யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர் பவதி பாரத
அப்யுத்தானம் அதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம் யஹம்
(அத்.04, பதி.07)
பொருள்: எங்கேயெல்லாம், எப்பொழுதெல்லாம் தர்மாசாரம் குன்றுகின்றதோ அதர்மம் தலையெடுக்கின்றதோ ஓ பாரதப் புத்திரனே! என்னை நானே அவதரித்துக் கொள்கிறேன்.
இறைவன் தமது சங்கல்பத்தினால் இம்மாபெரும் ப்ரபஞ்சத்தை உருவாக்கி சுமுகமான இயக்கங்களைப் பராமரிப்பதற்காக பல்வேறு நெறிமுறைகளையும் வகுத்துக் கொடுத்துள்ளார். அவை யாவும் ஒவ்வொரு உயிரினத்தின் சரியான பண்புக்கான விதிமுறைகளாகும். இவைகளே தர்மத்தை உருவாக்குபவை. உலகில் உள்ள ஒவ்வொரு தனிமனிதனும் தமக்கென சிறப்பான தர்மத்தை – ஒப்பற்ற கடமையைக் கொண்டவனாவான்.
மானிடர் யவரும் தர்மத்தைக் கடைபிடிப்பதில் இருந்து விலகி சரியான பாதையைக் கடைப்டிப்பதில் தவறும்பொழுது அவர்கள் அதர்மத்தை இழைக்கிறார்கள். இது களைகள் யாவும் பயிர்களை ஆக்கிரமிப்பது போலாகும். பயிகள் தழைத்து ஓங்கவேண்டுமெனில் களைகள் அகற்றப்பட வேண்டும்.
எப்பொழுதெல்லாம் விதிமுறைகளைப் பின்பற்றுதல் என்பது பலவீனமடைகிறதோ, வாழ்க்கையின் நோக்கம் மறக்கப்படுகிறதோ அதர்மமும் இவ்வுலகை ஆளத் துவங்குகிறது. அச்சமயத்தில் தவறானவற்றைச் சரியாக்க கடவுள் தம்மைத் தாமே அவதரித்துக் கொள்கிறார்.
பகவான் ஸ்ரீகிருஷ்ணர் “உலகைக் காக்கவேண்டிய அவசியம் எழும்பொழுதெல்லாம் நாம ரூபம் கொண்டு தாம் அவதரிப்பதாக” உரைத்துள்ளார். மானிடராலோ அன்றி விலங்காலோ தம் உயிர் பறிக்கப்படலாகாது எனும் வரத்தைப் பெற்றிருந்த ஹிரண்யகசிபுவை அழிக்க பாதி மானிட உருவம் பாதி சிம்ஹ உருவும் கொண்ட நரசிம்ஹ அவதாரம் கொண்டார். தீயவனான ராவணனை அழிக்க பகவான் ஸ்ரீராமனாகவும் தீயவர்களையும் துஷ்ட அரசனான கம்சனைக் கொல்லவும், அதர்மமே உருவான கௌரவர்களை அழிக்கவும் கிருஷ்ணனாகவும் அவதரித்தார்.
தனது முற்பிறவிகளில் ஆற்றிய நல்வினை, தீவினைகளுக்கு ஏற்ப மானிடர் யாவரும் மறு பிறவி எடுக்கின்றார்கள். மானிடரின் பிறவிகள் யாவும் வினைப் பலன்களைத் தொடர்ந்ததாகும். ஆனால் கடவுளின் அவதாரமோ லீலை அல்லது சங்கல்பத்தால் நிகழ்வதாகும். அவர் தமது சங்கல்பத்தின்படியே வருகை தருகிறார். நல்லோர்களின் வேண்டுதல்களே இறைவனின் அவதாரத்திற்குக் காரணமாகும். அது மட்டுமல்லாது தீயவர்களின் அதர்ம்ச் செயல்களும்தான்.