விலங்குகளிடத்திலும் அன்பு கொள்- I
உயிர் பொருள் அனைத்தும் உடையவன் படைப்பே உண்மையாம் இதனை உள்ளத்தால் உணர்ந்தவன் அன்பு உரு அண்ணலின் அருள்திரு ஆற்றலை அறிந்து போற்றுவான் ஐயன் அருளினைப் பெறுவான்.
தலை சிறந்த மகான்கள் விலங்குகளிடமும் சமமான அன்பு கொண்டிருந்ததை வரலாறுகளில் காணலாம். திருவண்ணாமலையில் தவமியற்றி வாழ்ந்த இரமண மகரிஷியும், சிறந்த உலக விஞ்ஞான மேதையான சர் ஐசக் நியூட்டனும் இத்தகைய அன்பின் வழி நின்று குறிப்பிடத்தக்க அளவில் போற்றப்பெறும் பெரியவர் ஆவர்.
ஸ்ரீஇரமண மகரிஷியினுடைய கனிந்த அன்பு, எங்கெங்கிருந்தோ வரும் பக்தர்களை மட்டும் கவர்ந்து ஈர்க்கவில்லை; பலப்பல மிருகங்களையும் கூட அவருடைய அன்பு சால் பண்பு ஈர்த்துப் பிடித்து இழுத்தது. அவருடைய ஆசிரமத்தில் நாய்கள், பசுக்கள், குரங்குகள், அணில்கள், மயில்கள், மற்றும் பல விலங்குகளும் பறவைகளும் வசித்து வந்தன. தம்முடைய தரிசனத்திற்கு வரும் பக்தர்களைப் பாதுகாத்து ஆசி வழங்குவது போலவே, இந்த மிருகங்கள் பறவைகளையும் கனிவோடு காப்பாற்றி ஆசி கூறி அருளி வந்தார் இரமணமகரிஷி. அவர் மிருகங்களை ‘அது’ என்று அ∴றிணையில் குறிப்பிடமாட்டார். ‘அவன்’ ‘அவள்’ என்று தான் குறிப்பிட்டுக் கூறுவார். “அந்தப் பையன்களுக்கு உணவு தந்தார்களா?” என்று நாய்களைப் பற்றிப் பரிவோடு வினவுவார். அன்றாட நடைமுறையில், முதலில் நாய்கள், அடுத்து பிச்சைக்காரர் அதன் பிறகே பக்தர்கள் என்று வரிசைப்படி தினமும் உணவுபடைக்க ஒரு சட்டதிட்டமே வகுக்கப்பட்டிருந்தது ஆசிரமத்தில்.
ஒரு முறை குரங்கு ஒன்று, தன் குட்டியுடன் இரமணமகரிஷியைக் காணவந்தது. பக்தர்கள் அஞ்சியவர்களாய் அதனை வெளியே விரட்ட முனைந்தனர். குரங்கு பிரார்த்தனைக் கூடத்திற்குள் வந்துவிட்டால் அங்கிருக்கும் அமைதியும் தெய்வீகச்சூழ்நிலையும் கலைக்கப்படுமே என்பது தான் அவர்களது அச்சம். மகரிஷி பக்தர்களது செயலைப் பார்த்துவிட்டார். உடனே “அவளை உள்ளே வரவிடுங்கள். தடைசெய்யவேண்டாம். அவள் தன் குட்டியை என்னிடம் காட்டி மனிதர்களைப் போல என்னுடைய ஆசிகளைப் பெற்றுப் போக வந்துள்ளாள்” என்று கூறினார்.
ஆசிரமத்தில் ஒரு பசு இருந்தது. மகரிஷி அதற்கு லஷ்மி என்று பெயரிட்டிருந்தார். பக்தர்கள் சூழ மகரிஷி இருந்த நேரத்திலும் லஷ்மி யாரையுமே பொருட்படுத்தாது நேராக அவரிடம் சென்று விடுவாள். அவளுக்காக அவர் வாழைப்பழமோ வேறு ஏதாவது பண்டமோ வைத்திருப்பார் என்பது அவளுக்கு நன்றாகத் தெரியும். சுவாமிக்குப் பிடித்தமானவள் என்பதால் ஆசிரமத்தில் உள்ள அனைவருக்கும் அவள் விருப்பமானவளாக இருந்து வந்தாள். லஷ்மி பல கன்றுகளை ஈன்றாள். அவற்றில் மூன்றினை சுவாமி பிறந்தநாளன்றே ஈன்றெடுத்தாள்.
லஷ்மி வயதாகி நோயுற்று இறக்கும் தருவாயில் கிடந்தாள். அப்போது மகரிஷி அவளருகே வந்தார். அம்மா நான் உன் அருகேயே இருக்க விரும்புகிறாயா? என்று பரிவோடு வினவினார். அவள் பக்கத்தில் அமர்ந்து, அவளுடைய தலையை எடுத்துத் தம் தொடை மீது வைத்துப் பிடித்துக் கொண்டு, மற்றொரு கையால் மெல்ல அவளைத் தட்டித்தடவித்தந்தார். அவரது மடியில் அமைதியாக அவளது ஆவி பிரிந்தது.மனிதர்களுக்குச் செய்யப்பெறும் சடங்குகள் அனைத்தையும் முறையாகச் செய்வித்து, லஷ்மியை ஆசிரமத் தோட்டத்தில் புதைக்கச் செய்தார். முன்பே அங்கு ஒரு மான், காக்கை, நாய் முதலியன புதைக்கப்பட்டிருந்தன. லஷ்மியின் சமாதியின் மேல் ஒருசதுரக்கல் பதித்து அதன் மேல் லஷ்மியைப் போல உருவம் ஒன்றை நிறுவினார் மகரிஷி.
விலங்குகளிடமும் அவர் காட்டி வந்த அன்பும் பரிவுந்தான் என்னே!
கேள்விகள்:
- தம்மையே உதாரணமாகக் காட்டி இரமண மகரிஷி பக்தர்களுக்கு என்ன கற்பித்தார் ?
- விலங்கினங்கள் இறந்த போது அவற்றைப் புதைத்த இடத்தில் சமாதிகள் ஏன் கட்டப்பட்டன?
- நீ படித்தோ கேட்டோ பார்த்தோ இருக்கும் விலங்கினத்திடம் இது போன்று அன்பு கொண்டிருந்த ஒருவரது நிகழ்ச்சியைக் கூறு.