நற்குணங்களின் இலக்கணம் – காந்தாரி
நற்குணங்களின் இலக்கணம் – காந்தாரி
குருஷேத்திர போர் முடிவடைந்தது. திருதராஷ்டிரனுடைய மக்கள் அனைவரும் மடிந்து விழுந்தனர். அந்த இறுதி இரவில் பாண்டவர் தங்கிய இடம் ஒரு பெரும் கொலைக்களமாகச் சிதறியிருந்தது. வெற்றி பெற்றோரது மக்கள், பேரமக்கள், நண்பர்கள், உறவினர்கள், என்று எல்லோரும் வாளுக்கு இரையாகியிருந்தனர். நாசமும், துயரமுமான காட்சிகளோடு மறுநாள் பொழுது விடிந்தது. பாண்டவரும், கிருஷ்ணரும் மட்டும் அடிப்பட்ட புண் ஏதுமின்றி, வெற்றி பெற்று நின்றனர் என்பது உண்மையே. ஆனால் அவர்களைச் சூழ்ந்து அவர்கள் ஆவலுடன் எதிர் கொண்டிருந்த எல்லா நம்பிக்கைகளும் அடியோடு வீழ்ந்து விட்டனவே! நாடு இனி அவர்களுடையது! ஆனால் அதைத் தொடர்ந்து ஆண்டு வர ஒரு கால்வழி கூட உயிரோடு மிஞ்சவில்லையே! சிம்மாசனம் கைப்பற்றப் பெற்றது! ஆனால் வீடு வம்சமற்று வடிந்து விட்டதே!
மறு பக்கம் துன்பமே வடிவாக, துயரமே உருவாக, இறந்தவர்களுக்காக ஓலமிட்டு அழுது கொண்டு கௌரவர் வீட்டுப் பெண்கள் காணப்பட்டனர். அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவே பாண்டவர்கள் அஞ்சி நடுங்கினர். போர்க்களத்தில் திருதராஷ்டிரனுடைய நூறு மக்களும் இறந்து பட்டு வீழ்ந்து கிடந்தனர். தங்கள் துயரத்திலிருந்து ஒருவாறு ஆறுதல் அடைந்தவர்களாய் தங்களுடைய பதவிக்காக மட்டுமல்லாமல், பல மடங்காக அவர்கள் பெற்றிருந்த துணிவினாலும் வயதின் முதிர்ச்சியினாலும், கண் தெரியாத் தன்மையினாலும் அரசி காந்தாரியும், அரசன் திருதராஷ்டிரனும், தங்களது அரசத் தேரில் அமர்ந்து போர்க்களம் வந்தனர். தோற்கப்பட்டவீட்டினரின் தலைவர்கள் அவர்கள். வெற்றி பெற்ற குடும்பத்திற்கும் இரத்த சம்பந்தமுள்ள தாயாதிகளான தலைவர்களும் அவர்களே.! அவர்களைப் போற்றி வணங்கி தரப்போகும் மதிப்பின் காரணமாக அவர்கள் பாண்டவர்களைச் சந்திப்பது இன்றியமையாததாக இருந்தது. அந்த சந்திப்பு யுதிஷ்டிரன் வெற்றி பெற்றதை விளக்குவதைவிட, அவர் அவர்களுக்குக் கீழ்படிந்து வணங்குவதாகவே அமைந்திருந்தது எனலாம். மக்களால் நேர்மையின் அரசன் என்று அன்றிலிருந்து போற்றப்பெற்ற இளைஞரான அரசர் தர்மஜா, தம்முடைய நான்கு சகோதரர், திரௌபதி, கிருஷ்ணர் அனைவரும் தம்மைத் தொடர்ந்து வர காந்தாரியிடம் வந்து, அவர்கள் பாதங்களைத் தொட்டு வணங்கி, எழுந்து மௌனமாக நின்றார்.
வயதான அரசி காந்தாரி துயரத்தில் தோய்ந்து இருந்தாள். அவளது கணவன் திருதராஷ்டிரன் ஒரு பிறவிக் குருடன், அதனால் அவள், மனைவிக்குரிய மாண்போடு தானே முன்வந்து தன் கண்களை ஒரு துணியினால் கட்டிக் கொண்டு குருடானாள். உளமார்ந்த உவகையுடன் தங்கள் வாழ்நாள் முழுதும் அந்தத் துணியைக் கண்களில் கட்டி அணிந்திருந்தாள் . அவளது செய்கையினால் புறக்கண்கள் இருண்டு விட்டபோதிலும், அகக்கண்ணான ஆன்மீக கண்களை அவள் பெற்றாள். அவளது குரல் விதியின் குரலாக அமைந்திருந்தது. அதனால் அவள் கூறியது அப்படியே பலித்தும் வந்தது. அவளது கூற்று நிகழாமல், நின்றதேயில்லை. போர் நடந்த போது ஒவ்வொரு நாளும் காலையில் துரியோதனன் அவளிடம் வந்து, அவளது ஆசிகளைக் கோரி, அன்றைய போரில் தான் வெற்றி பெற்றுவர வாழ்த்துமாறு வேண்டுவான். அப்போது எல்லாம் “வெற்றி, நேர்மையைத் தொடர்ந்து வரும் மகனே!” என்று கூறுவாள். போரின் துவக்கத்திலிருந்தே, குருஷேத்திரம், தன் வீடு முழுவதையுமே இறுதி நிலைக்குக் கொண்டு சென்று விடும் என்று அவள் நம்பினாள் . இப்போதுகூட, தன் கணவரது துயரத்தையும் அவர் தனித்து நின்றுவிட்ட தன்மையையும் நினைத்து வருந்தினாளே தவிர தன்னைப் பொறுத்தவரை மக்களை இழந்து விட்டதற்காக அவள் தன் இதயத்தைக் கடினமாக்கிக் கொண்டு விட்டாள். திருதராஷ்டிரன், தனது சொல்லிலும் செயலிலும் உறுதியற்ற தன்மையும், பேராசை மிகுந்தும், கொள்ளாதிருந்தால் அனைத்தையும் இழந்து தவிக்கும் இத்தகைய நிலைமை தங்களுக்கு ஏற்பட்டே இருக்காது, என்று அவள் அறிந்திருந்தாள். அதனால் அவளது கடின சித்தம் மேலும் நியாயமானதாக இருந்தது. அவளுடைய வளைக்க முடியாத கருத்து, என்றுமே அலைக்கழிக்கப் பெற்றதில்லை. அவளது இதயத்தில் நேர்மைக்கு நிகராக, பேராசைகூட, நொடி நேரமும், ஆவலோடு, அவளைப் பற்ற இயலவில்லை.
அதனால் தன் கணவன் கசக்கி அழிக்கப்பட்டான் என்ற உண்மை அவளை அகம் நோக அலைக்கழித்தது. அதுவும் தன் கணவனை தானாகவே தனக்கு வரவழைத்துக் கொண்ட கடுந்தண்டனையின் தன்மை, வருத்தம் தோய்ந்த இந்த நேரத்தில் அவளது மனத்தை ஆழ்ந்து இளக்கி நையச் செய்தது. பெருமையும், உறுதியான சித்தமும் பெற்றவள் என்று உலகம் போற்றும் காந்தாரி, தன் கணவனைப் பொறுத்தவரை உண்மை மனைவியாக, அவனது அப்போதைய துயரத்தில், அமைதியாக, அன்போடு பரிவுடன் நடந்து கொண்டாள்.
அந்த பயங்கரமான் சூழ்நிலையில், தன்னுடைய நற்குணங்களால், இயல்பாகவே அவள் பெற்றிருந்த உயர்ந்த பண்பை அப்போது அவளுள் பொங்கி எழும் பெருஞ்சக்தி அழித்து விடுமே என்று உணர்ந்து அஞ்சினார்கள். அத்தகைய செயல் தன்னை வணங்க நெருங்கி வரும் யுதிஷ்டிரனுக்குத் தீங்கு விளைவித்து விடுமே என்றும் கவலையுற்றாள். அதனால் கடும் முயற்சி செய்து சீறி எழுந்த அந்த ஆற்றலுக்கு அணை போட்டுத் தடுத்தாள். தர்மஜாவும் மற்றவர்களும் கை கட்டி நின்றிருந்தனர். அந்த கைகளுக்கும் கீழே, தன் சக்தியையும், கண்களையும் தாழ்த்தி, தர்மஜாவின் பாதங்களையே நோக்கினாள். அப்போது எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, தர்மஜாவின் பாதங்களில் சூடு போல, வெந்த புண் ஏற்பட்டது. காந்தாரியின் கூரிய பார்வைக்கு அத்துணை பயங்கரமான ஆற்றல் இருந்தது.
ஆனால் பாண்டவரின் அரசியான அன்னை திரௌபதியிடம் அவள் மிக்க அன்போடு பேசினாள். பிறகு மற்றவரையெல்லாம் விட்டு விட்டு நேரே கிருஷ்ணரிடம் சென்று நின்றாள். அவர் முன்னிலையில் மட்டுமே அவளால் தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தவே இயலாது போயிற்று. பரமனின் நேர் எதிரே நிற்கும்போது, அவள் எல்லோரையும் எல்லாக் காட்சிகளையும் கண் கட்டுக்கு மேலும் கூர்ந்து காண இயன்றது. எல்லாவற்றையும் தீர சிந்திக்க இயன்றது. மனத்தைத் திறந்து அடைப்பட்டு கிடக்கும் துயரங்களைக் கொட்டவும் இயன்றது.
“தாமரைக் கண்ணரே ! என் வீட்டின் பெண்களை கவனித்து அறிந்து கொள்ளுங்கள். தங்கள் கணவரைப் பிரிந்து விதவையானவர்கள், பின்னப்படாத தலைமயிர் பின்னால் விரிந்து புரள, அவர்கள் எழுப்பும் அவலக் குரலைக் கேளுங்கள். செத்து விழுந்து கிடக்கும் பிணங்களின் மேல், விழுந்து புரண்டு அழுது, முன்பு பாரதத் தலைவர்களாக சிறப்புற்று இருந்த அவர்களது சிதைந்து கிடக்கும் முகங்களைக் கைகளால் பற்றி அடையாளம் காண முயல்கின்றனர். கணவனைத் தேடி, தந்தையைத் தேடி, மகனைத் தேடி, உடன் பிறந்தானைத் தேடி, அவர்கள் அலைவதைப் பாருங்கள். இந்த போர்க்களம் முழுவதுமே, சேயற்ற தாய்மார்களாலும். கணவனற்ற விதவைகளாலும், இப்போது நிறைந்திருக்கிறது. நெருப்புப் பொறிகளாக ஒரு காலத்தில் சீறி எழுந்த சிறந்த வீரர்கள், அசைவற்று வீழ்ந்து கிடக்கிறார்களே! இப்போது இரை தேடியலையும் விலங்குகள் தாம் இங்கும் அங்குமாக அவ்வுடல்களிடையே அலைந்துக் கொண்டிருக்கின்றன. ஒ! கிருஷ்ணா! இந்த போர்க்களம் எத்துணை பயங்கரமானதாக இருக்கிறது? பேராற்றல் பெற்ற ஐயனே! இவற்றையெல்லாம் கண்ணுறும் போது , நான் துயரில் வேகிறேனே! அண்டமே வெறிச்சோடிக் காண்கிறதே எனக்கு இப்போது! தாயாதிகள் இரு தரப்பினரும் இந்தப் போரில் ஈடுப்பட்டனர். ஒருவரை ஒருவர் அழித்து விட முடிவு கட்ட முனைந்த பொது, தாங்களே ஏன் கண்களை மூடிக் கொண்டீர்கள்? இது போன்ற ஓர் அழிவு ஏற்பட தாங்கள் ஏன் அனுமதித்தீர்கள்? என்று பலவாறு கிருஷ்ணரிடம் புலம்பி வெடித்தாள், நெஞ்சம் நொந்து தவித்த காந்தாரி.
காந்தாரி தன் உள்ளக் குமைச்சலை ஓலமிட்டு முடித்ததும் கிருஷ்ணர் அவளைக் கனிவோடு பார்த்து புன்னகைத்தார். தாமே குனிந்து, தளர்ந்து வீழ்ந்த அவளைப் பற்றி தூக்கி விட்டார். “எழுந்திரு! காந்தாரி! தெளிந்து எழுந்திரு “ என்றார்.
“உள்ளத்தைத் துயரம் தாக்கி வருத்த விட வேண்டாம். காந்தாரி! மேலும் மேலும் துயரத்தில் அழுந்துவதால் ஒருவன் பின்பும் பெருந்துன்பமடைகிறான். அதனால் மகளே! ஆழ்ந்து சிந்தித்துப்பார். ஓர் அந்தணப் பெண்மணி, ஆன்மீக ஒழுக்கங்களைக் கடைப்பிடிக்கவே தன் மக்களைப் பெறுகிறாள். பசு, சுமைகளைச் சுமந்து செல்ல கன்றுகளை ஈனுகிறது. ஒரு பணிப்பெண் பலபல வேலைகளையும் ஏற்றுச் செய்வதற்காகத் தன் குழந்தைகளைப் பெறுகிறாள். ஆனால் அரச பரம்பரையோ, போரில் இரத்தம் சிந்தி மரணம் எய்தவே, முன் கூட்டியே விதிக்கப்பட்டு குழந்தைகள் பிறக்கின்றன. இந்த பேருண்மையை நீ புரிந்து கொள் காந்தாரி” என்று அறிவுறுத்தினார் கிருஷ்ணர்.
அரசி அமைதியாக கிருஷ்ணர் பகன்றது அனைத்தையும் கேட்டாள். அவற்றில் பொதிந்திருந்த பேருண்மைகளையும் அவள் நன்கு அறிந்திருந்தாள். தனிமையும் துயரமும் மெதுவாகப் பறந்து உள்ளேயே அழுத்தின. மனம் அமைதி பெற காட்டிற்குச் சென்று தவ வாழ்வை மேற்கொள்வதைத் தவிர அவளுக்கு வேறு வழி எதுவும் புலப்படவில்லை. நடந்துவிட்ட பெருந்துயர நிகழ்ச்சிகளால், தெளிவான மனமும், தீவிர நோக்கும் பெற்ற அவள், உலகத்தை ஆழ்ந்து கவனித்து எல்லாம் பொய்யான மாயத் தோற்றங்களே என்று உணர்ந்து கொண்டாள். மேற்கொண்டு ஏதும் பேச இயலாது சற்று நேரம் மௌனமாக நின்றாள். பிறகு அவளும் திருதராஷ்டிரனும், யுதிஷ்டிரனோடு கங்கையை நோக்கிச் சென்றனர். அறிவற்றுப் போனமையால், அடர்ந்து பரவி விட்ட துயரத்தோடு, அங்கு குழுமியிருந்த வீரர்களும் இறந்துபட்டவர்களுக்கு ஈற்றுக் கடன்களை ஆற்ற அவர்களைத் தொடர்ந்து சென்றனர்.