காலத்தைப் பராமரித்தல்

Print Friendly, PDF & Email
காலத்தைப் பராமரித்தல்

ஒவ்வொருவரும் “எவ்வளவோ செய்ய வேண்டுமென்று எண்ணுகிறேன். ஆனால் நேரமில்லை” என்று சொல்வதைக் கேட்கிறோம். பஜனைக்குப் போக “நேரமில்லை” என்று சிலர் கூறுவர். இது ஒப்புக்கொள்ளக் கூடியதல்ல என்கிறார் பகவான். “நேரமில்லை” என்று ஒரு முக்கிய பணியை ஒதுக்குபவன் முட்டாளே என்கிறார் பகவான். நேரமில்லை என்றால் என்ன அர்த்தம். அவர்கடிகாரம் நின்று விட்டதா? இல்லை அவர் செய்து கொண்டிருக்கும் வேலையை விட்டு வேறு எதையும் செய்ய நேரமில்லை என்பதே வாதம். ஆனால் இல்லாதது என்னவென்றால், செய்ய வேண்டுமென்ற உத்வேகம்,”மனமிருந்தால் மார்க்கமுண்டு”என்பது மூதுரை. ஆகவே செய்ய வேண்டுமென்ற ஒரு உறுதியை வளர்த்தால் நேரம் எப்படியும் கிடைக்கும். அதற்கென்று மனதில் நேரம் வகுத்து சிந்தித்தால், வெளியிலும் அச்செயலைச் செய்யமுடியும்.

ஒரு சிறு பெட்டியில் சில புடவைகளும் துணிமணிகளும் வைக்க வேண்டுமாயின், அவைகளை ஒழுங்காக மடித்து வைத்தால் 20 உருப்படிகள் கொள்ளலாம். ஆனால் மடிக்காமல் சுருட்டி வைத்தால் 10 கூட கொள்ளாமல் போகலாம். முதலில் கொள்ளாமலிருந்த பெட்டியில் எப்படி 20 உருப்படிகளுக்கு இடம்கிடைத்தது என்றால் அவற்றைச் சரியாகப் பராமரிப்பதால் தான் கிடைத்தது. .அதேபோல மனதும் எண்ணங்களும் கூட சீராக அமைக்கப்பட்டால், அதிக எண்ணங்களையும் பராமரிக்கலாம்.சுவாசம் கூட கட்டுப்பாட்டில் இருக்கும். 9 அம்ச ஒழுங்கு முறைகளை நாம் சரிவர அனுசரித்து வந்தால் மன அமைதி கிட்டும். அதிகமான வேலை செய்ய நேரமும் கிடைக்கும். செய்யும் பணியில்தன்மையும் தரமும் உயர்ந்ததாக விளங்கும்.

மனதில் இன்பம் நிரம்ப வேண்டுமானால் ஆசைகளைக் குறைக்க வேண்டும். அதனால்தான் பாபா நமக்கு நான்குவித வரையறைக் கட்டுப்பாட்டின் வேலைகளை வற்புறுத்தியுள்ளார். அவை முறையே உணவு, பணம், சக்தி, அறிவு இவற்றில் கடைப்பிடிக்க வேண்டிய சிக்கனம். மற்ற ஆசைகள் தானாகவே கட்டுப்படும்.

ஆசைகளின் உச்சவரம்பு:

உணவை வீணாக்கலாகாது. உணவினால் ஏற்படும் இறப்புகள் உணவு குறைவினால் ஏற்படும் இறப்புகளைவிட மிகவும் கூடுதலானது என்று அமெரிக்கப் பொருளாதார நிபுணர் ஜான் கால்பிரேத் கூறியுள்ளார். இது உண்மையெனவே ஒப்புக்கொள்ள வேண்டும். உணவின் அளவையும், தரத்தையும் கட்டுப்படுத்தினால்,மனதும் கட்டுப்பாட்டில் இருக்கும். பட்டினிகிடக்க வேண்டியதில்லை. சரியான அளவில் குறித்த நேரத்தில் உணவை உட்கொள்ள வேண்டும். தேகமும் மனமும் சரியாக இயங்கத் தேவையான உணவு போதுமானது.

பணம்:

அதிகமாகப் பணம் சம்பாதிக்க ஆசைப்படுவது பேராசை. ஓர் எல்லைக்குள் நமக்கு அத்தியாவசியமான தேவைக்காகச் சம்பாதிக்க வேண்டியதுதான். அதை நாம் பெறுவதில் காட்டும் சிரத்தை ஈவதிலும் இருக்க வேண்டும். நல்ல முறையில் கண்காணிப்புடன் செலவு செய்வதிலும் கட்டுப்பாட்டுடன் செய்ய வேண்டும்.

சக்தி:

சக்தியையும் அனாவசியமாகத் தேவையற்ற வைக்காகச் செலவிடுவது தவறு. நல்ல வழியில் பிறருக்கு உதவும் செயல்களிலேயே முக்கியமாக ஈடுபடுதல் சாலச் சிறந்தது.

அறிவு:

அறிவாற்றலைத் துஷ்பிரயோகம் செய்யலாகாது. உதாரணமாக, ஒரு டாக்டர் ஒரு நோயாளியிடம ரூ10,000 கொடுத்தால் தான் உன் நோயைக் குணப்படுத்த அறுவைசிகிச்சை செய்வேனென்று கூறுவது தவறு. இது, தான் கற்ற வித்தையைச் சரியான விதத்தில் பயன்படுத்தாத குற்றமேயாகும். விஞ்ஞானி தனது ஆராய்ச்சியால், நாசம் விளைவிக்கும் அணு ஆயுதங்களையே தயாரிக்க உதவினால் அது துஷ்பிரயோகமே. நாம் பெற்ற ஆற்றலை, அறிவுத்திறனை, தொழில்நுட்பத்தை மற்றவர்களின் நன்மைக்காக உலக மக்களின் உயர்வுக்காகவே பயன்படுத்த வேண்டும்.

பகவான் ஹிஸ்லாப் மூலம் வெளியிட்ட ஒரு உபாயத்தை அனைவரும் கடைப்பிடிப்பது நல்ல பயன்தரும். அதாவது, நாம் எவ்வளவோ நல்ல விஷயங்களை அரும் பெரும் கருத்துகளைப் பற்றி படிக்கிறோம். அவற்றை மறக்காமலிருக்க, முக்கியமான கருத்துகளை ஒரே அளவுள்ள ஒவ்வொரு காகிதத்தில் குறித்து வைத்து, அவைகளை இணைத்து வைக்க வேண்டும்.

உதாரணமாக, இவை பகவானின் உபதேசங்களிலிருந்து தொகுக்கப்படலாம். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் மனக்குழப்பம் ஏற்படும்போது, இவற்றைப் புரட்டிப் பார்த்தால் ஏதோ ஒரு பக்கம் வரும். அதிலுள்ள அறிவுரை இந்த மனக்குழப்பத்தைப் போக்க உதவும். இது சாயி உபதேசங்களை ப்பற்றிப் படித்ததாகவும் ஆகும். மற்றும் வாசகர் வட்டங்களில் சேர்வதால், பாலவிகாஸ் குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் பகவானின் அரிய உபதேசங்களைப் பற்றிப் புரிந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கும். ஒற்றுமையும் தூய்மையும் தெய்வத்துக்கு வழி காட்டுபவை என்பதை உணர்த்தலாம்.

அடுத்து “கோபம்” என்பது நமக்கு முக்கிய எதிரி என்பதைபகவான் கூறி வந்துள்ளார். மேலே கூறிய சுயசோதனை,மௌனமாய் அமர்ந்திருத்தல் மற்றும் நாமஸ்மரணை, பிரார்த்தனை,பஜனை போன்ற பயிற்சிகளால் கோபம் வருவது வெகுவாக குறைந்து விடும்.அப்படியும் மீறி நீங்கள் ‘கோப’த்திற்கு அடிமையாக நேரிட்டால் முதலில் ஏன் நீங்கள் கோபமடைய நேர்ந்தது என்பதையும் கோபம் கொண்டபின் அதை எப்படி அடக்கி அதிலிருந்து விடுபடுவது என்பதையும் ஆராய வேண்டும்.

கோபம் வந்தால் அதைத் தணிக்க

  1. ஒரு டம்ளர் (Tumbler) குளிர்ந்த நீர் பருக வேண்டும். அது குளுமை அதிகமாகவும் இருக்கக் கூடாது. அதாவது ‘ஐஸ் வாட்டர்’ (Ice Water) போன்றது கூடாது. விஞ்ஞான ரீதியாக ‘கோபம்’ கொள்ளும்போது, ‘ஆட்ரனலின்’ என்ற ஒருவகை இரசாயனப் பொருள் உடலில் விருத்தியாகி அதிகமாகப் பரவும், இது உடலுக்கே அபாயமானது. ஒரு தாய் தனது குழந்தைக்குப் பாலூட்டி கொண்டிருக்கையில், தான் குழாயடியில் வைத்திருந்த பாத்திரத்தை எடுத்துவிட்டு வேறொருத்தி தனது பாத்திரத்தை வைத்திருந் ததைக் கண்டுவிட்டாள், அனல் பறக்கும் கோபத்துடன் குழந்தைக்கு பாலூட்டுவதை விட்டுவிட்டுக் குழாயடியில் சண்டை போட்டுத் தனது பாத்திரத்தை வைத்து விட்டுத் திரும்பவும் வந்து குழந்தைக்குப் பாலூட்டினாள். ஆனால் அந்தப் பால் அவள் கோபத்தின் காரணமாக நஞ்சாக மாற அந்தக் குழந்தை இறக்கும்படியாகி விட்டது. இதைக் கூறிய பகவான் மேலும் கூறுவது “ஒரு சில வினாடிகள் கோபத்தால் பாதிக்கப் படுவதால் மூன்று மாதங்கள் அவர் புசித்துவந்த உணவின் சத்தை அது அழித்துவிடும். எத்தனையோ ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்து தான் பெற்ற சக்தியை ஒரு சில வினாடிகள் கோபத்தினால் விசுவாமித்திரர் இழந்துவிட்டார்”. நமக்கு இருப்பது அற்ப ஆயுட்காலமே. இதை நல்ல முறையில் தக்கவைத்துக் கொள்ள கோபத்திற்கு இடமே கொடுக்காமல் இயங்க வேண்டும். குளிர்ந்த நீர் அருந்துவதால் கோபத்தினால் விளைந்த அமில சுரப்புகுறைந்துவிடும்.
  2. இருக்கும் இடத்தை விட்டு விலகிச்சென்று விட வேண்டும். ஏனெனில், கோபமுற்ற இடத்தில் எதிர்மறையான சக்தி அலைகளைச் செலுத்திவிடுகிறீர்கள். ஆகையால் வேறு இடத்தில், சுமுகமான சூழ்நிலையும் அதைவிட நல்ல அலைகளும் நிலவும். இது கோபத்தை அடக்க வழிவகுக்கும். இருவர் சண்டை போட்டுக் கொள்ளும் போது அவர்களைப் பிரித்துவிட முயல்கிறோமல்லவா? ஏனெனில் அந்தச் சூழ்நிலையில் தீயசக்தியின் அலைகள் நிலவுகின்றன அதை விட்டு அப்பால் சென்றால் நலமுண்டு. கோபத்தின் அளவிற்கேற்ப நடந்து செல்லும் தூரமும் இருத்தல் வேண்டும். இந்தச் சக்தி அலைகள் மேல் நோக்கியே செங்குத்தாகச் செல்லும் தன்மை பெற்றவை. குறுக்கே போகமாட்டா. அதனால் தான் படுத்துக் கொண்டிருக்கும் ஒருவர்கோபம் கொண்டால் உடனே எழுந்து உட்கார்ந்து திட்ட ஆரம்பிப்பார். கோபத்தைக் காட்ட எழுந்து தீர வேண்டியுள்ளது. கோபத்தைக் குறைக்கப் படுத்துவிட வேண்டும். ஆனால் இந்த யுக்தியை வீட்டில் பயன்படுத்தலாமேயன்றி நடுக்தெருவில் பயன்படுத்தினால் விபத்துக்குள்ளாகி விடுவீர்கள். அப்புறம் பகவானின் அறிவுரையைக் குறை கூறக் கூடாது.
  3. ஒருவர் கோபப்படும் போது கண்ணாடியில் தனது முகத்தைப் பார்த்துக் கொண்டால் மீண்டும் கோபப்படவே விரும்பமாட்டார். அவ்வளவு கொடூரமாகக் குரங்கு போலாகிவிடும். முகம்,கண்களும் சிவந்து முகமே அவலக்ஷணமாக மாறிவிடும்! தன்னை இந்த நிலையில் பார்ப்பதை எவரும் விரும்ப மாட்டார்கள்.

மேற் கூறியவற்றை சுருங்கக் கூறுவதானால்,மேன்மையடைதல் என்பதே வாழ்க்கையின் குறிக்கோள். இதுவே பகவானின் அறிவுரையுமாகும். நம்முடன் நாமேபோட்டியிடுவதுதான் மேன்மையடைதல் என்பதாகும். இதை அடைய முக்கியமாக மூன்று முயற்சிகள் தேவை. அவை எண்ணம் , மூச்சு, காலம் மூன்றையும் திறமையுடனும் கட்டுப்பாட்டுடனும் பராமரித்தலே, இதுவே மேன்மையடையும் பாதை.

இந்தப் பாதை நமக்கு விவரித்துக் காட்டுவது சத்திய சாயி பாபா அவர்களின் உபதேசங்களே. ஆகவே இதைச் சத்திய சாயி பாதை என்றே கூறலாம். இதை எல்லோருக்கும் உணர்த்த வேண்டும். பகவான் பாபாவின் பற்பல அருளுரைகளிலிருந்தும் உபதேசங்களிலிருந்தும் திரட்டப்பட்டதே இந்த மனித மேன்மை அடைதற்குரிய வழிமுறைகள் என்பதை எல்லோருக்கும் தெளிவாக உணர்த்த வேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: