மாணிக்கவாசகர்

Print Friendly, PDF & Email

மாணிக்கவாசகர்

முன்னுரை

சைவம், வைணவம் என்னும் இருபெரும் சமயங்களும் தமிழ் நாட்டில் மிகவும் சிறப்புடன் போற்றப்பட்டு வருவன. சைவ சமயக் கருத்துகளைப் போற்றி போதித்த ஞானியர்கள் அறுபத்து மூவரும் நாயன்மார்கள் எனவும் வைணவத்தில் வழுவாது வாழ்ந்து இறைத் தொண்டாற்றிய பன்னிரண்டு ஞானியர்கள் ஆழ்வார்கள் எனவும் பெருமையோடு போற்றப்பட்டனர். ஆழ்வார்களும், நாயன்மார்களும், ஆண்டவனின் அருளைப் பெற்று,அவ்வருள் அனுபவத்தில் ஆழ்ந்து நயந்து, திளைத்து இன்புற்ற புனிதர்கள்.

யார் ஞானி

சாதாரண மனிதனின் உணர்வுகள்,காலம்,இடம்,பந்தம் என்ற எல்லைக்குல்லேயே செயல்படுகின்றது. அவனது அறிவின் பரப்பு, காரண காரிய உணர்வுகள், உறவுகள், லௌகீக சம்பந்தப்பட்டவற்றோடு அடங்கிவிடுகிறது. எனவே, முழுமையான உண்மை முழுமையான நன்மை, முழுமையான அழகு பேரானந்தம் ஆகியவை சாதாரண மனிதனின் உணர்வுக்கும்,அறிவிற்க்கும் அப்பாற்பட்டவை.

யார் தங்களது மனம், உடல், இதயத்தை, தூயமையாக்கி உலக ஆசைகளையும், பற்றினையும் அடக்கி, தன்னை உலகத்தோடு பந்தப்படுத்துகிற சக்திகளை வென்று,தன் உள்ளொளியினை பெருக்கி, அந்த முழுமையான உண்மையை அறிய, அடைய முனைகிறார்களோ அவர்கள் ஆன்மீகச் சான்றோர்கள் – ஆன்மீக விழிப்புணர்சசியுள்ள ஞானியர் என அழைக்கப்படுகிறார். அத்தகைய சான்றோர்களுக்கு மதம் என்பது ஆன்மீக ஒளி பெறுவதற்கான அரிய சாதனம். தனி ஒரு ஆன்மா,மன அசுத்தங்கள், புலனின்பங்கள், ஆகியவற்றினின்று விடுபட்டு, அகங்காரம்,சுயநலம், நான்,எனது என்னும் நிலைகளைக் – கடந்து, அந்த பேருண்மையை அறிவதும், அதனோடு காப்பதும் தான் ஆன்மீக ஒளி பெறுவது என உயர்வாக போற்றப்படுகிறது. அதாவது ஆன்மா, தான் பேருண்மையின் ஒளிக்கீற்று என்ற தனது உண்மையான தன்மையை உணர்ந்து கொள்கிறது. இவ்வாறு ஒளி பெற்ற ஆன்மா, தெய்வீக ஒளியில் பிரகாசமடைந்து, அந்த பரம் பொருளோடு நேரடித் தொடர் கொள்ளும் நிலையைப் பெறுகிறபோது,அந்த உயர் நிலயை அடைந்தவர்கள் “ஞானியர்” என்றும் “புனிதர்” என்றும் போற்றுவதற்கு உரியவராகிறார்கள். அவர்கள் அந்தப் பேருண்மையை, பேரறிவை, பேரானந்தத்தை அதில் ஒன்றறக் கலப்பதன் மூலம் அறிகிறார்கள், அனுபவிக்கிறார்கள், ஒளி பெற்ற அவர்களது கண்களுக்கு பிரபஞ்சம் முழுவதும் அந்த பரம் பொருளின் வடிவங்களாகவே தோன்றுகின்றன. அவர்கள் தாங்கள் பெற்ற பேரின்பத்தை மனிதகுலம் முழுவதும் பெற வேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு நமது வாழ்க்கைப் – பயணத்திற்கான நல்வழிகளையும், சமூக நலத்திற்கான அறநெறிகளையும், தங்களது நூல்கள் மற்றும் தெய்வீக அருளுறைகள் மூலமாக வழங்கியிருக்கிறார்கள்.

நாயன்மார்களில் நால்வர்

உலக நாடுகளில் மிக அதிகமான ஞானியர்களை தந்த நாடு என்ற பெருமை பாரதத்திற்கும், பாரதத்தின் மாநிலங்களில் அதிக ஞானியர் தோன்றிய பகுதி என்ற சிறப்பு தமிழகத்திற்கும் உண்டு. 63 நாயன்மார்களின் காலம் கி.பி. 2-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.1314 –ஆம் நூற்றாண்டு என கூறப்படுகிறது.அறுபத்து மூவரில் திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் என்ற நால்வரும், பெரிதும் அறியப்பட்டவர்கள். அவர்களது நூல்கள் தேவாரம், திருவாசகம் எனப்படுகிறது. திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் இயற்றிய பாடல்கள் மூவர் தேவாரம் எனவும், மாணிக்கவாசகரின் பாடல்கள் திருவாசகம் எனவும் அழைக்கப்படுகிறது.

நால்வரும் இறைவனோடு இரண்டற கலந்த நிறை ஞானிகளாயினும் அந்நிறை நிலையை அடைய அவர்கள் பின்பற்றிய வழிமுறைகள் வேறானவை.

திரு ஞான சம்பந்தர் – இறைவன் தந்தை- தான் மகவு என்னும் உறவுடன் மார்க்கத்தில் அடைந்தவர்(?). திருநாவுக்கரசர் – இறைவனை தலைவனாகவும் தன்னை தொண்டனாகவும் கருதிக் கொண்டு தாச மார்க்கத்தில் சென்றடைந்தவர்.

சுந்தரர் – முக்குணங்களை வென்று ஐம்புலன்களை அடக்கி – ஒளிபெற்றவர். மாணிக்கவாசகர் – அரிய கலைகளையும், ஆகமங்களையும் கற்று – சிற்றறிவை விரிவாக்கி சிவஞானம் பெற்றவர்.

மாணிக்கவாசகர் பிறப்பும் வரலாறும்

மாணிக்கவாசகரின் காலம் பற்றி கருத்து வேறுபாடுகள் உள்ளன. கி.பி முதல் நூற்றாண்டையர்(?) என்கிறார் சிவக் கொளுந்து பிள்ளை.டாக்டர் ராஸ்ட் என்பவர். இவரது காலம், கி.பி 13,14,-ஆம் நூற்றாண்டு எனக் கூறுகிறார்.மறைமலையடிகள் கா.சு.பிள்ளை போன்றோர் 3-ஆம் நூற்றாண்டு என்கின்றனர்.

பாண்டிய நாட்டில் மதுரைக்கு அருகே,வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள வளமான,திருவாதவூர் என்னும் ஊரில் அந்தணர் குலத்தில் பிறந்தார்.இவரது தந்தை பெயர் சம்புபாதாசிரியர்.தாய் சிவஞானவதி. நற்குணங்களும்,தர்ம சிந்தனையுமுள்ள இத்தம்பதியருக்கு பலகாலம் பேறு இல்லை.திருவாதவூர் பெருமான் அருள்வேண்டி ஆண் மகவு பிறந்ததால், இவருக்கு திருவாதவூரர் எனப் பெயரிட்டனர். சிறுவயதிலேயே பள்ளிக்கல்வியோடு,சமய நூல்கள்,புராணங்கள், வேதங்கள்,ஆகமங்கள் ஆகியவற்றையும் கற்றுத் தேர்ந்தார். காலை பருவத்தில் தருமநூல், தருக்கநூல், அரச நீதி நூல் ஆகியவற்றிலும் வல்லவராக விளங்கினார். அந்தண குலத்தில் “அமட்டியா” என்னும் உட்பிரிவைச் சார்ந்த இவருக்கு இயல்பாகவே ஆளுமைத்திறன் மிகுந்திருந்தது. இவர் திருமணம் செய்து கொள்ள உடன்படாது, ஆன்மீகம் மேலிட, சிவனின் தொண்டராகஇருக்க விரும்பினார்.

அந்த சமயத்தில் மதுரையை அரிமார்தன பாண்டியன் என்ற மன்னன் ஆண்டு வந்தான்.அவனது முதலமைச்சர் மறைந்து விடவே, தக்க ஒருவரை அந்த பதவிக்கு தேடிக்கொண்டிருந்தான். திருவாதவூரனின் திறமைகளை அறிந்த மன்னன் அவரை அழைத்து வரச் செய்து, முதலமைச்சர் பொறுப்பை ஏற்க வேண்டினான். திருவாதவூரன் தனக்கு பதவி நாட்டம் இல்லை எனவும், பக்தி வழி செல்ல விரும்புவதாகவும் கூறினார். அரசன் பக்தி உள்ளவர்களிடம் தான் பண்புகள் இருக்கும், பண்புகள் உள்ளவர்களிடம் தான் பதவி இருக்க வேண்டும் என தனது விருப்பத்தைத் தெரிவிக்க, திருவாதவூரன் முதலமைச்சர் பொறுப்பை ஏற்றார். அவரது ஆட்சித் திறமையை அறிந்த மன்னர் அவருக்கு, ஆடை ஆபரணங்கள், முத்து பல்லாக்கு, வெண்கொற்ற குடை, ஆகிய சிறப்புகள் செய்து “தென்னவன் பிரம்ம ராயன்” என்ற பட்டத்தையும் சூட்டினான். மாணிக்கவாசகரது வாழ்க்கை, திருவிளையாடல் புராணம் என்ற நூலில் பெரும்பாட்டி புலியூர் நம்பிகள் மற்றும் பரஞ்சோதி முனிவரால் விரிவாக கூறப்பட்டுள்ளது.

மாணிக்கவாசகரது நூல்களும் – ஆன்மீக, சமய கருத்துக்களும்

திருவாசகம், திருக்கோவையார் ஆகிய இரண்டும் மாணிக்கவாசகரது நூல்கள்.

திருவாசகம்

51திருப்பதிகங்களாக, 656 பாட6ல்களைக் கொண்டது. திருவாசகம் தமிழ்வேதம் என அழைக்கப்படுகிறது. மேலான கருத்துகளையும் சிறந்த சொல் ஓவியத்தில் அமைக்கும்பொழுது அது வேதம் எனப்படுகிறது. பழங்காலத்தில் தோன்றிய முனிவர்களும், ரிஷிகளும், தாங்கள் பெற்ற இறை அனுபவத்தை, வட மொழியில் எடுத்துரைத்தனர். அவை வேதம் எனப் பெயர் பெற்றன. இறையனுபூதி பெற்ற பெருமக்கள் தங்கள் அனுபூதியில் கண்டறிந்த உண்மைகளை எந்த மொழியில் எழுதினாலும் கணிதம்(?) தானே. இசையை எந்த மொழியில் வெளிப்படுத்தினாலும் இன்னிசைதானே. அவ்வாறே இறைத்தத்துவம், எந்த மொழியில் எடுத்துரைக்கப்பட்டாலும் அது வேதமே. எனவே திருவாசகத்தை தமிழ்மொழியில் அமைந்த வேதம் எனலாம்.

திருவாசகம் உபநிடத்துக்கு ஒப்பானது. தத்துவம் என்பது மெய்ப்பொருள் ஆகும் பரமாத்மாவை தத்துவம் எனக் கூறுவதுண்டு. இறைவன் உலகைக் கடந்தும், உலகில் கலந்தும் இருக்கின்றான். அணுவிலும் அண்டத்திலும் நிகழ்வது எல்லாம் ஈசன் செயலே. ஒவ்வொரு ஜீவனிடத்தும் அடங்கியுள்ள தெய்வீகத் தன்மைகள் யாவற்றையும் திருவாசகம் விளக்குகிறது. தத்துவ விளக்கத்திற்கு முடிவான பிரமாணமாய் அமைந்திருப்பது உபநிடந்தங்கள் அவைகளுக்கு வேதத்தின் அந்தம் அல்லது வேதாந்தம் என்னும் பெயர் வந்துள்ளது. தத்துவம் அல்லது மெய்ப்பொருளை நேரே தரிசித்தவர்கள் எல்லா காலங்களிலும் இருப்பவர்கள். இடைக்காலத்தில் தோன்றிய ரிஷிகளில் ஒருவர் மாணிக்கவாசகர். தமது ஆன்மீக சாதன வகைகளையும் அனுபூதியின் படித்தரங்களையும் அவ்ர் நன்கு விளக்கியிருக்கிறார். எனவே அவருடைய கூற்றுக்கள் உபநிடதங்களுக்கு ஒப்பானது என்று கூறுவது சரியே.

திருவாசகம், சொல் அழகு ஆகிய இரண்டும் அமையப்பெற்றது. திரு= அழகு, தெய்வத்தன்மை, விரும்பப்படும் வளமையது(?) என பொருள்படும். எனவே தான் “திருவாசகத்துக்கு உருகார் ஒருவாசகத்துக்கும் உருகார் ” –என போற்றப்படுகிறது. இராமலிங்க அடிகள் வான் கலந்த மாணிக்கவாசக நின்வாசகத்தை நான் கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ்சாற்றினிலே, தேன் கலந்து, பால் கலந்து, செழுங்கனித் தீஞ்சுவை கலந்து ஊண் கலந்து உவட்டாமல் இனிப்பதுவே – என்கிறார்.

நால்வர் நான்மணிமாலை என்னும் நூல் “திருவாசகம் அங்கு ஒரு கால் ஓதின், கருங்கல் மனமும் கரைந்துகக் கண்கள் தொடு மணற்கேணியிற் அரண்டு நிர்பய,மெம் ம்மயிர் பொடிப்ப விதிர் விதிர்ப் பெய்தியன்பராகு நான்றி மன்மதை உலகில் மற்றைபரிவரே “ (?)-என பெருமையாக பேசுகிறது. திருவாசகம் என்னும் தேன் கலவையால் ஈர்க்கப்பட்ட போப்பையர் இதன் திறம் வியந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.பண்டிதமணி கதிரேசன் செட்டியார் போன்ற பத்துக்கும் மேற்பட்ட அறிஞர்களால் உரை எழுதப்பட்ட உயர்வினை பெற்றது திருவாசகம். இவ்வாசகம், இராமலிங்க அடிகள், தாயுமானவர் போன்றோருக்கு வழிகாட்டியாக அமைந்த வளமையது. தமிழில் வழிபாடு நிகழ்த்துவதற்கு மிக ஏற்ற நூலாக கருத்தப்படுகிறது.திருவாசகம், பல காலங்களில் பல இடங்களில் பாடப்பட்டது.

மாணிக்கவாசகரது ஆன்மீகக் கருத்துக்கள் :
  • திருவாசகம் மாணிக்கவாசகரது ஆன்மீக வரலாற்றையும் ஆன்மீகத்தில் படிப்படியாக பெற்ற வளர்ச்சியையும் எடுத்துக் காட்டுவதாக அமைகிறது. ஆன்மீக நாட்டத்தின் படித்தரங்களை கீழ்கண்டவாறு தெளிவுபடுத்துகிறார்.
  • பிறவி வாசனை காரணமாக மனதில் புகுந்துள்ள சிற்றியல்புகள்
  • அந்த சிற்றியல்புகளையும் களையும் முறைகள்
  • இறைவனை நாடுகிறவர்கள் பெற வேண்டிய பேரியல்புகள்
  • அப்பேரியல்புகளை வளர்க்கும் முறைகள்
  • அருள்தாகம் கொள்ளுதல்
  • அருளைப் பெறுதல் – அருளில் தோய்தல்
  • இறைவனைக் காணுதல்
  • இறைவனோடு உறவு கொள்ளல்
  • பக்தியை பெருக்குதல்
  • பக்தி பராபக்தியாக வடிவெடுத்தல்
  • பரதத்துவ தரிசனம் பெறுதல்
  • பக்திகளில் இரண்டற கலத்தல்
  • இவ்வாறு இறைவனோடு இரண்டற கலப்பதற்கான வழிமுறைகள்
  • அதாவது ஆன்மீக சாதகனுக்கு கிடைக்கின்ற இரு வாய்ப்புகள்
  1. நல்ல குருவைப் பெறுதல்
  2. நல்லோர் இணக்கம் – சத்சங்கம்

இறைவனை அடையும் நிலையில் உள்ள ஆன்மாவுக்கு இப்ப்ரபஞ்சம்,மாயை, கர்வம், ஆணவம், என்ற மும்மலங்களாக வடிவெடுக்கிறது. ஜீவன், பரமனோடு இரண்டறக் கலக்கிறபோது இம்மலங்களும் அகன்று விடுகின்றன.மெய்ப் பொருள் நாட்டத்தில் கண்ணும் கருத்துமாக இருப்பவன் பிரதிபந்தம் எதிலும் கூட்டுண்டு விடக் கூடாது. சமயம் என்னும் சலக்கினுள்(?) சிக்கிக் – கொள்ளலாகாது. இனப்பற்று,மொழிப்பற்று சமயப்பற்று என்ற எல்லைகளை கடந்தவனாக இருக்க வேண்டும். மாணிக்க வாசகர் அத்தகைய தெளிந்த பர ஞானியாக பரிணமித்தார்.

பரமனும் பக்தனும்

இறைவன் தனது அடியார்கள் தன் மீது கொண்டுள்ள பக்தியை உலகு அறியச் செய்ய அற்புதங்கள் நிகழ்த்துவது உண்டு. அத்தகைய அதிசயங்கள் மாணிக்க வாசகர் வாழ்க்கையிலும் சிவ பெருமானால் நிகழ்த்தப்பட்டது.

மாணிக்க வாசகர் மதுரையில் பாண்டிய மன்னனின் முதலமைச்சராக சீரிய முறையில் பணியாற்றிய காலத்தில், ஒற்றர்கள் மூலமாக,கிழக்கு கடற்பகுதிக்கு சிறந்த அரபு நாட்டு குதிரைகள் விற்பனைக்கு வந்துள்ளதாக மன்னருக்கு செய்தி எட்டியது. மன்னர் 10,000 போர் காசுகளோடு மாணிக்க வாசகரை, குதிரைகள் வாங்கி வர அனுப்பி வைத்தார். ஆலவாய் பெருமானை வணங்கி அமைச்சர் குதிரை வாங்கப் புறப்பட்டார்.

கிழக்கு கடற்கரை நோக்கி பயணித்த போது. திருப்பெருந்துறை என்ற ஊரை அடைந்த போது ‘சிவ ஆகம ஒலி'(?) ஒலி கேட்டு அதனால் ஈர்க்கப்பட்டு ஒலி வந்த திசை நோக்கி சென்ற மாணிக்க வாசகர், ஒரு சோலையில் இருந்த மரத்தடியில் ஒரு சிவ ஞானியையும், சிவனடியார்களையும் கண்டு மெய் மறந்தார். சிவ ஞானியார் எல்லையில் ‘சிவ ஞான போகம்’ என்ற நூல் கண்டு அதன் பொருள் என்ன என்று வினவினார். சிவம்- முழுமுதற் கடவுள். ஞானம் – ஆகிக் கடவுளை அறிதல் போதும் – தெளிதல். எனவே, சிவனை அறிந்து கொள்வதற்கான நூல். நீ விரும்பினால் உனக்கு இதை கற்பிக்கிறேன் என்று துறவி கூறினார். ஞானியார் சிவ தீக்ஷை சில தீக்கை அளித்து அவரது காதில் ‘நம: சிவாய’ என்னும் மந்திரத்தைச் சொல்லி அவரை அடியாராக மாற்றினார் ர. துறவி தனது திருவடிகளை தலை மீது வைக்க சிவ ஞானம் பெற்ற ‘திருவாதவூரன்’ பாடல்களைப் பாடினார். திருவாதவூரை ஆட்கொள்ளத் துறவியாக வந்த சிவபெருமான் மகிழ்ந்து, “நீ பாடிய பாடல்கள் ஒவ்வொன்றும் மாணிக்கமாக இருக்கிறது.எனவே நீ ‘மாணிக்க வாசகர்”என பெயர் சூட்டி ஆசீர்வதித்தார்.

