அஹமாத்மா – மேலும் படிக்க
அஹம் ஆத்மா குடா கேஷ ஸர்வ பூதாஷய ஸ்தித:
அஹம் ஆதிஷ் ச மத்யம் ச பூதானாம் அந்த ஏவ ச
(அத்.10, பதி.20)
பொருள்: ஓ அர்ஜுனா! எல்லா உயிர்களின் இதயங்களிலும் உறைந்து வரும் ஆத்மா நானே! எல்லா உயிர்களின் முதலும் இடையும் முடிவும் நானே!.
பகவான் கிருஷ்ணர் உரைக்கிறார்:
எல்லா உயிர்களின் இதயங்களிலும் உறைந்திருக்கும் ஆத்மா நானே! ஓ அர்ஜுனா! நானே படைப்பவன், நானே காப்பவன், நானே எல்லா உயிர்களின் இலக்காகவும் இருக்கிறேன். அஃதாவது எல்லா உயிர்களும் என்னில் இருந்தே உருவாகின்றன, என்னாலேயே காக்கப்படுகின்றன. முடிவில் என்னையே வந்து சேர்கின்றன. இதயம் எனக் குறிப்பிடப்படுவது உடலின் ஒரு அங்கமல்ல! மாறாக, நம்முள் இருக்கும் ஆன்மீகத் தத்துவமாகும். உறக்கத்தை வென்றவன் எனும் பொருளில் கிருஷ்ணர் அர்ஜுனனை ‘குடாகேசா’ என்று அழைக்கிறார். உண்மையில் அர்ஜுனன் அரியாமையாகிய உறக்கத்தை வென்று இறைவனின் உண்மையை உணர்ந்தவன் ஆவான்.
“இறைவனே ஒவ்வொரு உயிரிலும் ஆத்மாவாக உறைந்துள்ளார். பஞ்ச பூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் அனைத்தும் அவரது அம்சங்களே! அணுவினுள் ஆணுவாகவும் ப்ரபஞ்சத்தை விடவும் ப்ரம்மாண்டமாகவும் உள்ளவர். அவரல்லாத பொருள் உருவம் என்று ஏதுமில்லை. அவரது பெயரல்லாத ஒன்று என ஏதுமில்லை. அனைத்துக்கும் தாயும் தந்தையும் அவரே. ஓவ்வொன்றும் இறைவனில் இருந்தே தோன்றி, அவராலேயே வளர்ந்து இறுதியில் அவருள் சென்று மறைகின்றது” என நமது பேரன்புமிக்க பகவான் விளக்குகிறார்.
“ஆத்மா எனும் இறைவனின் முன்னிலையில் கண்கள் பார்க்கும் சக்தியைப் பெறுகின்றன! செவிகள் கேட்கும் சக்தியைப் பெறுகின்றன! நாசி நுகரும் சக்தியைப் பெறுகிறது! நாக்கு சுவையை உணரவும் தேகம் உணர்கின்ற சக்தியைப் பெறவும் செய்கின்றன! கரங்களுக்கும் கால்களுக்கும் அசைந்து செல்கின்ற சக்தியை அளிப்பவர் அவரே! பேசுவதற்கும் உணர்வதற்கும் சிந்திப்பதற்கும் புரிந்துகொள்வதற்கும் சக்தியை அளிப்பவர் அவரே! வாழ்க்கையின் இன்றியமையாத சுவாசித்தல், ரத்த ஓட்டம், ஜீரணித்தல், கழிவுகளை அகற்றுதல், மூளை மற்றும் நரம்பு மண்டலம் யாவும் சீராக நடைபெறுவதற்கும் அவரே ஆதாரமாக இருப்பவர்.”
கடவுள் எங்குதான் இருக்கிறார்?
“கடவுள் மானிடரால் எழுப்பப்பட்ட ஆலயங்களில் உறைவதில்லை. அவை யாவும் அவரது உண்மையான முகவரியல்ல! கடவுள் தம்மால் எழுப்பப்பட்ட ஆலயங்களிலேயே உறைகின்றார். பிரபஞ்சத்தில் உள்ள எல்லா உயிர்களுள், பொருள்களுள், மானிடருள், விலங்குகள், பறவைகள் தாவரங்கள் மற்றும் இதுபோன்ற அனைத்துள்ளும் உறைகின்றார்!” என்கிறார் பாபா.
இறைவன் எல்லா உயிர்களிலும் உறைந்திருப்பது ஷீரடியில் வாழ்ந்து வந்த திருமதி.தார்கட் அவர்களின் வரலாற்றில் ஒரு நிகழ்ச்சி மூலமாக தெளிவாக்கப் படுகிறது. ஒரு நாள் மதியம் உணவு பரிமாறப்படும் சமயத்தில் பசியால் வாடிய நாய் ஒன்று அங்கு வந்து உணவுக்காக முனகியது. திருமதி.தார்கட் அவர்கள் உடனே எழுந்து சென்று சப்பாத்தியை அளித்தார். அந்த நாயும் சாப்பாத்தியை வேகவேகமாக உண்டு பசியாறியது.
மாலையில் துவாரகமாயிக்கு சென்று ஒரு பக்கமாக அமர்ந்த பொழுது ஸாயி பாபா அவரிடம், “அம்மா! நீங்கள் எனக்கு சிறப்பான உணவளித்தீர்கள். என்னை வருத்திக் கொண்டிருந்த துன்பம் தீர்ந்து மன நிறைவு கொண்டேன். எப்பொழுதும் இவ்வாறே செயல்பட்டு வாருங்கள். உங்களுக்கு நல்ல ஒரு நிலையினை வழங்கும். இது போன்றே என் மீது இரக்கம் கொண்டிருங்கள். முதலில் பசியோடு இருப்பவருக்கு உணவளியுங்கள். பிறகு நீங்கள் உணவு கொள்ளுங்கள்” என உரைத்தார்.
அந்த அம்மையாருக்கு பாபா எதைக் குறிப்பிடுகிறார் எனப் புரியவில்லை.பாபா அவரிடம் “உலகில் வாழும் எல்லா உயிரினங்களும் என்னுள் இருப்பதைப் போலவே, நீங்கள் உணவளித்த நாயும் என்னுள் இருக்கும் ஒன்றாகும். நான் அவற்றின் உருவங்களில் சஞ்சரித்து வருகிறேன். இந்த ஜீவராசிகளுள் என்னைக் காண்பவர் யாவரும் எனக்குப் பிடித்தமானவர்களே! எனவே, நீ நான் எனும் வேறுபாட்டு உணர்வுகளை விடுத்து இன்று போலவே எனக்கு சேவை செய்து வாருங்கள்” என்றார்.