பரதன் இராமரை சந்தித்தல்
சித்திரகூடத்தில் இராமரைக் கண்டதும் பரதன், இராமரின் பாதத்தில் விழுந்து வணங்கினான். அரசிகளும் மற்ற அனைவர்களும் இராமரைப் பார்த்து துயரத்தால் உடைந்து போனார்கள். வசிஷ்டர், இராமரைத் தன் தந்தைக்கு இறுதிச் சடங்குகளை செய்யுமாறு கூறினார். இரண்டு நாட்களுக்குப் பிறகு இராமர், வசிஷ்டரிடம் அவர்கள் காட்டில் நிறைய கஷ்டப்பட வேண்டியிருக்கும் என்பதால் அவர்கள் அனைவரையும் அயோத்திக்குத் திரும்பிச் செல்லுமாறு வேண்டினான். கைகேயி இத்தருணத்தில் இராமரிடம் மன்னிப்பு வேண்டினாள். இராமன் அதற்கு, நடப்பது எல்லாமே கடவுள் சங்கல்பத்தில் தான் நடக்கிறது என்று கூறினார். இராமரையும் சீதையையும் விட்டுப் பிரிவதற்கு அங்கு யாருக்குமே விருப்பமில்லை. இராமரின் தரிசனத்திலேயே அவர்கள் சந்தோஷமாக இருந்தனர். ஆறாவது நாள், பரதன், இராமர் இல்லாமல் தான் அயோத்திக்குச் செல்ல முடியாது என்று கூறினான். இராமர், அவர்கள் தகப்பனாரின் ஆணையை ஏற்று தர்மத்தின் பாதையில் தான் செல்ல வேண்டும் என்று பரதனுக்கு விளக்கினார்.
குருமார்கள் குழந்தைகளுக்குச் சொல்ல வேண்டியது: பரதன் விரும்பினால் அயோத்யாவை அரசாலும் உரிமையை பெற்று சுக போகங்களை அனுபவித்திருக்கலாம். இருந்தும்கூட கீழ்மையான ஆசைகளில் சிக்காமல், பேரும் புகழும், பதவியும் கிடைக்கவிருந்ததைத் துறந்து, எது சரியான தர்மமோ அதையே செய்ய விழைந்தான்- அதுவே இராமரை திரும்ப அயோத்யாவிற்கு அழைத்து வந்து அவருக்கு உரிமையான ராஜ்யத்தை அவரிடமே ஒப்படைப்பது.
கற்றுக்கொள்ள வேண்டிய நீதி: எந்த முடிவும் எடுக்கும் முன் விவேகத்தைப் பயன்படுத்து. எப்போதும் தர்மத்தின் வழியில் செல்.
இராமர் தன்னுடைய பாதுகையை பரதனிடம் கொடுத்து பரதனிடம் 14 ஆண்டுகள் நல்லவிதமாக நாட்டை ஆளவேண்டும் என்றார். பரதன், பாதுகைகளைப் பெற்றுப் பின்னர், அவைகளை இராமருடைய பிரதிநிதியாக வைத்து, தன் கடமையைத் தவறாமல் ஆற்றுவதாகக் கூறினான். பரதன், இராமரின் பாதங்களை வணங்கி, அந்த இடத்தை விட்டுச் செல்ல அனுமதி கேட்டான்
குருமார்கள் குழந்தைகளுக்குச் சொல்ல வேண்டியது:
இங்கு பரதன் இராமரிடம் கொண்டிருந்த பக்தியையும், அவனது உறுதியான மனப்பான்மையையும் கூறவேண்டும். இராமர் பதிநான்கு வருடங்கள் முடிவதற்கு முன் அயோத்யா திரும்ப மறுத்ததால் அவருக்குப் பதிலாக அவரது பிரதிநிதியாக இருந்து அவர் திரும்பி வரும்வரை அயோத்யாவை ஆளுவதற்கு ஒப்புக்கொண்டான்
பரதனின் நியாயமான மனநிலையை விளக்கி, இராமரைப்போல காடுகளில் வசிக்கும் துறவியாக தானும் வாழ்வதற்கு முடிவு செய்த உயர்ந்த எண்ணத்தை கோடிட்டுக்காட்ட வேண்டும்.
இன்றைய நாட்களில் உலகாயத விஷயங்களுக்காக குடும்பத்தில் உட் பூசல்கள் ஏற்படுவது சர்வ சகஜமாகிவிட்டது. அயோத்திய ராஜகுமாரர்களிடம் காணப்பட்ட அபரிமிதமான உறவுமுறை அறுதியிட்டுக் குறிப்பிடத்தக்கது.
கற்றுக்கொள்ள வேண்டிய நீதி
சகோதர உறவுமுறைகள் நிலைத்து நிற்க, அன்பும் தியாகமும் அடித்தளங்கள்.
எது உனக்கு சொந்தமானது இல்லையோ அதை அடைய விருப்பம் கொள்ளாதே. அப்படியே அது உன்னுடையதாக இருந்தாலும்கூட உனது அன்பிற்கு பாத்திரமானவர்களுக்காக அதை விட்டுக்கொடுப்பதில் தவறு இல்லை. செய்யும் அனைத்து காரியங்களிலும் நியாயமான மனநிலையை வளர்த்துக்கொள். விளையாட்டுகளில், வகுப்புகளில் மற்றும் போட்டிகள் என்று எதுவானாலும் சரி, சாதனை என்பது நேர்மையான முறையில்/. உன்னைச் சுற்றி உள்ளவர்களின் நேசத்தையும் நம்பிக்கையையும் இழக்காத வகையில் அடையப்பெற்றிருக்க வேண்டும்.
உன்னுடைய வார்த்தை, செயல், எண்ணம், ஒழுக்கம், இதயம். ஆகியவைகளை கவனி. சிறப்பான மனிதனாக இரு:சிறப்பற்ற மனிதனாக இராதே:.யார் தனது வாழ்க்கையில் நேர்மையுடனும், தர்மத்துடனும் இருக்கிறாரோ அவரே சிறந்தவர் ஆவார்.
அயோத்திக்குத் திரும்பியவுடன், இராமர் வனவாசத்திலிருந்து திரும்பி வரும் வரை இராமரின் பாதுகைகளை அரசனின் சிம்மாசனத்தில் வைத்து வழிபட ஏற்பாடுகள் செய்யப் பட்டன. அன்றைய தினம் பரதன் இராமரின் பாதுகைகளைத் தன் தலையில் தாங்கி அதை மிகுந்த மரியாதையுடன் அரச சிம்மாசனத்தில் வைத்தான். பிறகு பரதன் தானும் துறவு பூண்டு மரவுரி அணிந்து அருகில் உள்ள நந்திகிராமம் என்ற கிராமத்தில் ஒரு ஓலைக் குடிசையில் தங்கினான். அவன் மிகவும் எளிமையான உணவுகளை உண்டு எளிமையான தவ வாழ்வை மேற்கொண்டான்.