துறவி அவரை ஆலயத்தைப் புதுப்பிக்குமாறு ஆணையிட்டு விட்டு மறைந்து விட்டார். மாணிக்க வாசகர் தன்னை வந்து ஆட்கொண்டது இறைவன் என உணர்ந்தார். தாம் வந்த காரியத்தை மறந்து ஆலயத் திருப்பணியில் ஈடுபட்டார். செய்தி மன்னனுக்கு எட்டியது.அரசன் மாணிக்க வாசகரை அழைத்து வர ஓலை அனுப்பினார்.மாணிக்க வாசகர் கலக்கமுற்று இறைவனிடம் முறையிட இறைவன் அருள் வடிவாகத் தோன்றி, “அஞ்ச வேண்டாம்,ஆவணி மாதம் மூல நாளில் குதிரையுடன் வருவோம் மன்னனிடம் சென்று சொல்” எனக் கூறி மறைந்தார். அவ்வாறே மாணிக்க வாசகரும் மன்னனிடம் சென்று கூறினார். மன்னன் மகிழ்ந்தான். ஆனால் மற்ற அமைச்சர்கள் அவ்வாறு குதிரைகள் வாங்கப்படவில்லை என ஒற்றர்கள் மூலமாக அறிந்து மன்னனிடம் புகார் செய்தார்.மன்னன் சினம் கொண்டு மாணிக்க வாசகரை சிறையில் அடைத்துக் கொடுமைப்படுத்தினார். மாணிக்கவாசகர் இறைவனிடம் மீண்டும் முறையிட்டார். இறைவன் நரிகளைப் பரிகளாக்கி உரிய நாளில் கோட்டை வாசலுக்கு அழைத்து சென்றார். குதிரைகள் வந்துள்ளதை அறிந்த மன்னன், மாணிக்க வாசகரை சிறையிலிருந்து விடுவித்து அவரிடம் மன்னிப்பும் வேண்டினான். குதிரைத் தலைவனாக வந்த இறைவன் குதிரைகளை கயிறு மாற்றிக் கொடுத்து விட்டுச் சென்று விட்டார்.

அன்று இரவே பரிகள். நரிகளாக மாற, மதுரை நகரமே அச்சத்தில் ஆழ்ந்தது. மன்னன் கோபமுற்று, மாணிக்க வாசகரைத் தண்டித்து கடும் வெய்யிலில் வைகை ஆற்று மணலில் நிற்க வைக்குமாறு உத்தரவிட்டான். மாணிக்க வாசகர் தன் துன்பம் குறித்து இறைவனிடம் முறையிட சிவபெருமான் கங்கையை அசைக்க வைகையில் வெள்ளம் கரை புரண்டு நகரமே மூழ்கும் அபாயம் ஏற்பட்டது. தன் தவறை உணர்ந்து மன்னன் மாணிக்க வாசகர் இறைவனே வேண்ட வைகை சினம் தனித்து வெள்ளம் தணிந்தது.(?)

பிட்டுக்கு மண் சுமந்த நிகழ்ச்சி

மேற்கண்ட இறைவனின் திரு விளையாடல்களால் மாணிக்கவாசகரின் பக்தி திறமறிந்த பாண்டிய மன்னன், மனம் மாறி மன்னிப்பு வேண்டியதோடு,மாணிக்க வாசகரை அவரது இறைபணியை தொடர அனுப்பி வைத்தான். மாணிக்க வாசகரும், திருப்பெருந்துறை சென்று திருப்பணியை நிறைவேற்றினார்.

முடிவுரை

இறை தாகம் மேலிட்ட மாணிக்க வாசகர், ஒரு நாள், திருப்பெறுந்துறையில் சிவபெருமான் தனக்கு ஞான குருவாக காட்சி அளிக்க வேண்டும் என வேண்டிய மாணிக்க வாசகரை, நான் எழுந்தருளியிருக்கும் பலபகுதிகளுக்குச் சென்று பாடி, இறுதியில் தில்லைக்கு வந்து என் திருவடிகளை அடைந்து கயிலாயம் வருக எனப் பணிந்து மறைந்தார்.அவ்வாறே மாணிக்க வாசகரும் சிவ தலங்களை தரிசித்து,இறுதியாக திருச்சிற்றம்பலத்தில் இறைவனோடு இரண்டறக் கலந்தார்.பரா பக்தியால் இறைவனை அறிந்து, இரண்டற கலந்து விட்டோம் என்கிற ஆணவமின்றி ‘பரஞானி’ என்கிற உயர்நிலை பெற்றவர் மாணிக்க வாசகர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: