பிரார்த்தனையின் பலன்
கிரண் தன் பெற்றோருக்கு ஒரே மகன். அன்னை, தந்தையிடம் அளவிலாப் பாசமும், கீழ்ப்படியும் பண்பும் கொண்ட சிறுவன் அவன். பள்ளிக்கூடத்திலும் நல்ல ஒழுக்கம் நிறைந்த மாணவன் என்ற நற்பெயர் பெற்றிருந்தான். தன்னுடைய அமைதியான குணத்தினாலும், இனிமையான பண்பினாலும் அவன் பெரியோர்களிடமும், ஆசிரியர்களிடமும் அன்பையும், மதிப்பையும் பெற்றிருந்தான்.
பத்து வயதே நிரம்பிய சிறுவனான கிரண், தாய் தந்தையரது செயல்களைக் கூர்ந்து கவனித்து வந்தான். அவனது தந்தையார் ஒரு மாவட்ட நீதிபதி. ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடு இன்றி நேர்மையாக நியாயம் வழங்குவார் அவர். அவனது அன்னையார் கடவுள் பக்தி நிறைந்தவர். அத்துடன், பிறருக்குத் தேவைப்பட்ட உதவிகள் புரிவதில் ஆர்வம் கொண்டவர். பண்பில் சிறந்தவர்களான தன் பெற்றோரைப் பற்றிக் கிரணுக்கு மிகவும் பெருமை ஆனால் அவர்களது செயல்கள் சிலசமயம் அவனைப் பெரும் வியப்பில் ஆழ்த்தி வந்தன. முக்கியமாகக் கடவுளிடம் அவர்கள் மனம் ஒன்றி நிற்பது அவனுக்கு விந்தையாகத் தோன்றியது. ஒரு நாள் அன்னையிடம் வந்து,” ஞாயிற்றுக்கிழமை, வாரத்தில் ஒரு முறை கிடைக்கும் ஓய்வுநாள், அன்று போய் அப்பா கோவிலில் சாதாரண மனிதர்களுடன் அமர்ந்து பஜனை செய்கிறாரே! பெரிய அலுவலர் அவ்வாறு செய்வது சரியா? நீயும் அடிக்கடி கண்களை மூடிக்கொண்டு தியானம் செய்கிறாயே! மந்திரங்கள் பல ஓதி, நீண்ட நேரம் துர்காதேவியை வழிபடுகிறாயே! இரண்டுபேரும் இந்த நேரத்தை வேறு பயனுள்ள செயலில் செலவழிக்கக்கூடாதா? இப்படிக் கண்ணுக்குத் தெரியாத கடவுளைக் கும்பிடுவதால் என்ன பலன்?” என்று கேட்டான். அறிவிலாக் குழந்தையாகத் தன் மகன் கேட்கும் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்லுவார் அன்னையார்? வெறுமனே சிரித்து மழுப்பி விட்டார். ஆனால் தமது வழிபாட்டின்போது, “துர்கா தாயே! என் மகன் அறியாமையினால் ஏதோ உளறுகிறான். அவனைத் திருத்தி, இறையன்புள்ளவனாக மாற்றியருளுங்கள்” என்று வேண்டினாள்.
ஒருநாள் மாலை கிரண் பள்ளியிலிருந்து வீடு திரும்பினான். வீட்டில் தாயைக் காணோம். வேலைக்காரர் வருத்தம் தோய்ந்த முகத்தோடு இருந்தார். காரணம் புரியாமல் கலங்கினான் கிரண், அப்போது அடுத்த வீட்டம்மாள் வந்து திடுக்கிடும் செய்தி ஒன்றைக் கூறினாள். கிரணுடைய தந்தை அலுவலகத்திலிருந்து திரும்பும்போது, விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் மயக்கமாகக் கிடக்கிறார் என்றும், அவனது அன்னையும் அங்கு தான் இருக்கிறாள் என்றும் கூறினாள். உயிருக்கு உயிரான தந்தை அடிபட்டுக் கிடக்கிறார் என்பதை அறிந்ததும் எப்படியிருக்கும் கிரணுக்கு! துடித்துப்போனான் அவன். உடனே அப்பாவைக் காண ஓடிச்சென்றான்.
அப்போது, அன்னை வழிபடும் துர்கா தேவியின் பூஜை அறை அவன் கண்ணில்பட்டது. மலர் மாலைகள் சூட்டி அலங்காரத் தெய்வமாகக் காட்சி தந்தாள் துர்காதேவி, “ஆற்றலின் வடிவம் அவள். சக்திமாதா. உயிரினங்களுக்கு அன்னை அவளே” என்று அடிக்கடி அவனது அன்னை கூறுவதை அவன் கேட்டிருக்கிறான். ஏதோ ஒரு உந்துதலில் பூஜை அறையின் உள்ளே சென்றான். துர்கையின் முன்னே மண்டியிட்டு அமர்ந்தான். “துர்கா தாயே! தந்தையில்லாமல் என்னால் தனித்து வாழ இயலாது என்று உனக்குத் தெரியுமே! எனக்காக என் அப்பாவைக் காப்பாற்று அம்மா!” என்று மனமுருக வேண்டினான். பிறகு துர்கையின் பாதத்திலிருந்து ஒரு சிவப்பு ரோஜாவை எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்து சென்றான்.
பேச்சு மூச்சின்றித் தந்தை படுத்துக் கிடப்பதைப் பார்த்ததும் கிரணுக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது. அருகே அவனது அன்னை கண்களை மூடி ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்து இருந்தார். ஏதோ பிரார்த்தனையும் செய்து கொண்டிருந்தார். அவரைக் கண்ணுற்றதும் கிரண் அழக்கூட மறந்து விட்டான். அன்னை அருகே சென்று மெல்லிய குரலில் “அம்மா! அன்னை துர்கையின் பத்மபாதத்திலிருந்து இந்தப் பூவை அப்பாவிற்காக எடுத்து வந்தேன்” என்று கூறி, அந்தச் சிவந்தபுஷ்பத்தைத் தந்தையாரது நெற்றியில் வைத்தான்.
அந்தத் தெய்வ மலர் நெற்றியில் பட்டவுடன் வியக்கத்தக்க ஒரு பெரும் மாற்றம் விளைந்தது. கிரணின் தந்தையார் உணர்வு மீளப் பெற்றவராய் மெல்ல மெல்லக் கண்களைத் திறந்தார். அப்போது அங்கு வந்த மருத்துவர்களும் அவர் அச்சம் தரும் நிலையைக் கடந்து விட்டார் என்று கூறினர். அறிவுக்கூர்மையான கிரண் இந்த அனுபவத்தால் ஒரு பேருண்மையைத் தெரிந்து கொண்டான்.
அன்றிலிருந்து அன்னையோடு அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்தான். விடுமுறை நாட்களில் அன்னையின் வழிபாட்டிற்குத் தன்னால் இயன்ற உதவிகளும் புரியலானான். ஒரு மாதம் கழித்து நலமுற்று வீடு திரும்பிய அவனது தந்தையார் அவனிடம் ஏற்பட்டிருந்த மாற்றத்தைக் கண்டு வியந்து மகிழ்ந்தார். அவனைத் தம்மோடு கோவிலுக்கும் பஜனைகளுக்கும் அழைத்துச் சென்றார். பள்ளித்தேர்வு முடிந்து விடுமுறையில் வீட்டில் இருக்கும்போது, சுவாமி விவேகானந்தர், ஏசு கிறிஸ்து, கௌதம புத்தர் போன்றோரது வரலாறுகளைச் சிறுவர்களுக்கான எளிய நடையில் எழுதியுள்ள புத்தகங்களை வாங்கிப் படித்து வந்தான்.
இறை நம்பிக்கை, இறை பக்தி, இறை வணக்கம் ஆகியவை பெரும் ஆற்றல் பெற்றிருப்பதை உணர்ந்தான் கிரண். இவை, வாய்மை பேசுவதில் ஆர்வம், கருணை மிக்க அன்பு, எல்லோருக்கும் சேவை செய்யும் மனப்பாங்கு போன்ற நல்லியல்புகளை நம்முள் வளர்க்கின்றன. ஆழ்ந்த நம்பிக்கை, உள்ள உறுதி, அஞ்சாமை இவற்றை மனத்தில் தோற்றுவிக்கின்றன. நம்மைச் சரியான பாதையில் செவ்வனே செலுத்தி வந்து, நம் வாழ்வில் நிறைவையும், அமைதியையும், மகிழ்ச்சியையும் தருகின்றன.
ஆண்டவனிடம் அகலா அன்புடன், ஆழ்ந்த நம்பிக்கையோடு இடைவிடாது பிரார்த்தனை செய்து வந்தால், ஐயனின் ஆழ்ந்த கருணையை நாம் பெறுவோம் என்ற பேருண்மையை நாம் அனைவரும் புரிந்து கொண்டு நடப்போமாக.
கேள்விகள்:
- ஒரு நல்ல பையனைப் பற்றியோ அல்லது ஒரு பெண்ணைப் பற்றியோ உன் சொந்த சொற்களில் பத்து வரிகளில் விளக்குக.
- ஏன் நாம் இறைவனிடம் நம்பிக்கையும் பக்தியும் கொள்ளவேண்டும்?
- கிரண் தன் பள்ளித் தேர்வில் சிறந்து வெற்றி பெற இறைவனின் உதவியை வேண்டுகிறான். அதற்காக அவன் என்ன செய்ய வேண்டும்?