ஹே சிவ சங்கர – மேலும் படிக்க

Print Friendly, PDF & Email
ஹே சிவ சங்கர – மேலும் படிக்க
பவானி சங்கர என்பதின் உட்பொருள்-(குரூப் 1 பஜன்)

பகவான் கூறுகிறார், “பவானி சங்கர” என்பது சிவ சக்தி சொரூபத்தைக் குறிக்கிறது. பவானி என்பது சிரத்தை (ஒரு நோக்கத்தில் உள்ள அக்கறை); சங்கர என்பது விஸ்வாஸத்தின் குறியீடு. சிரத்தையின் குறியீடான பவானி இருக்கும்போது, அங்கு நம்பிக்கையின் சின்னமான சிவன் நடனமாடுகிறார். ஒரு குறிக்கோளில் அக்கறையில்லையேல், நம்பிக்கையில்லையேல், அவ்வாழ்க்கை வீணே. ஆனால் இன்று பவானி மற்றும் சங்கரன் இருவரும் தம்முள் இருந்தும் நம்பிக்கையில்லை. இறைவனின் படைப்பு முழுவதுமே, ஆண்,பெண் தத்துவம் அடங்கிய அர்த்த நாரீஸ்வர சொரூபமே. ஒவ்வொரு மனிதனும் தன்னுள் இருக்கும் தெய்வீகத்தை உணர முயற்சிக்க வேண்டும். இதைவிட மேலான ஆன்மீகம் வேறெதுவும் இல்லை. இந்த பவானி சங்கர தத்துவத்தை உபாசித்தல் ஒவ்வொரு மனிதனின் முழுமுதற் கடமையாகும்.

ஒருவரோடு ஒருவர் சேர்ந்து ஒழுகுதல் – ஒரு சிறந்த முன்னுதாரணம் = சிவ குடும்பம்

நம் புராணங்களிலிருந்து சிறந்த உதாரணங்களைக் கூறலாம். நம் சிவபெருமானின் குடும்பத்தை ஆராய்வோம். சிவனின் தலையில் கங்கை நீர் உள்ளது. முன் நெற்றியில் இரண்டு கண்களுக்கு இடையே நெருப்பு உள்ளது. அதனால் அவர் பெயர் முக்கண்ணன்.

அதாவது மூன்று கண்களை உடையவன். நீரும், நெருப்பும் தன் இயற்கையான இயல்புகளால் ஒன்றுக்கொன்று நேர் எதிரிடை; இரண்டும் ஒன்றாக இருக்காது. சிவன் விஷம் கொண்ட பாம்புகளை ஆபரணமாகக் கழுத்தில் அணிவதால் பன்னகதரன், நாக பூஷணன் என்ற பெயரை உடையவராக இருக்கிறார். சிவனின் மகன் சுப்ரமண்யரின் வாகனம் மயில் ஆகும். பாம்பும் மயிலும் ஒன்றுக்கொன்றுப் பரம வைரிகள். சிவனின் சக்தியாகிய பார்வதி தேவியின் வாகனம் சிங்கம். அவள் சிம்ம வாஹினி. சிவனின் மற்றொரு மகனின் முகமோ யானைமுகம் ஆகும். அதனால் கணேசர், ” கஜானனன்” என்று அழைக்கப்படுகிறார். ஒரு யானை, சிம்மத்தைக் கனவிலும் காண நினைக்காது. பார்வதி தேவி ஆபரண அலங்காரங்கள் கொண்டவள். ஆனால் அவளது இறைவன் சிவனோ திகம்பரனாக, திக்குகளை ஆடையாக உடுத்தியவன். குறைந்த அலங்காரங்களுடன், பஸ்மபூஷிதாங்கனாய், அதாவது விபூதியை உடலில் பூசியவனாக இருக்கிறான் இவ்வாறு சிவ பெருமான் குடும்பம் முழுதும் நேர் எதிரிடையாய், முரண்களாய் இருக்கும் போதும் அங்கு ஒருமித்தல், கூட்டுறவு, நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையே நிலவுகிறது. இதுபோல் உங்கள் குடும்பத்திலும், அங்கத்தினர் ஒருவருக்கொருவர் வேறுபடலாம். இருப்பினும் சிவனாரின் குடும்பத்தைப் போல முழுமையான நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும். இதுவே காலம் காலமாக சிவ பெருமான் உலகிற்களிக்கும் படிப்பினையாகும்.