காக ஒரு ஆடு பலியிடப்படுவது அவளுக்கு விருப்பமே இல்லை.தனது உணர்ச்சிகளைப் பெற்றோருக்குத் தெரிவித்தாள்.அவர்கள், அவளுக்கு ஒன்றும் தெரியாது,விவரமறியாத சிறு பெண் என்று மட்டந்தட்டினார்கள்.அந்த ஆட்டின் சாவை நினைத்து அவள் அழுது, புலம்பினாள். முகூர்த்தநேரத்துக்கு ஒரு மணி முன்னதாக, அதாவது இரவு 10மணிக்கு அவள் திருமணவீட்டைவிட்டு ஓடிவிட்டாள்.கிராமத்தைச்சுற்றி ஒரு காடு இருந்தது. கொடிய வனவிலங்குகள் நிறைந்த காட்டின் வழியே அவள் இரவு முழுவதும் நடந்து சென்றாள். சில நாட்களில் மாதங்க முனிவரின் ஆசிரமம் வந்தடைந்தாள். மாதங்க முனிவர்,தானும் தன் சீடர்களும் இல்லாதபோது, ஆசிரமத்தை சபரி சுத்தம் செய்வதுண்டு என்றும்,அவள் புதரில் மறைந்துகொண்டு தன் சீடர்களுக்கு அளிக்கும் தன் உபதேசங்களைக் கேட்பதுண்டு என்றும் அறிவார். ஒரு நாள் மாதங்க முனிவர் அவளைக் கூப்பிட்டு மற்ற பக்தர்களைப் போலவே அவளையும் ஆசிரமத்திலேயே உட்காரும்படி பணித்தார்.அவள் காட்டு சாதியைச் சேர்ந்தவள் . அவளுக்கு எழுதவோ படிக்கவோ தெரியாது. உயர் சாதியைச் சேர்ந்த மற்ற சீடர்கள் கீழ் சாதிப் பெண்ணுடன் கூடவே தாங்களும் உட்கார செய்ததின் மூலம் குரு தம்மை அவமதித்ததாகக் கருதினர். ஆகவே அவர்கள் மாதங்கருடைய ஆசிரமத்தை விட்டு விலகினர்.சபரி மட்டும் தான் மிஞ்சினாள். தமது அந்திமகாலம் நெருங்கியதும்,மாதங்க முனிவர் சபரியை அழைத்து, “மகாவிஷ்ணு, இராமச்சந்திரப்பிரபுவாக உலகில் அவதரித்திருக்கிறார். கூடிய சீக்கிரம்,காட்டுக்கு வருவார். இவ்வுடலை விடுவதற்குமுன் அவரது தரிசனம் பெற வேண்டுமென்று தவம் செய்தேன்;அதற்கு தகுந்த தூய மனம் இல்லாததால்,அவரது தரிசனத்தைப் பெரும் பாக்கியம் எனக்கு இல்லை.நீ அத்தகைய தூய மனதை அடைந்து இருக்கிறாய்,ஆகவே ஸ்ரீராமரின் தரிசனம் உனக்கு கிட்டும்.தயவுசெய்து ஆசிரமத்தில் தங்கி, ஸ்ரீராமரின் வருவதற்காகக் காத்திரு”என்று கூறி இறைவனடி எய்தினார். சபரி, ஸ்ரீராமரின் வருகைக்காக 32 வருடங்கள் வழிமேல் விழிவைத்து காத்திருந்தாள்.ஒவ்வொருகணமும்,இராமர் இப்போது வருவார்,இப்போது வருவார் என்று கூறிக்கொண்டே காலத்தைக் கழித்தாள்.மற்ற ஆசிரமங்களில் இருந்த ரிஷிகள் அவளுக்குப் பித்து பிடுத்துவிட்டது என்று அவளுக்காக அனுதாபப்பட்டனர்.அவளுக்கு எண்பத்தைந்து வயது நிறைந்தது.இராம இலட்சுமணர் அவர் இடத்தை நோக்கி வருவதாக கேள்விப்பட்டாள்.மற்ற ஆசிரமங்களிலிருந்து முனிவர்களும், சீடர்களும் இராம இலட்சுமணரை வரவேற்கக் காத்திருந்தார்கள்.ஆனால் இராம இலட்சுமணர் மற்ற ஆசிரமங்களுக்குச் செல்லாமல், மாதங்க முனிவர் ஆசிரமத்துக்கு நேராக சென்றனர். அவ்வேளையில் சபரி ஆசிரமத்தில் இல்லை. தண்ணீர் கொண்டுவர,ஆற்றிற்குச் சென்றிருந்தாள்.இராம இலட்சுமணர் அவள் வருகைக்காகக் காத்திருந்தனர். முனிவர்களுக்கு இது அதிசயமாக இருந்தது.பொதுவாக பக்தர்கள் இறைவனின் வருகைக்காகக் காத்திருப்பார்கள். இங்கு, பிரபு பக்தனின் வருகைக்காக காத்திருக் கிறார்.