முயற்சி திருவினையாக்கும்
முயற்சி திருவினையாக்கும்
ஒரு மகான், கிராமத்தினர் சிலரிடம் கடவுளைப் பற்றியும், அவரது கருணை பற்றியும் பேசிக்கொண்டிருந்தார். “ கடவுள் இரக்கம் நிறைந்தவர், கனிந்த அன்பினர், வலிமை வாய்ந்தவர், ஆற்றல் நிறைந்தவர் “ என்றெல்லாம் அந்த மகான் அவரிடம் கூறினார்.
“நீங்கள் ஒரு சிக்கலில் அகப்பட்டு தவிக்க நேரிடும் போது அதனால் உங்கள் வலிமை குன்றும் போது கடவுளைப் பிரார்த்தனை செய்யுங்கள். அவரிடம் முறையிட்டு வேண்டிக்கொள்ளுங்கள். அவர் தயங்காமல் உங்களுக்கு உதவுவார்” என்று அறிவுறுத்தினார். அவரிடம் இங்ஙனம் அறிவுரைகேட்டு வந்தவர்களில் இராமச்சந்திரனும் ஒருவன். அவன் ஒரு மாட்டு வண்டி ஓட்டுபவன். அனுமானிடம் அளவு கடந்த அன்பு பூண்டிருப்பவன். இறைவன் இனிதே வந்து இன்னருள்புரிவார் என்பதைக் கேட்டவுடன் அவன் பரவசமான ஓர் இன்ப உணர்வில் புல்லரித்துப் போனான்.
ஒரு மழை நாளில் அரிசி மூட்டைகள் நிரம்பிய தன் மாட்டு வண்டியை ஓட்டிச் சென்று கொண்டிருந்தான் அவன். சற்றுத் தொலைவே சென்றிருப்பான். அதற்குள் வண்டியின் இரு சக்கரங்களும் சேற்றில் ஆழப் புதைந்து விட்டன. அப்போது இராமச்சந்திரனுக்கு மகான் கூறிய மொழிகள் நினைவிற்கு வந்தன. கைகளைக் கூப்பியவனாய்க் கண்களை மூடிக் கொண்டு “ ஓ அனுமானே! சக்கரங்கள் சேற்றிலிருந்து வெளியேற அன்பு கூர்ந்து இந்த வண்டியைத் தள்ளி உதவி புரியுங்கள்,” என்று வேண்டினான். மேலும் மேலும் இடைவிடாது பலமுறை அங்ஙனம் வேண்டியும் உதவிக்கு ஒரு தெய்வமும் அவன் முன்னர் வரவில்லை. அதனால் ஏமாற்றமடைந்தவனாகத் தளர்ந்து போய், அனுமான் மேல் கோபம் கொண்டதோடு அல்லாமல் அவரைத் திட்டவும் தொடங்கினான்.
அனுமானைத் திட்டி ஒய்ந்த பிறகு அவனது கோபம், அறிவுரை கூறிய மகான் மீது திரும்பியது. வேகமாக அந்த மகான் தங்கியிருந்த கோயிலுக்கு ஓடினான் “ஸ்வாமி! நீங்கள் எங்கள் எல்லோரையும் முட்டாள்களாக்கி இருக்கிறீர்கள். கடவுள் ஒருகாலும் மனிதனுடைய உதவிக்கு வருவதில்லை. என் வண்டி மண்ணில் புதைந்து கிடக்கிறது. நான் உதவி புரியும் படி கடவுளைப் பத்து முறை வேண்டினேன். ஆனால் எல்லாம் வீணான முயற்சியாகிவிட்டது “ என்று கூறினான். பின்னர் அவன் வண்டிக்கு நிகழ்ந்தனவற்றை மேலும் கோபமான சொற்களால் விளக்கினான்.
அந்த பெரியார், பொறுமையாக அவன் கூறுவதை எல்லாம் கேட்டுக் கொண்டார். பின்னர் அவன் முதுகைப்பரிவோடு தட்டியவாறு அன்புடன், “ மகனே! நீ எத்துனை ஏமாற்றம் அடைந்திருக்கிறாய் என்று நான் உணரத்தான் செய்கிறேன். ஆனால் நீ உன்னால் ஆன முயற்சியெல்லாம் செய்து பார்த்து, அதில் வெற்றி பெறாது சோர்ந்து போன பிறகே கடவுள் உன் வேண்டுகோளுக்கு இணங்கி உன் உதவிக்கு வருவார் என்று நான் கூறி இருக்கவில்லையா! ஒரு கிணற்றின் அருகில் நின்று கொண்டு” ஓ கிணறே! நான் தாகமாக இருக்கிறேன். எனக்கு கொஞ்சம் தண்ணீர் கொடு!” என்றால் கிணற்றிலிருந்து நீ என்ன பெறுவாய்? ஒன்றும் பெற மாட்டாய். ஒரு கயிற்றில் பானையைக் கட்டி கிணற்றுக்குள் விட்டுத் தண்ணீரைப் பானையில் நிரப்பி மேலே அதை இழுக்கவேண்டும். அப்போது தான் நீ அந்த கிணற்று நீரை மேலே கொண்டு வர முடியும். கடவுளும் அதே போலத் தான். அவர் உனக்கு அருளியுள்ள வலிமையை எல்லாம் பயன் படுத்தி நீயே முயன்று பார்க்கவேண்டும். உன்னால் முடியாது போன பிறகே அவரை உதவிக்கு அழைக்க வேண்டும்” என்றார்.
இராமச்சந்திரன் வண்டியிடம் வந்தான். தன் தோளை ஒரு சக்கரத்தில் வைத்துத் தன் வலிமையை எல்லாம் கூட்டி அந்தச் சக்கரத்தைத் தள்ளினான்.அதே சமயம் மாடுகளையும் விரட்டி முன்னேறச் செய்தான் அவன் அங்ஙனம், சக்கரத்தை முனைந்து தள்ளிய அதே நேரத்தில் கண்ணுக்கு புலனாகாத வேறு யாரோ ஒருவர் அடுத்த சக்கரத்தை அவனை விட மிக்க வேகமான வலிமையோடு தள்ளுவதை உணர்ந்தான்.
“யார் அந்த சக்கரத்தைத் தள்ளிவிடுவது? அவர் கட்டாயம் நான் வேண்டிக் கொண்ட அனுமானாகத்தான் இருக்கவேண்டும்!” என்று வியந்து கூறியவாறு, மற்றொருமுறை அதே போல மிக்க முனைப்போடு சக்கரத்தைத் தள்ளினான்.அடுத்த நொடியே அந்த வண்டியின் இரண்டு சக்கரங்களுமே சேற்றிலிருந்து விடுபட்டன. மாடுகள் மகிழ்ச்சியுடன் தலையை ஆட்டிக்கொண்டு வண்டியை இழுத்துக் கொண்டு ஓடின. அவற்றின் கழுத்தில் கட்டியிருந்த சலங்கைகள் ‘கலகல’ என்று ஒலி எழுப்ப, இராமச்சந்திரன் அனுமானுக்கு நன்றி தெரிவித்து உள்ளம் உருக அவர் புகழைப் பாடலானான்.
அன்று முதல், இராமச்சந்திரன் எப்போதும் அவனது நண்பர்களிடம், “உங்களுக்கு ஏதாவது இடுக்கண் ஏற்பட்டால், முதலில் உங்கள் அறிவையும் பலத்தையும் பயன் படுத்துங்கள். பிறகே கடவுளின் உதவியைக் கேளுங்கள். கடவுள் கட்டாயம் வந்து உங்களுக்கு ஆவன புரிவார். எவனொருவன் முதலில் தானே வந்து செயல் புரிகிறானோ அவனுக்கே கடவுளும் உதவி புரிகிறார்.!” என்று அறிவுறுத்தி வரலானான்.
கேள்விகள்:
- முதலில் இராமச்சந்திரன் கடவுளை உதவிக்கு அழைத்த போது, அவனுக்கு உதவ அவர் ஏன் வரவில்லை?
- இறைவன் அவனுக்கு எப்போது உதவினார்?
- நீ எப்போது கடவுளின் உதவியை நாடுகிறாய்?அதைப்பெற நீ என்ன செய்ய வேண்டும்?