சீதையைத் தேடுதல்

Print Friendly, PDF & Email
சீதையைத் தேடுதல்

வாலியின் மறைவிற்குப் பிறகு சுக்ரீவன் கிஷ்கிந்தையின் அரசனாக முடிசூட்டப் பெற்றான். இராமரும் இலட்சுமணரும் ருஷ்யமுக மலையில் தங்கியிருந்தனர். சுக்ரீவன், சீதையைத் தேடி கண்டு பிடிப்பதற்காக மிக நிதானமாக பெரிய அளவில் திட்டங்களிட்டு அவற்றை செயல் படுத்துவதில் முனைந்திருந்தான். அவன் காட்டிய நிதானம். இராம, இலட்சுமணர்களைப் பொறுமையிழந்து தவிக்க வைத்தது.

அப்போது அனுமான் சுக்ரீவனுக்கு, அவனது வாக்குறுதியை நினைவூட்டி, வானரப்படையினரைச் சீதையைத் தேட விரைவில் அனுப்பும்படி வற்புறுத்தினார். அதன்படி வானரர் நான்கு பிரிவாகப் பிரிக்கப்பட்டு கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு ஆகிய நான்கு திசைகளிலும் சென்றனர். ஒவ்வொரு பிரிவுக்கும் ஒவ்வொரு தலைவன் இருந்தான். தெற்கு நோக்கிச் சென்ற பிரிவிற்கு, இளவரசன் அங்கதன் தலைமை ஏற்றான். அனுமான், ஜாம்பவான், நீலன் ஆகியோரும் அந்த பிரிவில் இருந்தனர்.

அவர்கள் புறப்படும் முன்பு, இராமர் அனுமானை அருகே அழைத்தார். அனுமான் தான் சீதையைக் கண்டு பிடித்து, அவளிடமிருந்து செய்தி கொண்டு வர இயலும் என்று அவர் எங்ஙனமோ உணர்ந்திருந்தார். அதனால், அவர், அரச முத்திரையிட்ட தமது மோதிரத்தை அனுமானிடம் தந்து அதை சீதையைக் கண்டு பிடித்தால் அவளிடம் அடையாளமாகத் தரும்படியும், கூறினார். அன்றே அனுமான், இராமரது நெஞ்சில் நெருங்கியிருக்கும் சேவகனாக ஏற்கப் பெற்றார்.

வடக்கு, மேற்கு, கிழக்கு திசைகளில் சென்ற படையினர், ஒரு மாதத்தில் திரும்பி வந்து சீதையிருப்பதற்கான எத்தகைய அறிகுறியும் அந்த பகுதிகளில் தென்படவில்லை என்று உரைத்தனர். ஆனால் தெற்கே சென்றவர்கள் மட்டும் அங்ஙனம் வரவில்லை. மலைகள், காடுகள், குகைகள், எல்லாவற்றிலும் ஆழ்ந்து தேடினர். இறுதியில் கடற்கரையை அடைந்தனர். பரந்த நீர் பரப்போடு சமுத்திரம் எல்லையற்று விரிந்திருந்தது. அதைக் கடந்து எப்படி மேற்கொண்டு செல்வது என்று தோன்றாது வானரர் செயலிழந்து நின்றனர்.

அப்போது கழுகுகளின் மன்னன், சம்பாதி என்பவன் வானரர்களின் நடவடிக்கைகளை ஒரு மலை உச்சியிலிருந்து கவனித்து வந்தான். உண்மையில் அவன் அவர்களை சாப்பிட்டு விடவே தருணம் பார்த்திருந்தான். ஆனால் அவர்கள் பேச்சில் ஜடாயு என்ற பெயர் அடிபடவே அவன் அவர்களைத் தம்மிடம் வரும்படி கூவி அழத்தான். வானரர் சம்பாதியிடம் சென்றனர். தாங்கள் ஏற்று வந்த பணியைச் சம்பாதியிடம் விவரித்தனர். இராமரது வரலாற்றையும் கூறினர். சம்பாதியின் தம்பியே ஜடாயு, அவன் இராவணனால் கொல்லப்பட்டதை சம்பாதி அறிந்ததும் மிகவும் வருந்தினான். பிறகு தன கூரிய பார்வையைச் செலுத்தி, கடலுக்கப்பால் உள்ள இலங்கையில் இராவணன் உறைவதைக் கண்டான். அதனால் இலங்கைக்குச் சென்றால் சீதையைக் காண இயலும் என்றும் கூறினான்.

ஒரு முறை ஜடாயு சூரியனுடைய கதிரொளியால், எரிந்து விடும் நிலையில் இருந்தான். அப்போது சம்பாதி தன இறக்கையை விரித்துக் குடை போல பிடித்து ஜடாயுவைக் காப்பாற்றினான். ஆனால் சூரிய வெப்பத்தினால் சம்பாதியின் சிறகுகள் எரிந்து போகவே, அவற்றை இழக்க நேரிட்டது. இராமருக்கு அவன் ஏதாவது சேவை செய்தால் மீண்டும் தன இறக்கைகள் வளரப் பெறுவான் என்று ஒரு வரம், பெற்றிருந்தான் சம்பாதி. அங்ஙனமே இராம பணியில் வானரர்க்கு உதவவே, சிறகுகள் மீண்டும் வளரப் பெற்று மகிழ்ச்சியாகப் பறந்து சென்றான்.

சீதை இருக்குமிடம் தெரிந்து விடவே, கடலைத் தாண்டி இலங்கைக்கு எப்படிச் செல்வது என்று வானரர் கூடிப் பேசினர். ஒவ்வொருவரையும் தங்கள் வலிமையின் அளவை எடுத்துரைக்கும்படி தலைவன் அங்கதன் கேட்டுக் கொண்டான். ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற பலத்தைக் காட்டினர். ஆனால் எல்லோருமே கடலின் ஒரு சிறு பகுதியே கடக்கக் கூடியவராக இருந்தனர். அநுமான் வாளாயிருந்தார். அப்போது ஜாம்பவான் அநுமானைத் தட்டிக் கொடுத்து அவரிடம் பொதிந்துள்ள ஆற்றலை அவருக்கு எடுத்துரைத்தார். பிறகுதான் அநுமானுக்கு, தன் வலிமை மெதுவாகப் புரியத் துவங்கியது. பலரும் வற்புறுத்திய பிறகே அநுமான் சீதையைக் கண்டு பிடிக்கக் கடலை தாண்டிச் செல்ல ஒப்புக் கொண்டார். ஜாம்பவான் பலவாறு அவரைப் பாராட்டி அவரது பேராண்மை மிக்க வீரத்தை புகழ்ந்து கூரிய பிறகே, கடினமான அந்த தூது பணியை ஏற்றுச் செல்ல அவர் ஒப்புக் கொண்டார்.

உடனே பெரிதாக, மிக பெரிதாக அவர் தம் உடலை வளர்த்து மலை முழுதும் மறைக்கும் அளவு அகன்று நீண்ட உடல் பெற்று உயர்ந்தார். மனத்தால் இராமரை வணங்கி, தம் தந்தையார் வாயுவையும் அங்ஙனமே நினைத்துத் தொழுது விட்டு கடலை கடக்க மேலெழும்பிப் பறந்தார்.

கேள்விகள்:
  1. சீதையைத் தேட படையினரை ஆயத்தப்படுத்த சுக்ரீவன் ஏன் நெடு நாள் தாமதித்தான்?
  2. வானரர்களுக்கு சீதை இலங்கையில் இருப்பது எவ்வாறு தெரிந்தது?

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: