திருவிழாக்கள்
திருவிழாக்கள்
இந்தியாவில் சமய விழாக்கள் அதிக அளவில் கொண்டாடப்படுகின்றன. வேறெந்த நாட்டிலும் இந்த அளவில் இறுதி விழாக்கள் இல்லையென்று கூறலாம். இந்தியாவிலுள்ள பல்வேறு மதத்தினரும் கொண்டாடும் பல்வேறு திருவிழாக்களிடையே பலபொது அம்சங்கள் உண்டு. சிவராத்திரியன்று ஹிந்துக்கள் விரதங்காத்து, இரவு முழுவதும் கண்விழித்து, இறைவனைப் பிரார்த்தனை செய்கிறார்கள். விரதத்தினால் மனத்தூய்மையும், மனக்கட்டுப்பாடும் ஏற்படுகின்றன. அமாவாசைக்குப்பின் அல்லது பௌர்ணமிக்குப்பின் ஏகாதசிஎன்று அழைக்கப்படும் பதினோராவது நாளன்று. ஆசாரமிகுந்த ஹிந்துக்கள் விரதம் இருக்கிறார்கள். அதே போல, ரம்ஜான் 27- ம் நாளன்று, முஸ்லிம்கள் விரதம் இருக்கின்றார்கள். அன்று தேய்பிறை ஷப்- ஏ – கதர் என்று அழைக்கப்படுகிறது. அன்று இரவு முழுவதும் விழித்திருந்து அல்லாவின் நல்லருளுக்காகப் பிரார்த்தனை செய்கின்றார்கள். அது உயர்நலம் எய்திய இரவு (Nightof ascension)என்று அழைக்கப்படுகிறது. நபிகள் நாயகம் அன்று தான் முதன் முதலாக இறையனுபவம் முழுமையாகப் பெற்று இறைவனுடன் ஒன்றியிருந்தார் என்று கூறப்படுகின்றது.
கிறிஸ்தவர்களும், புனித வெள்ளிக்கிழமையன்று (GoodFriday)விரதம் இருந்து பிரார்த்தனை செய்கிறார்கள், கிறிஸ்துபிரான் சிலுவையில் துன்புற்ற 3 மணிநேரத்தை நினைவுகூறும் வகையில் சர்ச்சில் 3 மணிநேரம் இருந்து பைபிள் படித்து, பிரார்த்தனை செய்து, நல்லுபதேசங்களைக் கேட்டு இறைவனை வழிபடுகின்றார்கள். அன்று தான் ஏசுபிரான் சிலுவையில் அறையப்பட்டார். லென்ட் (Lent)கிறிஸ்துவர்களுக்கு மற்றொரு முக்கியமான காலம். ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக நாற்பது நாட்கள் கொண்டது. இந்த நாற்பது நாட்களும் கிறிஸ்தவர்களுக்கு மிகவும் முக்கியத்துவம்வாய்ந்தவை. கிறிஸ்துபிரான் இறைவனது பணியை மேற்கொண்டு உபதேசம் செய்யப்புறப்படுமுன், நாற்பது நாட்கள் காட்டில் தங்கி, விரதம் இருந்து இறைவனை வழிப்பட்டார். கிறிஸ்தவர்களுக்கு, இந்த நாற்பது நாட்களும் தியானம் செய்து, தன்னை ஆராய்ந்துதிருத்திக் கொண்டு, பரிசுத்தம் பெற்று, இறைவனை நெருங்குவதற்கான ஆன்மீக பயிற்சிகள் கடைபிடிக்கும் நாட்களாகும். இது சாம்பல் புதன் கிழமை (Ash Wednesday)யுடன் துவங்குகிறது. சாம்பல் பச்சாத்தாபத்துக்கும், பணிவுக்கும், எளிமைக்கும் சின்னமாகும். ஹிந்துக்களுக்கு விபூதி எவ்வளவு முக்கியமானதோ, அவ்வளவிற்கு சாம்பல் கிறிஸ்துவர்களுக்கு முக்கியமானதாகும். இறைவணக்கம், மனத்தூய்மை, மனக்கட்டுப்பாடு இவையே, எல்லா மதத்தினரும்(உண்ணாநோன்பு) விரதங்கள் கைக்கொள்வதற்க்கும், இரவு முழுவதும் கண்விழித்திருப்பதற்கும் முக்கிய காரணங்கள். தன்னை தூய்மைப்படுத்திக்கொள்ள நினைத்தபொழுதுதெல்லாம் காந்தியடிகள் உண்ணாநோன்பிருந்தார். எல்லா மதங்களும் பிரேமை, தியாகம், அவாவறுத்தல் ஆகிய இவற்றையே அடிப்படையாகக் கொண்டவை என்பதை மாணவர்கள் மறக்கலாகாது.
தீர்க்கதரிசிகள், ஞானியர், அவதார புருஷர்கள் ஆகியோரை நினைவுகூரும் வகையில் எல்லாப் பெருமதங்களிலும் திருவிழாக்கள் பல அமைந்துள்ளன இறைவன் தம்மை வெளிப்படுத்திக் கொண்ட திரு நாட்கள் பலவற்றை ஹிந்துக்கள் விழாக்களாகக் கொண்டாடுகிறார்கள். கோகுலாஷ்டமி, மஹாசிவராத்திரி தஸரா போன்ற பற்பல திருவிழாக்கள் இறைவனையும், அவதார புருஷர்களையும் மையமாகக் கொண்டுள்ளன; ரம்ஜான், பக்ரீத், ஈத் போன்ற முஸ்லிம் பண்டிகைகளும் இவ்வாறே அமைந்துள்ளன, கிறிஸ்துமஸ், கிறிஸ்துபிரானின் பிறப்பினைக் கொண்டாடும் பண்டிகை என்று எல்லோரும் அறிவர்.
நகரங்களில் மட்டும் அல்ல, கிராமப் புறங்களிலும் திருவிழாக்கள் வசதிக்குத் தகுந்தவாறு, சிறிய அளவில் கொண்டாடப்படுகின்றன. கிராமப்புறங்களில் உள்ள ஹிந்துக்கள்பற்பல கிராம தேவதைகளை வழிபடுகிறார்கள் முஸ்லிம்களும் சிற்சில இடங்களில் வழிபாட்டினை ஆதரிப்பதுண்டு. ஹிந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் அனைவரும் சேர்ந்து கிராமங்களில் திருவிழாக்களும், பண்டிகைகளும் கொண்டாடுவது நம் நாட்டின் தனிச்சிறப்பு. பாபா கூறுவது போன்று, இனம் ஒன்றே, அதுவே மனித இனம், மதம் ஒன்றே. அதுவே அன்பு மதம்.
இந்தியர்கள் ஆழ்ந்த அளவில் சமய நோக்குள்ளவர்கள். சமய உணர்விலிருந்து முழுவதும் வேறுபட்ட வாழ்க்கையை இந்தியனால் புரிந்து கொள்ளவே முடியாது. உணர்ச்சிவசப்பட்டவர்களாக இருக்கலாம். மூடநம்பிக்கைக் கொண்டவர்களாகவும் இருக்கலாம். மொத்தத்தில் இந்திய மக்கள்விருந்தினரை உபசரித்து, அன்புடன் நடக்கும் பண்புடையவர். இந்திய வாழ்க்கை முறையில், குடும்பம் மிக முக்கியமான அங்கம்வகிக்கிறது. மேற்கத்தியக் குடும்பத்தைவிட, இந்திய குடும்பத்தினருள் பந்தபாச நெருக்கம் அதிகம். இந்திய சமயங்கள் அனைத்தும், இளைஞர்கள், முதியவர்களுக்கு மரியாதை தெரிவிக்கவேண்டும் என்பதை வற்புறுத்துகின்றன. வயதான பெற்றோரைப் பராமரித்தல் ஒரு புனிதமான கடமையாகும். இந்தியர்களுக்கு மரபுகளில் நம்பிக்கை அதிகம். ஆயினும் மற்ற மரபுகளையும், பழக்கங்களையும் அவர்கள் மதிக்கின்றனர். நற்பண்புகளுக்கு முதலிடம் கொடுப்பதுடன் கூட, இளைஞர்கள் நீதிநெறியினைவளர்த்துக் கொள்ள வேண்டும் என்பது மற்றெல்லாவற்றையும் விட உயர்ந்த இலட்சியமாகும்.
மற்ற சமயங்களையும் கலாச்சாரங்களையும் மதிக்கும் பண்பு, சகிப்புத்தன்மை, பொறுமை இவற்றிற்குக் காரணம் என்ன? நமது மரபுகளை நாம் போற்றுவதும், நமது புராணங்கள், இதிகாசங்கள், சடங்குகள், இலக்கியம், சமய நெறிமுறைகள், நுண்கலைகள் இவற்றினூடே உள்ள உயர்நலப் பண்புகள்தான். நமது மரபில் உள்ள சிறப்பியல்புகளை தற்கால வாழ்க்கையுடன் இணைந்து பயனுள்ள வழியில் செயல்படுவதுதான், நமது நாட்டின் முன்னேற்றத்துக்குத் தகுந்த வழியாகும்.
நமது கலாச்சார மரபுக்குத் தகுந்த அளவில் நமது வாழ்க்கையினை மாற்றிக்கொள்ள வேண்டும். நம் சனாதனதர்மத்தின், பஞ்சசீலம் என்று சொல்லத்தகுந்த சத்யம், தர்மம், சாந்தி, ப்ரேமை, அஹிம்சை இவற்றை வளர்த்து சத்திய தரிசனத்தின் அடிப்படையில் நம் வாழ்வை அமைத்துக்கொள்ள வேண்டும். வாழ்க்கை புனிதமும் பிரேமையும் நிறைந்ததாக இருக்க வேண்டும் சாயியின் நல்லுபதேசத்தை பரப்ப வேண்டும். உலகத்தில் எல்லோரும் நிறைவாக வாழ வழிவகுக்க நாம் முயற்சி செய்வோமாக. வந்தே மாதரம்.
ஒன்றே மதம் – ஒன்றே மதம்
ஒன்றே குலம் – அதுவே மனிதகுலம்
ஒன்றே மொழி – அதுவே இதயமொழி
ஒன்றே தெய்வம் – அதுவே எங்கும் நிறைந்தது
ஸ்ரீ சத்ய சாய் பாபா