விவேகாநந்தரது பிரார்த்தனை
விவேகாநந்தரது பிரார்த்தனை
ஸ்ரீராமக்ருஷ்ணர் நரேனை மிகவும் நேசித்தார். நரேனும் அவரிடம் அதேபோல் அகம் நிறைந்து அன்பு கொண்டிருந்தான். குரு சீடனிடையில் அத்தகைய உயர்ந்த தூய அன்புப் பிணைப்பு இருந்தால் தான் குரு, சீடனுள்ளத்தில் உறைந்திருக்கும் இறைவனை – அந்த இறைஉணர்வை – அப்போது தான் முழுமையான நிறைவுடன் எழுப்ப இயலும்.
நரேன் ஸ்ரீராமகிருஷ்ணரின் சீடரானார். அங்ஙனம் பேறு பெற்றமைக்கு அவர் மகிழ்ந்தார், அடிக்கடி தக்ஷினேஸ்வரம் சென்று குருவிடம் இறைவரைப்பற்றி பலபலகேட்டு அறியலானார். அந்த சமயத்தில் வருத்தமான ஒரு நிகழ்ச்சி நிகழ்ந்துவிட்டது. நரேனுடைய தந்தையார் திடீரென இறந்துவிட்டார் அவரது குடும்பம் வறுமையில் உழன்றது. சில சமயம் அன்றாட உணவிற்கே கூட அல்லல்பட நேர்ந்தது குடும்ப நிலையைக்கண்ட நரேன் மிகவும் வருந்தினார். விரைவில் ஒரு வேலை பெற மிகவும் முயற்சி செய்தார்
நரேன் அறிவாளியான ஒரு மாணவன். அவர் B.A பட்டம் பெற்றிருந்தார். இருந்தும் அவருக்கு ஒரு வேலை வாய்ப்பது என்பது மிகவும் அரிதாக இருந்தது. ஒவ்வொருஅலுவலகமாக ஏறி, இறங்கி முயற்சி செய்தார். என்ன முயன்றும் நல்லதோர் பணி எளிதில் கிடைக்கவேயில்லை. நான் பணம் சம்பாதிக்காவிட்டால், என் அன்னை, சகோதர, சகோதரிகள் கதி என்னாவது என்று உள்ளம் நைய கவலைப்படலானார் அவர்.
ஒரு நாள் குரு ஸ்ரீராமகிருஷ்ணரிடம் தன் உள்ளக்குமைச்சலை உரைத்தார் நரேன். அதற்கு அவர், “நரேன், இன்று செவ்வாய்க்கிழமை. இன்று நீ எதைகேட்டாலும் அன்னை காளி அங்ஙனமே வாய்க்க அருளுவாள். உனக்கு உதவும்படி அவளிடம் போய்க்கேள்” என்று அறிவுறுத்தினார்.
அன்று மாலை நரேன் அன்னை காளியின் கோவிலுக்கு வேண்டுவதற்கு சென்றார். அவர் திரும்ப வந்ததும் ஸ்ரீராமக்ருஷ்ணர் அவரிடம் “அன்னை என்ன சொன்னாள் “ என்று ஆவலோடு வினவினார்.
“ஓ அவளிடம் நான் கேட்கவே மறந்துவிட்டேன்” என்று விடையிறுத்தார் நரேன்.
“என்ன இது! மறந்து விட்டனையா! மறுபடியும் செல்.விரைந்து போ” என்று திரு இராம கிருஷ்ணர் மீளவும் நரேனை அன்னை காளியிடம் ஊக்கமூட்டி அனுப்பினார்.
இரண்டாவது முறையும் அங்ஙனமே நிகழ்ந்தது.
மூன்றாவது முறையும் நரேன் அதேபோல் ஒன்றும் கேட்காது திரும்பிவந்தபோது அவரது முகம் அமைதியாக சலனமற்று இருந்தது. அவர் ஸ்ரீராமக்ருஷ்ணரிடம், “அன்னையிடம்போய் நான் எப்படி பொருள் வேண்டுவேன்! அது ஒரு பேரரசனிடம் சென்று பூசனிக்காய் கேட்பது போலல்லவா இருக்கும்? அவளிடம் அடர்ந்த பக்தி, தன்னலமற்ற அன்பு, அவளை உணர்ந்து கொள்ளும் ஆற்றல் இவற்றைத்தான் என்னால் கேட்க முடிந்தது” என்றார்.
அதன் பின்னர், திரு இராமகிருஷ்ணர், நரேனுக்கு அன்னை காளியின் புகழை அழகிய பாட்டாகக் கற்பித்தார். நரேன் அன்று இரவு முழுவதும் அந்தப் பாட்டைப் பாடிக்கொண்டேயிருந்தார் குரு இராமகிருஷ்ணர் ஆழ்ந்த தியானத்தில் அமிழ்ந்து விட்டார் என்பதைக்கூட உணராமல்.
கேள்விகள்:
- நரேன் ஏன் வருத்தமாக இருந்தார்?
- ஸ்ரீ இராமகிருஷ்ணரது அறிவுரை என்ன?
- அன்னை காளியிடம் நரேன் என்ன கேட்டார்?
- தான் விரும்பியதை அவர் ஏன் கேட்கவில்லை?
- ஸ்ரீ ராமகிருஷ்ணர் அப்போது என்ன செய்தார்?