வேதானுத்தரதே – மேலும் படிக்க

Print Friendly, PDF & Email
வேதானுத்தரதே – மேலும் படிக்க
விளக்கம்:

இது விஷ்ணுவைப் பற்றியப் பிரார்த்தனை. விஷ்ணு தீமைகளிலிருந்து பக்தரைக் காப்பவர். “ஒ! இறைவா! வேதங்களைக் காப்பதற்கு நீ மச்சாவதாரம் எடுத்தாய். பின்பு, வலிமை வாய்ந்த ஆமையாக (கூர்மாவதாரம்) உருவமெடுத்து, மூழ்கிக் கொண்டிருந்த பூமியை உன் தோளில் தாங்கினாய் . பின்பு, ஆற்றலுள்ள பன்றியாகி (வராஹவதாரம்) இந்த உலகைத் தன் கொம்பில் வைத்துக் காத்தாய். இரண்ய கசிபு என்ற அரக்கனைக் கொல்வதற்காக நரசிம்மஅவதாரம் எடுத்தாய்.. அடுத்து, சிறிய உருவமான வாமன அவதாரம் எடுத்து, பலிச்சக்ரவர்த்தியைப் பாதாளத்தில் தள்ளினாய். பரசுராமனாகப் பிறந்து கார்த்த வீர்யார்ஜுனன் கர்வத்தை அடக்கினாய். அதுவே பரசுராமவதாரம். பின்பு, இராமாவதாரத்தில் புலத்தியன் மகன் இராவணனைத் தொலைத்தாய். கையில் கலப்பை தாங்கி பரசுராமனாக வந்து அசுரனை அழித்தாய்.. கிருஷ்ணாவதாரத்தில் கருணைக் கடலாய் விளங்கினாய் பின்பு, புத்தாவதாரம் எடுத்தாய். அசுரர்களைக் கொன்றாய். (கல்கி அவதாரம்). உன் தாமரைத் திருவடிகளை நான் வணங்குகிறேன். (இங்கே ஹரியினுடைய பத்து அவதாரங்களும் விவரிக்கப்படுகின்றன).

1. வேதானுத்தரதே

மச்சாவதாரம் : வேதங்கள், இறைவனின் குரல். எது வரை வேதங்கள் ஓதப்படுமோ, மதிக்கப்படுமோ, வாழ்ந்து இருக்குமோ, அதுவரை நானுமிருந்து அவற்றைக் காப்பேன் என்று இறைவன் சொன்னார். இறைவனைப் பற்றிய அறிவைத் தருவது வேதங்கள். கெடுதல்கள், அறியாமை, இவை மிகுந்திருக்கும் போது, கடவுளைப் பற்றிய அறிவு அழிந்து, வேதங்கள் மூழ்கத் தொடங்கும். அப்போது உலகையும், வேதத்தையும் காக்க இறைவன் மச்சாவதாரம் எடுத்தான். தீமைகளை அழித்து, நல்லவை விளக்கம் பெற, இறைவன் விரும்பினான். பிரம்மாவின் மகன் மனு. அவர் பெரிய முனிவர். மனுவிலிருந்து தான் மனிதர்கள் தோன்றினார்கள். ஆகவே மனித இனத்தை “மானவர்கள்” என அழைத்தார்கள். ஒருமுறை ஆற்றங்கரையில் மனு, தவம் செய்து கொண்டிருந்தார். அப்போது இறைவன் தீமைகளை அழிக்க விரும்பினார். மனுவின் முன், ஹரி, ஒரு சிறு மீன் வடிவத்தில் தோன்றினார். மனுவைப் பார்த்து மீன் வடிவத்திலிருந்த இறைவன் சொன்னார், “என்னை விடப் பெரிய, வலிமை வாய்ந்த பிராணிகள் என்னைத் தின்ன முயல்கின்றன. நீ என்னைக் காப்பாற்று” என்றார். மனு, அந்த மீனை எடுத்து ஒரு சிறு பானையில் பாதுகாப்பாக வைத்தார். ஆனால் ஒரே நாள் இரவில், அந்தப் பானை கொள்ளாத அளவு அதன் உடல் வளர்ந்தது. ஆகவே பெரிய பானையில் மீனை, மனு விட்டார். மீன் முன்போலவேப் பெரிதாக வளர்ந்தது. இப்போது மனு மீனை ஒரு தொட்டியில் இட்டார். முன் போலவே தொட்டி கொள்ளாத அளவு மீண்டும் மீன் வளர்ந்து விட்டது. இப்படி ஒவ்வொரு தடவையும், அந்த மீன் வளர்ந்ததால் மனு அந்த மீனை ஒவ்வொரு இடமாக மாற்றினார். அதாவது, தொட்டியிலிருந்து ஒரு சிறிய ஏரிக்கும், பின்பு ஒரு ஆற்றுக்கும், பிறகு ஒரு கடலுக்கும் மாற்றினார். அப்போது அந்த மீன் சொல்லியது, “மனுவே! இது வரை நீ என்னைக் காப்பாற்றியதற்கு உன்னை நான் ஆசீர்வதிக்கிறேன். உலகிலுள்ள தீமைகளெல்லாம் அழிகிற நேரம் வரும். அப்போது நான் உன்னைக் காப்பேன். நீ ஒரு படகைத் தயார் செய்ய வேண்டும். அதில் எல்லா வகை மூலிகைகளையும், எல்லா வகை உயிர்களையும் பாதுகாத்து வை. ஏனென்றால் இந்த உலகம் அழிந்து, மீண்டும் தோன்றப் போகிறது. அப்போது எல்லா வகைகளுக்கும் மூல வித்து வேண்டும். ஆகவே நீ பாதுகாத்து வை. நான் உன்னிடம் மீண்டும் வருவேன்” என்று கூறியது. அது சொன்னவாறு மனு எல்லாவற்றையும் பாதுகாத்து வைத்திருந்தார். பிரளய காலம் வந்த போது மனு, மீனின் கொம்பில் அந்தப் படகைக் கட்டினார். “உலகத்திலுள்ள தீமைகளெல்லாம் அழிகிற நேரம் வரும்வரை நீ பாதுகாப்புள்ள இடத்திற்கு இந்தப் படகை இட்டுச் சென்று, பாதுகாத்து வைத்திரு” என்றது மீன். இவ்விதமாக மனுவையும், மற்ற உயிர்களையும், பின்னும், பயனுள்ள பொருள்களையும், அறிவின் பெட்டகமான வேதங்களையும் இறைவன் ஹரி காத்து நின்றார். இந்தக் காரியத்தைச் செய்வதற்காக இறைவன் ஹரி, மிகச் சரியான மீன் உருவத்தை எடுத்துக் கொண்டார்.அதுவே மத்ஸ்யாவதாரமாகும்.

2. ஜகன்நிவஹதே : கூர்மாவதாரம்

தேவர்களும், அசுரர்களும், அமிர்தம் பெறுவதற்காகப் பாற்கடலைக் கடைந்த போது மந்தரமலை மத்தாக இருந்தது. அது ஒரு நேரத்தில், கடலில் மூழ்கத் தொடங்கியது. ஆகவே தேவாசுரர்கள், நாராயணனைத் தமக்கு உதவுமாறு வேண்டிக் கொண்டார்கள். அப்போது ஹரி கூர்மம் (ஆமை) வடிவமெடுத்துத் தனது முதுகில் மந்தர மலையைத் தாங்கி, அதை மூழ்க விடாமல் காத்தார். இப்படித் தாங்கியதால் தான், தேவர்கள் அமிர்தம் பெற்றார்கள். இதன் உட்பொருளை அறியவேண்டும் . நன்மைக்கும், தீமைக்கும் போராட்டம் நடந்து, ஒன்றை ஒன்று வெல்ல முயல்கின்றன. இங்கே மந்தரமலை என்பது அஹங்காரம், வாசுகி என்ற கயிறு (விஷப்பாம்பு) மனிதனுடைய கெட்ட எண்ணம். உலகம் என்ற கடலில், கர்வம் என்ற மத்தும், கெட்ட எண்ணமென்ற மனமும் இணைந்து கடையும் போது நடவடிக்கைகள் என்ற பதினான்கு அரிய பொருள்கள் தோன்றுகின்றன. அவற்றுள் சில நல்லவை, சில தீமையானவை. கடலில் சந்திரன்,உச்சைஸ்ரவஸ் என்ற குதிரை ,ஐராவதம் என்ற யானை,பாரிஜாத மரம்,கௌஸ்துபம் என்ற மணி,அப்சரஸ் என்ற அழகிய பெண்கள், ஸ்ரீ லக்ஷ்மி, சுரபி என்ற பாத்திரம், ஆலாஹலம் மற்றும் அம்ருதம் ஆகியவைத் தோன்றின. கெட்டவைகள் வரும் போது மனிதன் நம்பிக்கை இழக்கிறான். அவன் இறைவனைத் துதித்தால் இறைவன் கூர்மம் தோன்றியது போல் தோன்றி மக்களைக் காப்பான் என்பது இக்கதையின் உட்பொருளாகும்.

3. பூகோளம் உத்பிப்ரதே – வராஹவதாரம்:

இரண்யாக்ஷகன், இரண்யகசிபு இருவரும் சகோதரர்கள். இரண்யகசிபு இளையவன். இரண்யாக்ஷன் என்பவன் சக்தியும் ஆற்றலும் உடையவன். அவன் பெரிய வடிவமும் பலமும் உடையவனாக இருந்தான். அவன் கடும்தவம் புரிந்து, தான் எதனாலும் கொல்லப்படக் கூடாது என்று வரம் பெற்றான். ஆகவே அவனைக் கொல்லுவது அரிது. இவற்றின் காரணமாக உலகம் மூழ்கத் தொடங்கியது. அதாவது தீமை பெருகி நன்மை சுருங்கியது. ஆகவே ஹரி, காட்டுப் பன்றியாக வர வேண்டிய காலம் வந்தது. அசுரனைக் கொல்லுவது கடினமாக இருந்தது. மனித வடிவில் இருந்து அவனைக் கொல்ல வலிமையில்லை என்பதால் வராஹமாக வந்து அசுரனைக் கொன்றார். இரண்யகசிபு மிகவும் இளையவனாக இருந்ததால், பின் அவன் வளர்ந்த போது இறைவன் ஹரி தன் தமையனைக் கொன்றார் என்று அறிந்தான். ஆகவே, தவமியற்றித் தான் எந்த ஆயுதத்தாலும் கொல்லப்படக் கூடாது என்ற வரத்தைப் பெற்றுப் பழிவாங்கத் தொடங்கினான்.

4. தைத்யம் தாரயதே – (நரசிம்ஹ அவதாரம்)

(வராஹவதாரத்தின் இரண்டாவது பத்தியை ஒரு முறைப் பார்க்கவும்) இரண்யகசிபு, தவமியற்றி இறைவனைத் திருப்தி செய்தான். இறைவன், “உனக்கு என்ன வரவேண்டுமென கேள்” என்று சொன்னார். இரண்யகசிபு ஹரியைப் பார்த்து, “எனக்கு அழியா வரம் தா” எனக் கேட்டான். அதற்கு இறைவன் சொன்னார், “அழியாமை என்பது யாருக்கும் தரத்தக்கது இல்லை. இறைவன் கூட பூவுலகில் பிறந்தால் அவருடல் அழியத்தக்கதே. ஆகவே வேறு ஏதேனும் கேள்” என்றார். அப்போது இரண்யகசிபு கீழ்க்கண்ட வரத்தைக் கேட்டான். 1. தாய் வயிற்றில் பிறந்த யாரும், என்னைக் கொல்லக் கூடாது. 2. இரவிலோ, பகலிலோ எனக்குச் சாவு வரக் கூடாது. 3. எந்த ஆயுதத்தாலும் எனக்கு சாவு வரக் கூடாது. 4. கடவுளாலோ, மனிதனாலோ, மிருகத்தாலோ எனக்குச் சாவு வரக் கூடாது. 5. வீட்டினுள்ளேயோ, வெளியிலோ என்னை யாரும் கொல்லக் கூடாது. 6. எனக்குப் பூமியிலோ, ஆகாயத்திலோ, சாவு வரக் கூடாது” என்று கேட்டான் .

