அறிவுரையை ஏற்க இராவணன் மறுப்பு
அறிவுரையை ஏற்க இராவணன் மறுப்பு
இலங்கை மீது படை எடுப்பதற்கு இராமர், இலட்சுமணன், சுக்ரீவன் மூவரும் ஆவன ஆயத்தங்கள் செய்வதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். அவர்கள் தலைமையில் மாபெரும் படை ஒன்று கடற்கரையை அடைந்தது. அங்கு சென்ற பிறகு, பரந்து விரிந்து கிடக்கும் அந்தப் பெருங்கடலை எப்படிக் கடப்பது என்று மலைத்து, ஒருவரோடோருவர் கலந்து ஆலோசித்தனர்.
இராவணனுக்கு இவர்களது நடவடிக்கைகள் எட்டின. உடனே அவன் ஒரு பதட்டமான நிலையைப் பெற்றான். அதனால் அறிவுரைக் கூறும் அமைச்சர்களை வரவழைத்துக் கேட்டான். “ஒற்றை குரங்கு ஒன்று வந்து நம் நகரத்தையே கலக்கியதை நீங்கள் அனைவரும் பார்த்திருக்கிறீர்கள். அவன் இராமனிடமிருந்து வந்த தூதுவன் என்று தன்னைக் கூறிக் கொண்டான். இப்போது, இராமனே நம் மீது படையெடுத்து வந்துள்ளான். இந்த சமயத்தில் நீங்கள் உங்களது மதிப்பு வாய்ந்த, உயர்ந்த கருத்துக்களை அறிவிக்க வேண்டுகிறேன்,” என்று கேட்டான்.
உண்மையில் இராவணனது தன்னம்பிக்கை சற்று ஆட்டம் கண்டு விட்டு தான் இருந்தது. அதை மீளவும் உறுதியாக அமைத்துக் கொள்ள விரும்பினான் அவன். அதற்கு, அமைச்சர்கள், தளபதிகளின் உற்சாகமாக ஊக்குவிக்கும் மொழிகளைக் கேட்க விரும்பினான். அவனுடைய மன உணர்ச்சிகளைப் புரிந்து அதற்கேற்ப, அவர்களும் ஒவ்வொருவராக எழுந்து யாராலும் வெற்றிக் கொள்ள முடியாத இராவணனது வீரத்தையும், பேராற்றலையும், புகழ்ந்தனர். அனைவரும் ஒரே குரலில், வானரப் படையை எளிதாக அழித்து விட முடியும் என்றும், இராவணன், இராம, இலட்சுமணர்களை நிச்சயமாகக் கொன்று விடுவான் என்றும் மேலும் முழங்கினர்.
ஏற்கனவே தற்பெருமை மிக்க இராவணன், அவர்களது புகழ் மாலைகளால் பின்னும் கிளர்ந்தெழுந்தான். அமைச்சர்களையும், தளபதிகளையும் மிகவும் பாராட்டி, நம்பிக்கையோடு தன்னை உற்சாகப் படுத்தி ஊக்குவித்ததற்கு நன்றியும் தெரிவித்தான்.
ஆனால் அந்தக் கூட்டத்திலும் ஒரு தனிக் குரல் இராவணனது கூற்றுக்கு இணங்காது மறுப்பு தெரிவித்தது. அது, இளமையிலிருந்தே அமைதியான பண்பும், அகலாத இறையன்பும் கொண்டிருந்த விபீஷணனது குரலே! அவன் இராவணனது தம்பியாவான். தமையனாரை வணங்கி “அண்ணா ! தங்களுடைய பேராண்மை மிக்க வீரத்தையும், அஞ்சா நெஞ்சத்தையும் நான் மிகவும் மதித்து போற்றுகிறேன். ஆனால் தங்களைப் புகழ்ந்து பாராட்டுவதற்காகவே அறிவிழந்து பேசும் இவர்களுடைய சொற்களுக்குத் தாங்கள் செவி சாய்த்து தவறான பாதையில் சென்று விடாதீர்கள். இப்போது கூட காலம் கடந்து விடவில்லை. பெருந்தன்மையோடு சீதையை அனுப்பிவிடுங்கள். இராமர் தங்கள் தவறான செயலைப் பொறுத்திடுவார். மாறாக தற்பெருமைக்கும், அகங்காரத்திற்கும் இடங்கொடுத்து தாங்கள் நடந்தால் இலங்கைக்கு ஏற்பட இருக்கும் ஆபத்தையும், அரக்கர் குலமே அழிக்ககூடிய நிலையையும் குறித்து எனக்கு ஐயமே கிடையாது என்று அறிவுறுத்தினான்.
இராவணன் அதைக் கசப்பான அறிவுரையாக ஒதுக்கினான். பொறாமையும், கோழைத்தனமும் கொண்டவன் என்று தம்பியைத் திட்டினான். பிறகு ஒவ்வொருவரும், இராமருடனும், வானரர்களுடனும் போர் புரிய ஆயத்தமாக வேண்டும் என்று கட்டளையிட்டான்.
விபீஷணன் மறுபடியும் ஒருமுறை மன்றாடிப் பார்த்தான். ஆனால் இராவணனது தற்பெருமையும், வீண் ஆடம்பரமான இயல்பும் தம்பியின் சாலச் சிறந்த சொற்களுக்கு செவி சாய்க்கச் மறுத்து விட்டன. தன்னுடைய தங்கத் தேரில் ஏறி அரண்மனைக்குப் புறபட்டான் அவன். அப்போது அவனுடைய மனைவி அவனை அணுகி, அவனது கால்களில் பணிந்து வணங்கினாள். பிறகு, “அரசே! சீதையை இராமரிடம் சேர்த்து விடுங்கள். சீதை இலங்கைக்கு வந்ததிலிருந்தே இங்கு பல பல தீங்குகள் நேர்ந்து வருகின்றன. தங்களுக்காக இங்கு பல அழகியர் காத்துள்ளனரே! ஒரு சாதாரண மானுடப் பெண் மீது ஏன் இவ்வளவு ஆசை கொண்டுள்ளீர்கள்? இராமருடைய பாணம் மிக்க ஆற்றல் பெற்றவை என்று நான் கேள்விபட்டுள்ளேன். அவை நம்மையெல்லாம் அடியோடு அழித்து விடும் என்பது திண்ணம்.,” என்று மெதுவாக கணவனை மாற்ற முயன்றாள் மண்டோதரி.
இராவணன் அவளைக் கைகளால் ஒரு புறமாகத் தள்ளி விட்டு, “இதெல்லாம் ஒரு பெண்ணினுடைய பலஹீனமான அச்சங்கள். உன்னுடைய அறிவுரையைக் கேட்டு நடந்தால் நான் ஏளனமாக நிந்திக்கப் பெறுவேன். இத்தகைய மானிட உணர்ச்சிகளுக்கு நான் பணிய மாட்டேன்,” என்று முழக்கி விட்டு சென்று விட்டான்.
கேள்விகள்:
- அமைச்சர்களும் தளபதிகளும் இராவணனை எப்படியெல்லாம் ஊக்குவித்தனர்?
- விபீஷணன், மண்டோதரியின் நல்ல அறிவுரைகளை ஏன் இராவணன் புறக்கணித்தான்?