அன்னையே தெய்வம்

Print Friendly, PDF & Email
அன்னையே தெய்வம்

கடிகார முள் மாலை நான்கு மணியைக் காட்டியது. வானம் கருமேகங்களால் சூழப்பட்டு இருண்டு வந்தது. முன்னரே ஒருமுறை மழை பெய்து சாலைகளை நனைத்துச் சென்றிருந்தது. அப்போது, பள்ளி விட்டதற்கான மணி அடிக்கவே,மாணவர்கள் மழை வலுக்கும் முன், வீட்டிற்குச் சென்று விட விரும்பியவர்களாய் வாயிற்புறத்தைக் கடந்து விரைந்தனர்.

பள்ளியின் வாயிற்புறம், சாலையோரத்தில் வயதான ஒரு பெண்மணி நீண்டநேரமாக நின்று கொண்டிருந்தாள். சாலையைக் கடக்க அவள் விரும்பினாள். ஆனால் சற்றுமுன் பெய்த மழையில் தெப்பமாக நனைந்து விட, வயதினால் மெலிந்த அவளது உடல் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தது. அந்த நிலையில், மழையினால் ஈரமாகவிருந்த சாலையில் நடந்தால் வழுக்கி விடுமோ என்ற அச்சத்தில் அவள் சாலையில் அடியெடுத்து வைக்கவே தயங்கினாள். தெருவில் போவோரை மறுபக்கம் அழைத்துச் செல்ல உதவி கோரி அழைத்தாள். தெருவில் சென்றவர் ஒருவர் கூட அவளைத் திரும்பி ப்பார்க்கவில்லை. பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பலரும் அவளைக் கடந்து சென்றனர். ஆனால் அவர்களும் அவளைக் கவனிக்கவேயில்லை.

நெடுநேரம் சென்று மோகன் என்ற மாணவன் வெளியே வந்தான். உறுதியான உடல் பெற்றிருந்த அவன் ஒரு சிறந்த விளையாட்டு வீரன். பள்ளியின் கால்பந்துக்குழுவிற்கு அவன் தலைவனாக இருந்தான். பள்ளிவாசலைக் கடந்து வெளியே வந்தவுடனே அவன் உதவியற்றுத் தவித்துக் கொண்டு நின்றிருந்த நலிந்த கிழவியைப் பார்த்து விட்டான். அவளையே பார்த்துக் கொண்டு சற்றுநேரம் அவன் நின்றபோது, அவனது உள்ளத்தில் வருத்தம் நிறைந்த எண்ணங்கள் பல ஓடின. விளையாடும் இடத்திலிருந்து அவனுடைய தோழர்கள் தங்களோடு வந்து விளையாட உரத்த குரலில் கூப்பிட்டது கூட அவன் காதுகளில் விழவில்லை. பிறகு மெதுவாக அவன் அந்தக் கிழவியின் அருகே சென்றான். இனிமையான அன்பு மிகுந்த குரலில், “அன்னையே! பலவீனமாக உள்ள தாங்கள் குளிரில் நடுங்கிக் கொண்டு ஏன் இங்கு நிற்கிறீர்கள்? தங்களுக்கு நான் எப்படியேனும் உதவமுடியுமா?” என்று கேட்டான்.

அவனது பேச்சினால் அந்தக் கிழவியின் முகம் நம்பிக்கையும் மகிழ்ச்சியும் பொங்க, ஒளிர்ந்தது. ஒரு நொடிக்கு முன்னர் கூட இந்த உலகத்தில் அவளைக் கவனிக்கயாருமின்றித் தனிமையில் விடப்பட்டு இருந்தாள்.இப்போது அவளுக்கு உதவ அன்பான சிறுவன் ஒருவன் ஆவலோடு வந்துள்ளான். அவளை அன்பு கனிய ‘அம்மா!’ என்று அழைக்கிறான்! வலிய உதவி புரியவும் ஆயத்தமாக இருக்கிறான். அதனால் உள்ளம் பூரித்தவளாய் “வழுக்கி விழக்கூடிய இந்தச்சாலையைக் கடக்க எனக்கு உதவுவாயா மகனே? என்வீடு எதிர்புறத்தில் தான்,அந்தக் கடைக்குப் பின்புறம் உள்ளது” என்றாள்.

மோகன் உடனே அந்தப் பெண்மணியின் நடுங்கும் கரத்தைத் தன்கழுத்தில் வளைத்துப் பற்றி அணைத்துக் கொண்டு, “வாருங்கள் தாயே! மெதுவாக நடந்து வாருங்கள்!” என்று பரிவோடு கூறினான். அவர்கள் இருவரும் அங்ஙனம் நடந்து சென்ற போது அந்த வயதான மூதாட்டி மோகனோடு பேசிக்கொண்டே சென்றாள். அவனைப் புகழ்ந்தாள், வாழ்த்தினாள், அவனுக்காக இறைவனிடம் வேண்டினாள். அவனுடைய பெற்றோர்களைப் பற்றிப் பரிவோடு கேட்டாள். வீட்டைக் குறித்தும் வினவினாள். அவளை அவளது வீட்டுக் கதவருகே கொண்டுசென்று விட்டுவிட்டுத் திரும்பும் போது அவள் தன் இரு கரங்களையும் உயரத்தூக்கி ஆசிகூறியவளாய், கண்களில் நீர் சோர, நன்றி தோய்ந்த குரலில் “கடவுள் உன்னைக் காப்பாராக! என்றென்றும் உன்னை அவர் இன்பமாக வைப்பாராக!” என வாழ்த்தினாள்.

மோகன் தன்னுள் ஒருபுதிய பலம் ஏற்பட்டது போல் மகிழ்ந்தான். விரைந்து சென்று தன் நண்பர்களோடு சேர்ந்த போது, முன்பின் தெரியாத ஒரு கிழவிக்காக ஏன் அவன் அத்துணைத் தொல்லைப்பட்டு உதவினான் என்று அவர்கள் கேட்டனர். “அவள் யாரோ ஒருவருடைய தாய் அல்லவா! அதனால் தான் அவளுக்கு உதவினேன்:” என்று அழுத்தமான குரலில் உறுதியாக விடையளித்தான் மோகன்.

“நீ எதற்காகப் பிறருடைய தாயாருக்கு உதவ வேண்டும்?” என்று மீண்டும் ஒரு நண்பன் கேட்டான். “ஏனெனில் என்றாவது ஒரு நாள் நான் அருகில் இல்லாத போது என் அன்னைக்கும் வயதாகி இதே போன்ற ஓர் உதவி தேவைப்பட்டால் யாராவது அவளுக்கு உதவுவார்கள் அல்லவா!” என்று அமைதியாகக் கூறினான் மோகன்.மோகனுடைய விடை நண்பர்களை மிகவும் உருக்கி விட்டது. “மோகன் தன் அன்னையைப் பற்றி மிகவும் பெருமை கொண்டுள்ளான்” என்று மேலும் அந்நண்பன் கூறினான். “கட்டாயம் அங்ஙனமே பெருமைப்படுகிறேன். பெற்ற தாயைப் பெருமையோடு நினைக்காதவன் மதிக்கத் தகுந்த மகனே அல்லன்” என்ற தக்க பதிலைச் சொன்னான் தாயைப் போற்றும் தனயனான மோகன்.

கேள்விகள் :
  1. மோகனைப் போல அன்னை தந்தையரை ஏன் போற்றி விரும்ப வேண்டும்?
  2. அந்த மூதாட்டியின் வருத்தத்திற்குக் காரணம் என்ன?மோகன் அடைந்த மகிழ்ச்சிக்குக் காரணம் என்ன?
  3. வீட்டில் உன் பெற்றோர் மகிழும் வண்ணமாக நீ செய்துள்ள நல்ல செயல் ஏதாவது ஒன்றைக் கூறு.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன