நல்ல நாக்கும் தீய நாக்கும்
நல்ல நாக்கும் தீய நாக்கும்
ஒரு முறை ஓர் அரசன் தன் குடி மக்கள் எல்லோரும் அறிவாளிகளாகவும், இன்பம் நிறைந்தவர்களாகவும் இருக்கச் செய்யக்கூடியது எது என்று அறிந்து கொள்ள விரும்பினான். அதனால் அவன் ஒரு கண்காட்சியை அமைத்து அதற்கு அவன் ஆட்சியிலுள்ள அறிவாளிகள் அத்தனை பேரையும் அழைத்தான். அந்தக் கண்காட்சியில் நிறைவான மகிழ்ச்சியைத் தரவல்ல பொருள்களை கொண்டுவந்து வைக்கும்படி அவர்களைக் கேட்டுக் கொண்டான்.
அங்ஙனமே அமைத்த பிறகு, அரசனே ஒரு நாள் கண்காட்சியைக் காண வந்தான். வரிசை வரிசையாகப் பலவகையான நல்ல பொருள்கள் அங்கு வைக்கப்பட்டிருந்தன. மலர்கள், கனிகள், அழகிய செடிகள், சுவைமிக்க இனிப்புப் பண்டங்கள், வண்ண வண்ணத் துணிகள், அறிவார்ந்த நூல்கள், இசைக் கருவிகள், தங்க அணிகலன்கள், கலைத்திறன் மிக்க கலைப் பொருள்கள், மற்றும் பல பொருள்கள் அழகுற அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இவற்றில் ஒன்றுமே மக்கள் எல்லோரையும் மகிழ்வுறுத்துவதாக அரசனுக்குத் தோன்றவில்லை.
இறுதியாக அவன் களிமண்ணால் செய்து வண்ணம் தீட்டப்பெற்ற ஒரு பொம்மை அருகே வந்தான். தெரு ஓரத்திலிருக்கும் ஒரு வயதான பசியினால் மெலிந்த, ஏழையோடு பேசிக்கொண்டிருப்பது போல நாக்கைக் காட்டிக்கொண்டிருக்கும் ஒரு மனிதன் வாயே அந்த உருவம். அதன் அடியில் கொட்டை எழுத்துக்களில் “நல்ல நாக்கு” என்று இரண்டு சொற்கள் எழுதப் பெற்றிருந்தன. அரசன் அது குறித்து மேலும் அறிந்து கொள்ள விரும்பவே, அந்தப் பொம்மையை உருவாக்கிய சிற்பி உடனே வரவழைக்கப் பெற்றார். அவர், “ப்ரபோ! இந்தக் கண் காட்சியில் உள்ள மற்ற எல்லாப் பொருள்களும் மனிதனுக்குச் சில நாட்களே இன்பம் தர வல்லன. ஆனால் ஒரு நல்ல நாக்கு இருக்கிறதே, அது பரிவும் அன்புமாக ஒரு சில சொற்கள் பேசுவதால் ஆண்டாண்டு காலம் மற்றவர்களை மகிழ்வுறுத்திவரும். துன்புறுபவர்களுக்கு அது நம்பிக்கையும் உற்சாகமும் தர வல்லது. நலிவுற்றவர்களுக்கு வலிமையையும் தன்னம்பிக்கையும் ஊட்ட வல்லது. திக்கற்றவர்களுக்கு பரிவையும் அன்பையும் பொழிய வல்லது. எல்லாம் இழந்தவர்களுக்கு வாழ்வும் ஊக்கமும் கொடுக்கக் கூடியது. ஒரு நல்ல நாக்கு மட்டுமே எல்லோரையும் எப்போதும் மகிழ்வுறுத்தக் கூடியதாகும்” என்று கூறினார்.
அரசன் அவரது மொழிகளால் அளவு கடந்த நிறைவும் மகிழ்ச்சியும் அடைந்தவனாக, ஒரு பொன்னாலான பெட்டியில் தங்க நாணயங்களை நிரப்பி அந்தச் சிற்பிக்கு வெகுமதியாகத் தந்தான்.
சில நாட்கள் சென்றன. அரசனுக்கு ஒருவனை மகிழ்ச்சியற்றவனாகச் செய்யக்கூடியது எது அறிய ஆவல் ஏற்பட்டது. முன் போலவே மற்றொரு கண் காட்சி அமைத்தான். அதே போல, ஒருவனது வாழ்க்கையைத் துயரம் நிரம்பியதாக ஆக்கக் கூடிய பொருள்களை கொண்டுவந்து வைக்கும் படி நாட்டிலுள்ள அறிஞர்கள் அனைவரும் கேட்டுக் கொள்ளப்பெற்றனர். இந்த முறை அந்தக் கண்காட்சிக் கூடம் கைத்தடிகள், சவுக்குகள், கத்திகள், வாட்கள், முட் புதர்கள், கசப்பான பழங்கள், மது வகைகள், நஞ்சு, குரைக்கும் நாய்கள், கரையும் காகங்கள், என்று பல தரப்பட்ட பொருள்களால் நிறைந்து விட்டது. ஆனால் முன்போலவே அவற்றில் ஒன்றும் நிறைவான விடையைத் தருவதாக அரசனுக்குத் தோன்றவில்லை.
இறுதியில் அவன் முந்தைய கண்காட்சியில் கண்டது போலவே இருந்த ஒரு களிமண் பொம்மையின் அருகே வந்தான். ஆனால் இந்த முறை அது பெரிய சிவந்த கண்களோடு, ஒரு கறுத்த நாக்குடன், வயதான, பசியால் மெலிந்த ஏழை ஒருவனைக் கடிந்துத் திட்டுவது போல அமைக்கப்பட்டிருந்தது. அதனடியில் கொட்டை எழுத்துக்களில் “தீய நாக்கு” என்று எழுதப்பட்டு இருந்தது.
இம்முறையும் அரசனுக்கு அதன் பொருளை விளக்கச் சிற்பி வரவழைக்கப் பெற்றார். “அரசே! ஒரு தீய நாக்கு மற்றவர்களுடைய இன்பத்தையும் உற்சாகத்தையும் அடியோடு கொன்று விடும். அவர்களுடைய நம்பிக்கையையும் துணிவையும் அழித்து விடும். அவர்களை ஒரு துயரக் கிணற்றில் தள்ளிவிடும். அது மற்றவர்களுடைய மனங்களைப் பல ஆண்டுகள் கழித்தும் ஆறி நலமுற இயலாதபடி ஆழமாகப் புண்படுத்தக் கூடியது. ஒரு தீய நாக்கு மனிதனின் மிக மோசமான எதிரியாகும்.” என்று விளக்கினார் சிற்பி.
அரசன் அந்த சிற்பிக்கு சென்ற முறை போலவே தங்கப் பேழையில் வைரமும் நவரத்தினங்களுமாகப் பரிசுகள் தந்தான். “உண்மையாகவே தங்களது மண்பொம்மைகள் ஒரு நல்ல பாடம் கற்பிக்கின்றன. இந்தத் தங்கப் பேழை, வைரம், நவரத்தினங்களால் நிரப்பப்பட்டிருந்தாலும் இதை விட விலை மதிப்பு மிக்கது தங்கள் மண்பொம்மைகள் கற்றுத் தரும் அறிவுரைகள்.ஒரு நல்ல நாக்கு மனிதனின் மிகச் சிறந்த நண்பன்.அதுவே எல்லாவகை இன்பத்திற்கும் உகந்த எளிய வழிகாட்டியாகும்” என்று அரசன் மகிழ்ந்தான்.
கேள்விகள்:
- ஒரு நல்ல நாக்கைப் பற்றி விளக்கு. அது எப்படி எல்லோரையும் மகிழ்வுறச்செய்யும்?
- ஒரு தீய நாக்கைப் பற்றி விளக்கு. அது எப்படி எல்லோரையும் துன்புறுத்தும்?
- நல்ல நாக்கு ஒருவனை இன்புறுத்துகிறது என்பதற்கு ஒரு உதாரணமும், தீய நாக்கு ஒருவனை துன்புறுத்துகிறது என்பதற்கு ஒரு உதாரணமும் கூறு.
- நீ எப்போதும் நல்ல நாக்கைப் பெற்றிருக்கிறாயா? இல்லை எனில் ஏன்? ஒரு நல்ல நாக்கை உருவாக்க என்ன செய்ய வேண்டும் என்று நீ நினைக்கிறாய்.