இலங்கையில் ஹனுமான்
ஹனுமான் தன் பெரிய உருவத்தை மிகச் சிறிய வானர உருவமாக மாற்றிக் கொண்டு இலங்கையின் தலைவாயிலில் நுழைந்த போது, அங்கு வாயிலைக் காத்துக்கொண்டிருந்த லங்கிணி என்ற அரக்கியால் தடுக்கப்பட்டான். ஹனுமான் அவளை பலமாக அடித்தான். அவளால் அதிலிருந்து மீள முடியவில்லை. அவள் ஹனுமானிடம் என்றைக்கு இந்த வாயில் காப்பவள் அடித்து வீழ்த்தப்படுகிறாளோ அன்றே இராவணனுக்கு அபாயம் என்று முன்கூட்டியே கூறியிருப்பதாகச் சொன்னாள். ஹனுமான் சீதையைத் தேடுவதைத் தொடர்ந்த போது, வழியில் ஒரு துளசி வனத்தையும்,hanuman-goes-in-search-of-sitaஹரியின் கோயிலையும் கடந்தான். அதனால் அவன் ஒரு பிராமணனைப் போல் உருமாறி அங்கு சென்றான். அங்கு ஹரியின் நாமத்தை உச்சரித்துக்கொண்டு ஒருவன் இருப்பதைக் கண்டான். அவன் தன்னை இராவணனின் சகோதரன் விபீஷணன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டான். விபீஷணன் மிகவும் நல்லவன். ஹனுமான் தன்னை, நம்பிக்கையுள்ள இராமனின் தொண்டன் என்றும், தான் சீதையைத்தேடி வந்திருப்பதாகவும் சொன்னான். அதைக் கேட்டதும் விபீஷணன் அவன் பாதத்தைப் பணிந்தான். விபீஷணன் “நான் இராமனை பார்க்க ஏங்கிக் கொண்டிருக்கிறேன். ஆனால் நான் அரக்கர் குலத்தைச் சேர்ந்தவன். இராமன் எனக்கு ஆசிவழங்கி தரிசனம் கொடுப்பாரா” என்று கேட்டான். அதற்கு ஹனுமான், “இராமன் குலத்தைப் பற்றியோ குடும்பத்தை பற்றியோ பார்ப்பவர் அல்ல; தூய்மையான உணர்வையே பார்ப்பவர்; நீ ஏங்கிக்கொண்டிருக்கும் தரிசனத்தை வழங்குவார் அதனால் துயரப்படாதே” என்று கூறினான். விபீஷணனும் சீதை அசோகவனத்தில் இருப்பதாகக் கூறி, அங்கு செல்வதற்கு வழியையும் காட்டினான்.
குருமார்கள் குழந்தைகளுக்குச் சொல்ல வேண்டியது:
கடவுளின் திவ்ய கண்களுக்கு நாம் அனைவரும் ஒன்றே! அதேபோல நாமும் மற்றவர்களிடம் குலம், மதம், வெளித்தோற்றம், அந்தஸ்து, செல்வம் என்று எந்த பேதமும் இன்றி அணுகவேண்டும்.
கற்றுக்கொள்ள வேண்டிய நீதி:
கடவுளின் பித்ருத்வம்-மனிதர்களின் சகோதரத்வம் நாம் அனைவரும் கடவுளின் பிள்ளைகளே
ஹனுமான் அசோகவனத்திற்கு யார் கண்ணிலும் தென்படாமல், கிளைக்குக் கிளை தாவியும் குதித்தும் மரக்கிளையின் இலைகளுக்கு நடுவில் மறைந்தும் சென்றான். அவன் விரைவிலேயே ஒரு மரத்தின் கீழ் சீதை, இராக்ஷசர்களுக்கு மத்தியில் உட்கார்ந்திருப்பதைக் கண்டான். அந்த சமயத்தில், இராவணன் அங்கு வந்து சீதையை தன்னிடம் அன்பு காட்டும்படி வேண்டி, அவளை பலவாறு பயமுறுத்தனான். ஆனால் சீதை, அவனை ஏறெடுத்தும் பார்க்காமல், இராமனின் நாமத்தையே கூறிக் கொண்டிருந்தாள்.
குருமார்கள் குழந்தைகளுக்குச் சொல்ல வேண்டியது:
எப்போதாவது தீயோர்களின் மத்தியில் இருக்க நேரிட்டால், அவர்களை ஏறிட்டுப் பார்க்கவும் கூடாது, அவர்களிடம் பேச்சும் கொடுக்கக்கூடாது. இதனால் அநாவசியமான வாதங்களே தொடரும். இந்த சமயங்களில் கடவுளின் திவ்ய நாமங்களை நாமஸ்மரணம் செய்து கொண்டிருந்தால் அவரது கருணையால் காப்பாற்றப்படுவோம்.
கற்றுக்கொள்ள வேண்டிய நீதி:
கட்டுப்பாடான பேச்சு சிறந்த ஆபரணம் மட்டுமல்ல, ஆயுதமும் ஆகும்/ நாமஸ்மரணயின் வலிமை
ஹனுமான் இராமனின் மோதிரத்தை கீழே போட்டான். சீதை, இராமனின் மோதிரத்தைப் பார்த்ததும் மகிழ்ந்து சுற்றிலும் பார்க்க அவள் ஒரு வானரம் இராமனின் நாமத்தை கூறக் கேட்டாள். ஹனுமான் அவளருகில் வந்து, தான் இராமனின் உண்மையான சேவகன் என்பதை உணர்த்த, இராமனுக்கும் சீதைக்கும் மட்டுமே தெரிந்த சில விவரங்களை கூறினான். அவன் தன் முழு உருவத்தை காட்டி, இராமனின் ஆசிகளுடன் தான் இலங்கையை அடைந்ததாகக் கூறினான். அவன் தானே சீதையை தூக்கிச் சென்று இராமனிடம் அவளை சேர்த்து விடுவதாக கூறினான். ஆனால் சீதை மறுத்துவிட்டாள். அவள், இராமன் அங்கு வந்து இராவணனை வீழ்த்தி விட்டுப் பிறகு தன்னை அழைத்துச் செல்ல வேண்டும்; அது தான் தனக்கு மரியாதை என்றும் கூறினாள்.
குருமார்கள் குழந்தைகளுக்குச் சொல்ல வேண்டியது:
சீதா லங்காவிலிருந்து ஹனுமானுடன் சென்றிருக்க முடியும். ஆனால் அப்படி செல்வதற்கு மறுத்துவிட்டாள். எப்படியும் ஸ்ரீ ராமர் வந்து தன்னை அழைத்துச் செல்வார் என்ற பூரண நம்பிக்கையால் தான். இதேபோல நாமும் எந்த கஷ்டங்கள் வந்தாலும் மனம் தளர்ந்து குறுக்கு வழிகளில் செல்லாமல் கடவுளின் அருளால் சரியான நேரம் வரும்வரை பொறுமையாக காத்திருந்து செயல்பட வேண்டும். நம்மால் முடிந்த அளவிற்கான முயற்சிகளை செய்த பின் கடவுளை பிரார்த்தித்துக்கொள்வோம். மீதியை கடவுளிடமே விட்டு விடுவோம்.
கற்றுக்கொள்ள வேண்டிய நீதி:
முடிவு நல்லதாக இருந்தாலும் தவறான வழியில் சென்று அதை அடைய ஒருபோதும் முயலக்கூடாது. முடிவு எத்தனை முக்கியமோ அதே அளவு, அதை அடைய நாம் எடுக்கும் நேர்மையான முயற்சியும் மிகவும் முக்கியமானது.
ஹனுமான் கிளம்புவதற்கு முன் திரும்பவும் சிறு வானரனாக உருமாறினார். அவர் நல்ல சுவையுள்ள பழங்களை தின்று சுவையில்லாத பழங்களை தூக்கி எறிந்தார். அங்குள்ள பூக்களைக் கசக்கி மரங்களை வேரோடு பிடுங்கினார். இந்தச் செய்தி, இராவணனின் காதுகளுக்கு எட்டிய போது, அவன் ராட்ஷஸப் படைகளை, ஹனுமானை பிடித்து வர அனுப்பினான். ஆனால் அவர்களால் ஹனுமானைப் பிடித்து வர முடியவில்லை. கடைசியில் ஹனுமானை இராவணனின் தர்பாருக்குக் கொண்டு சென்றனர். ஹனுமான் தன்னை இராமனின் தூதுவனாக அறிமுகப்படுத்திக் கொண்டான். ஹனுமான் இராவணனிடம் அவன் அமைதியை விரும்பினால் சீதையை விடுவித்து இராமனுக்கு மரியாதை செய்ய வேண்டும் என்று கூறினான். இல்லாவிட்டால் இராமனால் அவனும் அவனது ராஜ்ஜியமும் அழிக்கப்படும் என்றும் சொன்னான். இராவணன் கொதித்தெழுந்து ஹனுமனைக் கொல்வதற்கு ஆணை யிட்டான். அந்த சமயத்தில் விபீஷணன் தலையிட்டு ஹனுமான் ஒரு தூதுவனாதலால் அவனைக் கொல்வது சரி அல்ல என்று கூறினான்.
அதனால், ஹனுமனின் வாலில் தீ வைப்பதற்காக, வாலைச் சுற்றி துணி சுற்றப்பட்டு எண்ணெயில் தோய்க்கப்பட்டது. அவர்கள் இவ்வாறு செய்து கொண்டிருக்கும் போதே ஹனுமனுடைய வால் வெகு நீளமாக வளர அதிகமான துணிகளும் எண்ணெயும் அந்த வாலை சுற்ற உபயோகித்தனர். முடிவில் அந்த வாலுக்கு தீ வைக்கப்பட்டது. ஹனுமான் இலங்கை தெருக்கள் முழுவதும் சுற்றி வந்தான். விரைவில் தன்னுடைய அளவைச் சுருக்கி தன் சுய உருவைக் கொண்டு குதித்தெழுந்தான். தன் வாலில் எரிந்து கொண்டிருக்கும் தீ ஜ்வாலையுடன் அவன் ஒவ்வொரு கட்டிடமாகத் தாவி இலங்கை நகரையே தீக்கிரையாக்கினான். பிறகு தன்னுடைய வாலை தண்ணீரில் நனைத்து தீ ஜ்வாலையிலிருந்து வெளி வந்தான்.
குருமார்கள் குழந்தைகளுக்கு சுவாமி கூறும் உதாரணங்களை எடுத்துக்கூற வேண்டும். நிகழ் காலத்தில் நாம் செய்யும் அனைத்து காரியமும், பிரதிச் செயல், எதிரொலி, பிரதிபலிப்பு (reaction, resound and reflection) என எதிர்காலத்தில் நம்மைக் கட்டுப்படுத்தும்.ஆகையால் எந்த தவறான செயல்களையும் செய்யாதிருக்க முயலவேண்டும். ஏனென்றால் இவைகளே எதிர்காலத்தில் தீமைகளாக வந்து நம்மையே பாதிக்கும். இதேதான் ராவணனுக்கும், லங்கா வாசிகளுக்கும் ஏற்பட்டது. ஹனுமானின் வாலில் தீ வைத்து அவரை கொடுமைப் படுத்தினார்கள். ஆனால் அதே நெருப்பினால் வேதனைப்பட்டார்கள். குழந்தைகளிடம் இதைப் பற்றி விளக்கமாக கூறவேண்டும். யாரையும் துன்புறுத்தல் கூடாது – பறவைகளாகட்டும், மிருகங்களாகட்டும் அனைத்து ஜீவராசிகளிடமும் கருணை கொள்ள வேண்டும். மிருகங்களை வதைத்து கூண்டில் அடைப்பதோ அதன் வால்களில் ஏதேனும் பொருள்களை கட்டிவிடுவதோ சரியான செயல்கள் அல்ல.
கற்றுக்கொள்ள வேண்டிய நீதி: அஹிம்ஸா பரமோ தர்ம:
என்ன விதைக்கிறோமோ அதுவே மரமாக முளைக்கிறது. ஆகையால் நாம் என்ன செயல் செய்கிறோம் என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
உனது வார்த்தை, செயல், எண்ணம், ஒழுக்கம் , இதயம் ஆகியவற்றை கவனி.
பிறகு அவன் சீதையிடம் வந்து தான் அவளை சந்தித்ததற்கு அடையாளமாக இராமனிடம் காண்பிப்பதற்கு ஏதேனும் ஒன்றைத் தரும்படி விரும்பி கேட்டான். சீதை ஹனுமானிடம் இராமனிடம் எடுத்துச் செல்ல இரத்தினக் கற்கள் பதித்த சூடாமணியை அவனிடம் கொடுத்தாள்.
பிறகு ஹனுமான் கடலைக் கடந்து இராமனிடம் திரும்பி வந்தான். இராமனிடம் அனைத்தையும் விவரமாக கூறி, சீதை அவனிடம் கொடுத்த சூடாமணியை இராமனிடம் கொடுத்தான்.
வெகு விரைவாகவே இராவணனுடன் போர் தொடுக்க இராமனும் லட்சுமணனும் ஆயத்தமானார்கள். இராமன் அனைத்து வானர வீரர்களையும் ஆசீர்வதித்தான். அவர்கள் முன்னேறிச் செல்ல அடியெடுத்து வைக்க நல்ல சகுனம் தோன்றியது. இராவணனுடைய மனைவி மண்டோதரி இராவணனின் கால்களில் வீழுந்து வணங்கி சீதையை இராமனிடம் திருப்பி அனுப்புமாறு கெஞ்சினாள். ஆனால் இராவணன் அதைக் கேட்கவில்லை.
குருமார்கள் விரிவாகக் கூறவேண்டியது: ராவணன் மிகவும் சிறந்தவனாக (Great) இருந்தான். அவனது மனைவி மண்டோதரியோ நல்லவளாகவும் (Good), இளகிய மனமும் கொண்டவளாகவும் இருந்தாள்.
சுவாமி அடிக்கடி கூறுவார் : எப்போதும் நல்லவனாக இருக்க முயற்சிக்க வேண்டும்.
இங்கு குருமார்கள் நல்ல செயல்கள் என்றால் என்ன என்பதை வலியுறுத்த, “இளம் சாயியின் இனிய நாட்கள்” கதைகளிலிருந்து மேற்கோள்கள் காட்டிக் கூறலாம்.