ஶ்ரீ மஹாலக்ஷ்மியின் கதை
அழியாத் தன்மை அளிக்கக்கூடிய அமிர்தத்தைத் தேடி, தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடையும்பொழுது, பதினான்கு அணிகலன்கள் ஒன்றன் பின் ஒன்றாகக் கிடைக்கப் பெற்றனர். அவர்கள் மேலும் கடைந்து கொண்டேயிருக்கும்பொழுது, ஒரு கட்டத்தில், சமுத்திர ராஜாவின் புதல்வியான லக்ஷ்மி தேவியே அவர்கள் முன் தோன்றினாள். அவள் அழகிய ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு, அழகே உருவாய் இருந்தாள். கையில் வைஜயந்தி (தாமரை போன்ற ஒரு வித மலர்) மலர்களாலான வைஜெயந்திமாலை வைத்திருந்தாள். அவளைக் கண்டவுடன் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் அவளைத் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்ற ஆசை வந்தது. அவள் யாரைத் தன் கணவராகத் தேர்ந்தெடுப்பாள் என்றறியும் ஆவலுடன், அவர்கள் அனைவரும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தனர். லக்ஷ்மி தேவி சுற்றுமுற்றும் பார்த்தாள், ஆனால் அங்குள்ள எவர் மீதும் தேவியின் மனம் செல்லவில்லை.
பிறகு, உலக விஷயங்களைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஆதி சேஷன் மேல் சயனித்திருக்கும் பகவான் ஸ்ரீ விஷ்ணுவைக் கண்டாள். அவருக்கு அவளைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் கூட இல்லை. அவருக்குத் தேவைதான் என்ன? அனைத்தும் அடையப் பெற்றவராய் தமக்குள்ளேயே பேரானந்தத்தில் மூழ்கியிருந்தார். உலக மாயையிலிருந்து முற்றிலும் விடுபட்டவராயிருக்கும் பகவான் விஷ்ணுவைக் கண்ட லக்ஷ்மி தேவிக்கு, அவரே தமக்கு ஏற்ற கணவராயிருப்பார் என்று தோன்றியது. அதனால், அவரருகில் சென்று அவரைத் தன் கணவராய் ஏற்றுக்கொண்டு, தன் மலர் மாலையை அவர் கழுத்தில் அணிவித்தாள். இவ்வாறாக, அவள் ஸ்ரீ (சௌபாக்கியம்) பீடத்தை அடைந்தாள். பகவான் விஷ்ணு, பாக்யஸ்ரீ, ராஜஸ்ரீ, ஜெயஸ்ரீ போன்ற அனைத்து ஸ்ரீ களும் அடையப்பெற்றவராய் இருப்பதால், அவருடைய மனைவியாகத் திகழும் ஸ்ரீ லக்ஷ்மியே, நாதத்தை எழுப்பும் சக்தியுடைய சங்கிற்கும், காலச் சக்கரத்தைக் கட்டுப்படுத்தும் சக்கரத்திற்கும் அதிபதியானாள். பத்மா அல்லது தாமரை தான் அனைத்து உயிர்களுக்கும் மனம் மற்றும் இதயமாகும். மேலும், தண்டாயுதமாகிய கதையே இந்த உலகைக் காக்கும் ஒரு சக்தி. அன்றிலிருந்து, அவளே பகவானுடைய மாயை என்றறியப்பட்டாள். அதுதான் புருஷார்த்தத்தின் பெண்பால் அம்சமாகும். இவ்வாறாக, அவள் தேவர்களாலும், முனிவர்களாலும் கூடப் போற்றப்படுகிறாள்.
[Illustrations by Sainee, Sri Sathya Sai Balvikas Student]