இறைவன் “தந்தேன்” என்று சொல்லி மறைந்தார். கடவுளைத் தான் ஏமாற்றிவிட்டதாகவும், தனக்கு இனிச் சாவு இல்லை எனவும் நினைத்து இரண்யகசிபு களித்தான். தன் வலிமையைப் பற்றி கர்வம் கொண்டான். அவன் முனிவர்களிடம் சொன்னான் – “நாராயணனுக்குச் செய்கிற எல்லாக் காரியங்களையும் நிறுத்துங்கள். அவன் பெயர் இருக்கிற இடங்களிலெல்லாம் என் பெயரை நிரப்புங்கள். ஏனென்றால் இனி நானே நாராயணனைப் போன்றவன்.” ஆனால், முனிவர்கள் அப்படிச் செய்ய இசையவில்லை. ஆகவே அவர்களை அசுரன் சிறையிலிட்டான். இவ்வாறுப் பாபத்தைப் பெருக்கிக் கொண்டான். இரண்யகசிபுவுக்கு, பிரகலாதன் என்ற ஒரு மகன் பிறந்தான். பிரகலாதன் கடவுள் நம்பிக்கைமிக்க ஒரு ஆத்திகன். அவன், நாள் முழுவதும் “நாராயணா, நாராயணா” என்றே நாராயணன் புகழ் பாடினான். தானே இறைவன் என்பதைக் கற்பிப்பதற்காக, அசுரத் தந்தையான ஹிரண்யகசிபு, தன் பிள்ளைக்கு ஏற்பாடு செய்தான். பிரகலாதன் தன் ஆசிரியர் சொன்னதைச் சொல்லாமல், நாராயணன் பெயரையே உச்சரித்தான். இறுதியில், இரண்யகசிபு பிரகலாதனைக் கொலை செய்யுமாறு ஆணையிட்டான். இரண்யகசிபுவின் பல முயற்சிகளும் இதில் தோற்றன. அது கண்டு அரசன் கோபப்பட்டான். ஒரு முறை பிரகலாதன், “நமோ நாராயணா” என்று சொல்லிக் கொண்டு, தன் தந்தை அருகில் வந்து நின்றான். அப்போது அங்கே நாரத முனிவர் இருந்தார். அவர் கேட்டார், “ஓம் நாராயணா என்று சொல்லியதற்காகப் பல முனிவர்களை நீ சிறையிலிட்டாய். இப்போது உன் சொந்தக் குழந்தையே நாராயணா என்கிறானே” என்று கேட்டார். இரண்யகசிபு கோபமாக பிரகலாதனைப் பார்த்து கேட்டான், “எங்கேயடா உன் நாராயணன்? இங்கு இருக்கிறானா?”. பிரகலாதன் “அவர் எங்கும் இருக்கிறார்” என்றான். இரண்யகசிபு ஒரு தூணைக் காட்டி, “இந்தத் தூணில் அவன் இருக்கிறானா?” என்று கேட்டான். பிரகலாதன் “ஆம்” என்று விடை சொன்னான். அசுரன், அந்தத் தூணை உடைக்க, அது கீழே விழுந்து உடைந்தது. பக்தனின் வார்த்தையை மெய்ப்பிக்க வேண்டுமென்று கருதி இறைவன், ஹரி நரஸிம்மமாக அந்தத் தூணில் தோன்றினார். இரண்யகசிபு நடுங்கத் தொடங்கினான். ஆனால், பிரகலாதனோ, அஞ்சாமல் இறைவனின் திருவடியில் வணங்கினான். பின்பு இறைவன் இரண்யகசிபுவைப் பற்றி வாயிற்படிக்கு இழுத்துச் சென்றார். பின்பு இரண்யகசிபுவைத் தன் மடியில் போட்டுக் கொண்டார். அப்போது இறைவன் சொன்னார், “இரண்யகசிபு! என்னை நன்றாகப் பார். இப்போது நீ பெற்ற வரங்களையெல்லாம் நான் உண்மையாக்குகிறேன். நீ கடவுளை ஏமாற்றியதாக நினைக்கிறாய். நீ கேட்ட வரங்களையெல்லாம் நிறைவேற்றிய பின்னும் நீ உயிரோடு இருக்கப் போவதில்லை. 1. நான் தாய் வயிற்றில் பிறக்கவில்லை. இப்போது நான் தூணில் தோன்றினேன். 2. இப்போது பகலோ, இரவோ இல்லை. இது மாலைப் பொழுது. 3. நான் எந்த ஆயுதத்தையும் உபயோகிக்கப் போவதில்லை. (நகமே ஆயுதம்) 4. நான் கடவுளோ, மனிதனோ, மிருகமோயில்லை. (இது மூன்றும் கலந்த வடிவம்). 5. நான், இப்போது வீட்டினுள்ளேயோ, வீட்டின் புறத்தேயோயில்லை. (வாயிற்படியிலிருக்கிறேன்) 6. நான் இப்போது உன்னைக் கொல்லப் போவது பூமியிலோ, ஆகாயத்திலோ இல்லை. (என் மடியில் இருக்கிறாய்)” என்று சொல்லிக் கொண்டே இரண்யகசிபுவின் வயிற்றை நகத்தால் கிழித்துக் கொன்றார்.

5. பலிம் சலயதே – வாமனாவதாரம்

பலி என்பவன் அசுர அரசன் என்றாலும், நல்ல குணங்களும் கொண்டவன். அவன் உதாரகுணமும், சொன்ன சொல்லைக் காக்கிற இயல்பும் கொண்டவன். இறைபக்தன். அவனிடமிருந்த கெட்ட குணம் முதியோரையும், வேதத்தையும் மதியாது இருந்தமை. இதற்குக் காரணம், அவனிடமிருந்த அகங்காரம், கர்வம் இவைதாம். அவன் எப்பொழுதும், தன்னைவிட எவனும் அறிவாளியில்லை என்று கர்வமாக எண்ணினான். கடவுள் தன் பக்தனின் வீழ்ச்சியை என்றும் விரும்புவதில்லை. ஆகவே, பலிக்கு அவன் கர்வத்தை அழித்துப் பாடம் கற்பிக்க இறைவன் எண்ணினார்.

ஒரு தடவை பலி ஒரு யக்ஞம் நடத்தினார். அதற்கு ஹரி ஒரு பிராமணச் சிறுவன் வடிவில் வந்து யாசிப்பது என்று முடிவு செய்தார். ஹரி அங்ஙனம் வந்ததால், அவரை பலி அறிய முடியவில்லை. பலி, இறைவன் கேட்டதைக் கொடுக்க வேண்டி வந்தது. இறைவன் பலியிடம் சொன்னார், “ஒ அரசே நான் உம்மிடம் ஒன்றை யாசிக்கிறேன். என் காலளவில் மூன்றடி மண் தருவாயாக” என்று கேட்டார். பலி அதைக் கொடுத்தான். ஆனால் பலியின் குரு சுக்ராச்சாரியார், வந்தவர் ஹரி என்று உணர்ந்து கொண்டார். “அவர் யாசிப்பதைக் கொடுக்காதே” என்றும் எச்சரித்தார். பலி தன் குருவிடம், “ஒரு முறை வாக்குக் கொடுத்ததை நான் மீற மாட்டேன். என் வாக்குப் படியே நடப்பேன்” என்றான். பலி தாரை வார்க்க முயன்ற போது, சுக்ராச்சாரியார் ஒரு வண்டாக மாறி, கமண்டல வாயை அடைத்துத் தன் சீடனைக் காக்க முயன்றார். பலி தன் கையில் ஒரு தர்ப்பை மோதிரம் அணிந்திருந்தான். அந்த தர்ப்பையால் கமண்டல வாயைக் குத்தினான். பின்பு, இறைவனின் (யாசகரின்) கையில் நீர் தந்து, தாரை வார்த்தான். அப்போது இறைவன் மிகப் பெரிய உரு எடுத்துக் கொண்டு தன் காலின் ஓரடியால் ஆகாயத்தையும் மற்றொரு அடியால் பூலோகத்தையும் அளந்து முடித்தார். பின் “மூன்றாவது அடிக்கு இடம் எங்கே?” என்று பலியை கேட்டார். பலி சிறந்த பக்தன் என்பதாலும், நன்கு கற்றவன் என்பதாலும், இறைவன் திருமுன் பணிந்து “ஓ இறைவா! என் தலையில் உம் மூன்றாவது அடியை வையும், அப்போது நான் ஆசீர்வதிக்க பட்டவனாவேன்”, என்றான். ஹரி தனது மூன்றாவது அடியைப் பலியின் தலையின் மீது வைத்து, அவனைப் பாதாளத்துக்குத் தள்ளி “ஓ பலி! நீ பாதாளத்துக்குச் சென்று அங்கே அரசாளுவாயாக” என்று கூறினார். பலி உண்மையில் கொல்லப்படவில்லை. அவன் இவ்விதம் தண்டிக்கப் பட்டான். அவனிடம் பல நல்ல குணங்கள் இருந்ததால் அவன் அழிக்கப்படவில்லை.

6. க்ஷத்ரக்ஷயம் குர்வதே – பரசுராமவதாரம்

ஜமதக்னி முனிவரின் மகன் பரசுராமர், தாய் – ரேணுகா தேவி. பரசுராமன் சிவனின் அவதாரம். சிவன் ஜமதக்னி முனிவருக்குக் கொடுத்த வாக்குப்படி அவருக்கு மகனாக அவதரித்தார். ஜமதக்னியின் மூன்று மகன்களில் பரசுராமன், இளையவர். துருவாச முனிவர் போலவே ஜமதக்னியும் மிகவும் கோபக்காரர்.

ஒரு நாள் ரேணுகா தேவி நீர் கொண்டு வர ஆற்றுக்குச் சென்றாள். அங்கு தேவர்கள் ஆணும் பெண்ணுமாகக் களியாட்டில் இருந்ததைப் பார்த்தாள். அவள் வீட்டிற்குத் திரும்பியதும் ஆற்றில் நடந்த களியாட்டுப் போலவே தன் கணவனோடு களிக்க விரும்பினாள். ஜமதக்னி, முனிவர் என்பதால் அவருக்கு அத்தகைய ஆசையில்லை. தன் மனைவியின் கருத்துத் தெரிந்த ஜமதக்னி மிகவும் கோபப் பட்டார். முனிவர் தன் மூத்த மகனை அழைத்து, அவரது தாயின் கழுத்தை வெட்டச் சொன்னார். ஆனால் அவன் மறுத்தான். முனிவர் இரண்டாம் மகனிடம் இதைப் போல் கேட்ட போது, அவனும் அப்படியே மறுத்தான். மூன்றாவது மகன் பரசுராமனிடம் கேட்ட போது, அவன் தன் தாயின் தலையை மழுவால் வெட்டினான். தன் மகன் தான் சொன்னவாறு நடந்ததற்காக மகிழ்ந்தவர், “உனக்கு என்ன வரம் வேண்டும்” என்று கேட்டார். பரசுராமன் தன் தாய் உயிர்த்தெழ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தன் தவத்துக்குப் பொருந்தாத, கோபத்தின் கொடுமையை முனிவர் உணர்ந்தார். மகன் கேட்டதைக் கொடுத்ததோடு, தன் கோபத்தையும் விட்டுவிட்டார். அப்போது கார்த்தவீர்யார்ஜுனன் என்ற அசுரன் அரசனாக இருந்தான். அவன் மிகவும் வலிமையாக இருந்தாலும், கொடுமைக்காரனாகவும் இருந்தான். ஒருமுறை, பரசுராமன் தவத்திற்காக வெளியே சென்றிருந்த போது, அந்த அசுர அரசன் ஜமதக்னியின் தவச் சாலைக்கு வந்து, அவரைக் கொன்று விட்டான். ஜமதக்னி அப்போது கோபத்தைத் தொலைத்திருந்ததால், அவர் ஒன்றும் சொல்லவில்லை. தவச்சாலைக்குத் திரும்பிய பரசுராமர், தன் தந்தை இறந்திருப்பதைக் கண்டார். பரசுராமர் மிகவும் கோபப்பட்டு, கார்த்தவீர்யார்ஜூனனைக் கொன்று விட்டார். இவனுக்கு, சஹஸ்ரார்ஜூனன் என்ற மற்றொரு பெயரும் உண்டு. அதாவது, ஆயிரம் கையையுடையவன் என்று பொருள். அந்தக் காலத்தில், க்ஷத்ரியர்கள் மிகவும் பலசாலிகளாக இருந்தார்கள். ஆகவே, தீய காரியங்களுக்குத் தம் பலத்தையெல்லாம் செலவழித்து, கர்வமாக நடந்தார்கள். ஆகவே, அவர்களுக்கு ஒரு பாடம் கற்பிக்கவும், அவர்களை அழிக்கவும் ஒரு நேரம் வந்தது. அவர்களின் மூன்று தலைமுறையைப் பரசுராமர் கருவறுக்க முடிவு செய்தார். க்ஷத்ரியர்கள் அனேகரைக் கொன்று விட்டார். அந்த சமயம் இக்ஷ்வாகுவின் தாய் கருவுற்றிருந்தாள். ரகுவம்சத்தின் முதலரசன் இக்ஷ்வாகு. அவர்களின் குலகுரு – வசிஷ்டர். இக்ஷ்வாகுவின் தாயை ஒரு குகையில் மறைத்துக் காப்பாற்றினார். மற்றும் ரகு, திலிபன், தசரதன் என்ற ரகுகுல வம்ச அரசர்கள் பிறக்கப் போகிறார்கள் என்பது வசிஷ்டருக்குத் தெரியும். இவ்விதம் சூரிய வம்சத்தை முனிவர் காத்து வைத்தார். பரசுராமரின் அவதார காரியம் முடிவு பெற வேண்டிய நேரம் வந்து விட்டது. தசரதனின் மைந்தனாக இராமர் அவதாரம் செய்திருப்பதைப் பரசுராமர் அறிந்தார். பரசுராமர் தன்னிடம் ஒரு பலம் வாய்ந்த வில் வைத்திருந்தார். அது சிவப்பெருமானுக்குரியது. திரிபுராசுரனைக் கொல்லுவதற்காகவே அது படைக்கப் பட்டது. அதை இராமனுக்குக் கொடுக்கப் பரசுராமர் தீர்மானித்தார். ஏனென்றால், இராமனைத் தவிர வேறு யாராலும் அதைத் தூக்கக் கூட முடியாது. ஆகவே இராமனுக்கு முன் பரசுராமர் வந்து தன்னோடு போர் செய்ய அழைத்தார். பரசுராமரின் வில்லை இராமன் தொட்டவுடனேயே, விஷ்ணுவாக அவர் காட்சி கொடுத்து ஒளி வீசினார். பரசுராமரின் சக்தியெல்லாம் போய்விட்டது. பின்பு பரசுராமர், தன் அவதார காரியம் முடிந்தது என்று சொல்லிவிட்டு பத்ரிக்குத் தவம் செய்யச் சென்று விட்டார்.

7. பௌலத்ஸ்யம் ஜெயதே – இராமாவதாரம்

புலத்திய முனிவரின் மகன் பௌலஸ்த்யர். ஆகவே பௌலஸ்த்யர் என்பது இராவணனுக்கு மற்றொரு பெயர். இவன் இராமனால் கொல்லப்பட்ட அரக்கன். தசரதன், கைகேயிக்குக் கொடுத்த வரத்தைக் காப்பதன் பொருட்டு இராமன் வனவாசம் போனான். மாரீசன் என்ற அரக்கன், இராவணனின் மாமா. மாரீசன், பொன்மான் வடிவம் எடுத்துச, சீதையின் முன் வந்து, அழகோடு ஆட்டம் காட்டினான். அதைப் பிடித்துத் தருமாறு, இராமனிடம், சீதை ஆசையோடு கேட்டார். இராமன், மானைப் பிடிக்கக் காடு முழுவதும் துரத்தினார். அப்போது இராவணன் ஒரு சாது வடிவில் வந்து பிச்சை கேட்டான். சீதை பிச்சையிட வந்த போது இராவணன், அவள் தோளைப் பற்றி இழுத்துத் தன் தேரில் இலங்காபுரிக்குக் கொண்டு சென்றான். வழியில், ஜடாயு என்ற பறவையரசன் இராமபக்தன் ஆகையால், இராவணனோடு போரிட்டுச் சீதையைக் காப்பாற்ற முயன்றது. ஆனால் போரில் அது இறந்தது. இராமன் தன்னுடைய குடிசைக்குத் திரும்பிய போது சீதையில்லை. அவன் காடெல்லாம் தேடினான். காட்டில் குரங்கு அரசன் சுக்ரீவனைக் கண்டான். சுக்ரீவன் மூலம் அவன் அண்ணன் வாலி கொடுமைக்காரன் என அறிந்தான். சுக்ரீவன் இழந்த அரசை இராமன் மீட்டுத் தருவதாக வாக்களித்தான். பின்பு வாலியைக் கொன்று, அரசைக் கொடுத்தான். சீதையைத் தேடுவதற்குத் தன் அமைச்சன் அனுமானை, சுக்ரீவன் அனுப்பினான். அனுமான் கடல்கடந்து இலங்கை சென்றான். வஞ்சகனான இராவணனைத் தண்டிக்க அனுமான் இலங்கையைத் தீயிட்டு எரித்தான். இராமனிடம் அனுமான் திரும்பி வந்து சீதையைப் பற்றிச் சொன்னான். சுக்ரீவனோடும், அவன் படையோடும், இராமன் இலங்கைக்குப் படையெடுத்துச் சென்று, இராவணனைத் தாக்கினான். போரில் இராவணனையும், அவன் தம்பி கும்பகர்ணனையும் இராமன் கொன்றான். போர் முடிந்ததும், விபீஷணனுக்கு (இராம பக்தன்) இராமன் இலங்கையரசனாகப் பட்டம் சூட்டினான். இராமன் பின்பு சீதையோடு அயோத்தி திரும்பினான்.

8. ஹலம் கலயதே – பலராம அவதாரம்

பலராமர், கிருஷ்ணனின் அண்ணன். ரோஹிணிக்கும், வசுதேவருக்கும் பிறந்தவர். ஹலதரன் என்பது பலராமருக்கு மற்றொரு பெயர். ஹல – உழுதல். பலராமன் ஆதிசேஷனின் அவதாரம். தாரா என்றால் தாங்குதல். பலராமனின் படைக்கலம் கலப்பை. பலராமர் தேவகியின் ஏழாவது குழந்தை. பலராமர் தேவகியிடமே பிறந்திருந்தால் கம்ஸன் அவனைக் கொன்றிருப்பான். ஆகவே இறைவன், தேவகியின் கருவை ரோஹிணியிடம் பதித்து வளர விட்டார். ரோகிணி வசுதேவரின் இரண்டாவது மனைவி. பலராமர் கிருஷ்ணனுக்குப் பலவகையில் கோகுலத்தில் உதவி செய்தவர். பகாசுரன், தன்வாசுரன், விருத்ராசுரன் ஆகியோரைக் கொல்வதில் உதவி செய்தவர். மற்றும் கம்ஸனால் அனுப்பப்பட்ட சாணுரன் என்ற அசுரனையும் பலராமன் கொன்றார்.

