நிலம் 2
அன்பிற்கினிய குழந்தைகளே,
‘பூ-தேவி‘, அல்லது ‘பூமித் தாய்‘ பற்றித் தெரிந்து கொள்ளலாமா?
நிலம் 2
அன்பிற்கினிய குழந்தைகளே,
‘பூ-தேவி‘, அல்லது ‘பூமித் தாய்‘ பற்றித் தெரிந்து கொள்ளலாமா?
பூமித் தாயால் தான் நாம் வாழவே முடிகிறது. பூமிக்கு ஶப்தம், ஸ்பர்ஸம், ரூபம், ரசம் மற்றும் கந்தம் ஆகிய ஐந்து பண்புகளும் உள்ளன. உங்களையும் என்னையும் மற்றும் யாவற்றையும் இரவு பகலாய் எப்போதும் சுமந்துகொண்டே இருக்கின்ற பூமித்தாயை நாம் கண்களை மூடிக்கொண்டு சற்றே மனக் கண்களால் காண்போம்.
அவள் மீது கம்பீரமாய் நிற்கும் உயர்ந்த மலைகளைப் பாருங்கள். அவள் மீது ஒய்யாரமாய் ஓடுகின்றன நீண்ட ஆறுகளைக் காணுங்கள். சிறியதும் பெரியதுமான ஏரிகளும் குளங்களும் அவள் மீது நளினமாய்ச் செல்வதைப் பாருங்கள். வானுயர்க் கோபுரங்களும் மாடமாளிகைகளும் அவள் மீது நின்று அழகு சேர்ப்பதைக் கண்குளிரக் காணுங்கள். எந்த எதிர்பார்ப்பும் இன்றி, இவையனைத்தையும் உவப்புடன் சுமந்து நின்று, உலகம் முழுமைக்கும் சேவை செய்கிறாள் நம் பூமித்தாய்.
உயிர் வாழும் அனைத்திற்கும் தேவையான உணவினை அவள் மீது பயிரிடுகிறோம். ஓ! பூமித் தாயே, நாங்கள் உன்னைத் தோண்டுகிறோம், குத்துகிறோம், உழுகிறோம், வதைக்கிறோம். பாவம், உனக்கு வலிக்கத்தான் செய்யும். ஆனாலும் நீ எங்கள் மீது அளவிலா அன்புடன் எங்களுக்கு உணவைத் தரும் பல தாவரங்களையும், உலோகங்களையும், நிலக்கரி மற்றும் பல தாதுப் பொருட்களையும் குறைவின்றி வாரி வழங்குகிறாய். நீ என் தாய், நான் உன் மகன். ஆம், நாம் அனைவரும் அந்தப் பூமித் தாயின் அன்புக் குழந்தைகள்.
இப்போது இந்த வரிகளை அன்பு பொங்கச் சொல்லுங்கள்:
“பூமித் தாயே, நான் உன்னை நேசிக்கிறேன், நான் உன் குழந்தை”.
இப்போது உங்கள் உள்ளங்கைகளைத் தேய்த்து, உங்கள் கண்களின் மேல் ஒற்றிக்கொண்டு, உங்கள் முகத்தைத் தடவிக்கொண்ட பின், உங்கள் கண்களை மெதுவாகத் திறக்கவும்.
பின்வரும் வினாக்களுக்கு விடை தருக:
1. பஞ்சபூதங்கள் யாவை?
2. பூமித் தாய் நமக்கு எவற்றையெல்லாம் தருகிறாள்?
3. பூமியின் வளத்தினை நாம் எவ்வாறெல்லாம் பாதுகாக்கலாம்?
[ஆதாரம்: சாய்-லென்ஸ் மௌனம்- சித்ரா நாராயண் & காயத்ரி ராம்சுரன் சம்பு எம்.எஸ்.கே எழுதிய குழந்தைகள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கான கையேடு- சத்ய சாய் கல்வி நிறுவனம்- மொரீஷியஸ் பப்ளிகேஷன்ஸ்]