சுவாமி – மும்மூர்த்திகளின் அவதாரம்
1978, மார்ச் 7-ம் நாள் மகாசிவராத்திரித் திருநாள். அப்புனிதநாளன்று சுவாமி எங்கிருப்பார்கள் என்று பக்தர்கள் சிந்தித்துக் கொண்டிருந்தனர். மார்ச் 4ம்தேதி அதிகாலையிலேயே சுவாமி சில மாணவர்களுடனும் பக்தர்களுடனும் ஊட்டிக்கு விஜயம் செய்தார்கள். 7ம்தேதி ஊட்டியிலிருந்து கிளம்பி, மைசூருக்குப் போகும்வழியிலுள்ள முதுமலைக் காட்டுக்கு சுவாமி சென்றார்கள். அங்குள்ள சிறு குன்றின் மீது அமைந்துள்ள விருந்தினர் மாளிகையில் தங்கினார்கள்.
காலை உணவுக்குப் பின், விருந்தினர் மாளிகையின் முன் உள்ள அழகான புல்வெளியில், ஒவ்வொருவரும் பாபாவுடன் போட்டோ எடுத்துக் கொண்டனர். போட்டோப் பிரதிகள் உடனடியாக அவர்களுக்குக் கொடுக்கப்பட்டன. ஒரு மாணவனிடம் கேமராவைக் கொடுத்து சுவாமி, கிளிக் செய்யும்படிக் கூறினார். சுவாமியின் ஆரஞ்சு அங்கியின் கீழ்ப்பகுதி புதரின் குச்சிகளில் சிக்கியிருந்தது. மாணவன் கேமராவைக் கிளிக் செய்யும்முன், திருமதி. ரத்தன்லால் என்ற பக்தை சுவாமியின் அங்கியை விடுவிக்க ஓடிவந்தார். “என்னைத் தொடாதே” என்று சுவாமி உரக்கக் கூச்சலிட்டார். திருமதி. ரத்தன்லாலும் வேகமாகத் திரும்பி விட்டார். கேமரா கிளிக் செய்யப்பட்டது. எடுக்கப்பட்ட போட்டோப்பிரதிகளை ஜோகாராவிடம் சுவாமி கொடுத்தார்கள். தன் உள்ளங்கையில் வைத்து ஜோகாராவ் அதைப் பார்த்தார். ஆரஞ்சு அங்கியில் பாபாவின் புகைப்படம் இருக்கும் என ஜோகாராவ் எதிர்ப்பார்த்தார். அங்கு கருப்பு வெள்ளை வண்ணத்தில் ஓர் இளைஞனின் புகைப்படம் மூன்று சிரங்கள், ஆறுகரங்களுடன் தெரிந்தது. ஒவ்வொரு கரமும் தெய்வீகச் சின்னம் ஒன்றைத் தாங்கியிருந்தது. பின்னால் நான்கு நாய்கள் நின்று கொண்டிருந்தன. முகம் மட்டும் பாபாவினுடையது. அது தத்தாத்ரேயரின் உருவம். பிரம்மா, விஷ்ணு, சிவன், இணைந்த வடிவம். இதுதான் பாபாவின் உண்மையான வடிவம். அனைவரது கண்களும், நம்பமுடியாத அந்தப் படைப்பைக் கண்டு களித்தன. எல்லா இதயங்களும் அற்புத வெளிப்பாட்டைப் பதியவைத்துக் கொண்டன. அதன்பின் போட்டோ மறைந்து விட்டது. மறுநாள் பகவான் பிருந்தாவன் மாணவர்களிடம் பேசியபொழுது கூறினார்கள்: “இதுவே என் உண்மையான வடிவம். என்னைத் தொட்டிருந்தால் திருமதி. ரத்தன்லால் உயிர் பிழைத்திருக்கமாட்டார்”
Source: [https://www.saibaba.ws/articles2/jogarao.htm]