ஓம்காரம் பிந்து கதை

Print Friendly, PDF & Email
ஓம்காரம் பிந்து கதை

கிருஷ்ணவர்த்தா என்னுமிடத்தில் முன்னொரு காலத்தில் ஜெயதேவா என்னும் சிறுவன் வசித்து வந்தான். அவன் மிகவும் பலவீனமானவன். நோயால் பீடிக்கப்பட்டவன். தகப்பனாருக்கு அவன் ஒரே குழந்தை. ஆகவே அவர் அவன் ஆரோக்கியத்தை மேம்பாடு செய்ய அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார். அவை வீணாயின. ஆரோக்கியமின்மைக் காரணமாகப் படிப்பிலோ, மற்ற செயல்களிலோ அவன் சோபிக்கவில்லை. ஜெயதேவாவுக்கு வயது 10ஆயிற்று காய்ச்சல் காரணமாக அவன் பல நாட்கள் வகுப்புக்கு விடுமுறை கூறிவிட்டு வீட்டிலேயே இருந்தான்.

அன்று குருபூர்ணிமா. பூரணச் சந்திரன் பொலிவுடன் ஒளிவீசிக்கொண்டிருந்தான். ஜெயதேவா ஆற்றுக்குக் குளிக்கச் சென்றான். ஞானி ஒருவர் ஆற்றங்கரையில் அமர்ந்திருப்பதை அவன் பார்த்தான். அவர் ஓம்காரத்தை உரக்க ஓதிக் கொண்டிருந்தார். ஞானியின் தெய்வீகம் ஜெயதேவாவை ஈர்த்தது. ஜெயதேவா அவரை அணுகி, ‘நீங்கள் என்ன ஓதுகிறீர்கள்? அதன் பலன் என்ன? என்று கேட்டான். மந்திரங்களில் ராஜாவாகிய ஓம்காரத்தை நான் ஜெபிக்கிறேன். அதை ஜெபிப்பதால் பல பலன்கள் உண்டு’ என்றார் அவர். ஜெயதேவா ஓம்காரத்தைச் சரியாக உச்சரிக்கும் முறையை அவரிடமிருந்து தெரிந்து கொண்டு தினமும் உச்சரிக்க ஆரம்பித்தான். ஓம்காரத்தை ஓதியதால், ஜெயதேவாவின் சுவாசமும், ரத்த ஓட்டமும் சீரடைந்தன. ஆரோக்கியம் மீண்டது. அதனால் மனதில் உறுதி ஏற்பட்டது.

விரைவில் ஜெயதேவா படிப்பிலும், விளையாட்டிலும் கருத்தூன்றி செயல்பட்டான். ஆரோக்கியமான, கெட்டிக்காரப் பையனாக உயர்மாற்றம் அடைந்தான். ஆண்டுகள் கடந்தன. குருகுலக் கல்வி முடிந்து, அவன் இளைஞனாக ஆனாலும் ஓம்காரத்தை ஓதுவதை நிறுத்தவில்லை. அவன் வாழ்க்கை சந்தோஷமாகவும், வெற்றி நிறைந்ததாகவும் உயர்ந்தது.

ஜெயதேவாவுக்கு வயது முதிர்ந்தது. கிழப்பருவத்தை அடைந்தான். உடலை உகுக்கும் நேரம் வந்தது. ஜெயதேவா எழுந்து உட்கார்ந்தான். உரக்க ஓம்காரத்தை உச்சரித்தான். உடலை உகுத்து எங்கிருந்து வந்தானோ அந்த ஓம்காரத்துடன் ஐக்கியமானான். ஓம்காரத்தை ஓதியதால் அவனுக்கு இவ்வுலக நன்மைகளும் முக்தியும் கிடைத்தன.

(மூலம்: ஸ்ரீ சத்யசாயி பாலவிகாஸ் குருமார்களுக்கான கைப் புத்தகம் குரூப் 1.)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: