மூவர்ண தேசியக்கொடி
குழு செயற்பாட்டின் நோக்கம்: நாம் அனைவரும் ஒருவரை ஒருவர் சார்ந்து இருப்பவர்களே. எனவே எப்பொழுதும் ஒரு குழுவாகவும், பிறர் தேவையை கவனிப்பவர்களாகவும் இருந்தால் தான் முன்னேற்றம் காண முடியும் என்பதை குருப் 1 குழந்தைகள் புரிந்துகொள்வதற்காக இந்தச்செயல்பாடு.
தேவைப்படும் பொருட்கள்: வரைதாள்(சார்ட் பேப்பர்), கத்திரிக்கோல், கலர்பென்சில் க்ரயான் பென்சில், ரப்பர், ஒரு குச்சி மற்றும் ஒட்டும் பசை.
செய்முறை:
- குழந்தைகளை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கவும்.
- மேற்கண்ட பொருட்களை இரண்டு குழுக்களுக்கும் கிரமமின்றிக் கொடுக்கவும்.
நிறைய குழந்தைகள் இருந்தால் மேலும் குழுக்களாகப் பிரிக்கலாம். எந்த குழுவுக்கும் அனைத்து பொருட்களும் கிடைக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும் உதாரணமாக, ஆண் குழந்தைகள் குழுவிற்கு ஆரஞ்சு கலர் பென்சில், சார்ட் பேப்பர் கத்திரிக்கோல், பென்சில் கொடுத்தால்,பெண் குழந்தைகளுக்கு பச்சை கலர் பென்சில், பென்சில், சார்ட், ஒட்டும் பசை இவற்றை வழங்கலாம். - இரண்டு குழுவினரிடமும், “நமது தேசியக்கொடியை வரைதாளில் (சார்ட் பேப்பரில்) வரைந்து வண்ணம் தந்து ஒரு குச்சியில் ஒட்ட வேண்டும்” என்று கூறவும்.
- முதலில் அதற்குத் தேவையான பொருட்கள் தங்களிடம் இல்லை என இரண்டு குழுவினரும் புகார் கூறுவார்கள். உதாரணத்திற்கு, பையன்கள் குழுவில் பச்சைகலர் பென்சில் இல்லை, பசை இல்லை என்பார்கள். பெண்கள் குழுவில், ஆரஞ்ச் கலர் இல்லை, கத்திரி இல்லை என்பார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் கொடுத்து உதவிக்கொள்ளலாம். ஆனாலும், அதனை குரு வெளிப்படக் கூறாமல், அவர்கள் எவ்வாறு நடந்துக்கொள்கிறார்கள் என கவனிக்க வேண்டும். மேலும், அவர்கள் இந்தச் செயற்பாட்டில் ஆர்வம் காட்டுகிறார்களா எனவும் குரு பார்க்க வேண்டும்
- மூவர்ணக்கொடியைத் தயாரித்து சமர்ப்பிக்கச் சொல்லி, பின்னர் இரண்டு குழுவும் சேர்ந்து தேசியகீதத்தைப் பாடச்சொல்ல வேண்டும்
விவாதத்திற்காக கேட்க வேண்டிய சில கேள்விகள்:
- தேவைப்பட்ட பொருட்களை ஒருவருக்கொருவர் கொடுத்து உதவிக் கொண்ட போது சந்தோஷப்பட்டார்களா?
- இன்னொரு குழுவிடமிருந்து கடன் வாங்காமல் இந்த செயல்திட்டத்தை முடித்திருக்க முடியுமா?
- ஒரு குழுவாக பணி செய்யும்போது எப்படி இருந்தது? ஒரு குழுவினர் கேட்ட பொருட்களை கொடுக்கும் முன் தங்கள் குழுவில் அவர்கள் அதனை முடிக்கும் வரை பொறுமை காத்தார்களா?
- முழுதாக தங்கள் கொடியை முடிக்கும் வரை அடுத்த குழுவை காக்க வைத்தார்களா?
- வினயத்துடன் கேட்டார்களா அல்லது அதிகாரத்துடனா?
முடிவில், ஒன்றுபட்டு செய்வதாலும் பிறருக்கு உதவுவதாலும் வாழ்க்கையில் எவ்வாறு வெற்றி கொள்ளலாம் என்று விளக்கலாம்.
இதையே சற்று வேறுவிதமாக
குரு இந்த செயற்பாட்டில், ஒரு அத்யாவசியமான பொருளை, அதாவது, பசையை தன்னிடமே வைத்துகொண்டு, அவர்கள் செய்து முடித்தபின் பசையை வைத்து குச்சியை ஒட்டி கொடுக்கலாம். பின்னர் இம்மாதிரி கேள்விகள் கேட்கலாம்:
- கொடியைத் தயார் செய்யப் பசை தேவையா?
- பசை மட்டுமே வைத்துக்கொண்டு குருவால் கொடியைத் தயாரித்திருக்க முடியுமா?
ஸ்வாமியின் சரியான கூற்றின்படி புலன்களையும், உணர்ச்சிகளையும் பயிற்றுவிப்பது என்பது, கற்பவரும், கற்பிப்பவரும் செய்யும் கூட்டுச் செயலாகும்.
குழந்தைகளும், குருவும் ஒன்றிணைந்து செய்வதே சரியான கற்றலாகும் என்று பின்னர் குரு, குழந்தைகளுக்கு விளக்க வேண்டும்.