சபரி ஆசிரமத்திற்குத் திரும்பியபோது, அவள் இரு நெடிதுயர்ந்த உருவங்களைக் கண்டாள்.யார் என்று அவர்களை வினவினாள். அவர்கள் மரவுரி தரித்திருப்பதைக் கண்டாள்.அவர்களிடம் அவளது குரு மாதங்க முனிவரது ஆணைப்படி இராமரின் வருகைக்காகக் காத்திருப்பதாகக் கூறினாள். அவர்களை உன்னிப்பாக கவனித்து “யாரோ இவர் யாரோ….” என்று பாடினாள். (ஸ்வாமி,இவ்விடத்தில் ‘யாரோ இவர் யாரோ என்ன பேரோ அறியேனே சந்திரபிம்ப முகமலராலே என்னைத் தானே பார்க்கிறார் ஒருகாலே அந்த நாளில் சொந்தம்போல உருகினார் இந்த நாளில் வந்து சேவை செய்கிறார்’ என்று ஜீவனுக்கும்,பரமனுக்கும் உள்ள உறவை,ஜீவனின் முந்தைய நினைவை, பரமனின் இன்றைய தரிசனத்தை,எல்லோரும் கேட்டு மனமகிழ, மனமுருக இனிமையாகப் பாடினார்.) இராம இலட்சுமணர் அவளது பாட்டை மிகவும் இரசித்து மகிழ்ந்தனர். பாடல் முடிந்ததும்,தம்மை இராம இலட்சுமணர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டனர். அவர்களை உட்காரும்படி வேண்டினாள்.இராமரைப் பற்றி மாதங்க முனிவர் கொடுத்த வர்ணனை நினைவுக்கு வந்தது. ஆஜானுபாகும், அரவிந்த தளாய தாட்சம் ராமம் நிசாசர விநாசகரம் நமாமி! அவள் முன்னாள் வந்து,முதலில் இராமரின் கண்களைத் தொட்டாள்.பிறகு முகம் முழுவதும்,தோள்கள், மார்பினைத் தொட்டாள்.இதைப் பார்த்த மற்ற முனிவர்கள் அவளைச் சபித்தார்கள்.இராமர் சபரியிடம் குடிக்கத் தண்ணீர் கேட்டார்.அவள் ஒரு குவளையில் நீர் கொண்டுவந்தாள்.சிறிது நீர் பருகிய பின்,குவளையை இலட்சுமண னிடம் கொடுத்தார்.அவர் குடித்தபின், குவளையை சபரியிடம் கொடுத்து மீதியுள்ள நீரைக் குடிக்கச் சொன்னார்.முனிவர்கள், இராமருடைய இந்த நடத்தையைக் கண்டு அதிசயப்பட்டார்கள்.அவர்கள் தமக்குள்சொல்லிக்கொண்டார்கள். “இராமரை பூர்ண கும்பத்துடன் வரவேற்க வேத பண்டிதர்கள் காத்திருக்க, அவ்வரவேற்பை ஏற்றுக் கொள்ளாமல், கடவுளுக்கு எவ்வாறு வணக்கம் செலுத்துவது என்றுகூடத் தெரியாத இத்தாழ்ந்த சாதிப் பெண்ணைக் காணவந்திருக்கிறார்”. சபரி ஆசிரமத்திற்குள் சென்று, பழங்களைக் கொண்டு வந்தாள். அவளிடம் இலந்தம் பழம் இருந்தது. இராமரிடம் கொடுப்பதற்கு முன்னால் அவள் ஒவ்வொரு பழத்தையும் சுவைத்துப் பார்த்தாள்.இராமரும் விருப்பத்துடன் எல்லாப் பழங்களையும் உண்டார்.அவர் சபரியிடம் “உனக்கு என்ன வேண்டும்?”என்று கேட்டார். அவள், ’பிரபு, எதுவும் தேவையில்லை. நான் உங்களுடைய தரிசனம், ஸ்பரிசனம், (தொடுகை) சம்பாஷணம்(உரையாடல்)இவற்றைப் பெறவேண்டும் என்றே உங்கள் வருகைக்காக இதுவரைக் காத்திருந்தேன்.தயவு செய்து என்னை ஏற்றுக்கொண்டுச் செல்லுங்கள்”. என்று இராமர் காலடியில் வீழ்ந்து,உயிர் நீத்தாள்.அவள் தியானமோ தவமோ செய்யவில்லை.வேதங்கள் கற்கவில்லை.ஆயினும்,இராமர் காலடியில் வீழ்ந்து உயிர் நீத்தாள்.அவள் திருமணத்திற்காக, ஒரு ஆட்டைக் கொல்லவேண்டும் என்ற நிலை வந்தபோது,அவள் உலக வாழ்க்கையைக்கண்டு வெறுப்புற்றாள்.உலக விஷயங்களில் அவளது பற்றின்மையையும்,இறைவனிடம் உள்ள பற்றுதலுமே சபரிக்கு வீடுபேற்றை அளித்தது.