இராவணனின் முடிவு
இராமருடன் நீண்ட நாட்களாக இழுத்துக் கொண்டிருக்கும் போரை முடிவுக்கு கொண்டுவர இராவணன் தன்னுடைய சேனைகளுடன் போர்களத்திற்கு விரைந்தான். இராவணன் இராமரை எதிர்த்து தனக்கு வெற்றி தரக் கூடிய, தனிச்சிறப்பு வாய்ந்த பாதாள ஹோமம் என்ற சடங்கைச் செய்ய விரும்பினான். ஆனால், இராமன் அந்த ஹோமத்தை நடக்க விடாமல் தடுக்க அங்கதனுக்கும் ஹனுமானுக்கும் ஆணையிட்டான். இராவணனுடைய சேனைகள் எளிதாக அழிக்கப் பட்டு விட்டது. பிறகு இராமர் வானரர்களை ஓய்வெடுத்துக் கொண்டு தனக்கும் இராவணனுக்கும் நடக்கும் போரைக் காணச் சொன்னார். விரைவில் இராவணன் கர்ஜித்துக் கொண்டு வந்தான். அப்போது இராமர் , தான் என்ன சொல்கிறோம் என்பதைக் கவனிக்கும்படி ராவணனிடம் சொன்னார். இராமர் கூறினார் – “மூன்று வகையான மனிதர்கள் உள்ளனர். முதலாமவர் பாடலி மரத்தை போன்றவர்கள். அது பூத்துக் குலுங்குமே தவிர பழங்கள் தராது. அது போல, இம்மனிதர்கள் வாய்வலிக்கப் பேசுவார்கள் ஆனால் பேசுவதை துளியும் கடைபிடிக்க மாட்டார்கள். இரண்டாவது ரகத்தை சேர்ந்தவர்கள் மாமரத்தை போன்றவர்கள். இம்மரம் பூக்கும் பழம் தரும். இது போல சிலர் பேசுவார்கள் செயலிலும் காட்டுவார்கள். மூன்றாவது ரகத்தை சேர்ந்தவர்கள் பலா மரத்தை போன்றவர்கள். இம்மரத்திடம் பூ இருக்காது. பழம் மட்டுமே இருக்கும். இராமன் மேலும் உயர்ந்த மனிதர்கள் அமைதியாக இருந்து செயல்படுவார்கள். இவர்களிடம் தற்புகழ்ச்சி இருக்காது. நீ வெறும் தற்புகழ்ச்சிக்காரன். உன்னுடைய நெறியற்ற ஆட்சி உன்னுடைய குலத்தையே அடியோடு அழித்து விட்டது” என்று சொன்னார்.
குருமார்கள் குழந்தைகளுக்குச் சொல்ல வேண்டியது :
அமைதியாக நமது காரியங்களைச் செய்யப் பழக வேண்டும். தற்பெருமை கொள்வதோ அல்லது செய்த வேலைக்காக ஏதேனும் சன்மானத்தை எதிர்பார்த்தோ செய்யக்கூடாது. இங்கு குருமார்கள் சுவாமி தன் இளம் வயதில் எழுதிய “செப்புனட்டு செஸ்தரா” என்ற கதையை விளக்கிக் கூறவேண்டும்.
கற்றுக்கொள்ள வேண்டிய நீதி :
உபதேசம் செய்யும் முன் நடைமுறைப்படுத்து
வேலையே வழிபாடு. கடமையே கடவுள்.
இராவணன் இராமரை வசைபாடிக் கொண்டே அவர் மீது அம்புகளை எய்தான். ஆனால் இராமர் அக்னி அஸ்திரத்தை உபயோகித்து இராவணனின் அம்புகளை எரித்து சாம்பலாக்கினார். இராமர் இராவணனின் தலையை அம்பால் வீழ்த்தும் போது அந்த இடத்தில் வேறொரு தலை முளைப்பதைக் கண்டார்.
குருமார்கள் குழந்தைகளுக்குச் சொல்ல வேண்டியது :
கெட்டப்பழக்கங்களும் தீய எண்ணங்களும் ஒருமுறை நம்மிடையே வந்து விட்டால், பிறகு அவ்வளவு சுலபமாக நம்மை விட்டு விலகாது. ஒரு கெட்டப் பழக்கத்தை விட்டு ஒழித்தால் உடனேயே வேறு ஒன்று முளைத்து விடும். அதுவே திரும்பத்திரும்ப நம்மை நாசத்தில் தள்ளிவிடும். ஆகையால் சிறு வயதிலிருந்தே நல்ல பழக்கங்களையும், நல்லது கெட்டதை புரிந்து கொண்டு விவேகத்தைப் பழக்கத்தில் கொண்டு வருவதிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் பிற்காலத்தில் பெரியவர்களான பிறகு இதிலிருந்து மீள வருவது கடினமாகிவிடும்.
கற்றுக்கொள்ள வேண்டிய நீதி :
எப்போதும் ஜாக்கிரதையாக இரு. கெட்ட சகவாசத்தைத் தவிர். / நல்லவனாக இரு, நல்லதையே பார், நல்லதையே செய்/ சீக்கிரம் கிளம்பு, மெதுவாகச் செல், பத்திரமாக சேர்
இப்படியாக போர் பதினெட்டு நாட்கள் தொடர்ந்தது. பதினான்கு ஆண்டுகள் வனவாசம் முடிய இன்னும் சிறிது நாட்களே இருந்தது. தேவர்களுக்கு, ராக்ஷஸர்களின் முடிவு நெருங்கி விட்டது என்று தெரிந்து விட்டது. அவர்கள் அனைவரும் தர்மம் வெல்லப் போவதை காண ஒன்று கூடினர். இராமர் ஒரு கொத்தாக அம்புகளை எய்தபோது அவை ஒவ்வொன்றாக அவனது தலைகளையும் கைகளையும் துண்டு துண்டாக்கின. இப்படியாக சித்திரை மாதத்தின் ஒளி பொருந்திய பதினான்காம் நாள், இராவணன் இராமரின் கரங்களால் தன் முடிவை அடைந்தான். வானரர்கள் அனைவரும் மிகவும் மகிழ்ந்து இராமருடைய வீரத்தையும் கண்டு மலைத்தனர்.
குருமார்கள் குழந்தைகளுக்குச் சொல்ல வேண்டியது :
எத்தனைதான் முயன்றாலும் தீமை ஒருபோதும் நன்மையை வெற்றிக்கொள்ள முடியாது. எனவே நற்குணங்களை விட்டு விடாமல் இருக்க வேண்டும். எதிர்மறை எண்ணங்களில் இருந்து நம்மை மீட்கும் வரை பொறுமையுடனும் விடா முயற்சியுடனும் தொடர்ந்து அதனுடன் போராடி மீண்டு வர வேண்டும்.
குருமார்கள் குழந்தைகளுக்கு விளங்குமாறு கூறவேண்டியது :
எப்போதும் நல்லவானாக இரு
எப்போதும் உதவி செய் – ஒருபோதும் துன்புறுத்தாதே.
எல்லோரையும் நேசி – எல்லோருக்கும் சேவை செய்.
நல்லவனாக இரு, நல்லதையே பார், நல்லதையே செய்
எப்போதும் ஜாக்கிரதையாக இரு. கெட்ட சகவாசத்தைத் தவிர்.
நல்லதையே பார், நல்லதையே செய்.
போன்ற பொன்மொழிகளை விளக்கிச் சொல்ல வேண்டும். இந்த தெய்வீகப் பாதையில் சென்றால் நமது வாழ்க்கையில் எப்போதும் நல்லவர்களாகவே இருப்போம்.
கற்றுக்கொள்ள வேண்டிய நீதி :
தலைவனைப் பின்பற்று – தீமைகளை எதிர்த்து நில் – இறுதி வரை போராடு – வாழ்வு என்ற ஆட்டத்தை நிறைவு செய்.
இராவணனுடைய இறப்பிற்குப் பின் இராமர், லட்சுமணனன், சுக்ரீவன், ஜாம்பவான், அங்கதன் அனைவரையும் அழைத்து அவர்களுடன் நளன் நீலன் மற்றுமுள்ளோர்களுடன் இலங்கை நகருக்குள் சென்று விபீஷணனுக்கு பட்டாபிஷேகம் செய்யுமாறு கூறினார். ஹனுமானை சீதையிடம் சென்று இந்த போரில் இராவணனை இராமர் வென்றது பற்றிய செய்தியைச் சொல்ல அனுப்பினார். வெகு விரைவில் சீதை இராமரிடம் அழைத்து வரப்பட்டாள்.