சுப்ரமணிய பாரதியார்

Print Friendly, PDF & Email
சுப்ரமணியபாரதியார்

வம்சம்

மகாகவி பாரதியார், சின்னசாமி சுப்ரமணிய ஐயருக்கும், இலக்குமி அம்மாளுக்கும், 1882-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 11ஆம் நாள், தமிழ்நாட்டில் எட்டையபுரம் என்கிற கிராமத்தில் சுப்பையா என்கிற மகனாகப் பிறந்தார்.

கல்வி

அவர் திருநெல்வேலியில், ‘எம்.டி.டி.ஹிந்து காலேஜ்’ (The M.D.T. Hindu College) என்கிற உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றார்.

அவர் சிறு வயதிலிருந்தே இசை பயின்றார். அவருடைய பதினொன்றாம் வயதில், கவிதைகளும், பாடல்களும் இயற்றுவதற்காக, எட்டையபுரம் அரசவை மாநாட்டிற்கு அழைக்கப்பட்டார். அங்கு தான் அவருக்கு ‘பாரதி’ என்ற பட்டம் கிடைத்தது. ‘பாரதி’ என்றால், ‘கல்விக்கடவுளான சரஸ்வதி தேவியின் அருள்பெற்றவர்’ என்றுபொருள்.

பாரதியின்வாழ்க்கையில் நடைபெற்ற குறிப்பிடத்தக்க சில நிகழ்வுகள் மற்றும் தேசத்திற்கு அவர் ஆற்றிய தொண்டு
  • எட்டையபுரம் அரசவையில், உயர்பதவியாகிய அரசவைக்கவிஞர் பதவி கிட்டியபோதும், அதனை நிராகரித்து, அவர்தன் கவிதைப் புலமையாலும், இனிமையான பேச்சினாலும், தென்னிந்தியாவில் பெருமளவு மக்களைத்திரட்டி, இந்திய தேசிய சுதந்திரப்போராட்டத்தில் இணையவைத்தார்.
  • பாரதியார், 1898 ஆம்ஆண்டு, பனாரஸ் பயணம் செய்தார். பனாரஸில் தங்கியிருந்த நாட்களில், அவருக்கு இந்து சமய ஆன்மீகம் மற்றும் தேசியவாதம் பற்றி அறியும் வாய்ப்புகிட்டியது.

சுவாமி விவேகானந்தரின் ஆன்மீகமகளான‌ சகோதரி நிவேதிதாவை பாரதி சந்திக்க நேர்ந்தது. இந்த சந்திப்பிற்குப் பின்னால்‌ ஒரு‌ சுவையான நிகழ்வு உள்ளது. சகோதரி‌ நிவேதிதா பாரதியார் அவரது மனைவி செல்லம்மாள் மற்றும்‌ குழந்தைகளை அழைத்து வரவில்லையா எனக் கேட்டதற்கு, தான் போகுமிடமெல்லாம்‌ அவர்களை அழைத்துப்போகும் வழக்கம் இல்லை என்று‌ கூறினார். அதற்கு சகோதரி நிவேதிதா “நீங்களா இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கித் தரப்போகிறீர்கள்?” என்று கேட்டார். அதாவது, தன் குடும்பத்திற்கு சுதந்திரம் தர முடியாதவர் எவ்வாறு நாட்டிற்கு சுதந்திரம் வாங்கித்தர முடியும் என்று மறைமுகமாகக் கேட்டார். எந்தவொரு அகம்பாவமும் இல்லாமல் தன் தவறை பாரதியார் உணர்ந்தார். இதுவே அவரது “கும்மியடி” கவிதை பிறக்கக் காரணமாயிற்று.

சகோதரி நிவேதிதாவின் இந்த வார்த்தைகளில் பிறந்ததுதான் பாரதியின் பெண் அடிமையை எதிர்த்து பெண்உரிமையை நிலைநாட்டும் புதுமைப்பெண் கவிதைகள். அவர் புதுமைப்பெண்ணை சக்தியின் வடிவமாகப் பார்த்தார். சமுதாயத்தில் உள்ள சாதிப்பாகுபாடுகளை எதிர்த்து பாரதி போராடினார். பிராமண சமுதாயத்தில் பிறந்திருந்தாலும் தன் சாதி அடையாளங்களைத் துறந்தார். அவருடைய பொன்மொழிகளில் ஒன்று ‘உலகில் படித்தவன் படிக்காதவன் என்று இரண்டு சாதிகள் மட்டுமே உண்டு’ என்பதாகும். உலகிலுள்ள அனைவரும் சமம் என்பது அவரது கொள்கை. இதை உணர்த்துவதற்காக அவர் ஒரு இளம் ஹரிஜனருக்கு பூணூல் அணிவித்தார். அந்தக்காலத்து ஆசிரியர்கள் இளைய தலைமுறையினரிடம் பிரிவினைவாதத்தை புகட்டுவதை பாரதியார் அறவே வெறுத்தார். பகவத்கீதை மற்றும் வேதங்களைப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் தங்கள் சொந்தக் கருத்துகளைச் சொல்வதை வெளிப்படையாகக் கண்டித்தார்.

  • பத்திரிகை உலகில் மிகுந்த ஆர்வம் பெற்ற பாரதி, பல்வேறு தினசரி மற்றும் வார இதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றினார். பாரதி, ‘ஸ்வதேசமித்ரன்’ என்கிற தமிழ் நாளிதழில் உதவி ஆசிரியர் வேலையில் சேர்ந்தார். இந்தியாவிலேயே முதன்முதலில் நகைச்சுவைச் சித்திரங்களை செய்தித்தாளில் அறிமுகப்படுத்தியவர் பாரதியார். நாளிதழில் தம் கவிதைகளையும் பிரசுரிக்க ஆரம்பித்தார். பக்திப்பாடல்கள், தேசியகீதங்கள், இறைவனுக்கும், மனிதனுக்கும் இடையே இருக்கவேண்டிய ஆன்மீகத்தொடர்பு, ரஷ்ய மற்றும் பிரெஞ்ச் புரட்சி என, பாரதியார் இயற்றிய பாடல்கள் பலவிதம். பாரதி எழுதுவதில் மட்டும் அல்லாமல் அரசியலிலும் முக்கிய பங்கு வகித்தார். சுதந்திரத்தைக் (ஸ்வராஜ்) கொண்டாட மதராஸில் ஒரு பொதுக்கூட்டம் கூட்டினார். அவருடைய தேசபக்திப்பாடல்களான வந்தேமாதரம், எந்தையும் தாயும் மற்றும் ஜெயபாரதம் ஆகியவை அச்சிடப்பட்டு, பார்வையாளர்களுக்கு இலவசமாக விநியோகப்படுத்தப்பட்டன.
  • கைது செய்யப்படும் அபாயம் இருந்ததை உணர்ந்த பாரதியார், பிரெஞ்ச் ஆதிக்கத்திலிருந்த பாண்டிச்சேரிக்குத் தப்பித்துச் சென்றுவிட்டார். அங்கிருந்தபடி, ‘இந்தியா’ என்ற வாரஇதழ், ‘விஜயா’ என்கிற தமிழ் நாளிதழ், ‘பாலபாரதம்’ என்கிற ஆங்கில மாதஇதழ், ‘சூரியோதயம்’ என்கிற உள்ளூர் வாரஇதழ் ஆகியவற்றை அச்சிட்டு வெளியிட ஆரம்பித்தார். பிரிட்டிஷ் பாரதியின் வெளியீடுகளை அடக்கும் பொருட்டு, அவருடைய பத்திரிகைகளுக்கு வரும் கட்டணங்களையும், கடிதங்களையும் நிறுத்திவைத்தனர். 1909-ஆம் ஆண்டு, பிரிட்டிஷ் இந்தியாவில், ‘இந்தியா’ மற்றும் ‘விஜயா’ ஆகிய பத்திரிகைகள் தடைசெய்யப்பட்டன.
  • பாரதியாரே முதன்முதலாக, ஸ்ரீஅரவிந்தரை பாண்டிச்சேரிக்கு வரவேற்றார். அவர்களிடையே, ஆன்மீகம், வேதம், மற்றும் தமிழ்மொழி பற்றிய பல்வேறு உரையாடல்கள் நடந்தேறின.
விடுதலைக்காக பாரதி விடுத்த வீரமுழக்கம்

பிரெஞ்சு தேசிய கீதத்தால் ஈர்க்கப்பட்டு அவர் எழுதிய ‘விடுதலை விடுதலை’ என்ற கவிதை, தேசவிடுதலைக்கான வீரமுழக்கம் மட்டுமல்ல. சாதி வரம்புகளைக் கடந்து எல்லோரும் ஒன்றிணைய விரும்பிப்பாடியதும் ஆகும்.

  • விடுதலை விடுதலை விடுதலை
  • பறையருக்கும் இங்கு தீயர்‌ புலையருக்கும் விடுதலை
  • பரவரோடு குறவருக்கும் மறவருக்கும் விடுதலை
  • திறமை கொண்ட தீமையற்ற தொழில் புரிந்து யாவரும்
  • தேர்ந்த கல்விஞானம் எய்தி வாழ்வோம் இந்த நாட்டிலே.

பாரதி தன் தாய்நாட்டை, தன்னைப் பெற்ற தாய்போல் நினைத்தார். பாரதி பிறந்த எட்டையபுரம் அருகில் உள்ள கடையம் கிராமத்திற்குச் சென்றபோது பாசத்துடனும் பரவசத்துடனும் தரையில் புரள‌ ஆரம்பித்தார். பார்த்தவர்கள் பலரும் ஏதோ பைத்தியம் நிலைகொள்ளாமல் நடப்பதாக நினைத்தார்கள். அவருடைய நண்பர் ஒருவர் இதுபற்றி விசாரித்தபோது, தான் தனது தாயின் மடியில் தலைவைத்து அவளுடைய அன்பையும் பாசத்தையும் அனுபவித்ததாகக் கூறினார். அவரது தாய்நாட்டுப்பற்று இத்தகையதாகும். தனது தாய்மொழியான தமிழ் மீது அவருக்கு ஈடுசெய்ய முடியாத பற்றும், பக்தியும் இருந்தது. பெங்காலி, இந்தி, சமஸ்கிருதம், ஃப்ரெஞ்சு, ஆங்கிலம் போன்ற பல மொழிகள் பாரதியாருக்குத் தெரிந்தாலும் தமிழ்போல இனிமையான மொழி எங்கும் இல்லை என்று முழங்கினார். குழந்தைகளுக்காக அவர் எழுதிய “பாப்பாபாட்டு”, “புதிய ஆத்திசூடி” என்ற கவிதைகளில் சர்வதர்மம், எல்லா உயிர்களிடத்திலும் அன்பு, சாதியற்ற சமுதாயம் மற்றும் தைரியம் ஆகியவை மேலோங்கி நிற்கின்றன. அவருடைய எளிய தமிழ், நன்னெறி மற்றும் நற்பண்புகளை, இளைய சமுதாயத்தினர் மனதில் எளிதாகப் புரிய வைக்கிறது.

பாரதியார் இயற்றிய பாடல்கள்:

சுப்பிரமணிய பாரதியாரின் படைப்புகள் பலதரப்பட்டவை. பக்திப்பாடல்கள், நாட்டுப்பற்று கவிதைகள், குழந்தைகளுக்கான பாடல்கள், பெண்ணுரிமை, தேசஒற்றுமை‌ பற்றிய‌ பாடல்கள், பாஞ்சாலிசபதம், புதியஆத்திசூடி’ என அவரது படைப்புகள் பல.

‘வந்தேமாதரம் என்போம்’, ‘எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி’ போன்ற‌ அவரது நாட்டுப்பற்றுக் கவிதைகள் உணர்ச்சிப்பூர்வமாகவும், தாய்நாட்டுப் பாசம் உள்ளனவாகவும் திகழ்கின்றன.

மேலும் இக்கவிதைகளில்,

  • இயற்கை வளம்
  • மக்களிடையே உள்ள வேற்றுமை
  • எண்ணங்களில் ஒற்றுமை
  • ஆன்மீகம் போன்றவற்றைப் பற்றிய பெருமிதம் காணப்படுகிறது.

‘பாருக்குள்ளே நல்ல நாடு’, ‘பாரததேசம் என்று பெயர் சொல்லுவார்’ போன்ற பாடல்கள் தாய்நாட்டின் மீது அவருக்கு இருந்த ஆழ்ந்த அன்பையும், பரந்தநோக்கையும் வெளிப்படுத்துகின்றன.

