பொறாமை அழிவைத் தரும்

Print Friendly, PDF & Email
பொறாமை அழிவைத் தரும்

மாதவனும் கேசவனும் கிராமத்தில் வசிக்கும் இரு விவசாயிகள். மாதவன் அறிவிற் சிறந்தவனாகவும், கடுமையாக உழைப்பவனாகவும், எப்போதும் மனநிறைவும் மகிழ்ச்சியும் பெற்றவனாகவும் இருந்தான். அதற்கு மாறாகக் கேசவன் சோம்பேறியாகவும், எப்போதும் எதைக்குறித்தாவது துன்புற்றுக் கொண்டு வருத்தத்துடனும் இருந்து வந்தான். மாதவனது மாண்புமிக்க அறிவையும், ஆற்றலையும் கண்டு பொறாமை கொண்டான் கேசவன். அதனால் மாதவனைக் கண்ட மாத்திரத்திலேயே எரிச்சலடையலானான். மாதவன் அனைத்திலும் நலிவுற்றுப் போக அவன் கடவுளிடம் கூடச் சில சமயம் வேண்டுவான்.

தன்னைப் போலவே கிராமத்தார் அனைவரும் நலமார்ந்து வாழ நல்லெண்ணம் கொண்டிருந்த மாதவனிடம் கடவுள் கருணை மிகுந்து அருளி வந்தார். ஒரு முறை, பல வாரங்கள் வருந்திப் பாடுபட்டதன் பலனாக அவனது தோட்டத்தில் ஒரு புது மாதிரியான பூசணிக்காய் விளைந்தது. அந்தப்பூசணிக்காயின் தோலில், வானவில் போன்று ஏழு நிறங்கள் மின்னின. வாசம் மிக்க ஒரு மலர் போன்று அதில் ஓர் இனிய மணம் வீசியது. தேனைப் போல் அது சுவைத்தது.

எல்லாவற்றிற்கும் மேலாக, அதற்கு நான்கு கால்கள், ஒரு துதிக்கை, ஒரு வால் எல்லாம் அமைந்து, ஒரு யானையைப் போலவே அது தோற்றமளித்தது. மாதவன் உடனே அந்த விந்தையான பூசணிக்காய் அரசனுக்குச் சிறந்த வெகுமதிக் பொருளாக அமையுமே என்று எண்ணினான். எனவே, அதை எடுத்துக்கொண்டு தலைநகருக்குச் சென்று அரசன் காலடியில் அதை வைத்து வணங்கினான். விசித்திரமான தோற்றம் கொண்ட அந்தப்பூசணிக்காயைப் பார்த்து அரசர் பெரிதும் மகிழ்ந்தார். அவர் மாதவனுக்கு ஓர் உண்மையான உயிருள்ள யானையை அரச வெகுமதியாக மனமுவந்து தந்தார்.

கேசவன் நடைபெற்றதைக் கேள்வியுற்றான். அன்று இரவு கண்ணை மூடாத அளவுக்குப் பொறாமை மேலெழுந்து அவனை வாட்டியது. “மாதவன் செய்ததை விடப்பின்னும் நல்லதாகச் செய்து அரசரை மகிழ்விக்க வேண்டும்”என்று எண்ணினான். “அப்போது அரசர் மிகமிக மகிழ்வுற்றவராய் விலை மதிப்பற்ற அரச வெகுமதி ஏதாவது தருவார். ஒரு பொம்மை யானையே அரசரை இவ்வளவு மகிழ்விக்குமானால் ஓர் உயிருள்ள யானை அவரை எவ்வளவு களிப்புறச் செய்யும்? அதற்குப் பதிலாக ஒன்றிரண்டு கிராமங்களையே அவர் எனக்குத் தந்து என்னை ஒரு ஜமீன்தாராக்கி விட மாட்டாரா?” என்று எண்ணி எண்ணித் திட்டமிட்டான்.

மறுநாள் அவன் தன் நிலம், பசு, எருதுகள், வௌ்ளாடுகள் செம்மறியாடுகள் அனைத்தையும் விற்றான். அந்தப் பணத்தில் ஒரு பெரிய யானையை வாங்கிக் கொண்டு அரசனிடம் சென்றான். ஒரு சாதாரண எளிய விவசாயி ஒரு யானையை ஏன் தனக்குப் பரிசளிக்க வேண்டும் என்று அரசனுக்குப் புரியவில்லை. அறிவு மிக்க அமைச்சரைக் கலந்து பேசினான். அதன் காரணத்தைக் கண்டுபிடிக்கவும், பதிலாக ஒரு நல்ல பரிசினைக் குறிப்பிடவும் அமைச்சரிடம் வேண்டினான்.

அறிவிற்சிறந்த அந்த அமைச்சர் கேசவனிடம் பேசினார். கொஞ்ச நேரத்தில் வெறும் பொறாமையே அவனை இங்ஙனம் யானையைப் பரிசளிக்கத்தூண்டியிருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டார். அதனால் அரசனிடம் சென்று “அரசே! முன்பு வந்த விவசாயிக்கு அவன் தந்த பூசணிக்காய்க்குப் பரிசாக தாங்கள் ஒரு உயிருள்ள நல்ல யானையை அளித்தீர்கள். இவன் தந்துள்ள யானைக்குப் பதிலாக ஒரு நல்ல பூசணிக்காயைத் தந்து விடுங்கள்” என்று அறிவுறுத்தினார்.

ஒரு சாதாரணப் பூசணிக்காயை அரச வெகுமதியாகப் பெற்றவுடன் கேசவன் மிகவும் மனமொடிந்து போனான். பாவம்! தன்னுடைய சொத்தையெல்லாம் விற்றுவிட்டு இப்போது ஒரு அழிந்துபட்ட மனிதனாக ஆகிவிட்டான் அவன். எல்லாம் அவனுள் எழுந்த பொறாமையின் விளைவுதானே!

கேள்விகள்:
  1. மாதவன், கேசவன் இவர்களிடையே என்ன வேற்றுமைகளைக் காண்கின்றாய்? யாரை நீ மிகவும் விரும்புகிறாய்? ஏன்?
  2. மாதவனுக்கு ஒரு உயிருள்ள யானையைப் பரிசாக அளித்த அரசனிடம், கேசவனுக்கு ஒரு சாதாரண பூசணிக்காயைத் தரும்படி ஏன் அமைச்சர் அறிவுறித்தினார்?
  3. பள்ளியில் நீ ஒரு பரிசைப் பெற்று, உன் வகுப்பு மாணவன் ஒருவன் உன்னைக் கண்டு பொறாமைப்படுகிறான் என்று வைத்துக்கொள். அந்தப்பையனுக்குத் தக்க அறிவுரை கூறி ஒரு கடிதம் எழுது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: