நாக பஞ்சமி உட்கருத்து

Print Friendly, PDF & Email
நாக பஞ்சமி உட்கருத்து

நாகபஞ்சமி ஒவ்வொரு வருடமும் சிரவண (ஆவணி) மாதம் சுக்லபட்ச பஞ்சமி அன்று கொண்டாடப்படுகிறது. மகாராஷ்டிரா, குஜராத், மேற்கு வங்கம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இந்த பண்டிகை மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. தமிழ்நாட்டில் ஆடி மாதத்தில் சில குடும்பங்கள் புற்றுக்கு பால் தெளித்தும், நாக விக்ரகங்களுக்கு பூஜை செய்தும் வழிபடுகிறார்கள். வட மாநிலங்களில் சுவற்றில் நாகங்களை வரைந்தும், நாக விக்ரகங்களுக்கு அபிஷேகம் செய்தும், மஞ்சள், குங்குமம், மாலைகள், பூக்கள் அணிவித்தும் நிவேதனம் ஆரத்திகள் செய்து பூஜை செய்கிறார்கள். அந்தணர்களுக்கு தானங்களும் வழங்கப்படுகின்றன.

கர்நாடகாவில், விட்டல் என்ற இடத்திலும் சுப்ரமண்யா என்ற இடத்திலும் கோவில் அறைகளில் உயிருள்ள நாகங்கள் இருக்கின்றன. நாகபஞ்சமி அன்று இந்த கோவில்களில் நாகங்களுக்கு விசேஷ பூஜைகள் நடத்தப்படுகின்றன.

சூரியனையும், நாகங்களையும் வழிபடும் வழக்கம் சரித்திர காலத்துக்கு முன்பாகவே இருந்துள்ளது. மஹா விஷ்ணு சேஷ நாகத்தின் மீது துயில்கிறார். சிவனுக்கு நாகம் ஆபரணமாக உள்ளது. கணபதியின் வயிற்றினை நாகம் சுற்றிக் கொண்டிருக்கிறது. சக்தி, மாரியம்மா, துர்கா தேவிகள் தலைக்கும் நாகங்கள் குடையாக அமைந்துள்ளன.

பகவான் கிருஷ்ணர், காளிங்கன் என்ற பாம்பின் மீது நர்த்தனம் செய்து காளிங்கனின் கர்வத்தை அடக்கினார். அந்த தினமே நாகபஞ்சமியாக கொண்டாடப்படுகிறது என்று சில புராணங்கள் கூறுகின்றன.

நமது உடலில் மூலாதாரச் சக்கரத்தில் அமைந்துள்ள குண்டலினி சக்தி சிறிய பாம்பு வடிவமாக அமைந்துள்ளது. யோகிகள் இந்த சக்தியை தியான யோகத்தினால் தலையில் அமைந்துள்ள சஹஸ்ரார சக்கரத்திற்கு உயர்த்தும்போது சமாதி நிலையை அடைகிறார்கள். ஆதலால் பாம்பு சக்தியின் அடையாளச் சின்னமாக கருதப்படுகிறது. நாகங்களை வழிபடும் வழக்கம் இதனாலும் ஏற்பட்டது.

நாகங்கள் சுற்றுச்சூழலில் ஒரு முக்கியமான அங்கம் வகிக்கின்றன. அவைகளுக்குத் துன்பம் விளைவிக்காமல் இருப்பது நமது கடமை என்று நாகபஞ்சமி நாளில் உறுதி எடுத்துக் கொள்வது நல்லது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: