தசரதனின் முடிவு
இதற்கிடையில், சுமந்திரர் அயோத்தியை அடைந்து, இராமர் மந்திரிகளுக்கும் மக்களுக்கும் சொல்லி அனுப்பிய செய்தியை தெரிவித்தார். அனைவரும் மகாராஜாவை சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும் என்றும், பரதனிடம் பெற்றோருக்கு சேவை புரிந்துகொண்டு, நேர்மையாகவும், நாட்டு மக்களின் நலத்தையும் மனதில் கொண்டு, நாட்டை ஆளவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இதையெல்லாம் கேட்ட தசரத மன்னனின் துயரம் மிகவும் அதிகமாகி, இராமரின் பெயரை திரும்பத் திரும்பச்
சொல்லிக்கொண்டே தன் கடைசி மூச்சை விட்டார்.
குருமார்கள் குழந்தைகளுக்குச் சொல்லவேண்டியது:
எப்படி தசரதர் இராமரிடம் ஆழ்ந்த அன்பு கொண்டிருந்தார் என்றும், இராமரை பதிநான்கு ஆண்டுகள் வனவாசம் செய்ய அனுப்பிவிட்டதே அவரின் மரணத்திற்குக் காரணமாக இருந்தது என்றும் கூற வேண்டும்.
தனது குழந்தைகளிடம் பெற்றோர்கள் காட்டும் அன்பானது தன்னலமற்றதும் நிபந்தனையற்றதும் ஆகும். தனது குழந்தைகளின் நலனையல்லாது வேறு எதுவும் அவர்களுக்கு முக்கியமில்லை. தங்களது சொந்த நலனையும் பாராது, குழந்தைகளைப் பேணி வளர்ப்பதில்தான் அவர்கள் கவனம் முழுவதும் இருக்கும்.
கற்றுக்கொள்ள வேண்டிய நீதி :
பெற்றோர்களின் தூய அன்பிற்கு மதிப்பு கொடு. அவர்களிடம் நன்றி உள்ளவனாக எப்போதும் இரு.
பரதனும் சத்ருக்னனும் தன் பாட்டனார் வீட்டிலிருந்து அயோத்திக்கு திரும்ப வந்தவுடன் இந்த இதயத்தைத் துளைக்கும் செய்தியைக் கேட்டனர். பரதன், இராமரின் வனவாசத்தை பற்றியும், தன் தாயின் பேராசையால் தான் அரசனாக வேண்டும் என்றும் கேள்விப்பட்டு அவமானத்தாலும் வெட்கத்தாலும் தலைகுனிந்தான்.
வசிஷ்டரின் ஆணைப்படி பரதன் அவனுடைய தந்தையின் இறுதிச் சடங்கை நடத்தி முடித்தான். பிறகு பரதன், இராமரைத் திரும்பவும் அயோத்திக்கு அழைத்து வர வேண்டி வனத்திற்குச் சென்றான். அவனோடு சத்ருக்னனும், மூன்று அரசிகளும், வசிஷ்டரும், மற்றும் பலரும் சென்றனர். முடிவில் அவர்கள் சித்ரகூடத்ததை அடைந்தார்கள்
குருமார்கள் குழந்தைகளுக்குச் சொல்லவேண்டியது:
மந்தராவின் விஷத்தை ஒத்த ஆலோசனையைக் கேட்டதனால்தான் கைகேயி தனது வாழ்க்கையையே பாழாக்கிக் கொண்டாள். தனது கணவனை இழந்து, சொந்த மகனாலேயே தனது இழி செயலுக்காகக் கடிந்து கொள்ள நேர்ந்தது மட்டுமல்லாது, தன்னைச் சுற்றி உள்ளவர்களின் அன்பையும் மரியாதையையும் கூட இழந்தாள்.
கற்றுக்கொள்ள வேண்டிய நீதி: வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய ஏ பி சி என்பது – “கெட்ட சகவாசத்தைத் தவிர்”. ”எப்போதும் ஜாக்கிரதையாக இரு”
மற்றவர்களின் எண்ணத் தாக்கத்தால் உனது சுய புத்தியை இழக்காதே
பின் விளைவுகளை சீர்தூக்கிப் பார்த்த பின் எந்தக் காரியத்தையும் செய்.