கிருஷ்ணாவதாரத்திற்கு வழி வகுக்கவே, இவர் அவதரித்தார். குருக்ஷேத்ரப் போர் முடிந்ததும், பலராமன் அவதாரமும் முடிந்தது. கடைசியில் பலராமன் இமயமலை சென்று தவமியற்றி மறைந்தார்.

9. காருண்ய மாதன்வதே – கிருஷ்ணாவதாரம்

இங்கு, கிருஷ்ணன் அவதாரக் கதையைச் சொல்லுங்கள்.

1௦. ம்லேசான் மூர்ச்சயதே – கல்கி அவதாரம் (பகவான் ஸாயி)

பாகவத புராணத்தின்படி, தென்னிந்தியாவிலுள்ள ஒரு நதிக் கரையில் கல்கி அவதாரம் நடக்கும் என்று வருகிறது. அவருக்கு, மேகமண்டலம் போல மென்மையான நெருங்கிய முடியிருக்கும். அவர் குட்டையாகவும், சிறிது கருநிறத்தோடும் இருப்பார். அவர் சிவப்பான உடையை உடுப்பார். அவர் எவ்வித ஆயுதமும் வைத்திருக்க மாட்டார். அவர் ஒரு வெண்மையான குதிரையில் ஏறி வருவார். அந்தக் குதிரை உலகத்தின் தீமையெல்லாம் (கல்கி அவதாரத்தில் நடுங்கச் செய்து) அழித்து வலம் வரும். இந்தக் கல்கி அவதாரம் யார்? அது நம் ஸாயி பகவான் தான். அவர் எந்த ஆயுதமும் வைத்திருக்கவில்லை. வெண்மையான குதிரையில் வருவது என்பது தூய்மையின் குறியீடு. அக்குதிரையில் நான்கு கால்களாவன – ஸத்யம், தர்மம், சாந்தி, பிரேமை. அவை கல்கியின் நிகழ்காலத்தில் எல்லாத் தீமைகளையும், வஞ்சகத்தையும் அகற்றும்.

இறைவனின் பத்துப் பிரதான அவதாரங்களும் அவற்றின் சாஸ்வதக் கருத்துக்களும்
  1. மத்ஸ்ய : சந்தேகப் பிரளயத்திலிருந்து ஞானப் புதையலை மீட்டெடுக்கவும்.
  2. கூர்ம : பற்றற்ற வாழ்க்கை வாழ்ந்து, இவ்வுலகிலும், இதற்கப்பாலும் உனக்கு நீயே தலைவனாய் இரு.
  3. வராஹ :கடமைச் சுமையை, கட்டுப்பாடு, கடவுள் பக்தி என்ற இரட்டைத் தந்தங்களின் மேல் வைத்துத் தூக்கிச் செல்.
  4. நரசிம்ஹர் :உன்னுடைய அஹங்காரம் இறைவன் புகழை மறைக்க அனுமதிக்காதே
  5. வாமனர் :இறைவன் திருவடிகளில் உன்னையே அர்ப்பணித்து, அவனைச் சரணடைந்துவிடு.
  6. பரசுராமர் : சரணாகதித் தத்துவத்தை அறிந்துகொள். இல்லையேல் துன்பப்படு.
  7. ஸ்ரீராமர் : ஒருவன் தன் வாழ்வில் எதை அடைகிறான் என்பது விதி; அதை எப்படி அடைகிறான் என்பது சுய முயற்சி
  8. கிருஷ்ணர் : இறைவனின் கைகளில் ஒரு கருவியாக இருக்க முயற்சி செய்.
  9. புத்தர் : உன்னை சரி செய்துகொள். அதன் மூலம், நீ மற்றவர்கள் சரியாவதற்கு உதவுவாய்.
  10. கல்கி : சத்யம், தர்மம், சாந்தி, பிரேமை, அஹிம்சை ஆகிய ஐந்து நீதிகளைக் கொண்டு வாழ்க்கை என்ற மாளிகையைக் கட்டு.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன