ஸ்ரீராமர் அயோத்தியை விட்டுச் செல்லுதல்
அயோத்தி நகரமே மிகப் பெரிய துக்கத்தில் ஆழ்ந்து விட்டது. சுமந்தரர் ரதத்தை ஓட்ட இராமர், சீதை, லஷ்மணன் மூவரும் அயோத்தியை விட்டுச் சென்றனர். சுமந்திரரும் இராமரைத் தொடர்ந்து வனத்திற்குச் செல்ல விரும்பினார். ஆனால் இராமர் அதற்குச் சம்மதிக்கவில்லை.
குருமார்கள் குழந்தைகளுக்குச் சொல்ல வேண்டியது :
நீ நல்லவனாக இருக்கும் பட்சத்தில், உன்னுடைய அன்பிற்காகவும், நல்ல குணத்திற்காகவும் ஈர்க்கப்பட்டு, மற்றவர்கள் உன்னிடம் அன்பும் மரியாதையும் செலுத்துவார்கள்
கற்றுக்கொள்ள வேண்டிய நீதி :
சிறப்பான மனிதனாக இரு, சிறப்பற்ற மனிதனாக இருக்காதே. (இங்கு குருமார்கள் உயர்ந்த குணங்களும் நல்ல பழக்கங்களுமே ஒருவனை சிறந்த மனிதனாக்குகிறது என்பதை விளக்கிக் கூற வேண்டும்)
கடைசியாக அவர்கள் கங்கைக் கரையை அடைந்தனர். சில படகோட்டிகள் அரசருக்குரிய ரதத்தைக் கண்டு அவர்கள் தலைவன் குகனிடம் சொல்ல ஓடினர். குகன் தன் பரிவாரங்களுடன் இராமரை வரவேற்கச் சென்றான். அவன் நிறைய பழங்களையும், மலர்களையும் கொடுத்துத் தன் வீட்டில் தங்க இராமருக்கு வசதி செய்து கொடுப்பதாகக் கூற, இராமர் அதை மறுத்து விட்டார். அடுத்த நாள் காலை சுமந்திரருக்கு விடை கொடுத்து அனுப்பிவிட்டு, குகனின் உதவியுடன் படகில் கங்கைக் கரையைக் கடந்து, அங்கு இருக்கும் பரத்வாஜ ரிஷியின் ஆச்ரமத்தை அடைந்தனர். பிறகு இராமர் குகனைத் தன் பரிவாரங்களுடன் அவர்கள் இருப்பிடத்திற்குத் திரும்பிப் போகச் சொல்லி விட்டு, தன் மனைவி மற்றும் லக்ஷ்மணனுடன் வால்மீகி முனிவரின் ஆச்ரமத்திற்கு வந்தார். வால்மீகி முனிவரின் அறிவுரைப்படி இராமர் அழகு வாய்ந்த சித்ரகூட மலையில் தங்க விரும்பினார். இவ்விடத்தில் லஷ்மணன், இராமர், சீதை இருவரின் உதவி கொண்டு ஒரு ஓலைக் குடிசையைக் கட்டினான். அங்கு தங்கியிருந்த துறவிகளும் மற்றவர்களும் இராமரின் தரிசனத்தைக் காணச் சென்றனர்.
குருமார்கள் குழந்தைகளுக்குச் சொல்ல வேண்டியது :
ஸ்ரீ ராமர் தானே அவதார புருஷராக இருந்தும்கூட, லக்ஷ்மணனுக்கு உதவியாக காட்டில் குடிலைக் கட்டுவதற்கு உதவி செய்தார். (இங்கு குருமார்கள் சுவாமியின் உதாரணத்தை எடுத்துக்காட்டாக பிள்ளைகளுக்கு கூறலாம். எப்படி இரவு பகல் பாராமல் வேலை செய்தார்-தரிசனம் அளிப்பது; கடிதங்களை பெற்றுக்கொள்வது; மற்ற பணிகளை மேற்பார்வை செய்வது போன்ற பல வேலைகளை அயராது செய்வது-இவை அனைத்தும் நம்முடைய நலத்திற்காகத் தான்)
Lசீதையும் லக்ஷ்மணனும் அரண்மனை சுக போகங்களில் இருந்தவர்கள். ஆனால் இராமருக்காக இவைகளைத் தாங்களாகவே துறந்துவிட்டு பதிநான்கு வருடங்கள் மிகவும் கடினமான காடுகளில் இராமருடன் வசிக்கவே விரும்பினார்கள். இராமரிடம் அவர்கள் கொண்டிருந்த அளவிற்கடங்காத அன்பினால், அவர்களால் இராமரை விட்டுப் பிரிந்திருப்பதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.
கற்றுக்கொள்ள வேண்டிய நீதி :
கடமையை ஆற்ற வேண்டும்:
அன்பும் தியாகமும் தான் குடும்ப உறவுகள் நிலைத்திருப்பதன் ஆதாரம்.