தண்ணீர்-1
அறிமுகம்
இறைவன் படைப்பில், பஞ்ச பூதங்களில் ஒன்றான தண்ணீர் அமுதம் போன்றது. தண்ணீரில்லாது உயிர்வாழ இயலாது. மனிதன், விலங்கு தாவரம் இவையனைத்தும் பிழைத்திருக்கத் தண்ணீர் மிகவும் அவசியம். பாரத நாட்டில் அனைத்து நதிகளையும், கங்கா மாதா, கோதாவரி மாதா காவிரி அன்னை என்று அன்னையாக மதித்து அழைக்கிறோம்.அவற்றைத் தேவியர்களாக வழிபடுகிறோம்.கங்கா தேவிக்கு தினமும் ஆரத்தி நடைபெறுகிறது. உயிரூட்டும் தண்ணீர் கொடுப்பதற்காக, இவ்வாறு இந்த நதிகளுக்கு நமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். சுயநலம் காரணமாக மனிதன் இந்த நதிகளைத் தூய்மையாகவும் சுத்தமாகவும் வைத்திருக்க அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. நாம் குப்பைகளையெல்லாம் அவற்றில் எறிகிறோம். நதிகளின் அருகில உள்ள தொழிற்சாலைகளும் வேண்டாத கழிவுப்பொருட்களை ஆற்றில் விடுவதால் மனிதன் ஆற்றைப் பயன்படுத்த இயலாது, பயனற்றதாகி விட்டன. இயற்கையின் சமனிலையும் குலைந்துள்ளது. அன்றாட வாழ்க்கையிலும், நாம் அதிகத் தண்ணீரை வீண் செய்கிறோம். தேவைக்குத் தகுந்த அளவுக்கு குறைத்துக் கொள்வதில்லை. இயற்கையும் சில இடங்களில் வெள்ளத்தையும் சில இடங்களில் பற்றாக்குறையும் உருவாக்கி நம்மை தண்டிக்கிறது.
தண்ணீரின் இயல்புகள்
தண்ணீருக்கு ஒலி, ஸ்பரிஸம், வடிவம், சுவை ஆகிய நான்கு இயல்புகளும் உண்டு. இடைவிடாது ஓடிக்கொண்டிருக்கும் குணமும் அதற்குண்டு. நாம் அதனிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம், பிறருக்கு உதவி செய்வதும் இயற்கையில் இசைவு ஏற்படச் செய்வதுமான பணியினை சோம்பல் இல்லாமல் செய்து கொண்டே இருப்பதும் ஆகும். தண்ணிர் எப்போதும் உயர்ந்த நிலையிலிருந்து தாழ்ந்த நிலைக்கு ஓடிக்கொண்டே இருக்கிறது. எந்த அளவுக்கு உயரத்தில் இருக்கிறதோ அந்த அளவுக்கு அதன் ஆற்றலும் அதிகமாக இருக்கிறது மின்சக்தி உருவாக அது உதவி செய்கிறது. கீழ்நோக்கிச் செல்ல அது தயங்குவதில்லை. அதுபோலவே நாமும் அகந்தையைக் கைவிட்டு ஏழைகளை நேசிக்க வேண்டும்..இயல்பாகத் தண்ணீர் பருகும் போதும், நீராடும் போதும் குளிர்ச்சியைத் தருகிறது .ஓடும் தண்ணீர் தன்னுடன் அழுக்கையும் எடுத்துச் செல்கிறது. அந்தப்பகுதியை ஒழுங்காகவும் சுத்தமாகவும் ஆக்குகிறது.
கதை
ஒரு சிடுமூஞ்சிப் பெண்மணி இருந்தாள். எந்த சிறுகாரணத்துக்கும் அவள் கோபித்துக் கொள்வாள். மனம் சமாதானம் ஆனபிறகு தனது கோபத்துக்கு மிகவும் பச்சாதாபப்படுவாள். இருந்தாலும் கோபத்தை அவளால் அடக்க முடியவில்லை.ஒரு நாள் ஒரு சாது அவள் வீட்டிற்கு வந்தார். அந்தப் பெண்மணி கூறினாள், “ஐயா, நான் மிகவருத்தத்துடன் இருக்கிறேன். வெகுவிரைவில் நான் கோபம் அடைகிறேன். தயவு செய்து இந்த கோபத்தை அடக்க ஏதாவது ஒரு வழிகூறுங்கள்” சாது, “கவலைப்படாதீர்கள்,அம்மணி! கோபத்தை அடக்குவதற்கென்று ஒரு புதிய மருந்து தயார் செய்து வைத்திருக்கிறேன். நாளைக்கு நான் அந்த மருந்தைக் கொண்டுவருகிறேன்” என்று கூறினார். மறுநாள் ஒருபுட்டி நிறைய மருந்து கொண்டு வந்தார். அந்தப் பெண்ணிடம் கொடுத்து அவர் கூறினார். உனக்குக் கோபம் வரும்போதெல்லாம் இந்த புட்டியில்உள்ள மருந்தைக் கோபம் அடங்கும் வரையில் பருகவும். ஏழு நாட்களுக்குப் பிறகு நான் வருகிறேன்”. அந்தப் பெண்மணி மருந்தை ஒழுங்காக உட்கொண்டாள். கோபம் வந்தபோது சிறிதளவு அந்தமருந்தைப் பருகினாள் ஏழுநாட்களுக்குப் பிறகு சாது அங்கு வந்து தான் கொடுத்த மருந்தின் பலனை அறியவிரும்பினார். அந்தப் பெண்மணி அவர் காலில் விழுந்து கூறினாள், “ஐயா, என்னை நீங்கள் காப்பாற்றி விட்டீர்கள்! நீங்கள் கொடுத்த மருந்தினால் கோபம் போன இடம் தெரியவில்லை. அது என்ன மருந்து என்று விளக்கமாகக் கூறுங்கள் என்றாள்”.சாது கூறினார்”, அம்மா!அந்த பாட்டிலில் நான் கொடுத்தது வெறும் சுத்தமான தண்ணீர் தான். தண்ணீர் மனதுக்கும் இதயத்துக்கும் குளிர்ச்சி தருகிறது. ஆகவேதான் உனது கோபம் விலகியது”.
பொன்மொழி
“தண்ணீர் தாகத்தைத் தணிக்கிறது. நிலம் மிக மோசமானவர்களையும் தாங்குகிறது. நானும் தர்மம் தவறாமல் நியாயம் தவறாமல் இருப்பேனாக”
அமைதியாக உட்கார்ந்து
குழந்தைகளை ஒரு நதியின் பக்கம் கூட்டிச் செல்லவும் அவர்கள் அமைதியாக உட்கார்ந்து நீண்ட நீர்ப்பரப்பைக் காணட்டும். கீழ்க்கண்டவாறு சிந்திக்கட்டும்.
- ஓடும் தண்ணீர் எவ்வளவு சுத்தமாக இருக்கிறது?
- ஓடும் நீர் எவ்வளவு அழகாக இருக்கிறது?
- குளிர்ந்த சுத்தமான தூய்மையான நீரின் சுவை என்ன?
- இந்தத் தண்ணிரினால் உருவாகிய பசுமையான தாவரத்துடன் சுற்றுப்புறச் சூழ்நிலையினாலும் குளிர்ந்த தண்ணீரைத் தொட்டுச் செல்லும் குளிர்ந்த காற்றாலும் ஏற்படும் மகிழ்ச்சி.
- என் மனம் அன்பினாலும் அமைதியாலும் நிறைந்திருக்கிறது. உயர்வு தாழ்வு என்ற நினைவு ஏதுமில்லாமல் எல்லாவிடத்திலும் எனது அன்பு பெருக்கெடுத்துச் செல்கிறது.
செயல்முறை
குழுக்களாக் கூடி விவாதிக்கவும்.
கீழ்க்கண்ட கேள்விகளுக்கு விடை காணவும்
- பெயரில் தண்ணீர் என்ற பொருளைக் கொண்ட பழம் எது? (முலாம்பழம்-Water Melon)
- மூன்று வேறு மொழிகளில் தண்ணீர் எவ்வாறு அழைக்கப்படுகிறது என்று கண்டுபிடி
- தண்ணீர்க்கு மூன்று நிலைகள் உண்டு.பனிக்கட்டி என்பது……………நிலை. ஆவி என்பது………………………நிலை..
- பல நாட்கள் தண்ணீரே குடிக்காமல் எவ்வாறு ஒட்டகங்கள் நெடுந்தூரம் பயணம் செய்கின்றன?
- உடலிலிருந்து அதிகப்படியான தண்ணீர் வெளியேறினால் அது உடலில் …………………………………ஏற்படுத்தும்.