தாய்நாட்டுக்கு வெற்றிகரமாகத் திரும்புதல்
தாய்நாட்டுக்கு வெற்றிகரமாகத் திரும்புதல்
விவேகாநந்தரும் அவரது சீடர் குழுவும் 1897ம் ஆண்டு ஜனவரி 15ந் தேதி கொழும்பு வந்து சேர்ந்தனர். அவர் திரும்பிய செய்தி இந்தியாவை வந்தடைந்தது. மக்கள் எல்லோரிடமும் அவரை வரவேற்கவேண்டும் என்ற ஆர்வம் கொழுந்துவிட்டெரிந்தது. மேல் நாடுகளில் இந்தியாவின் கௌரவத்தை உயர்த்தியதுடன், தேச மக்களின் மனோபலத்தையும் உயர்த்திய அவரைக் கௌரவிப்பதில் இந்திய முழுவதும் ஒன்றுபட்டது. சிறிதும் பெரிதுமான ஒவ்வொரு நகரத்திலும் அவரைப் பொருத்தமான முறையில் வரவேற்கக் கமிட்டிகள் உருவாகின. ரோமெய்ன் ரோலண்ட் கூறுவது போல, கரை காணாத ஆர்வங் கொண்ட மக்களுக்கு, அவர் அளித்த நற்செய்தி, ராமனும் கிருஷ்ணரும் சிவனும் நடமாடும் தேசத்துக்குப் புத்துயிரளிக்கும் சங்க நாத முழக்கமாக அமைந்தது. மக்களின் ஆத்ம சக்தியை நினைவுபடுத்தி, உயிர் பெற்று முன்னேறுங்கள் என்று முழங்கினார். ஆன்மீக முயற்சிக்குத் தளபதியாக விளங்கி, அதற்கான திட்டம் தயாரித்து, எல்லோரும் ஒன்று கூடி ஒழுங்கு சேர இம்முயற்சியில் ஈடுபடுமாறு பணித்தார். “என் இந்தியாவே, எழுமின். உங்கள் பிராண சக்தி எங்கே? நித்ய வஸ்துவான ஆத்மாவைத் தேடியடையுங்கள்” என்று உபதேசித்தார்.
சென்னையில் பொதுமக்களுக்காக ஐந்து முறை பேசினார். ஒவ்வொன்றும், பலவீனத்தையும் மூடநம்பிக்கையையும் கலைந்தெரிந்து விட்டு, புதிய இந்தியாவை நிர்மாணிக்க வேண்டும் என்ற முழுக்கவொலியாகும். “பிரபஞ்ச முழுவதும் ஆன்மீக அடிப்படையில் ஒன்று” என்று பிரசாரம் செய்கின்ற மதந்தான் நம் நாட்டின் வாழ்வு என்ற இசைக்கு ஆதார சுருதி என்பதை வலியுறுத்தினார். இந்த உணர்வு நன்கு வலுவடைந்தால், ஒவ்வொன்றும் தானாகவே நன்றாக நடைபெறும். அத்துடன் கூட, மேனாட்டினரைக் காப்பியடிக்கும் வழக்கத்தையும், பழைய மூடநம்பிக்கைகளை ஆராயாமல் ஏற்றுக் கொள்வதையும் ஜாதி வேறுபாட்டினையும் மற்றும் பல குறைபாடுகளையும் கடுமையாக கண்டித்தார்.
விவேகானந்தர், பிப்ரவரி 20ஆம் தேதி கல்கத்தா வந்து சேர்ந்தார். அவர் பிறந்த அந்நகரில் அவருக்கு மாபெரும் வரவேற்பளிக்கப்பட்டது. இங்கு அவர் மனமுருகும் வகையில் குருநாதருக்கு புகழ்மாலை சூட்டினார், “எண்ணங்களாலோ, சொற்களாலோ, செயல்களாலோ ஏதாவதொன்று என்னால் சாதிக்கப்பட்டிருந்தால், உலகத்திலுள்ள ஒருவருக்கு உதவி செய்த வகையில் ஒரு வார்த்தையாவது, என் உதடுகளில் இருந்து வெளிவந்திருந்தால், அதற்கு உரிமை கொண்டாட நான் தகுதியற்றவன். நான் அவருடைய கருவி இந்நாடு முன்னேற வேண்டுமென்று ஆசைப்பட்டால், நான் கூறுவதை நம்புங்கள். அவரது திருப்பெயரைக் கொண்டே, ஒன்றுகூட வேண்டும்”.