விசுவாமித்திரர் (மாத்சர்யம்)
விசுவாமித்திரர் (மாத்சர்யம்)
இதிகாசங்கள், புராணங்கள் காலத்திய மிகச் சிறந்த, பெயர் பெற்ற முனிவர் விசுவாமித்திரர். ஆனால் அவருடைய முன் கோபத்தினாலும், பொறாமையினாலும், கடும் தவமியற்றிப் பெற்ற ஆற்றலையும், செல்வாக்கு மிக்க வலிமையையும் அவர் பலமுறை இழக்க நேர்ந்தது.
துவக்கத்தில் அவர் ஒரு அரசராக இருந்த போது, வசிஷ்டர், நினைத்ததை அளிக்க வல்ல தெய்வீகப் பசுவை வைத்திருந்த அந்த முனிவரைப் பார்த்து அவர் பொறாமை பட்டார். பின்னர் அவர் ஒரு ரிஷி ஆன பிறகு, வசிஷ்டர் பெற்ற பிரம்ம ரிஷி பட்டத்தைக் கண்டு, மறுபடியும் பொறாமையோடு ஆத்திரப்பட்டார். வாழ்நாள் முழுதுமாக அவர் தவம் செய்தபோதும் ராஜரிஷி பட்டமே அவர் பெற்றபோது, மனிதர்களும், தேவர்களும் வசிஷ்டரை பிரம்மரிஷி என்று போற்றுவது அவரது கோபத்தை மேலும் கிளர்ந்து எழச் செய்தது . கோபத்தினால் அறிவை இழந்த அவர் வசிஷ்டரைக் கொன்று விடவும் திட்டமிட்டார்.
ஒரு நிலாக்கால இரவில், விசுவாமித்திரர் வசிஷ்டரது குடிலுக்குச் சென்றார். அப்போது, வசிஷ்டர் ஆஸிரமத்தில் இல்லை. அவரைத் தேடித் தேடி அலைந்து, இறுதியில், காட்டின் நடுப் பகுதியில் அருந்ததியோடு அவர் இருந்ததைக் கண்டு பிடித்தார். கையில் ஒரு கூரிய கத்தியுடன், ஒரு மரத்தின் பின்னே சற்று நேரம் மறைந்திருந்தார். இரவின் அமைதியில் தம்பதியர் இருவரும் பேசிக் கொண்டதை அவரால் தெளிவாகக் கேட்க முடிந்தது. அருந்ததி தன் கணவரிடம், ”கணவரே! இந்த குளுமையான, அமைதி கூடிய இரவில் இங்கிருப்பது மிக்க இன்பமாகவும் புத்துணர்ச்சியுட்டுவதாகவும் இருக்கிறது என்று தாங்களும் நினைக்கிறீர்கள் அல்லவா?” என்றாள்.
“ஆம்! என் அன்பின் மனைவியே! அதே போலவே விசுவாமித்திரர் உறுதியான தவ முயற்சியும் எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது,” என்று விடையிறுத்தார் வசிஷ்டர்.
அதற்கு மேல் விசுவாமித்திரரால் அங்கு நிற்கவே இயலாது போயிற்று. வேகமாக ஓடி வசிஷ்டர் பாதங்களில் பணிந்து விழுந்தார். அவர் வந்ததோ அந்த முனிவரைக் கொன்று விடுவதற்காக. ஆனால் அங்கு அவர் தம் காதுகளால் கேட்டது என்ன? தம் மனத்தைப் பற்றியிருந்தவனுக்கு இரங்கியவராக அவர் தவித்துப் போனார் வசிஷ்டர் அவரது தோள்களை அன்புடன் பற்றித் தூக்கினார். “எழுந்திருங்கள் ஓ பிரம்ம ரிஷியே” என்று விளித்து எழுப்பினார். இறுதியில் அங்ஙனமாக விசுவாமித்திரரது விருப்பம் நிறைவேறியது. தம்முடைய கோபத்தையும், பொறாமையையும், அகங்காரத்தையும் தவிர்த்த பிறகே, அவர் பிரம்மரிஷி என்ற பட்டம் பெற்றார்.
கேள்விகள்:
- ஓர் அரசனாக இருந்த போது விசுவாமித்திரர் ஏன் வசிஷ்டர் மேல் பொறமை கொண்டார்?
- தமது தவ வலிமையை அவர் எப்படி இழந்தார்?
- அவர் எப்படி இறுதியில் மாற்றப் பெற்றார்?
- அவர் எப்போது பிரம்மரிஷி என்று அழைக்கப் பெற்றார்?