ஜன்மாஷ்டமி-உட்கருத்து
ஜன்மாஷ்டமி-உட்கருத்து
தர்மத்தை நிலைநிறுத்தவும், கீதாசிரியராக தர்மநெறிகளை உலகில் பரப்பவும், துவாபரயுகத்தில் அவதரித்த, ஸ்ரீ கிருஷ்ணரின் ஜெயந்தியைக் கொண்டாடும் புனிதநாள் ஜன்மாஷ்டமி.
ஆவணி மாதம், கிருஷ்ண பக்ஷம் (தேய்பிறை) அஷ்டமி திதியில், மதுராபுரியில், இருள் நிறைந்த சிறைக்கூடத்தில், வசுதேவர்தேவகிக்கு எட்டாவது குழந்தையாக ஜோதிஸ்வரூபனாக ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்தார். இதன் உட்பொருள்: இருள் நிறைந்த இதயச்சிறையில் இறைவன் அவதரித்தால், இதயத்தில் ஆன்மீக ஒளி நிறைந்து பஞ்சபண்புகள் மலர்ந்து மணம் வீசும்.
மதுராபுரி சிறையில் பிறந்தாலும், அவரது குழந்தைப் பருவ லீலைகளைக் காணும் பாக்கியம் வசுதேவர்-தேவகிக்குக் கிடைக்கவில்லை. அந்தப் பாக்கியத்தைப் படிப்பறிவே இல்லாத கோகுலத்தில் உள்ள மக்களுக்குத் தந்தார் பகவான். ஆதலால் அவரது ஜெயந்தியைக் கோகுலாஷ்டமி என்று அழைக்கிறோம். இதன் மூலம் பக்தி செலுத்த படிப்பு தேவையில்லை என்பது புலனாகிறது.
எட்டாவது குழந்தை என்பதன் முக்கியத்துவம் : பதஞ்சமுனிவர் இயற்றிய ராஜயோகம் (அ) அஷ்டாங்க (எட்டுவித சாதனா) யோகத்தில் உள்ள சமாதி என்னும் எட்டாவது நிலையைக் குறிக்கிறது. சம+ஆதி. அதாவது ஜீவாத்மா, பரமாத்மா இரண்டும் ஒன்றே (ஆதிக்குச் சமம்) என்ற அத்வைத நிலை. ஆதலால் ஆனந்தம் அல்லது பரவசநிலை அடையப்படுகின்றது.
இந்த உயர்ந்த எட்டாவது நிலையை அடைய, ஏழுபடி (ஏழு சாதானா)களைக் கடக்க வேண்டும். யமம் (நீதிநெறி ஒழுக்கம்), நியமம் (ஆன்மீக ஒழுக்கம்), ஆசனம் (யோகாசனம்), பிராணயாமம் (சீரான சுவாசம்), பிரத்யாஹாரம் (இந்திரியங்களைக் கட்டிப்போடுதல்), தாரணம் (மனக்குவிப்பு), தியானம் (இறை சிந்தனை மட்டும்) ஆகிய ஏழுபடிகளைக் கடந்துவிட்டால், அகக்காட்சியில் இறைவன் தோன்றுவார்.
பகவானுக்கு பரமான்னம் படைத்து, கிருஷ்ண ஜெயந்தியைக் கொண்டாடுகிறோம். பரமான்னம் என்பது வெல்லம் என்ற இனிப்பு சேர்த்து சமைக்கப்பட்ட அன்னம். இதன் உட்பொருள்: இனிமையான, தூய்மையான, உலகளாவிய அன்பு என்ற அன்னத்தை இறைவனுக்குப் படைக்க வேண்டும். அதுவே பரம் (உயர்ந்த) அன்னம். பால், தயிர், நவநீதம் (புத்தம் புது வெண்ணெய்), அவல், சீடை, நாவல்பழம், வெள்ளரிப்பிஞ்சு போன்றவைகளையும் படைக்கின்றோம். நவநீதம் என்பது இறைவனுக்குப் படைக்க வேண்டிய தூய்மையான இதயத்தைக் குறிக்கிறது. காய் வகைகளில் வெள்ளரியை மட்டுமே பிஞ்சாக இருக்கும் போது ருசித்துச் சாப்பிடுகிறோம். வெள்ளரிப்பிஞ்சு எந்த அளவுக்கு ருசியாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு கிருஷ்ணரின் இளமைக் கால லீலைகள் பரமானந்தமாக இருக்கின்றன.
அரிசி மாவினால் பாதச் சுவடுகளை வீட்டின் தரையில் பதிப்பதன் உள்ளார்த்தம்: கண்ணன் தன் சிறிய பாதங்களை பாலில் தோய்த்தார். கோபியர்கள் கண்ணனைத் தேடி வந்தனர். கண்ணில் படவில்லை. பாதச்சுவடுகளைப் பின்தொடர்ந்து சின்னக் கண்ணனை சிக்க வைத்தனர். அப்போது அவர்களுக்கு உதயமான ஞானம் : ‘கண்ணனின் பாதச்சுவடுகளைப் பின்பற்றினால், அவன் நம்மிடம் சிக்குவான்’.
கம்சன் என்ற அசுர சக்தியை அழித்த அவதாரத்தின் ஜெயந்தியைப் பக்தியுடன் பாரதீயர்கள் கொண்டாடுகிறார்கள். ஆணவம், கோபம், பேராசை, வெறுப்பு ஆகிய தீய குணங்களே அசுர சக்திகள். நமது இதயத்தில் இறைவன் பிறந்தால், அசுர சக்திகள் அனைத்தும் அழிந்துவிடும் என்பது இதன் முக்கியத்துவமாகும்.
ஜன்மாஷ்டமியன்று, சத்சங்கம், பஜன் பாடுதல் மற்றும் ஊஞ்சல் (ஜுலா) உற்சவம், ஆகியவற்றில் பங்குபெற்று ஆன்மீக முன்னேற்றம் அடையவேண்டும். ஊஞ்சல் உற்சவ உட்பொருள்: இதயம் தான் ஊஞ்சல். நாம சங்கீர்த்தனம் மூலம் அந்த ஊஞ்சலில், தெய்வத்தை எழுந்தருளச் செய்து, ஊஞ்சலை ஆட்ட வேண்டும். நாம மகிமையால், அகத்தில் உள்ள ஆறு உட்பகைவர்கள் அகன்று, பஞ்ச பண்புகள் மலர்கின்றன. எந்த இதயத்தில், பஞ்ச பண்புகள் மலர்கின்றதோ, அங்கே சத்சித் ஆனந்தமான இறைவன் நிரந்தரமாக எழுந்தருள்வார். “ஆடலும் நீயே! ஆடுவதும் நீயே! ஆட்டுவிப்பதும் நீயே! சர்வமும் நீயே சாயிகிருஷ்ணா!”
“பிறந்த தினத்தைக் கொண்டாடுவதைக் காட்டிலும், கிருஷ்ணரது கட்டளைகளை நடைமுறைப்படுத்து. அவரைப் பின்பற்று. கீதை தான் கிருஷ்ணன். கிருஷ்ணன் தான் கீதை.”– ஸ்ரீ சாயிபாபா.