எல்லாவற்றிற்கும் மேலாக அவர் ஒரு தீர்க்கதரிசி என்பது அவரது ‘சிந்துநதியினிசை நிவவினிலே’ என்ற பாடல் தெளிவுபடுத்துகின்றது. சுதந்திர இந்தியாவின் நிலையைப்பற்றிய அவரது வரிகள் இன்றளவும் பொருத்தமாக இருக்கின்றன. அவரது ‘ஆடுவோமே பள்ளு பாடுவோமே’ என்ற பாடல், சுதந்திரம் பெறுவதற்குப் பல ஆண்டுகள் முன்னமே சுதந்திரதினத்தைக் கொண்டாட வைத்துவிட்டது.

பாரதியாரும், ஆன்மீகமும்

பாரதியார் ஒரு இந்து. ஆனால் அவருடைய ஆன்மீகம் எல்லையற்றது. அவர் இந்துக்கடவுள்கள் மேல் பாடல்கள் பாடியுள்ளார். அதேசமயம், இயேசுகிறிஸ்து மற்றும் அல்லா மீதும் பக்திப்பாடல்கள் எழுதியுள்ளார். ஜாதி வெறியை எதிர்த்துப் பிரச்சாரம் செய்தார்.

ஜாதி மதங்களைப்பாரோம் – உயர் ஜன்மம் இத்தேசத்தில் எய்தினாராயின், வேதியராயினும் ஒன்றே – அன்றி வேறு குலத்தினராயினும் ஒன்றே” என்று அவர் வந்தேமாதரம் பாடலில் எழுதியுள்ளார்.

ஒருமுறை பாரதியார் பாண்டிச்சேரியில் இருந்தபொழுது அவருக்கு தமிழ்நாட்டின் எல்லைக்குள் வருவது தடைசெய்யப்பட்டிருந்தது. அந்த சமயத்தில், பாரதியாருக்குத் தெரிந்த ஒருவர், தமிழ்நாட்டில் தடை விலக்கப்பட்டது என்று கூறி, அவரைத் தம்முடன் தமிழ்நாட்டிற்கு வரும்படி வற்புறுத்தினார்.

பாரதியாரும் அப்பாவித்தனமாக அந்த அழைப்புக்கு ஒப்புக்கொண்டு கிளம்பினார். பாரதியாரின் வக்கீல் நண்பர் ஒருவர் இதனைக் காணநேரிட்டது. உடனே அவர், பாரதியாரின் முட்டாள்தனமான இந்த முடிவிற்கு (அதாவது, அவர் தமிழ்நாட்டிற்குள் நுழையத் தடை இன்னும் அமலில் இருந்தபொழுது, தமிழ்நாட்டிற்குப் பயணப்பட்டது) மிகவும் கடிந்துகொண்டு, அவரை மீண்டும் பாண்டிச்சேரிக்கே அழைத்துச் சென்றுவிட்டார். இங்ஙனம், பாரதியாரைக் கைது செய்யப்படவைக்கத் திட்டமிட்ட அந்த நண்பர் அடுத்தநாள் அவருடைய இல்லத்திற்கு வருகை தந்தபொழுது, பாரதியின் மனைவி செல்லம்மாள், அந்த நபரை மிகவும் கடிந்து கொண்டாள். ஆனால் பாரதியாரோ, செல்லம்மாளை சமாதானப்படுத்திவிட்டு, ‘பகைவனுக்கு அருள்வாய்’ என்ற பாடலை இயற்றினார்.

பாரதியார் மிகவும் ஏழ்மையில் வாழ்ந்து வந்தார். ஒருமுறை செல்லம்மாள், தன் குடும்பத்திற்கு உணவு சமைக்க, பக்கத்து வீட்டாரிடம் சிறிது அரிசியை கடன் வாங்கி வைத்திருந்தார். சில சிட்டுக்குருவிகள், அங்கு சிதறி இருந்த சில அரிசிமணிகளை உண்பதைக் கண்ட பாரதியார், அவற்றின் மேல் கருணை கொண்டு, தன்குடும்பம் பசியால் வாடுவதை அறிந்திருந்தும், சமைக்க வைத்திருந்த நிறைய அரிசியை அவற்றிற்காகத் தூவிவிட்டார்.

அவர் மிகவும் ஏழ்மையில் வாழ்ந்து வந்தாலும், அவருடைய எண்ணங்களும், செயல்களும் நேர்மறை நிரம்பி இருந்தன. அவர் பகவத்கீதையை தமிழில் மொழிபெயர்த்தார். அவருடைய பாடல்களில் ஆன்மீகம் அதிகமாக வெளிப்பட்டது.

பாரதியாரின் சில கவிதைகளுக்கும் நம் ஸ்வாமியின் கோட்பாடுகளுக்குமிடையே உள்ள சில ஒப்புமைகளைத் தற்போது காணலாம்:

பாரதியார் பாடல்கள் ஸ்வாமியின் கோட்பாடு
முப்பதுகோடிமுகமுடையாள்(எங்கள்தாய்) இதயத்தின் மொழி
தனி ஒருவனுக்கு உணவில்லைஎனில் ஜகத்தினை அழித்திடுவோம் (பாரத சமுதாயம்) தேசியநாராயணசேவை
அச்சமில்லை அச்சமில்லை நானிருக்க பயமேன்?
ஓடி விளையாடு பாப்பா,மனதில் உறுதிவேண்டும்! வாக்கினிலேஇனிமைவேண்டும் விழுக்கல்வி
கும்மியடி, பாஞ்சாலிசபதம் பெண்கள் பிரிவு மற்றும் அனந்தபூர் கல்லூரி
பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா(காக்கைச்சிறகினிலே) அனைத்திலும் இறைவனைக்காணல்
நெஞ்சில் உரமுமின்றி எண்ணம்,சொல், செயல் இவற்றின் ஒற்றுமை
பாரதியின் இறுதிநாட்கள்

1912 ஆம் ஆண்டு சமயத்தில், பாரதியார் தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமாகியிருந்தார். மேலும் பாண்டிச்சேரியில் அவர் நடத்திய அரசியல் கூட்டங்கள், பிரிட்டிஷார்க்கு எதிரான அஹிம்சைவழிப் போராட்டத்தில் கலந்துக்கொள்ளத் தயாராக இருந்த, தேசப்பற்று நிறைந்த பல இளைஞர்களை ஈர்த்தன. கைதுகளும், அவரது செய்தித்தாள் மீது விதிக்கப்பட்ட தடைகளும் தொடர்ந்தன. பாரதியின் உடல்நிலை, சிறைவாசத்தால் நலிந்தது. அவர், சென்னையில் உள்ள திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி பெருமாள்கோவில் யானையால் தாக்கப்பட்டார். அவரது உடல் ஆரோக்கியம் குறைந்து, 1921ஆம் ஆண்டு, செப்டெம்பர் மாதம் 11ஆம் தேதி காலமானார்.

இவ்வாறு மஹாகவி சுப்ரமணியபாரதியார், சிறந்த கவிஞராகவும், எழுத்தாளராகவும், தத்துவ மேதையாகவும், தீர்க்கதரிசனம் கொண்டவராகவும் விளங்கினார். மேலும், தலைசிறந்த இந்திய சுதந்திரப்போராட்ட வீரர்களில் ஒருவராகவும் விளங்கினார். அவரது தேசிய ஒருமைப்பாட்டுப் பாடல்கள், அவருக்கு ‘தேசியக்கவி’ என்னும் பட்டத்தைப் பெற்றுத்தந்தன.

குருமார்களுக்கான ஆலோசனை: செயல்பாடுகள் மற்றும் விவாதங்கள்
  1. ஒரு அரிஜனச்சிறுவனுக்கு, உபநயனம் செய்யும் நிகழ்வை விவரிக்கும்போது, குருமார்கள், ப்ரசாந்தி நிலையத்தில் நடைபெரும் சமஷ்டி உபநயனத்தைப் பற்றிக் கூறலாம். ஸ்வாமி, உண்மையான அந்தணர் பற்றியும், காயத்ரிமந்திரத்தின் உலகளாவிய தன்மையைப்பற்றியும் கூறுவதை விளக்கலாம்.
  2. சிட்டுக்குருவி நிகழ்ச்சியைப் பற்றிக் கூறும்போது, பூதயக்ஞத்தைத் தொடர்புபடுத்திக் கூறலாம். (பஞ்சமஹாயக்ஞம் மற்றும் அஷ்டபுஷ்பங்களில் கூறப்படும் சர்வ பூததயா)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: