உபமன்யுவின் கதை
தௌமிய ரிஷிக்குப் பல சீடர்கள் இருந்தனர். ஒருநாள் தௌமியரிஷியின் ஆசிரமத்துக்குப் பெருத்த உடலுடைய சிறுவன் ஒருவன் வந்தான். அவன் உடலில் தூசியும் அழுக்கும் படிந்திருந்தன. அந்தச் சிறுவனின் பெயர் உபமன்யு. தன்னை மாணவனாக ஏற்றுக் கொள்ளும் படியும், தனக்கு ஞானஒளி கிட்டுவதற்கு அருளும்படியும் அவன் தௌமியரிஷியிடம் வேண்டினான்.
தௌமியரும் உபமன்யுவை ஆசிரமத்தில் சேர்த்துக் கொண்டார். மாணவன் ஒருவனிடம் இருக்க வேண்டிய நற்குணங்கள் உபமன்யுவிடம் இல்லை. புனிதநூல்களைக் கற்க அவனுக்கு ஆர்வம் இல்லை. கற்பதற்கு மிகக்கடினமாக அவை இருப்பதாக அவன் கருதினான். மந்தபுத்தியுள்ள அவனுக்கு மனப்பாடமாகப் படிக்க இயலவில்லை. அவன் கீழ்ப்படிதலுள்ள மாணவனாகவும் இருக்கவில்லை.
தௌமியரிஷி மிக உயர்ந்த ஞானத்தைப் பெற்றிருந்தார். அவர் ஓர் எடுத்துக்காட்டான உன்னத குரு. இச்சிறுவனை எப்படி கையாள்வது என்பது அவருக்குத் தெரிந்திருந்தது. இவ்வளவு வேண்டாத குணங்களும் திறமையின்மையும் உபமன்யுவிடம் இருந்தாலும், தௌமியர் மற்ற மாணவர்களை நேசிப்பதைவிட அவனை அதிகம் நேசித்தார். உபமன்யுவும் தன் குருவை நேசிக்க ஆரம்பித்தான். அவருக்காக எதையும் செய்யத் தயாராக இருந்தான். தௌமியரும் இதை உணர்ந்திருந்தார். நன்னடத்தை என்னும் விதைவிதைக்க நிலம் தயாராகிவிட்டதென்று எண்ணினார். உபமன்யு உணவை அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டதால் மந்தமாகவும், ஆரோக்கியமின்றி தமோகுணத்துடனும் இருந்தான். நாக்கைக் கட்டுப்படுத்தி உடலுக்குத் தேவையான அளவு மட்டுமே அவனை உண்ணச் செய்ய வேண்டுமென்று தௌமியர் நினைத்தார். அதற்காக ஓர் உத்தியை மேற்கொண்டார்.
அதிகாலையில் பசுக்களை மேய்ச்சலுக்காகக் கூட்டிச்சென்று மாலையில் ஆசிரமத்திற்குத் திரும்பும்படி தௌமியர் உபமன்யுவிடம் கூறினார். தௌமியரின் மனைவி மதிய உணவை அவன் கையில் கொடுத்தனுப்பினார். உபமன்யு பெருந்தீனி தின்பவன். குரு பத்தினி கொடுத்த மதியஉணவு அவனுக்குப் போதுமானதாக இல்லை. பசிக்கும் பொழுதெல்லாம் பசும்பாலைக் கறந்து அவன் குடித்து விடுவான்.
நாட்கள் சில கழிந்தன. உபமன்யுவின் உடலில் இருந்த தேவையற்ற கொழுப்பு குறையவில்லையென்பதைத் தௌமியர் கவனித்தார். அவருக்கு ஆச்சிரியமாக இருந்தது. அவன் சாப்பிடும் உணவு பற்றி தௌமியர் அவனிடம் வினவினார். உபமன்யு உண்மையே பேசுபவன். தான் பசிக்கும் பொழுதெல்லாம் பசும்பாலைக்குடிப்பதாக அவன் குருவிடம் கூறினான். ‘அந்தப் பால் உனக்கு சொந்தமானதல்ல. ஆகவே என் அனுமதியின்றி இனி பசும்பாலைப்பருகாதே’ என்று தௌமியர் கூறினார். தன் குருவை மிகவும் நேசித்த உபமன்யு அவர் கட்டளைக்குக் கீழ்படிந்தான். ஆனால் தன்பசியை உபமன்யுவால் கட்டுப்படுத்தமுடியவில்லை. கன்றுகள் தாய் பசுக்களிடம் பால்குடிக்கும் பொழுது, அவற்றின் வாயிலிருந்து ஒழுகும் பாலைக் கையால் சேகரித்துக் குடித்தான். சில நாட்கள் சென்றன. உபமன்யுவின் எடை குறையவில்லை. காரணத்தையும் தௌமியர் தெரிந்து கொண்டார். ‘இனிமேல் கன்றின் வாயிலிருந்து சொட்டும் பாலைப் பருகாதே, அது உன் ஆரோக்கியத்தைப் பாதித்துவிடும்’ என்றார் தௌமியர். அவ்வாறு செய்வதில்லை என்று உபமன்யு வாக்குறுதியளித்தான்.
ஒருநாள் மதியத்திற்கு மேல் உபமன்யு பசியைக் கட்டுப்படுத்த முடியாமல், மரங்களில் தொங்கிய பழங்களைப் பறித்து உண்டான். அவை நச்சுப்பழங்கள். உபமன்யுவின் கண்கள் குருடாயின. பார்வை இழந்த உபமன்யு கிணற்றுக்குள் விழுந்துவிட்டான். பசுக்கள் தாமாகவே உபமன்யு இன்றி, ஆசிரமம் திரும்பின.
தௌமியர் உபமன்யுவைத் தேடிச் சென்றார். கிணற்றுக்குள் அவனைக் கண்டார். அவன்பால் இரக்கம் சுரந்தது. அவனுக்கு ஒரு மந்திரத்தை உபதேசித்தார். அதை அவன் ஓதியதும் அஸ்வினிகுமாரர்கள் (தேவ வைத்தியர்கள்) தோன்றி உபமன்யுவின் பார்வையை மீட்டுக் கொடுத்தனர்.
தௌமியர் உபமன்யுவுக்குப் பின்வருமாறு விளக்கினார்: ‘அளவுக்குமீறி உண்ணும் பேராசை மனோரீதியாகயும், உடல்ரீதியாகயும் உன்னைக் குருடாகிவிட்டது. புத்தியை மந்தப்படுத்தி கிணற்றில் விழவைத்தது. ஆபத்திலிருந்த நீ, கிணற்றிலேயே மரணம் அடைந்திருக்கக் கூடும்’.
அளவுக்கு மீறி சாப்பிட்டால் அது எத்தகைய அபாயத்துக்கும், அழிவுக்கும் இட்டுச் செல்லும் என்பதை உபமன்யு புரிந்து கொண்டான். அன்றிலிருந்து பெருந்தீனியை உபமன்யு கைவிட்டான். படிப்படியாக, நலவாழ்வு மேம்பாடு அடைந்து, பலவானாக, புத்திசாலியாக உயர்மாற்றம் அடைந்தான்.
இவ்விதமாகத்தான் குரு படைப்புக்கடவுளான பிரம்மாவாக, காக்கும் கடவுளான விஷ்ணுவாக, அழிக்கும் கடவுளான மஹேஸ்வரராகச் செயல்படுகிறார். தௌமியர் உபமன்யு மனதில் அன்பை உருவாக்கினார் (பிரம்மா), தன் அன்பான உபதேசத்தால் அவனைக் காத்தார் (விஷ்ணு). அவனிடம் உள்ள தீயபழக்கத்தை அழித்தார் (மஹேஸ்வரர்).
[Illustrations by Sree Darshine. H, Sri Sathya Sai Balvikas Student.]
[ஆதாரம் : ஸ்ரீ சத்ய சாயி பலவிகாஸ் குரு பாடப் புத்தகம் -பிரிவு -I ]