முயற்சி மனிதனின் பெரும் ஆற்றல்

Print Friendly, PDF & Email
முயற்சி மனிதனின் பெரும் ஆற்றல்

ஒரு நாள் மாலைப் பொழுதில் நான்கு சிறுவர்கள் வயலோரம் விளையாடிக் கொண்டிருந்தனர். வரப்பு ஓரமாகச் சென்று ஒரு மூலையை அவர்கள் அணுகிய பொழுது பூமிக்கடியிலிருந்து ஒரு மெல்லிய குரல் கேட்டது. “என்னைத் தோண்டி வெளியில் எடுங்கள். நான் நீங்கள் விரும்பியதைத் தருவேன்” என்றது அக்குரல்.

உடனே நான்கு சிறுவர்களும் செயல்பட்டனர். சில நிமிடங்கள் தோண்டிய பிறகு, பூமியின் அடியிலிருந்து அழகிய சிறிய விளக்கு ஒன்று ஒளிவீசியது. அதை வெளியில் எடுத்தார்கள் பிள்ளைகள்.

“நான் அலாவுதீனுடைய அற்புதவிளக்கு. நீங்கள் என்னைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்களே! நான் நீங்கள் கேட்பதையெல்லாம் தரவல்லவன். வாருங்கள்! ஒவ்வொருவராக என்ன வேண்டும் என்று கேளுங்கள். அவரவர்களது தேவையைக் கேட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள்.” என்று ஆசை காட்டிக் கூப்பிட்டது அந்த அலாவுதீன் விளக்கு.

முதலாமவன் “எனக்கு விளையாடுவது மிகவும் பிடிக்கும். அதனால் எனக்குக் கிரிக்கெட் பந்தும், மட்டையும், விக்கெட் கட்டைகளும் தா! அது மட்டுமல்ல! வீட்டுக்குள்ளேயே விளையாடும் சில ஆட்டக்கருவிகளும் எனக்கு வேண்டும்.” என்றான்.

இரண்டாமவன், “தினமும் என் பள்ளி ஆசிரியர் நிறைய வீட்டுப்பாடம் தருகிறார். எனக்குக் கஷ்டமாக இருக்கிறது. அதனால் தினமும் நீ வந்து எனக்காக வீட்டுப்பாடங்களைச் செய்துதா!” என்றான்.

பிறகு மூன்றாமவன் “தெருவில் பிச்சைக்காரர் தொல்லை மிகுதியாகி விட்டது. அவர்களுக்குப் போதுமான பணம் கொடுத்து அவர்களைப் பிச்சை எடுக்காமல் இருக்கச் செய்!” என்றான்.

தன் தோழர்களது வேண்டுகோள்களைக் கூர்ந்து கவனித்து வந்தான் நாலாவது பையன். அவன் உடனே, “ஓ! மந்திரவிளக்கே! நீ எங்களுக்கு எதுவும் தரும் முன்பு இங்கிருந்து மறைந்து விடு. கடவுள் எங்களுக்கு அன்புகூர்ந்து கண், காது, மூக்கு, நாக்கு, கை, கால்கள் எல்லாம் நல்லவண்ணமாகப் படைத்துத் தந்துள்ளார். இவற்றைக் கொண்டு நாங்கள் அறிவார்ந்த பணிகள் பல ஆற்றமுடியும். இவற்றை நாங்கள் முழுமையாகச் செவ்வனே பயன்படுத்தி நாங்களும் சீருற்று மற்றவர்களையும் மகிழ்வுறச் செய்ய வேண்டும். மனிதனுடைய பெருமையே முயற்சி செய்வதில் தான் அடங்கி உள்ளது. இப்படியிருக்கையில், பிச்சைக்காரர் போல நாங்கள் ஏன் உன்னிடம் பொருள்களையும் பண்டங்களையும் செயல்களையும் யாசிக்க வேண்டும்? கடவுள் தந்துள்ள உயரிய பரிசுகளான கண், காது, மூக்கு முதலியவைகளை ஏன் புறக்கணித்து ஒதுக்க வேண்டும்? எனவே நீ இங்கிருந்து தயவுசெய்து உடனே மறைந்து விடு” என்று வேண்டினான்.

அந்த அற்புதவிளக்குக்கு நாலாமவன் கோரிக்கை மிகவும் பிடித்திருந்தது. எனவே அது அடுத்த வினாடியே மறைந்து விட்டது.

கேள்விகள்:
  1. முதல் மூன்று பிள்ளைகள் கேட்ட விருப்பங்களில் என்ன தவறு இருக்கிறது? ஒவ்வொருவருடைய விருப்பத்திற்கும் உன் கருத்தை எழுது.
  2. நாலாமவன் கேட்டது ஏன் மந்திர விளக்கு க்குப் பிடித்திருந்தது?
  3. அந்த மந்திர விளக்கு உன் முன்னால் இருந்தால் அதனிடம் நீ என்ன கேட்பாய்?

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன