வாக்குறுதியைக் காப்பாற்று
வாக்குறுதியைக் காப்பாற்று
“கதாதரன்” என்னும் “கதை” ஒன்பது வயதாகும் போது புனிதமான பூணூல் அணியப் பெற்றான். அப்போது அண்ணன் இராம்குமார்தான் அந்த குடும்பத்தின் முதல்வராக இருந்தார் , நிகழ்ச்சிக்கு வேண்டிய ஆயத்தங்களை அவர்தான் செய்தார். பூணூல் விழாமுடிந்ததும் இரும்புக்கொல்லன் மனைவியான “தனி”யின் கையால் முதல் பிக்ஷை வாங்கி அவளை அன்னையாக ஏற்றுக் கொள்ளப் போவதாக உறுதியோடு சொன்னான் “கதை”. “தனி” என்பவள் “கதை” பிறந்த போது சந்திரா தேவியின் அருகிருந்து ஆவன செய்து உதவி செய்தவள்
இராம்குமார் “கதை”யின் கூற்றுக்கு இணங்கவில்லை. தந்தை குதிராமரது குலவழக்கப்படி ஒரு வேதியப்பெண்மணிதான் அன்று “அன்னையாக” இருந்து அந்தணச் சிறுவன் பூணூல் அணிந்து முடிந்ததும் முதல் பிக்ஷை இட வேண்டும். ஆனால் “கதை” கட்டாயம் இங்ஙனம்தான் நடை பெற வேண்டும். “தனி”க்கு நான், அவளைத்தாயாக ஏற்று அவளிடமிருந்து முதல் பிக்ஷை பெற்றுக் கொள்வதாக வாக்குத் தந்திருக்கிறேன்; என் சொல்லினின்றும் பிறழ முடியாது” என்று பிடிவாதமாகக் கூறினான். “கதை” சிறுவனாக இருந்தபோது ஒரு நாள் “தனி”, “உனக்குப் பூணூல் சூட்டும் விழாவின்போது என்னை பிக்ஷை தரும் தாயாக ஏற்றுக்கொள்வாயா?”. என்று கேட்டாள். “கதை” அதற்கு “சரி” என்று சம்மதம் தந்து விட்டான். இது ஒரு வாக்குறுதியே அல்ல. இத்தகைய வாக்குறுதிகள் பொருளற்றவையாகும்”. என்று அனைவரும் வாதாடினர். ஆனால் “கதை” உறுதியாக நின்றான். தனக்கு பிக்ஷை தர “தனி” தான் இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டான். “முடியாது “ என்று அனைவரும் மறுத்தனர். ஆனால் “கதை” தன் பிடிவாதத்தினின்றும் தளரவேயில்லை.பிறகு எல்லாரும் ஒத்துக் கொள்ள வேண்டியதாயிற்று. தான் வாக்குத் தந்து விட்டதாகவும், அதை காப்பாற்றாது மீறினால் வாய்மைக்குப் புறம்பான செயலாகிவிடும் என்றும் ஒரே பிடியாக நின்று வெற்றியும் பெற்றான்
வேறு வழியின்றி அனைவரும் அவனது செயலுக்கு ஒப்புக்கொண்டனர். பூணூல் அணி விழா முடிந்ததும், “தனி” பிக்ஷை இட முன் வந்தாள். அப்போது அவள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேது!
பூணூல் அணிந்தபிறகு கதை ரகுவீரருக்கும் சீதளாதேவிக்கும் வழிபாடாற்றத் தகுந்த உரிமையை பெற்றான். அந்தப் பணி அவன் மனதிற்குகந்த பணியாகவும் இருந்தது. அங்ஙனம் வழிபாடாற்றும்போது அவன் ரகுவீரரது நினைவிலேயே ஆழ்ந்துபோய் வெளியுலக உணர்வேயின்றி நெடு நேரம் இருந்து விடுவது உண்டு. அதுபோல் அவன் இதயத்தில் உறையும் எம்பெருமானைக் கண்டுணர்ந்து மகிழ்ந்து வந்தான்.
படங்கள்:திருமதி.ஹேமா சடகோபன்.
கேள்விகள்:
- கதை யாரிடமிருந்து முதல் பிக்ஷை ஏற்க விரும்பினான்?
- இராம்குமார் ஏன் அதை தடுத்தார்?
- அதற்கு கதை கூறிய விடை என்ன?
- இந்தக் கதையிலிருந்து கதை பெற்றிருந்த இரண்டு நல்லியல்புகளைக்கூறு?