ஆசையை விரட்டு (காமம்)
ஆசையை விரட்டு (காமம்)
ஆசை முடிவான அழிவையே தரும். நிறைந்து பெற்ற போதிலும் அதைப் போக்கவே முடியாது. ஒவ்வொன்றிலும் மன நிறைவு பெறும் போதும், அது மேலும் மிகவாக பலவாறு கிளை விட்டு வளரும். இறுதியில் பெரிய பூதமாக வளர்ந்து தன்னால் ஆட்கொள்ளப்பட்டவனையே விழுங்கியே விடும் தன்மையது அது. அதனால் ஆசையைக் கொஞ்சம் கொஞ்சமாக குறையுங்கள். நாளாவட்டத்தில் முனைந்து மேலும் மேலும் குறையுங்கள்.
ஒரு முறை ஒரு புனித பயணம் சென்றவர், விரும்பிய வண்ணமே நல்கியருளும் கல்பதருவின் கீழ் அமர்ந்தார். தாகம் அவரை வாட்டியது. அதனால் அவர் தனக்குள்ளாகவே, “ ஒரு குவளை இன்பமான குளிர்ந்த நீரை யாராவது இப்போது தந்தால் எத்துணை நலமாக இருக்கும்?” என்று பேசிக்கொண்டார். அடுத்த நொடியே அவர் முன்னர் ஒரு குவளை நிறைய இளநீர் போன்ற குளிர்ந்த நீர் வைக்கப் பெற்றது. வியந்து திகைத்தாலும் உடனே அதை எடுத்து பருகி விட்டார். பிறகு அறுசுவையோடு கூடிய உணவு கிடைத்தால் பசிக்கு நலமாக இருக்குமே என்று எண்ணினார். அதுவும் கணப்பொழுதில் வந்துற்றது. பின்னர் ஒரு கட்டில், மெத்தென்ற படுக்கை, என்று விரும்பி நினைத்தார். அவையும் அடுத்த நொடியே வந்தன. இதெல்லாம் பார்க்க மனைவி உடன் இருந்திருந்தால் எவ்வளவு மகிழ்வாள் என்று எண்ணினார். நொடிப்பொழுதில் அவள் அவர் முன்னர் தோன்றி விட்டாள். எங்கோ இருந்தவள் திடீரென தன் கண் முன் வரவே அவளை அந்த பேதை பயணி, மாயத் தோற்றம் கொண்ட ஒரு பேய் என்று அஞ்சினார். “ஓ இவள் ஓர் அரக்கியே,” என்று கத்தினார். உடனே அவள் அப்படியே அரக்கியாகி விட்டாள். அச்சத்தினால் உடல் நடுங்க, “இவள் என்னை தின்று விடுவாளா,” என்று கூவினார். அவள் தவறாது அப்படியே அவரைச் சாப்பிட்டு விட்டாள்.
சங்கிலித் தொடர் போல அடுத்தடுத்து வரும் ஆசைகள், உன்னைக்கட்டிப் போட்டு மூச்சு திணற அடித்துவிடும். எனவே இது வேண்டும் அது வேண்டும் என்ற ஆசையின் வேகத்தைக் கட்டுப்படுத்து, அடக்கி வை. இறைவனிடம் “எனக்கு தாங்களே போதும் வேறொன்றும் எனக்குத் தேவையில்லை” என்று முறையிட்டு வேண்டிக் கொள். ஏன் தங்க நகைகளின் மேல் ஆசைக் கொண்டு தவிக்கிறாய்? இறைவனோடு ஒன்ற பெரும் அளவில் ஆவல் கொள். சரணாகதி பாடத்தைக் கீதை நமக்கு போதிக்கிறது. ஆண்டவனின் அன்பு கட்டளை பரவ ஆவல் கொள். உன் ஆசைகள் தொடர்ச்சியாகப் பெருக விரும்பாதே!
கேள்விகள்:
- அந்த பயணி சற்று ஓய்வெடுக்க எங்கு தங்கினார்?
- அவர் விரும்பிய பொருட்கள் என்னென்ன?
- இந்த சிறு கதையில் நீ என்ன அறிகிறாய்?