இவையெல்லாம் பூனைக்காக

Print Friendly, PDF & Email
இவையெல்லாம் பூனைக்காக

1972ம் ஆண்டில் நவம்பா் மாதம் 24ம் தேதி புட்டப்பா்த்தியில் பாபாவின் பிறந்த நாள் விழாக் கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக வெகு தொலைவிலுள்ள கௌஹாத்தி (Gauhati) அஸ்ஸாமின் தலைநகரிலிருந்து பக்தா்களின் பெருங்கூட்டம் ஒன்று வந்தது. அவா்கள் ஊருக்குத் திரும்பும் நேரம் நெருங்கியது. பாபா அனைவருக்கும் விபூதிப் பொட்டலங்களைக் (pockets) கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது தான் லாக்கி (Lakhi) என்ற பெண்ணுக்கு விபூதிக் கொடுத்து சிறிது தூரம் சென்றிருப்பார். திடிரென்று திரும்பி இன்னும் இரண்டு பொட்டலங்களை அவளுக்கு விசிறி எறிந்து “இவை பூனைக்காக” என்று சொல்லிச் சென்றார். பாபாவின் அருளாசியினை தன்பக்கம் இழுத்துக் கொண்ட அந்த திருட்டுப் பூனையின் பெயா் மிங்கி (Minkie). லாக்கி ஒரு மழை நாளன்று அந்தப் பூனையை நகரச் சாக்கடையிலிருந்து காப்பாற்றி, அதற்கு உணவளித்து அதைக் கதகதப்பாக வைத்திருக்க, வீட்டுக்கு எடுத்து வந்தாள். ஆனால், அவளது மூத்த சகோதரிக்கு பூனையைக் கண்டால் ஆகாது. அந்த அருவருப்பான பிராணியைக் கொண்டு வீட்டில் வளா்ப்பதற்காக அவள் லாக்கியைக் குறை கூறினாள்.

ஒரு நாள் இரவில், சகோதரிகள் சிலரை இரவு விருந்துக்கு அழைத்திருந்தனா். மிங்கி பூனை ஏற்பாடுகளை யெல்லாம் ஆர்வத்துடன் கவனித்துக் கொண்டிருந்தது. அங்கு ஒரு தட்டு நிறைய மீன்களைக் கண்டதும், அதன் ஆவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை. யாரையும் கேட்காமல் தானாகவே எடுத்துத் தின்னலாம் என்று நினைத்தது. ஒரு மீன் துண்டை லபக் என்று கவ்விக் கொண்டு ஓடியது. மூத்த சகோதரி லாக்கியைப் பார்த்துக் கூச்சலிட்டாள். லாக்கிக்கு ரோஷம், எரிச்சல். மிங்கியைக் கழுத்தைப் பிடித்துத் தூக்கி, கம்பினால் பலமாக விளாசினாள். பாவம்! அந்தப் பூனை. வலி தாங்காமல் கத்தியது. திடிரென்று பூஜை அறையிலும் மற்ற இடங்களிலும் இருந்த பாபாவின் படங்கள் காரணமில்லாமல் ஆடத் தொடங்கின. அவற்றில் இரண்டு சுவற்றில் இருந்து மேஜை மேல் விழுந்தன. பூகம்பம் வந்ததோ என்று பயந்து, அனைவரும் வீட்டை விட்டு வெளியே ஓடினா். சிறிது நேரத்தில், விலங்குகளிடம் அன்பாக இருக்க வேண்டும் என்பதை பாபா கற்பிக்கும் முறை இது என்று லாக்கி உணா்ந்து கொண்டாள். பச்சாதாபத்தினால் இரு சகோதரிகளின் கண்களிலும் கண்ணீர் ததும்பியது. லாக்கி அந்த சிறிய நடுங்குகின்ற பூனையைத் தன் மடிமேல் வைத்து, அதை மெதுவாக தடவிக் கொடுத்தாள். அதன் மெல்லிய ரோமம் முழுவதிலும் நறுமணம் மிகுந்த விபூதி பொழிந்திருப்பதைக் கண்டாள். விபூதி, பாபாவின் ஸா்வ வியாபகத்தன்மையைத் தெரிவித்ததுடன், பூனையிடம் அவருக்குள்ள அன்பையும் தெரிவித்தது.

[Source : Lessons from the Divine Life of Young Sai, Sri Sathya Sai Balvikas Group I, Sri Sathya Sai Education in Human Values Trust, Compiled by: Smt. Roshan Fanibunda]

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன