அயோத்தி திரும்புதல்
இராமரும் சீதையும் இப்போது ஒன்று சேர்ந்தனர். அவர்களுடைய வனவாசமும் முடிவுக்கு வர அவர்கள் அயோத்திக்கு திரும்ப ஆயத்தமானார்கள். இராமருடைய வரவை அறிந்து பரதன் மிகவும் சந்தோஷமாகத் துள்ளி குதித்தான். அவன் நந்திகிராமத்திலிருந்து அயோத்திக்கு திரும்பி இராமரை வரவேற்க முன்னேற்பாடுகள் அனைத்தையும் செய்தான். அவன் முனிவர்கள், குருமார்கள், அயோத்தியின் முன்னணி மக்கள், மூன்று பட்டத்தரசிகள் அனைவருடனும் சத்ருக்னன் பக்கத்தில் வர இராமரை எதிர் கொண்டழைக்க நடந்தான். சகோதரர்கள் இருவரும் இராமருக்கு முன், தரையில் வீழ்ந்து வணங்கி தங்களுடைய மரியாதைகளை செலுத்தினர். நகரம் முழுவதும் குதூகலமும் கொண்டாட்டமுமாக நிரம்பியது. அவர்கள் அரண்மனையை அடைந்தவுடன், வசிஷ்டர் இராமருக்கு அயோத்தியின் அரசனாகப் பட்டாபிஷேகம் நடத்த வேண்டி ஒரு திருநாளை அறிவித்தார். அன்றைய தினம், இராமர் வசிஷ்ட ரையும் மற்ற முனிவர்களையும் வணங்கி, அரசத் தாய்மார்களின் பாதங்களில் விழுந்து வணங்கி, சீதை பின் தொடர அரியணை ஏறினார்.
குருமார்கள் குழந்தைகளுக்குச் சொல்ல வேண்டியது :
ஸ்ரீ ராமர் அயோத்யாவிற்கு திரும்பிய சமயம் அங்குள்ள மக்கள் அதை வெகுவாக கொண்டாடினார்கள். விழாக்கோலமும், தோரணங்களும் சந்தோஷமும் எங்கும் நிரம்பி இருந்தது. அதேபோல கடவுளை நமது இதயத்திற்கு அழைக்கும்போது இதயத்தை சுத்தமாகவும் தூய்மையாகவும் நற்குணங்கள் மிக்கதாய் அழகு படுத்திக்கொள்ள வேண்டும். இந்த நற்பண்புகளினால் தான் கடவுள் மிகவும் சந்தோஷம் கொள்வார்.
கற்றுக்கொள்ள வேண்டிய நீதி :
நமக்குள் இருக்கும் மனித நற்பண்புகளை புரிந்து கொண்டு அவைகளை நடைமுறைப்படுத்தி பழக்கத்திற்குக் கொண்டு வரவேண்டும். இதுவே நம் ஸ்வாமி வலியுறுத்தும் விழுக்கல்வியின் சாரமாகும் .
[இத்துடன் குருமார்கள் தீபாவளிப் பண்டிகையைப் பற்றி விரிவாகக் கூறவேண்டும். அயோத்யாவாசிகள் ஸ்ரீ ராமர் வனவாசம் முடிந்து அயோத்யா திரும்பியதை முன்னிட்டு வீதி முழுவதும் தீபங்களை ஏற்றிக் கொண்டாடினார்கள். விளக்கேற்றி வைப்பதின் உள் அர்த்தம் என்னவென்றால் – தீமையிலிருந்து நன்மைக்கு வெற்றி / அறியாமையிலிருந்து ஞானத்திற்கு வெற்றி என்பனவற்றை குழந்தைகளின் வயது, புரிந்துகொள்ளும் தன்மையைப்பொறுத்து விரிவாக கூறவேண்டும்.]
இப்படியாக சத்தியமும் தர்மமும் பின்பற்றப்பட்டு அதன் மூலம் மக்கள் அனைவரும் சாந்தியும் சந்தோஷமும் அடையும் படி இராம இராஜ்ஜியம் தொடங்கியது.
[மேற்காணும் கதைகள் சுவாமி அருளிய இராம கதா ரச வாஹினி – பிரிவு I, II லிருந்து எடுக்கப்பட்டது. ]