இராமர் ஹனுமனையும் சுக்ரீவனையும் சந்தித்தல்
இராமரும் லட்சுமணனும் மேற்கொண்டு காட்டின் வழியாகச் சென்று, கடைசியில் சுக்ரீவன் வசிக்கும் ரிஷ்யமுக பர்வதத்தின் எல்லையை அடைந்தனர். சுக்ரீவன், அவன் சகோதரன் வாலிக்கு பயந்து, ரிஷ்யமுக பர்வதத்தில் வசித்து வந்தான். அவன், இந்த இரு சகோதரர்களின் வருகையைப் பார்த்து, பின்னர் அவர்களிடம் இருந்த தெய்வீகத்தைக் கண்டு ஆச்சரியமடைந்தான். அவர்களைப் பற்றி அவன் அறிய விரும்பினான். அதனால் அவன், துறவி உடை அணிந்த அவ்விருவர்களைப் பற்றி அறிந்து வர, ஹனுமனை அனுப்பினான். ஹனுமான் அந்த சகோதரர்களைச் சந்தித்த போது அவனுடைய இதயம் மகிழ்ச்சியால் நிரம்ப, அவர்கள் இருவரையும் நர நாராயணர்களே பூமிக்கு வந்திருக்கிறார்களோ என்று நினைத்தான்.
இங்கு குருமார்கள், ஹனுமானின் குணங்களை விளக்கும் ‘மனோஜவம்’ ஸ்லோகத்தையும், அதன் பொருளையும் விரிவாக எடுத்துச் சொல்லவேண்டும். ஹனுமானின் புத்தி கூர்மை, தேகவலிமை, பணிவு, பக்தி, தன்னலமற்ற சேவை இவைகளை வலியுறுத்தும் வகையில் ஹனுமானின் கதைகளையும் கூற வேண்டும்.
இராமர், தாங்கள் இருவரும் தசரதரின் புதல்வர்கள் என்றும், இராமரின் மனைவியான சீதையை, இராவணன் பஞ்சவடியிலிருந்து அவர்களுக்குத் தெரியாமல் கவர்ந்து சென்றுவிட்டதால் அவளைத் தேடி வந்திருப்பதாகவும், விவரமாக கூறினார். பிறகு இராமர் ஹனுமனைப்பற்றி அறிந்து கொள்ள விரும்பினார். ஹனுமனின் கண்களில் கண்ணீர் தளும்ப, அவன் சொன்னான் “கடவுளை சாட்சியாக வைத்து நான் உறுதியளிக்க ஆசைப்படுகிறேன். என் கடவுளை போற்றி வணங்குவதைத் தவிர எனக்கு வேறு எந்த செயல்பாடும் கிடையாது”. இராமர் ஹனுமனை தழுவிக் கொண்டு “லட்சுமணைனைப் போல் நீயும் எனக்கு மிக நெருங்கியவன்” என்று கூறி, மேலும் ‘ஹனுமான்! நான் எனக்கு சேவை புரிபவர்கள் மீது என் அன்பைப் பொழிவேன். அப்படி செய்யும் சேவை அவர்கள் விடுதலைக்கு சிறந்த வழியாகும்” என்றார்
குருமார்கள் குழந்தைகளுக்குச் சொல்ல வேண்டியது:
மனிதர்களுக்கு தொண்டு செய்வதே உண்மையான இறைத்தொண்டு என்பதால், சின்ன சின்னச் சேவைகள் செய்து இறைவனை மகிழ்விக்கலாம்.
கற்றுக்கொள்ள வேண்டிய நீதி: மானவ (மானுட) சேவை மாதவ சேவை: கடவுளை இன்புறச் செய்ய மனிதனை இன்புறச் செய்.
ஹனுமன், இராமரிடம், சுக்ரீவன் வானர்களின் அரசன் என்றும், அவனுடைய சகோதரன் வாலி அவனை எதிரியாக பாவித்து அவனை நாட்டை விட்டு வெளியேற்றி விட்டு அவன் மனைவியையும் அவனிடமிருந்து எடுத்துக் கொண்டான் என்றும் கூறினான். மேலும் ஹனுமான், சுக்ரீவன் வானரர்களின் தலைவன் என்றும், சீதையைத் தேடி வருவதற்காக வானர்களை நான்கு பக்கமும் அனுப்புவான் என்றும் கூறினான். பிறகு இராம லட்சுமணர்களை சுக்ரீவனிடம் அழைத்துச் சென்றான். சுக்ரீவன், இராமரை வரவேற்று அக்னி சாட்சியாக அவனுடைய நட்பை உறுதி செய்தான். சுக்ரீவன் ஒரு புஷ்பக விமானம் பறந்ததை பார்த்ததாகவும் அதிலிருந்து ஒரு நகை மூட்டை கீழே விழுந்ததாகவும் சொன்னான். அந்த மூட்டையைத் தானே எடுத்துவந்து இராமரிடம் காட்டினான். இராமர் லட்சுமணனிடம் அதில் உள்ளது சீதையின் நகைகளாக இருக்குமா என்று பார்க்கச் சொன்னார். லட்சுமணன் சீதையின் பாதங்களை மட்டுமே பார்த்திருந்ததால் அவனால் மெட்டியை மட்டுமே அடையாளம் காட்ட முடிந்தது. இதுவே இராவணன் தான், சீதையை விமானத்தில் கடத்தியது என்று உறுதியாயிற்று. சுக்ரீவன் தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் இராமருக்கு செய்வதாக வாக்களித்தான். இராமரும் வாலியைக் கொன்று அவனுடைய அரசுரிமையை திரும்பப் பெற்று தருவதாக வாக்களித்தார்.
இராமரின் சொல்படி சுக்ரீவன் வாலியுடன் போர்புரிய ஆயத்தமாகி வாலியைப் போருக்கு அழைத்தான். வாலி, விரைந்து வந்து, சுக்ரிவனைப் போரில் தோற்கடித்தான். மிகுந்த வருத்தத்துடன் சுக்ரீவன் இராமரிடம் திரும்பி வந்தான். இராமர் சில மலர்களைத் தொடுத்து மாலையாக்கி அதை சுக்ரீவன் கழுத்தில் அணிவித்து மறுபடியும் வாலியை போருக்கு அழைக்கச் சொன்னார். இராமரும் லட்சுமணனும் ஒரு மரத்தின் பின்னால் நின்று கொண்டிருந்தனர். சுக்ரீவன் உதவிக்கு அழைத்த போது இராமர், வாலியின் மார்பில் அம்பை எய்தினார். வாலி இராமரின் தெய்வீக தரிசனம் கண்டு ஆனந்தக் கண்ணீர் பெருக மிகவும் சந்தோஷமடைந்தான். இராமர், தான் வாலியை மறைந்திருந்து கொன்றது எந்த விதத்திலும் கீழ்த்தரமான செயலல்ல என்பதையும் வாலிக்கு விளக்கினார். வாலியும் தன்னுடைய செயல்கள் தவறு என்று புரிந்து கொண்டான். அவன் தன் மகன் அங்கதனை அருகில் அழைத்து, இராமரிடம் அவனை ஒப்படைத்து, தன்னுடைய பூத உடலை நீத்தான். இராமர், சுக்ரீவனிடம் அங்கதனை ஒப்படைத்து, அவனை அன்புடன் பேணிக் காக்குமாறு கூறிப் பிறகு சுக்ரீவனை கிஷ்கிந்தையின் அரசனாக்கினார்.
[கீழே கொடுத்திருப்பது குருமார்களின் பார்வைக்காக. திரு அனில் குமார் அவர்களின் ஏபரல் 14, 2௦11 அன்றைய ஞாயிற்றுக்கிழமை சொற்பொழிவு–‘சாயிபாபா இராமாயணத்தைப்பற்றி வெளிப்படுத்திய தகவல்கள்’ என்ற தலைப்பிலிருந்து எடுத்தது]
[இராமர் வாலியைக் கொன்றதை நாம் அனைவரும் அறிவோம். வாலி மரணப்படுக்கையில் கிடந்த சமயம் இராமர் அவன் அருகில் சென்றார். அந்தசமயம் வாலிக்கும் இராமருக்கும் வாக்குவாதம் ஆரம்பித்தது. சுவாமி இதை மிகவும் அழகாக விவரித்துள்ளார்.]
வாலி கேட்கிறான், ‘இராமா நீ ஒரு அரசன், நான் ஒரு குரங்கு. என்னை இப்படி கொன்றது உனக்கு நியாயமாகப் படுகிறதா?
இராமர் கூறுகிறார், ஓ வாலி! நீ குரங்கு என்று உனக்குத் தெரிந்திருக்கிறது. நான் ஒரு அரசன். அரசர்கள் விலங்குகளை வேட்டையாடுவது வழக்கம்தானே! இதைப் புரிந்துகொள்; நீ ஒரு குரங்கு என்பதாலேயே உன்னை நான் கொன்றேன். அரசர்கள் அவ்வப்போது வேட்டையாடுவது இயல்புதானே, இதில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை. இந்த முதல் வாதத்தில் வாலி தோற்றான்.
தொடர்ந்து வாலி கூறுகிறான், இராமா, இப்போது நீ அரசன் இல்லை. உனது தம்பி பரதன்தான் தற்போது அரசனாக இருக்கிறான். இந்தக் காட்டில் நீயும் எங்களைப் போல ஒருவனாகத்தான் இருக்கிறாய். அப்படி இருக்க எப்படி நீ என்னை கொல்ல முடியும்?
அதற்கு இராமர் பதில் கூறுகிறார், “இல்லை வாலி, இந்த வனம் எங்களது அரசாட்சியின் கீழ்தான் இருக்கிறது. ஆகையால் எனது தம்பி அரசனாக இருப்பதால் தர்மத்தை நிலைநிறுத்துவது எனது கடமையும் ஆகிறது. ஆகையால்தான் உன்னைக் கொன்றேன்”
வாலி மூன்றாவதாக தனது வாதத்தைத் தொடர்ந்தான். இராமா, ராவணனிடம் போர் செய்வதற்காக நீ எனது தம்பி சுக்ரீவனின் உதவியை நாடி இருக்கிறாய். அதனால்தான் என்னைக் கொல்லத் தீர்மானித்தாய். நீ புத்திசாலி இல்லை என்பதையே இது காட்டுகிறது. எனது தம்பி சுக்ரீவன் வலிமை இல்லாதவன். பலமுறை அவனை நான் துன்புறுத்தி இருக்கிறேன். எனது பெயரைக் கேட்ட மாத்திரத்தில் ஓட்டம் பிடிப்பான். இப்படிப்பட்ட கோழையான சுக்ரீவனிடம் தான் நீ உதவி கேட்டிருக்கிறாய். இது எத்தனை முட்டாள்தனம். இராமா, இந்த உதவியை நீ என்னிடம் கேட்டு இருந்திருக்கலாம். நான் மிகுந்த பலசாலி. உண்மையில் உனது எதிரியான ராவணனே என்னிடம் பயம் கொண்டவன். பலமுறை அவனை பாயை சுருட்டுவதுபோல சுருட்டி எனது கை இடுக்கில் பிடித்துக்கொண்டு புண்ணியக் கடல்களில் அவனை ஸ்நானம் செய்திருக்கிறேன். எனது பலத்தை ராவணன் அறிந்திருந்ததாலேயே என்னைக்கண்டு பயந்தான். என்னிடம் உதவி கேட்டிருந்தால் நானே உனக்கு உதவியிருப்பேனே!
இராமர் இதற்கு பதிலளிக்கிறார்: எங்கள் இருவரது துயரமும் ஒரே மாதிரியானது என்பதால் நான் உனது தம்பி சுக்ரீவனிடம் உதவி கேட்டேன். ஏனென்றால் நாங்கள் இருவரும் எங்களது நாட்டை இழந்தோம்; மனைவியைப் பிரிந்த துக்கத்தையும் இருவரும் ஒன்றாக அனுபவிக்கிறோம். சுக்ரீவனின் மனிவியை நீ அபகரித்து சென்றிருக்கிறாய். ராவணன் எனது மனைவியை அபகரித்திருக்கிறான். ஆகையால் நான் சுக்ரீவனின் வருத்தத்தை அறிவேன். இதனாலேயே நான் அவனுக்கு உதவி செய்வதும், அவனது உதவியை எதிர்பார்ப்பதும் ஆகும். உனது வலிமையைப்பற்றி எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால் உனது தம்பிக்கு வேதனை என்றால் என்ன என்று தெரிந்திருக்கிறது. இவைகளே எங்களை நண்பர்களாக்கியது. இதிலும் வாலி தனது வாதத்தை இழந்தான்.
இதன்பிறகு மற்றுமொரு வாதத்தை எடுத்துப் பேச ஆரம்பித்தான். இராமச்சந்திரா, மரங்களுக்குப்பின் மறைந்திருந்து அம்பை விட்டுக் கொல்வது என்பது உனக்கு சரியாகப் படுகிறதா? எனக்கு முன் நின்று எதிருக்கு எதிராக ஏன் போர் செய்யவில்லை? மறைந்திருந்து கொல்வது என்பது பெரிய வீரம் இல்லையே?
இராமர் கூறுகிறார்: “வாலி, இங்கே பார்! உனது தவத்திற்குப் பலனாக ப்ரம்மா கொடுத்த இந்த முத்து மாலையை நீ கழுத்தில் அணிந்திருக்கும் ரகசியத்தப்பற்றி நான் அறிந்ததே! இந்த மாலையை கழுத்தில் அணிந்து கொண்டு நீ போர் செய்யும்போது உனக்கு முன்னால் நின்று போர் செய்பவர்கள் தனது பலத்தை இழந்து விடுவார்கள் என்பதையும் நான் அறிவேன். போர் முறைகளில் கையாள வேண்டிய தர்மத்தைப்பற்றிய நீதி எனக்குத் தெரியாதது இல்லை. ஆனால் ப்ரம்மா கொடுத்த வரத்திற்கு மதிப்பு கொடுப்பதற்காகவே மரங்களுக்குப்பின் நின்று உன்னைக் கொன்றேன்.”.
விரைவிலேயே சுக்ரீவன் வானரர்களை வெவ்வேறு திசைகளுக்கு சீதையைத் தேட அனுப்பினான். ஹனுமான், அங்கதன், ஜாம்பவான், மற்றும் வானரசேனைகள் தெற்குக் கடற்கரையை அடைந்த போது, அங்கு ஒரு வயதான பறவை, தன் சகோதரன் ஜடாயுவின் அந்திமக் கிரியைகளை செய்ய வந்ததைக் கண்டார்கள். அவன் தான் சம்பாதி; ஜடாயுவின் சகோதரன். அவன், சீதை இலங்கையில் இருப்பதைப் பற்றி தெரிவித்தான். பிறகு அவர்கள் அவ்வளவு பெரிய கடலை தாண்டி செல்லவது பற்றி ஆலோசித்தனர். ஹனுமான் கடலைத் தாண்டி இலங்கைக்குப் போக ஒப்புக் கொண்டான். வழியில் ஹனுமான் எண்ணற்ற தடங்கல்களைக் கடக்க வேண்டியிருந்தது.
குருமார்கள் குழந்தைகளுக்குக் கூறவேண்டும்
ஹனுமான் உடல் வலிமை மிக்கவனாக இருந்தாலும்கூட ஒருபொழுதும் அதற்காக கர்வம் கொண்டதில்லை. இராமரிடம் முழுமையாக சரணடைந்து சீதையைத் தேடும் பணியில் உதவி செய்து அருளுமாறு வேண்டிக் கொண்டார். சீதையைத் தேடுவதற்காக கடலைத் தாண்டும் போது எதிர்ப்பட்ட இடையூறுகளை தனது புத்தியால் வென்றார்.
கற்றுக்கொள்ள வேண்டிய நீதி :
பிரார்த்தனை மற்று சரணாகதியின் முக்கியத்துவம். மற்றவர்களைத் துன்புறுத்த, உனது உடல் வலிமையைத் தவறாகப் பயன்படுத்தாதே. அறிவுத்திறனைக் கொண்டு செய்யும் வேலையும் கடினமான வேலை போலவே முக்கியமானது – ஆகவே நன்கு சிந்தித்து, திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும்.